மனிதரின் அடிமைகளா கடவுளின் ஊழியர்களா?
“யெகோவாவின் சாட்சிகளை ஓரளவு மெச்சிக்கொள்ள வேண்டும்.” ஜெர்மன் புத்தகம் சீஹெர், க்ரூப்லர், என்த்தூஸியாஸ்டென் (கற்பனை காட்சியாளர்கள், ஆழ்ந்த சிந்தனையாளர்கள், உணர்ச்சியார்வமுள்ளவர்கள்) இவ்வாறு சொல்கிறது. சாட்சிகளை ஓரளவு குற்றங்காண்பதாக இருக்கிறபோதிலும், அது இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “பொதுவாக அவர்கள், குற்றமற்ற, நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார்கள். தங்கள் வேலையில் ஊக்கமாய் உழைப்போராயும் மனச்சாட்சியுடையோராயும் இருக்கிறார்கள்; அமைதலான பிரஜைகளும் நேர்மையுடன் வரி செலுத்துவோருமாக இருக்கிறார்கள். செல்வங்களை மிதமீறி நாடித்தொடர்வதை அவர்கள் தவிர்க்கிறார்கள். . . . மாநாடுகளில் அவர்களுடைய ஒழுக்கக் கட்டுப்பாடு போற்றத்தக்கது. அவர்களுடைய சுயதியாக மனப்பான்மை, மற்ற எந்த மதத் தொகுதிக்கும் ஒத்ததாயுள்ளது; அவர்களுடைய போதக ஊழியத்தைக் குறித்ததில் மற்ற எல்லாருக்கும் மேலாக அதைச் சிறப்பாகச் செய்கிறார்கள். ஆனால், அவர்களை நம்முடைய நாளிலுள்ள மற்ற எல்லா கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கும் தொகுதிகளுக்கும் மேலாக உயர்த்துவதற்குக் காரணம், அவர்களில் பெரும்பான்மையர், எந்தச் சூழ்நிலைமைகளின்கீழும், எல்லா ஆபத்துகளுக்கு மத்தியிலும், தங்கள் கோட்பாடுகளை யாவரறிய அறிவிப்பதில் விட்டுக்கொடுக்காமல் திடதீர்மானத்துடன் இருப்பதே ஆகும்.” a
இவ்வாறு நல்ல முறையில் மதித்துப் போற்றினபோதிலும், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி சொல்லப்பட்ட அபிப்பிராயங்கள் வேறுபட்ட முறையில் அவர்களைத் திரித்துக் காட்ட முயலுகின்றன. உலகைச் சுற்றிலும் பெரும்பான்மையான நாடுகளில் சாட்சிகள், இடையூறு இல்லாமல் வெளிப்படையாய்த் தங்கள் மத ஊழியங்களைப் பல ஆண்டுகளாக செய்து வந்திருக்கின்றனர். கோடிக்கணக்கான ஆட்கள் அவர்களை அறிந்திருக்கிறார்கள், அவர்களை மதித்து, அவர்கள் தங்கள் மதத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறதென்று ஒப்புக்கொள்கிறார்கள். அப்படியானால், யெகோவாவின் சாட்சிகள் யார் என்பதைப்பற்றியதில் சந்தேகமும் இருக்க வேண்டியதேன்?
சமீப காலங்களில், மற்ற மிகப் பல மதத் தொகுதிகள், பிள்ளைகளைத் தவறாக பயன்படுத்துவதிலும், கும்பலாக தற்கொலை செய்துகொள்வதிலும், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவதிலும் பங்குவகித்திருப்பது, இந்தச் சந்தேகம் எழும்புவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நிச்சயமாகவே, இவற்றைப்போன்ற இயல்புக்கு மாறான நடத்தைகள், மதப்பற்றுள்ள ஆட்களிடம் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் மதத்தைக் குறித்ததில், பல ஆட்கள் சந்தேக மனப்பான்மை உடையோராக ஆகியிருக்கிறார்கள், சிலர் பகைக்கிறவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள்.
மனிதரைப் பின்பற்றுவதன் ஆபத்துகள்
ஒரு “பிரிவு” என்பது, “ஒரு தனிப்பட்ட கோட்பாட்டை அல்லது ஒரு தலைவனைப் பின்பற்றும் ஒரு தொகுதி” என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல், ஒரு “வழிபாட்டு குழுவைச்” சேர்ந்தவர்கள், “ஒரு ஆளினிடமாக, அபிப்பிராயத்தினிடமாக, அல்லது பொருளினிடமாக பெரும் ஆர்வப்பற்று” உடையோராக இருக்கிறார்கள். உண்மையில் மனிதத் தலைவர்களிலும் அவர்களுடைய அபிப்பிராயங்களிலும் உறுதியான பற்றுடைய எந்த மதத்தொகுதியின் அங்கத்தினர்களும் மனிதருக்கு அடிமைகளாகும் ஆபத்தில் இருக்கிறார்கள். தலைவனிடமுள்ள பற்று, நன்மைக்கு உகந்ததாயில்லாமல் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் அவரையே சார்ந்திருப்பதற்கு வழிநடத்தக்கூடும். குழந்தை பருவத்திலிருந்து மத உட்பிரிவு சூழலில் ஒருவர் வளர்க்கப்பட்டிருக்கையில் இந்த ஆபத்து இன்னும் சிக்கலானதாகலாம்.
ஒரு மதத்தைக் குறித்து இத்தகைய ஆர்வத்தை உடையவர்களுக்கு நம்பத்தக்க தகவல்கள் தேவை. யெகோவாவின் சாட்சிகள் ஒரு மத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்; அது அதன் உறுப்பினரை அடிமைப்படுத்துகிறது, அவர்கள்மீது அதிகார கட்டுப்பாட்டை செலுத்துகிறது, அவர்களுடைய சுயாதீனத்தை மட்டுக்குமீறி கட்டுப்படுத்துகிறது, பொதுவில், சமுதாயத்தோடு ஒத்துப்போகாதபடி செய்கிறது என்று சிலரிடம் சொல்லப்பட்டிருக்கலாம்.
இத்தகைய விஷயங்கள் ஆதாரமற்றவை என்று யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கின்றனர். எனவே நீங்கள் தாமே அவற்றை ஆராய்ந்து பார்க்கும்படி உங்களை அழைக்கிறார்கள். கவனமாய் ஆராய்ந்த பின்பு, நீங்களே சொந்தமாய் முடிவு செய்யுங்கள். தாங்கள் உரிமைபாராட்டுகிறபடி, உண்மையில் சாட்சிகள் கடவுளின் ஊழியர்களா மனிதரின் அடிமைகளா? அவர்களுடைய பலத்தின் ஊற்றுமூலம் எது? பக்கங்கள் 12-ல் இருந்து 23 வரை உள்ள இரண்டு கட்டுரைகள் இத்தகைய கேள்விகளுக்கு திருப்திதரும் பதில்களை அளிக்கும்.
[அடிக்குறிப்பு]
a மேலுள்ள கூற்று 1950-ல் வெளியான முதல் பதிப்பில் காணப்படுவதில்லை. 1982-ன் திருத்திய பதிப்பில் அது காணப்படுவது, யெகோவாவின் சாட்சிகளை மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது