மெசரிட்டுகள்—எனப்பட்டவர்கள் யாவர்?
‘சத்தியத்தின் கடவுளாயிருக்கும்’ யெகோவா தம்முடைய வார்த்தையாகிய பைபிளை பாதுகாத்து வைத்திருக்கிறார். (சங்கீதம் 31:5, NW) ஆனால் சத்தியத்துக்கு எதிரியாயிருக்கும் சாத்தான் அதை மூலப்படிவத்திலிருந்து மாற்றி அழிக்க முயற்சி செய்திருந்ததன் காரணமாக, பைபிள் எவ்வாறு முதலில் எழுதப்பட்டதோ அவ்விதமே அது எப்படி நம்மை வந்து அடைந்துள்ளது?—மத்தேயு 13:39-ஐக் காண்க.
அதற்குரிய பதிலின் ஒரு பகுதி பேராசிரியர் ராபர்ட் கார்டிஸ் என்பவரின் குறிப்பு ஒன்றில் காணப்படலாம்: “மெசரிட்டுகள் அல்லது ‘பாரம்பரியத்தை பாதுகாப்பவர்கள்’ என்றழைக்கப்படும் எபிரெய நகல் எடுப்பவர்களின் சாதனை போதுமான அளவு போற்றப்படவில்லை. பெயர் அறியப்படாத நகல் எடுக்கும் இவர்கள், பரிசுத்த புத்தகத்தை மிகவும் உன்னிப்பாக, அன்பான அக்கறையுடன் நகல் எடுத்தனர்.” இந்த நகல் எடுத்தவர்களில் பெரும்பாலானோரின் பெயர்கள் இன்றுவரை நமக்கு தெரியவில்லையென்றாலும்கூட, மெசரிட்டுகளுடைய ஒரு குடும்பத்தின் பெயர் தெளிவாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது—பென் ஆஷர். அக்குடும்பத்தைப் பற்றியும் அவர்களுடைய உடன் மெசரிட்டுகளைப் பற்றியும் நமக்கு என்ன தெரியும்?
பென் ஆஷர் குடும்பம்
பழைய ஏற்பாடு என்று சாதாரணமாக அழைக்கப்பட்டு, ஆரம்பத்தில் எபிரெய மொழியில் எழுதப்பட்ட பைபிளின் ஒரு பகுதியை யூத நகல் எடுப்பவர்கள் உண்மைத்தன்மையோடு நகல்கள் எடுத்தனர். பொ.ச. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை இந்த நகல் எடுப்பவர்கள் மெசரிட்டுகள் என்றழைக்கப்பட்டனர். அவர்களுடைய வேலை எதை உட்படுத்தியது?
பல நூற்றாண்டுகளாக எபிரெய மொழி மெய்யெழுத்துக்களோடு மட்டுமே எழுதப்பட்டு வந்தது, வாசிப்பவர் உயிரெழுத்துக்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். என்றபோதிலும், மெசரிட்டுகளின் காலத்துக்குள்ளாக, எபிரெய மொழியின் சரியான உச்சரிப்பு இழக்கப்பட்டு வந்தது, ஏனென்றால் அநேக யூதர்கள் அந்த மொழியை தடங்கலின்றிப் பேசமுடியாத நிலையில் இருந்தனர். பாபிலோனிலும் இஸ்ரவேலிலும் இருந்த மெசரிட்டுகளின் தொகுதிகள் உயிரெழுத்துக்களை சரியாக உச்சரிப்பதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் தேவையான குறியீடுகளை மெய்யெழுத்துக்களைச் சுற்றி வைப்பதற்காக கண்டுபிடித்தனர். குறைந்தபட்சம் மூன்று வித்தியாசமான முறைகளாவது உருவாக்கப்பட்டன, ஆனால் அதிக செல்வாக்குமிக்கதாய் நிரூபித்தது, பென் ஆஷர் குடும்பத்தின் பிறப்பிடமான டைபீரியஸ்-ல் கலிலேயா கடலருகே இருந்த மெசரிட்டுகள் உருவாக்கியதாகும்.
