இன்னுமதிக ஜனங்களுக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லுதல்
நான் வாழும் தேசத்திலுள்ள ஜனங்களைப் பற்றி சிந்தித்துப் பார்த்தபோது, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அநேகர் செய்தி அறிக்கைகளிலிருந்து மட்டுமே அறிந்திருப்பதை நான் உணர்ந்தேன். யெகோவாவின் சாட்சிகள் யார் என்பதையும் அவர்கள் உண்மையில் எதை நம்புகின்றனர் என்பதையும் இப்படிப்பட்ட ஜனங்கள் கற்றுக்கொள்ள அவர்களைக் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் இவர்களுக்கு நான் எப்படி உதவிசெய்வது? என் கணவர் ஒரு கிறிஸ்தவ மூப்பர், அவர் எனக்கு ஞானமான வழிநடத்துதலையும் ஆலோசனைகளையும் தந்தார்.
ஜனவரி 8, 1995, விழித்தெழு! பத்திரிகை இதழில், “நடைமுறையான ஆறுதலளிக்கும் பத்திரிகைகள்” என்ற கட்டுரையில் ஒரு முக்கியமான ஆலோசனையை நாங்கள் பார்த்தோம். ஒரு சாட்சி எடுத்த நடவடிக்கையைக் குறித்து அந்தக் கட்டுரை பின்வருமாறு சொல்கிறது: “மற்ற சாட்சிகளின் வீடுகளில் தேங்கியுள்ள குறிப்பிட்ட விழித்தெழு! பத்திரிகைகளின் பழைய பிரதிகளைச் சேகரித்துக் கொள்வதை அவர்கள் ஒரு நோக்கமாக வைத்துக் கொள்கிறார்கள். பின்பு சில தலைப்புகளின் பேரில் விசேஷ ஆர்வத்தை காண்பிக்கக்கூடிய நிறுவனங்களை அவர்கள் சந்திக்கிறார்கள்.”
என் கணவரின் உதவியோடு, நான் விரைவில் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளின் இதழ்களை சேகரித்தேன். இவற்றிலிருந்து நான் சந்திக்க முயற்சி செய்யப்போகும் ஆட்களுக்கு ஏற்ற பல்வேறு தலைப்புகளை உடைய பத்திரிகைகளை நான் தேர்ந்தெடுத்தேன்.
தொலைபேசி புத்தகத்திலிருந்தும் பொதுத்தகவல் பதிவுகளிலிருந்தும், மருத்துவமனைகள், இளைஞர் விடுதிகள், சிகிச்சை இல்லங்கள் ஆகியவை அடங்கிய பட்டியல் ஒன்றை நான் தயாரித்தேன். சவ அடக்க ஏற்பாடுகளைச் செய்வோர், பள்ளி மேற்பார்வையாளர்கள், ஆலோசகர்கள், மருத்துவ சோதனையாளர்கள், சிறைச்சாலை மற்றும் சட்ட நீதிமன்றங்களின் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய பட்டியல் ஒன்றையும் தயாரித்தேன். போதை மருந்து மற்றும் மதுபான அடிமைகளுக்கான மையங்களின் இயக்குநர்களும், துர்ப்பிரயோக சிகிச்சை மையங்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், ஊனமுற்றோர் மற்றும் யுத்தத்தில் பலியானவர்கள், சத்துணவு ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான நிறுவனங்களின் இயக்குநர்களும் என் பட்டியலில் அடங்கியிருந்தனர். பொதுநலம், சமுதாய சேவைகள், குடும்ப நலம் ஆகியவற்றின் மேலாளர்களையும் நான் சேர்த்துக்கொள்ளாமல் விட்டுவிடவில்லை.
நான் என்ன சொல்வேன்?
சந்திப்பு செய்கையில், நான் யார் என்பதை முதலாவது தெளிவாக அடையாளம் காண்பித்துக்கொண்டேன். பிறகு என் சந்திப்பு ஒருசில நிமிடங்களுக்கே இருக்கும் என்று நான் குறிப்பிட்டேன்.
