கிரீஸ்டாஃப் பிளான்டன் —பைபிள் அச்சடிப்பில் முன்னோடி
யோஹனஸ் கூட்டன்பர்க் (சுமார் 1397-1468) அச்சுக் கோர்க்கும் முறையைப் பயன்படுத்தி முதன்முதலில் பைபிளை தயாரித்தார் என்பது உலகறிந்த விஷயம். ஆனால் கிரீஸ்டாஃப் பிளான்டனைப் பற்றி அநேகருக்குத் தெரியாது. இவர் அச்சுக்கலையின் முன்னோடியாகத் திகழ்ந்தார். 1500-களில் உலகெங்குமுள்ள மக்களுக்கு புத்தகங்களும் பைபிள்களும் கிடைக்கும்படி செய்ததில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
சுமார் 1520-ஆம் ஆண்டில் பிரான்சிலுள்ள சென் அவெர்டெனில் கிரீஸ்டாஃப் பிளான்டன் பிறந்தார். அவர் மதசகிப்புத்தன்மையுள்ள, அதேசமயம் பிரான்சைவிட பொருளாதார ரீதியில் வாய்ப்புகள் அதிகமிருக்கும் இடத்திற்குச் செல்ல விரும்பினார். ஆகையால், தனக்கு சுமார் 28 வயதிருக்கும்போது தாழ்வான நாடுகளில் (Low Countries) உள்ள ஆன்ட்வர்ப்பில் குடியேறினார்.a
புத்தகங்களை ‘பைண்டிங்’ செய்பவராகவும் தோல் பொருள்களை வடிவமைப்பவராகவும் பிளான்டன் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார். தோல் வேலையில் அவருடைய அற்புதமான கைவண்ணம் செல்வந்தர்களை அதிகமாகக் கவர்ந்தது. என்றாலும், 1555-ல் நடந்த ஒரு சம்பவம் பிளான்டன் தன்னுடைய தொழிலை மாற்றிக்கொள்ள காரணமானது. தாழ்வான நாடுகளின் ஆட்சியாளரும் ஸ்பெயின் நாட்டின் அரசருமான இரண்டாம் ஃபிலிப் ஆர்டர் செய்திருந்த தோல் பெட்டியை கொடுக்கச் சென்றபோது, ஆன்ட்வர்ப்பிலுள்ள ஒரு தெருவில் பிளான்டன் தாக்கப்பட்டார். சில குடிகாரர்கள் அவருடைய தோள்பட்டையில் வாளால் குத்திவிட்டார்கள். காயத்திலிருந்து பிளான்டன் மீண்டுவிட்டாலும், அவரால் பழையபடி வேலைசெய்ய முடியாமல் போனது. அதனால் தொழிலை விட்டுவிட வேண்டிய கட்டாயநிலை அவருக்கு ஏற்பட்டது. அனபாப்டிஸ்ட் தொகுதியின் தலைவரான ஹென்ரக் நிக்லாஸ் பொருளாதார உதவி அளித்ததால், பிளான்டன் அச்சுத் தொழிலை ஆரம்பித்தார்.
“வேலையும் விடாமுயற்சியும்”
பிளான்டன் தன்னுடைய அச்சகத்திற்கு ட குல்டன் பாஸர் (த கோல்டன் காம்பஸ்) என்று பெயரிட்டார். அவருடைய வியாபார முத்திரையில் ஒரு ஜோடி தங்க காம்பஸ்கள் இருந்தன. அதில் “லாபோரெ எட் கான்ஸ்டான்ட்யா” என்று பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு “வேலையும் விடாமுயற்சியும்” என்று அர்த்தம். இந்தச் சுறுசுறுப்பான மனிதருக்கு அந்த வியாபார முத்திரை ரொம்பவே பொருத்தமானதாக இருந்தது.