தனித்தன்மை வாய்ந்த இந்தக் குடும்பத்திலிருந்து, பொ.ச. எட்டாம் நூற்றாண்டில் ஆஷர் என்ற மூத்தவரோடு ஆரம்பித்து மெசரிட்டுகளின் ஐந்து தலைமுறைகளையாவது மூல ஆதார ஏடுகள் பட்டியலிடுகின்றன. மற்றவர்கள் நெஹமையா பென் ஆஷர், ஆஷர் பென் நெஹமையா, மோசஸ் பென் ஆஷர், இறுதியில் பொ.ச. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏரன் பென் மோசஸ் பென் ஆஷர் ஆவர்.a எபிரெய பைபிள் உரையின் சரியான உச்சரிப்பு என்று அவர்கள் புரிந்துகொண்டதை சிறந்தவிதத்தில் சொல்வதற்கு அந்த எழுதப்பட்ட அடையாளக்குறிகளை மேம்படுத்துவதில் இந்த மனிதர்கள் முன்னணியில் இருந்தனர். இந்த அடையாளக்குறிகளை உருவாக்குவதற்கு எபிரெய இலக்கண விதிமுறைகளின் அடிப்படையை அவர்கள் தீர்மானிக்க வேண்டியதாயிருந்தது. எபிரெய இலக்கணத்துக்கு எந்தத் தெளிவான, திட்டவட்டமான விதிமுறைகளும் எக்காலத்திலும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஆகையால், இந்த மெசரிட்டுகள் முதலாவது இருந்த எபிரெய இலக்கண நூலாசிரியர்களாக இருந்தனர் என்று ஒருவர் சொல்லக்கூடும்.
பென் ஆஷர் குடும்ப பாரம்பரியத்தின் கடைசி மெசரிட்டாக இருந்த ஏரன் இந்த தகவலை முதலாவது பதிவுசெய்து பதிப்பித்தார். “செஃபர் டிக்டுக்கி ஹா-டியாமிம்” என்று தலைப்பிடப்பட்டிருந்த நூலில் அவர் அதைச் செய்தார், அதுவே எபிரெய இலக்கண விதிமுறைகளைப் பற்றிய முதல் புத்தகமாக இருந்தது. வரப்போகும் நூற்றாண்டுகளில் மற்ற எபிரெய இலக்கண நூலாசிரியர்களின் புத்தகங்களுக்கு இப்புத்தகம் அடிப்படையாய் அமைந்தது. ஆனால் இது மெசரிட்டுகளின் அதிமுக்கியமான வேலைக்கு உப விளைவாகவே இருந்தது. அந்த வேலை என்ன?
குறிப்பிடத்தக்க நினைவாற்றல் தேவைப்பட்டது
பைபிள் உரையின் ஒவ்வொரு சொல்லையும், ஏன் ஒவ்வொரு எழுத்தையும்கூட திருத்தமாக எடுத்து எழுதுவதே மெசரிட்டுகளின் முக்கியமான அக்கறையாக இருந்தது. அதன் திருத்தமான தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, அதற்கு முன்னாலிருந்த நகல் எடுப்பவர்கள் கவனக் குறைவினாலோ அல்லது வேண்டுமென்றோ உரையில் மாற்றங்கள் செய்ததை குறிப்பிடுவதற்கென்று, மெசரிட்டுகள் ஒவ்வொரு பக்கத்தின் ஓரங்களையும் இத்தகவலைப் பதிவு செய்வதற்கென்று உபயோகித்துக்கொண்டனர். இந்த ஓரக்குறிப்புகளில் மெசரிட்டுகள் அசாதாரணமான சொல் வடிவங்களையும் இணைப்புகளையும்கூட குறித்துவைத்தனர், ஒரு புத்தகத்துக்குள்ளேயோ அல்லது முழு எபிரெய வேதாகமத்துக்குள்ளேயோ இவை எவ்வளவு அடிக்கடி காணப்பட்டன என்பதை குறித்துவைத்தனர். இடம் போதாமல் இருந்ததன் காரணமாக இந்தக் குறிப்புகள் மிகவும் சுருக்கப்பட்ட சொற்கோவைகளாக பதிவுசெய்யப்பட்டன. கூடுதலான குறுக்கு-சரிபார்க்கும் (cross-checking) கருவியாக, சில குறிப்பிட்ட புத்தகங்களின் நடு சொல்லையும் எழுத்தையும் அவர்கள் குறித்து வைத்தனர். திருத்தமான நகல் எடுப்பதை உறுதிசெய்துகொள்வதற்காக பைபிளின் ஒவ்வொரு எழுத்தையும் எண்ணும் அளவுக்கு அவர்கள் சென்றனர்.
பக்க ஓரங்களில் இருந்த சுருக்கமான குறிப்புகள் சம்பந்தமாக, மெசரிட்டுகள் ஒரு பக்கத்தின் மேலேயும் கீழேயும் உள்ள ஓரங்களில் மிகவும் விரிவான குறிப்புகளைப் பதிவுசெய்து வைத்தனர்.b இவை அவர்கள் தங்கள் வேலையில் குறுக்கு-சரிபார்த்தல் செய்வதற்கு உதவியாய் இருந்தன. அப்போது வசனங்கள் எண்ணிடப்படாமலும் ஒத்துவாக்கிய பைபிள்கள் இல்லாமலும் இருந்ததால், இந்தக் குறுக்கு-சரிபார்த்தலைச் செய்வதற்கு மெசரிட்டுகள் எவ்வாறு பைபிளின் மற்ற பகுதிகளை குறிப்பிட்டுக் காட்டினர்? மேலேயும் கீழேயும் உள்ள ஓரங்களில் அவர்கள் அதற்கு இணையாக இருந்த வசனத்தின் ஒரு பகுதியை பட்டியலிட்டனர்! அங்கு குறிப்பிடப்பட்டிருந்த சொல் அல்லது சொற்கள் பைபிளில் வேறு எங்கு காணப்படுகின்றன என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டுவதற்காக இதைச் செய்தனர். போதிய இடம் இல்லாமல் இருந்ததன் காரணமாக பெரும்பாலும் அவர்கள் ஒவ்வொரு ஒத்து வசனத்தையும் நினைப்பூட்டிக்கொள்வதற்கு வெறும் ஒரு முக்கிய சொல்லை மட்டும் எழுதுவர். இந்த ஓரக்குறிப்புகள் உபயோகமுள்ளவையாய் இருப்பதற்கு, இந்த நகல் எடுப்பவர்கள் முழு எபிரெய பைபிளையும் மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டும்.
ஓரங்களில் எழுதமுடியாதபடி அதிக நீளமாயிருந்த பட்டியல்கள் உரையின் மற்றொரு பகுதிக்கு நகர்த்தப்பட்டன. உதாரணமாக, ஆதியாகமம் 18:3-ன் பக்க ஓரங்களில் காணப்படும் மெசரிட்டுகளின் குறிப்பு மூன்று எபிரெய எழுத்துக்களை, קלד காண்பிக்கிறது, இது 134 என்ற எண்ணுக்கு சமமதிப்புள்ள எபிரெய எண் ஆகும். உரையின் மற்றொரு பகுதியில், மெசரிட்டுகளின் காலத்துக்கு முன்பாக நகல் எடுத்தவர்கள் எபிரெய உரையிலிருந்து யெகோவா என்ற பெயரை வேண்டுமென்றே நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக “கர்த்தர்” என்ற சொல்லை பயன்படுத்திய 134 இடங்களைக் குறிப்பிட்டுக் காண்பிக்கும் ஒரு பட்டியல் காணப்படுகிறது.c இப்படிப்பட்ட மாற்றங்களைப் பற்றி அறிந்திருந்தபோதிலும் மெசரிட்டுகள் அவர்களிடமாக கடத்தப்பட்டிருந்த உரையை மாற்றுவதற்கு உரிமை எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக, இந்த மாற்றங்களை அவர்கள் ஓரக்குறிப்புகளில் குறித்து வைத்தனர். ஆனால் அதற்கு முன்பிருந்த நகல் எடுப்பவர்கள் அதை மாற்றியிருந்தபோதிலும் மெசரிட்டுகள் அந்த உரையை மாற்றக்கூடாது என்பதற்காக ஏன் அந்த அளவுக்கு கவனமாயிருந்தனர்? அவர்களுடைய யூத நம்பிக்கையின் முறைமை அவர்களுடைய முன்னோர்களின் நம்பிக்கைகளிலிருந்து வித்தியாசமானதாய் இருந்ததா?
அவர்கள் எதை நம்பினர்?
இந்த மெசரிட்டுகளின் முன்னேற்றக் காலப்பகுதியின்போது யூத மதம் ஆழமாக-வேரூன்றியிருந்த கருத்தியல் போரில் உட்பட்டிருந்தது. பொ.ச. முதல் நூற்றாண்டு முதற்கொண்டு யூத குருமார்களுக்குரிய யூத மதம் அதன் கட்டுப்பாட்டை அதிகரித்துக்கொண்டே வந்திருந்தது. தால்மூட் எழுதப்பட்டு குருமார்களால் அர்த்தம் சொல்லப்பட்டதன் காரணமாக, பைபிள் உரை, வாய்மொழியான சட்டத்தின்பேரில் குருமார்களின் பொருள் விளக்கத்துக்கு இரண்டாவதாக ஆகிக்கொண்டே வந்தது.d ஆகையால், பைபிள் உரையை கவனமாக பாதுகாத்து வைப்பதானது அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டிருக்கக்கூடும்.
எட்டாம் நூற்றாண்டில் கரயய்ட்டுகள் என்றறியப்பட்டிருந்த ஒரு தொகுதி இந்தப் போக்குக்கு எதிராக கலகம் செய்தது. தனிப்பட்ட பைபிள் படிப்பின் முக்கியத்துவத்தை அழுத்தியுரைக்கும்வகையில் அவர்கள் குருமார்கள் மற்றும் தால்மூட் ஆகியவற்றின் அதிகாரத்தையும் பொருள்விளக்கத்தையும் நிராகரித்துவிட்டனர். அவர்கள் பைபிள் உரையை மட்டும் தங்கள் அதிகாரப்பூர்வமான உரையாக ஏற்றுக்கொண்டனர். அந்த உரையை திருத்தமாக எடுப்பதன் தேவையை இது அதிகரித்தது, மெசரிட்டுகளின் ஆராய்ச்சிகள் புதுப்பிக்கப்பட்ட ஊக்கத்தைப் பெற்றுக்கொண்டன.
குருமார்கள் அல்லது கரயய்ட்டுகளின் நம்பிக்கைகள், மெசரிட்டுகளை எந்த அளவுக்கு பாதித்தன? எபிரெய பைபிள் உரைகளில் வல்லுனராயிருக்கும் எம். ஹெச். கோஷன்-காட்ஸ்ட்டின் பின்வருமாறு கூறுகிறார்: “அவர்கள் பண்டையகால பாரம்பரியம் ஒன்றைக் கடைப்பிடித்து வருவதாகவும், வேண்டுமென்றே அதில் குறுக்கிடுவது அவர்களுக்கு மிகவும் மோசமான குற்றச்செயலாக இருக்கும் என்றும் . . . மெசரிட்டுகள் உறுதியாக நம்பினர்.”
பைபிள் உரையை சரியான முறையில் நகல் எடுப்பதை மெசரிட்டுகள் பரிசுத்தமான வேலையாகக் கருதினர். அவர்கள் தனிப்பட்டவிதத்தில் மற்ற மத சம்பந்தமான காரணங்களால் அதிகமாக உந்துவிக்கப்பட்டவர்களாக இருந்திருந்தபோதிலும்கூட, மெசரிட்டுகளின் வேலை அப்படிப்பட்ட கருத்தியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படவில்லை. அதிக சுருக்கமாக இருந்த ஓரக்குறிப்புகள் மதசம்பந்தமான விவாதத்துக்கு குறைவான சந்தர்ப்பத்தையே விட்டுவைத்தன. பைபிள் உரைதானே அவர்களுடைய வாழ்க்கையின் அக்கறையாக இருந்தது; அவர்கள் அதில் இடையே புகுந்து மாற்றம் உண்டுபண்ணமாட்டார்கள்.