பொறுப்பில் இருப்பவரை நேருக்கு நேர் சந்திக்கையில் நான் இவ்வாறு சொல்வேன்: “நான் ஒரு யெகோவாவின் சாட்சி. இருந்தாலும், மதசம்பந்தமான விஷயங்களை பேசுவதற்கு நான் இங்கு வரவில்லை, அது வேலைசெய்யும் நேரத்தின்போது பொருத்தமற்றதாய் இருக்கும்.” அப்போது சாதாரணமாக சூழ்நிலை அதிக தளர்வாக ஆகிவிடும். பிறகு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு என் குறிப்புகளை மாற்றியமைத்து நான் தொடர்ந்து இவ்வாறு சொல்வேன்: “என் சந்திப்புக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, உங்கள் அலுவலகம் ஒழுங்கமைத்திருக்கிற வேலைக்காக நான் பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். என்னயிருந்தாலும், பொதுமக்கள் சார்பாக தனது நேரத்தையும் சக்தியையும் செலவிடும் ஒருவர் மதிப்பிற்குரியவர். உங்கள் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது.” அநேக சமயங்களில், இந்த விதத்தில் அணுகப்பட்டபோது நபர்கள் ஆச்சரியமடைந்தார்கள்.
இதற்குள்ளாக, என்னுடைய சந்திப்பின் இரண்டாவது காரணம் என்னவாயிருக்கும் என்று அந்த நபர் பெரும்பாலும் யோசித்துக் கொண்டிருப்பார். நான் தொடர்ந்து சொல்வேன்: “என்னுடைய சந்திப்புக்கான இரண்டாவது காரணம் இதுவே: உலகமுழுவதும் பிரசுரிக்கப்படும் எங்களுடைய விழித்தெழு! பத்திரிகையிலிருந்து சில கட்டுரைகளை நான் தேர்ந்தெடுத்து கொண்டு வந்திருக்கிறேன், இவற்றில் குறிப்பாக நீங்கள் செய்யும் வேலை, மேலும் அதோடு சம்பந்தப்பட்டுள்ள பிரச்சினைகளைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒரு சர்வதேச பத்திரிகை எவ்வாறு இந்த பிரச்சினைகளை நோக்குகிறது என்பதை நீங்கள் நிச்சயமாய் அறிந்துகொள்ள விரும்புவீர்கள். இந்த இதழ்களை நான் உங்களிடம் விட்டுச்செல்ல விரும்புகிறேன்.” பெரும்பாலும் நான் செய்த முயற்சிகளை பாராட்டியதாக என்னிடம் சொன்னார்கள்.
ஆச்சரியமளிக்கிற மற்றும் பலனளிக்கிற விளைவுகள்
நான் இந்த அணுகுமுறையை பயன்படுத்தியபோது, அநேகர் சிநேகபான்மையாக செவிகொடுத்துக் கேட்டார்கள்: நான் பேசிய 17 பேரில் ஒரு நபர் மட்டுமே மறுத்தார். ஆச்சரியமளிக்கிற மற்றும் பலனளிக்கிற அநேக அனுபவங்கள் எனக்கு கிடைத்தன.
உதாரணமாக, நான்கு தடவைகள் முயற்சிசெய்து பொறுமையோடு காத்திருந்த பிறகு, மாவட்ட பள்ளி ஆய்வாளர் ஒருவரை நான் சந்தித்தேன். அவர் எப்போதும் அதிக வேலையாய் இருப்பார். இருந்தாலும், அவர் அதிக சிநேகபான்மையாக என்னோடு சிறிது நேரம் பேசினார். நான் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டபோது அவர் சொன்னார்: “நான் நீங்கள் எடுத்த முயற்சியை உண்மையிலேயே பாராட்டுகிறேன், நான் நிச்சயமாய் உங்கள் பிரசுரங்களை கவனமாக வாசிப்பேன்.”
மற்றொரு சமயம், நான் ஒரு மாவட்ட நீதிமன்றத்துக்குச் சென்று, ஒரு நடுத்தர வயதுள்ள தலைமை நீதிபதியை சந்தித்தேன். நான் அவருடைய அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, பத்திரங்களை பார்த்துக்கொண்டிருந்த அவர் சற்று நிமிர்ந்து என்னை நோக்கி எரிச்சலோடு பார்த்தார்.
“செவ்வாய்க்கிழமை காலை மட்டுமே அலுவலக மணிநேரம், அப்போது எந்த தகவலையும் என்னிடம் கேட்கலாம்” என்று அவர் கடுகடுப்பாக பதிலளித்தார்.
“அலுவலக நேரத்தில் வராததற்கு தயவுசெய்து என்னை மன்னியுங்கள்” என்று நான் விரைவாக பதிலளித்து, “மற்றொரு சமயம் வர நான் விரும்புகிறேன். ஆனால் நான் தனிப்பட்ட விஷயத்தைப் பற்றி பேசவே உங்களைப் பார்க்க வந்தேன்” என்று நான் சொன்னேன்.
இப்போது அந்த நீதிபதி விஷயத்தை தெரிந்துகொள்ள ஆவலாயிருந்தார். எனக்கு என்ன வேண்டும் என்று அவர் கோபப்படாமல் மிகவும் தாழ்வான குரலில் கேட்டார். நான் செவ்வாய்க்கிழமை வந்து சந்திப்பதாக மறுபடியும் கூறினேன்.
“தயவுசெய்து உட்காருங்கள்” என்று அவர் வற்புறுத்தியபோது நான் ஆச்சரியப்பட்டேன். “உங்களுக்கு என்ன வேண்டும்?”
ஒரு நல்ல உரையாடல் தொடர்ந்தது, அவருக்கு உண்மையிலேயே அதிக வேலை இருந்ததன் காரணமாக முதலில் சிநேகப்பான்மையற்றவராக இருந்ததற்காக மன்னிப்பு கேட்டார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த நீதிபதி, “யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி எனக்கு எது பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். “நன்கு ஆதாரமிடப்பட்டிருக்கும் நியமங்களைப் பெற்றிருக்கிறார்கள், அவற்றிலிருந்து அவர்கள் விலகிச்செல்லவே மாட்டார்கள். ஹிட்லர் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்தான், இருந்தாலும் சாட்சிகள் யுத்தத்திற்குச் செல்லவில்லை.”
நாங்கள் இருவரும் ஒரு அலுவலகத்திற்குள் சென்றபோது, அங்கிருந்த காரியதரிசிகள் எங்களை அடையாளம் கண்டுகொண்டனர். பிறகு நிர்வாக காரியதரிசி கடுகடுப்பாக சப்தமாய், “முதல்வர் எந்த கூட்டத்தைச் சேர்ந்தவரையும் எப்போதும் வரவேற்கவே மாட்டார்” என்று சொன்னார்.
“ஆனால் நாங்கள் யெகோவாவின் சாட்சிகளாய் இருப்பதால் அவர் எங்களை வரவேற்பார்” என்று நான் அமைதலாக பதிலளித்தேன். நாங்கள் மனு கொடுக்க வரவில்லை, எங்களுடைய சந்திப்பு மூன்று நிமிடங்களுக்கு மேல் செல்லாது.” “யெகோவாவே, தயவுசெய்து இது நல்லவிதமாய் முடியட்டும்!” என்று என்னுடைய இருதயத்தில் நான் மிகவும் ஊக்கமாய் ஜெபித்தேன்.
காரியதரிசி பட்டும்படாமல், “சரி, அப்படியென்றால் நான் முயற்சிசெய்து பார்க்கிறேன்” என்று பதிலளித்துவிட்டு நடந்து சென்றுவிட்டார். சுமார் இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, அந்த சமயம் இரண்டு யுகங்கள் போல் எனக்கு தோன்றியது, அவர் திரும்பவும் வந்தார்; அவருக்குப் பின்னால் தலைமை அதிகாரியும் வந்தார். எதுவும் சொல்லாமல் இரண்டு அறைகளைக் கடந்து அவருடைய அலுவலகத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்.
நாங்கள் உரையாட ஆரம்பித்தபோது, அவர் அதிகமதிகமாக சிநேகப்பான்மையானவராக ஆனார். நாங்கள் விழித்தெழு! பத்திரிகையின் விசேஷ இதழ்களை அளித்தபோது அவர் அவற்றை விருப்பத்தோடு வாங்கிக்கொண்டார். நம்முடைய வேலையின் நோக்கத்தைப் பற்றி ஒரு நல்ல சாட்சி கொடுப்பதற்கு கிடைத்த வாய்ப்புக்காக நாங்கள் யெகோவாவுக்கு நன்றி செலுத்தினோம்.
இப்படிப்பட்ட அநேக நல்ல அனுபவங்களை சிந்தித்துப் பார்க்கையில், அப்போஸ்தலனாகிய பேதுரு கூறியதை நான் அதிக முழுமையாக மதித்துணர ஆரம்பித்திருக்கிறேன்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 10:34, 35) மனிதவர்க்கத்துக்கும் பூமிக்குமான கடவுளுடைய நோக்கத்தை அறிந்துகொள்வதற்கு அனைத்து பின்னணிகளையும், மொழிகளையும், அல்லது சமுதாய அந்தஸ்துகளையும் சேர்ந்த எல்லா ஜனங்களுக்கும் வாய்ப்பு அளிப்பதே கடவுளுடைய சித்தம்.—அளிக்கப்பட்டது.