பிளான்டன் வாழ்ந்த சமயத்தில் ஐரோப்பாவில் மதத்திலும் அரசியலிலும் பெரும் கொந்தளிப்பு நிலவிக்கொண்டிருந்ததால் அவர் பிரச்சினைகளைத் தவிர்க்க முயன்றார். மற்ற எந்த வேலையைக்காட்டிலும் அச்சுவேலை அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தை அவர் ஏற்றுக்கொண்டபோதிலும், “மதத்தை பொறுத்தவரை அவர் எதையுமே வெளிப்படையாக ஆதரிக்கவில்லை” என்று எழுத்தாளரான மாயுரிட்ஸ் ஸாபா கூறுகிறார். இதனால், மதவிரோதக் கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை அச்சடித்ததாக அவரைப்பற்றி வதந்திகள் பரவின. இதன் காரணமாக, 1562-ல் பாரிஸுக்குத் தப்பியோடி ஒரு வருடத்திற்கு மேலாக அங்கிருக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
1563-ல் அவர் ஆன்ட்வர்ப்பிற்குத் திரும்பி வந்து, அநேக பணக்கார வர்த்தகர்களுடன் கூட்டு வாணிபத்தில் இறங்கினார்; அவர்களில் அநேகர் கால்வினின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள். ஐந்து வருட கூட்டு வாணிபத்தில் 260 வித்தியாசமான புத்தகங்கள் பிளான்டனின் அச்சகங்களில் அச்சிடப்பட்டன. இவற்றில் எபிரெய, கிரேக்க, லத்தீன் பைபிள் பதிப்புகளும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட டச்சு கத்தோலிக்க லூவென் பைபிள் பதிப்புகளும் அடங்கும்.
‘அச்சுக்கலையில் அதிமுக்கிய சாதனை’
ஸ்பெயின் நாட்டு அரசர் இரண்டாம் ஃபிலிப், ஆல்பாவின் இளவரசரைத் தாழ்வான நாடுகளின் ஆளுநராக 1567-ல் நியமித்தார். ஏனெனில், அவ்விடங்களில் ஸ்பானிய ஆட்சிக்கு அப்போது எதிர்ப்பு அதிகரித்து வந்தது. அரசரிடமிருந்து முழு அதிகாரம் பெற்ற இளவரசர், அதிகரித்து வந்த புராட்டஸ்டன்டுகளின் எதிர்ப்பைத் தணிக்க பெருமுயற்சி செய்தார். எனவே, பிளான்டன் தன் மீதிருக்கும் சந்தேகத்தை போக்குவதற்காக ஒரு மாபெரும் திட்டத்தை ஆரம்பித்தார். மூல மொழிகளில் பைபிள் வசனங்களை ஓர் இலக்கியப் பதிப்பாக அச்சடிக்க வேண்டுமென்ற தணியாத ஆசை அவருக்கு இருந்தது. இந்தப் புதிய பதிப்பை அச்சிடுவதற்காக, இரண்டாம் ஃபிலிப்பின் ஆதரவைப் பெறுவதில் பிளான்டன் வெற்றிகண்டார். நிதி உதவி அளிப்பதாக அரசர் உறுதியளித்தார். அதோடு, புகழ்பெற்ற மனித பண்பாய்வாளரான ஆர்யாஸ் மோன்டானோ என்பவரை அத்திட்டத்தின் மேற்பார்வையாளர்களில் ஒருவராகவும் நியமித்தார்.
மோன்டானோ மொழித்திறமைமிக்கவராக இருந்தார்; தினசரி 11 மணிநேரம் வேலை செய்தார். ஸ்பெயின், பெல்ஜியம், பிரான்சு ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுநர்கள் அவருக்கு உதவினர். புகழ்பெற்ற கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிளின் புதிய பதிப்பைத் தயாரிப்பதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது.b பிளான்டனுடைய புதிய பன்மொழி பைபிளில் லத்தீன் வல்கேட், கிரேக்க செப்டுவஜின்ட், மூல எபிரெய வசனம் ஆகியவற்றோடு, அரமேய மொழி டார்கம் மொழிபெயர்ப்பும், சிரியாக் மொழி பஷீடா மொழிபெயர்ப்பும் அவற்றின் நேரடியான லத்தீன் மொழிபெயர்ப்பும் இருந்தன.
1568-ல் அச்சடிப்பு ஆரம்பமானது. இந்த மாபெரும் வேலை 1573-வாக்கில் முடிவடைந்தது. அந்தக் காலத்தில் இதற்கொத்த மற்ற புத்தகங்களை அச்சடிப்பதற்கு எடுக்கப்பட்ட காலத்தோடு ஒப்பிடுகையில் இந்த அச்சடிப்பு வெகு விரைவில் முடிந்துவிட்டதென்றே சொல்லலாம். அரசர் இரண்டாம் ஃபிலிப்பிற்கு எழுதிய ஒரு கடிதத்தில், மோன்டானோ இவ்வாறு குறிப்பிட்டார்: “ரோமில் ஒரு வருடத்தில் சாதிக்கப்படுவதைவிட இங்கே ஒரு மாதத்தில் அதிகம் சாதிக்கப்பட்டிருக்கிறது.” புதிய பன்மொழி பைபிளின் 1,213 பிரதிகளைப் பிளான்டன் அச்சிட்டார்; ஒவ்வொன்றும் எட்டு பெரிய தொகுதிகளைக் கொண்டிருந்தது. அதன் முதல் பக்கத்தில் ஏசாயா 65:25-ல் விவரிக்கப்பட்டுள்ளது போல ஒரு சிங்கம், ஒரு காளை, ஓநாய், ஒரு செம்மறியாட்டுக்குட்டி ஆகியவை சமாதானமாக ஒரே தொட்டியில் குடிப்பதுபோன்ற படம் அச்சடிக்கப்பட்டிருந்தது. தொகுதிகளாகப் பிரிக்கப்படாத ஒரு முழு பைபிளின் விலை 70 கில்டர்ஸாக இருந்தது. இது பெரிய தொகையாகவே இருந்தது; ஏனென்றால், அந்தக் காலத்தில் ஒரு சராசரி குடும்பம் ஒரு வருடத்தில் சுமார் 50 கில்டர்ஸ்தான் சம்பாதிக்க முடிந்தது. இதன் முழுத்தொகுதியும் பிற்பாடு ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிள் என அறியப்பட்டது. அரசர் இரண்டாம் ஃபிலிப் இதற்கு ஆதரவளித்ததால் பிப்ளியா ரேக்யா (ராயல் பைபிள்) என்றும் இது அழைக்கப்பட்டது.
இந்த பைபிளை போப் பதிமூன்றாம் கிரகரி அங்கீகரித்தாலும்கூட, ஆர்யாஸ் மோன்டானோவின் பணி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு ஒரு காரணம், லத்தீன் வல்கேட் மொழிபெயர்ப்பைவிட மூல எபிரெய வாக்கியம்தான் உயர்ந்தது என அவர் கருதினார். அவரை முக்கியமாக எதிர்த்தது ஸ்பானிய இறையியலாளரான லேயோன் டே காஸ்ட்ரோ. லத்தீன் வல்கேட்தான் முழுமையான அதிகாரத்தை கொண்டது என்று இவர் கருதினார். மோன்டானோ, திரித்துவத்திற்கு எதிரான தன் கொள்கையால் பைபிளின் வசனத்தைக் கறைபடுத்திவிட்டதாக டே காஸ்ட்ரோ அவர் மீது குற்றம்சாட்டினார். உதாரணமாக, 1 யோவான் 5:7-ல் போலியாகச் சேர்க்கப்பட்ட “[பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” (தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு) என்ற வசனத்தை சிரியாக் மொழி பஷீடா நீக்கிவிட்டதை டே காஸ்ட்ரோ குறிப்பிட்டுக்காட்டினார். என்றாலும், மோன்டானோ குற்றவாளி அல்ல என்று ஸ்பானிய விசாரணை மன்றம் தீர்ப்பளித்தது. “16-ஆம் நூற்றாண்டில் ஒரே அச்சாளரால் அச்சுக்கலையில் நிகழ்த்தப்பட்ட அதிமுக்கிய சாதனை” என்று ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிளை சிலர் கருதுகிறார்கள்.
நீடித்த நன்மை
அப்போதிருந்த அநேக அச்சாளர்கள் இரண்டு அல்லது மூன்று அச்சு இயந்திரங்களையே வைத்திருந்தனர். என்றாலும், பிளான்டன் தன்னுடைய உற்பத்தியின் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு குறைந்தபட்சம் 22 அச்சு இயந்திரங்களும் 160 பணியாட்களும் இருந்திருக்கலாம். ஸ்பானிஷ் மொழிபேசும் நாடுகளைப் பொறுத்தவரை அவரே முன்னணி அச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
அதே சமயத்தில் தாழ்வான நாடுகளில் ஸ்பானிய ஆட்சிக்கான எதிர்ப்பு அதிகரித்து வந்தது. ஆன்ட்வர்ப் நகரமும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டது. சம்பளம் கிடைக்காத ஸ்பானிய கூலிப்படையினர் 1576-ல் கலகம் செய்து நகரைச் சூறையாடினர். 600-க்கும் அதிகமான வீடுகள் எரிந்து சாம்பலாயின; ஆயிரக்கணக்கான ஆன்ட்வர்ப்வாசிகள் கொல்லப்பட்டனர். வர்த்தகர்கள் நகரைவிட்டு ஓடிவிட்டனர். இது பிளான்டனுக்கு மாபெரும் பொருளாதார இழப்பாக இருந்தது. மேலும், அந்தக் கலகக்காரர்கள் மற்ற ஆன்ட்வர்ப்வாசிகளிடம் தாங்கள் எதிர்பார்த்த பணத்தைவிட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகமாகக் கொடுக்கும்படி பிளான்டனை கட்டாயப்படுத்தினர்.
1583-ல், ஆன்ட்வர்ப்புக்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லைடன் நகருக்கு பிளான்டன் மாறிச்சென்றார். அங்கே ஓர் அச்சகத்தை நிர்மாணித்தார்; லைடன் பல்கலைக்கழகத்தின் அச்சாளராக நியமிக்கப்பட்டார்; இது கால்வினிஸ்ட் புராட்டஸ்டன்டுகளால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனம். எனவே, கத்தோலிக்கச் சர்ச்சுக்கு எதிரானவர் என்று அவர்மீது சுமத்தப்பட்டிருந்த பழைய குற்றச்சாட்டுகள் மீண்டும் தலைதூக்கின. அதனால் பிளான்டன் 1585-ன் முடிவில் ஆன்ட்வர்ப்புக்குத் திரும்பினார். அதற்குக் கொஞ்சக்காலத்திற்கு முன்புதான் நகரத்தில் ஸ்பானிய ஆட்சி நிலைநாட்டப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் பிளான்டன் தன்னுடைய 60-களில் இருந்தார், அவருடைய கோல்டன் காம்பஸ் அச்சகம், ஒரு தனி அச்சு இயந்திரத்தில் நான்கு பேர் மட்டுமே வேலைசெய்யும் அச்சகமாக ஆனது. பிளான்டன் தன்னுடைய அச்சகத்தை திரும்ப கட்ட ஆரம்பித்தார். என்றாலும், அதை பழைய நிலைக்கு கொண்டுவர அவரால் முடியவில்லை; 1589, ஜூலை 1-ஆம் தேதி பிளான்டன் மரணமடைந்தார்.
இந்த 34 வருட காலப்பகுதியினூடே கிரீஸ்டாஃப் பிளான்டன் சராசரியாக ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 55 என்ற கணக்கில் 1,863 வித்தியாசமான புத்தகப் பதிப்புகளை அச்சிட்டார். இன்றைக்கும்கூட இது ஒரு தனிப்பட்ட அச்சாளரின் மாபெரும் சாதனையாக இருக்கிறதே! பிளான்டன் உறுதியான மத நிலைநிற்கையை எடுக்கத் தவறினாலும், அவருடைய சேவை அச்சடிப்பதையும் அச்சுக்கலையையும் மட்டுமல்ல தேவ ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்ட வசனங்களைப் படிக்கவும் ஊக்கமளித்தது. (2 தீமோத்தேயு 3:16) பிளான்டனும் அவர் காலத்தில் வாழ்ந்த அச்சாளர்களும் பொதுமக்களுக்கு பைபிளைக் கிடைக்கச் செய்வதில் உண்மையில் பெரும்பங்கு வகித்தார்கள்.
[அடிக்குறிப்புகள்]
a “தாழ்வான நாடுகள்” என்ற வார்த்தை ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையேயுள்ள கடற்கரையோர நாடுகளைக் குறிக்கிறது. இன்றைய பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பர்க் ஆகியவை இதில் அடங்கும்.
b இந்தப் பன்மொழி பைபிள் 1517-ல் வெளியிடப்பட்டது. எபிரெயு, கிரேக்கு, லத்தீன் வசனங்களும் அரமேயிக்கில் சில பகுதிகளும் இதில் உள்ளன. காவற்கோபுரம் ஏப்ரல் 15, 2004, பக்கங்கள் 28-31-ல் உள்ள “கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிள்—மொழிபெயர்ப்புக்கு உதவும் சரித்திரப் புகழ்பெற்ற படைப்பு” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 15-ன் பெட்டி/படம்]
பிளான்டன்-மாரேடுஸ் அருங்காட்சியகம்
பிளான்டனும் அவருடைய சந்ததியினரும் வாழ்ந்த, வேலைசெய்த கட்டிடம் ஆன்ட்வர்ப் நகரில் உள்ளது. அது ஓர் அருங்காட்சியகமாக 1877-ல் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது. அந்தக் காலப்பகுதியைச் சேர்ந்த வேறெந்த அச்சகமும் இப்போது உருப்படியான நிலையில் இல்லை. 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஐந்து அச்சு இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட பிளான்டன் காலத்தைச் சேர்ந்த, அதுவும் உலகத்திலேயே பழமையானவை என்று அறியப்பட்ட வேறு இரண்டு அச்சு இயந்திரங்களும் அங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அருங்காட்சியகத்தில் வார்ப்பெழுத்துக்களை உருவாக்கும் சுமார் 15,000 அச்சு வார்ப்புகளும், 15,000 மரத்துண்டுகளும், செதுக்கப்பட்ட 3,000 செம்புத்தகடுகளும் இருக்கின்றன. அருங்காட்சியக நூலகத்தில் 9-ஆம் நூற்றாண்டிலிருந்து 16-ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த 638 கையெழுத்துப்பிரதிகளும், 1501-ஆம் வருடத்திற்கு முன்னால் அச்சடிக்கப்பட்ட 154 புத்தகங்களும் இருக்கின்றன. அவற்றுள், 1461-க்கு முன்னான காலப்பகுதியைச் சேர்ந்த அசல் கூட்டன்பர்க் பைபிளும், பிளான்டனுடைய பிரபலமான ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிள்களில் ஒன்றும் உள்ளன.
[பக்கம் 15-ன் படம்]
ஆர்யாஸ் மோன்டானோ
[பக்கம் 16-ன் படம்]
எபிரெய வசனம், லத்தீன் “வல்கேட்,” கிரேக்க “செப்டுவஜின்ட்,” ஆகியவற்றோடு அரமேய மொழி டார்கமும், சிரியாக் மொழி “பஷீடா”வும் அவற்றின் லத்தீன் மொழிபெயர்ப்புகளும் ஆன்ட்வர்ப் பன்மொழி பைபிளில் உள்ளன
[படத்திற்கான நன்றி]
By courtesy of Museum Plantin-Moretus/Stedelijk Prentenkabinet Antwerpen
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
இரு படங்களும்: By courtesy of Museum Plantin-Moretus/Stedelijk Prentenkabinet Antwerpen