அவர்களுடைய வேலையிலிருந்து பயனடைதல்
இயற்கையான யூதர்கள் கடவுளுடைய தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்களாக இல்லாமலிருந்தபோதிலும்கூட, இந்த நகல் எடுத்த யூதர்கள் கடவுளுடைய வார்த்தையை திருத்தமாக பாதுகாத்து வைப்பதற்கு முழுவதுமாக தங்களையே அர்ப்பணித்திருந்தனர். (மத்தேயு 21:42-44; 23:37, 38) பென் ஆஷர் குடும்பமும் மற்ற மெசரிட்டுகளின் குடும்பமும் பெற்ற சாதனையை ராபர்ட் கார்டிஸ் என்பவர் நன்றாக சுருக்கி எழுதினார்: “பைபிள் உரையை இழந்துவிடாமல் அல்லது மாற்றிவிடாமல் பாதுகாத்து வைப்பதற்கு அந்த மனத்தாழ்மையான தளர்வுறாத வேலையாட்கள் . . . புகழ்நிலை எய்தாமல் தங்கள் கடினமான பெரிய வேலையை செய்து முடித்தனர்.” (தி பைபிள் டெக்ஸ்ட் இன் தி மேக்கிங்) அதன் விளைவாக, 16-ஆம் நூற்றாண்டில் இருந்த லூத்தர் மற்றும் டின்டேல் போன்ற சீர்திருத்தவாதிகள் சர்ச்சின் அதிகாரத்தை எதிர்த்து எல்லாரும் வாசிப்பதற்கென்று பொதுவான மொழிகளில் பைபிளை மொழிபெயர்க்க ஆரம்பித்தபோது, அவர்கள் தங்கள் வேலைக்கு அடிப்படையாக உபயோகிப்பதற்கு நன்றாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த எபிரெய உரையை வைத்திருந்தனர்.
மெசரிட்டுகளின் வேலை தொடர்ந்து இன்றுவரையாக நமக்கு பயனளித்து வருகிறது. பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பின் எபிரெய வேதாகமத்துக்கு அவர்களுடைய எபிரெய உரைகள் அடிப்படையாய் அமைகின்றன. இந்த மொழிபெயர்ப்பு அநேக மொழிகளில் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது, அது பண்டையகால மெசரிட்டுகள் காண்பித்த அதே அர்ப்பணிக்கப்பட்ட மனநிலையோடும் திருத்தமாக இருக்க வேண்டும் என்ற அக்கறையோடும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. யெகோவா தேவனின் வார்த்தைக்கு கவனம் செலுத்துவதில் நாம் அதைப்போன்ற ஆர்வத்தைக் காண்பிக்க வேண்டும்.—2 பேதுரு 1:19.
[அடிக்குறிப்புகள்]
a எபிரெய மொழியில் “பென்” என்பது “குமாரன்” என்று பொருள்படும். ஆகையால் பென் ஆஷர் என்பது “ஆஷரின் குமாரன்” என்று பொருள்படும்.
b பக்க ஓரங்களில் உள்ள மாசரெட்டிக் குறிப்புகள் சிறிய மசோரா என்றழைக்கப்படுகின்றன. மேலேயும் கீழேயும் உள்ள ஓரங்களில் இருக்கும் குறிப்புகள் பெரிய மசோரா என்றழைக்கப்படுகின்றன. உரையின் மற்ற இடங்களில் வைக்கப்பட்ட பட்டியல்கள் இறுதி மசோரா என்றழைக்கப்படுகின்றன.
c பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் என்ற ஆங்கில பைபிளின் பிற்சேர்க்கை 1B-ஐ காண்க.
d வாய்மொழியான சட்டம் மற்றும் குருமார்களுக்குரிய யூத மதம் என்பதன் பேரில் கூடுதலான தகவல் பெற உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்திருக்கும் போரில்லா ஓர் உலகம் என்றாவது இருக்குமா? என்ற ஆங்கில சிற்றேட்டின் பக்கங்கள் 8-11-ஐக் காண்க.
[பக்கம் 28-ன் பெட்டி/படம்]
எபிரெயமொழி உச்சரிப்புக்கு விதிமுறைகள்
உயிரெழுத்து அடையாளக்குறிகளையும் அழுத்தக் குறிகளையும் பதிவுசெய்வதற்கு சிறந்தமுறையைக் கண்டுபிடிக்கும் வேலை மெசரிட்டுகளின் மத்தியில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்தது. எனவே, பென் ஆஷர் குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையோடும் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டதைக் காண்பது ஆச்சரியமாயில்லை. இப்போது நிலைத்திருக்கும் உரைகள் பென் ஆஷர் குடும்பத்தின் கடைசி இரண்டு மெசரிட்டுகளாய் இருந்த மோசஸ் மற்றும் ஏரனின் எழுத்துநடையையும் முறைகளையும் பிரதிநிதித்துவம் செய்கின்றன.e இந்த உரைகளை ஒப்பிட்டுப் பார்த்து படித்ததானது, ஏரன் தன் தந்தை மோசஸ் உபயோகித்த உச்சரிப்பு மற்றும் எண் குறியீடுகள் ஆகியவற்றின் சில சிறு குறிப்புகளின் பேரில் விதிகளை உருவாக்கினார் என்று காண்பிக்கிறது.
பென் நப்தலி என்பவர் ஏரன் பென் ஆஷர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தவர். மோசஸ் பென் ஆஷரின் கெய்ரோ கையெழுத்துச் சுவடி பென் நப்தலியின் அநேக பொருள்விளக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆகையால், பென் நப்தலிதானே மோசஸ் பென் ஆஷரிடமிருந்து படித்திருக்க வேண்டும் அல்லது இருவருமே ஒரு பண்டையகால பொதுவான பாரம்பரியத்தை பாதுகாத்திருக்க வேண்டும். பென் ஆஷரின் முறைக்கும் பென் நப்தலி முறைக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைப் பற்றி அநேக கல்விமான்கள் பேசுகின்றனர், ஆனால் எம். ஹெச். கோஷன்-கோட்ஸ்ட்டீன் எழுதுகிறார்: “பென் ஆஷர் குடும்பத்துக்குள் இருக்கும் இரண்டு உள்-முறைமைகளைக் குறித்து பேசுவதும் பொருள்விளக்கங்களின் வேறுபாடுகளை இவ்வாறு பெயரிடுவதும் அதிக திருத்தமானதாய் இருக்கும்: “பென் ஆஷர் எதிராக பென் ஆஷர்.” ஆகையால் ஒரு பென் ஆஷர் முறையைப் பற்றி மட்டுமே பேசுவது திருத்தமற்றதாய் இருக்கும். அதில் உள்ளடங்கியிருந்த மிக உயர்ந்த தன்மையின் காரணமாக பென் ஆஷரின் முறைகள் இறுதியாக ஏற்றுக்கொள்ளத்தக்க முறையாக ஆகவில்லை. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மோசஸ் மைமோனைட்ஸ் என்ற யூத வேதங்களின் கல்விமான் ஏரன் பென் ஆஷரின் உரையை புகழ்ந்ததன் காரணமாக மட்டுமே அது விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டது.
[Artwork—Hebrew characters]
யாத்திராகமம் 6:2-ன் ஒரு பகுதி உயிரெழுத்து குறிப்புகளோடும் ஒலிவேறுபாடுகளைக் குறித்துக்காட்டும் குறிப்புகளோடும் அக்குறிப்புகள் இன்றியும்
[அடிக்குறிப்புகள்]
e முற்கால மற்றும் பிற்கால தீர்க்கதரிசிகளை மட்டும் கொண்டிருக்கும் கெய்ரோ கையெழுத்துச் சுவடி (பொ.ச. 895) மோசஸின் முறைகளைப் பற்றிய உதாரணத்தை அளிக்கிறது. அலிப்போ (சுமார் பொ.ச. 930) மற்றும் லெனின்கிராட் (பொ.ச. 1008) கையெழுத்துச்சுவடிகள் ஏரன் பென் ஆஷரின் முறைகளின் உதாரணங்கள் என கருதப்படுகின்றன.
[பக்கம் 26-ன் படம்]
எட்டாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை மெசரிட்டுகளின் பணிக்கு மையமாய் இருந்த டைபீரியஸ்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.