போர்ச்சுகீஸ் மொழியில் முதல் பைபிள் விடாமுயற்சிக்கு வெற்றி
“விடாமுயற்சியோடு செயல்படுபவர் வெற்றி பெறுவார்.” இந்தப் பொன்மொழி, 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மதத் துண்டுப்பிரதியின் தலைப்புப் பக்கத்தில் காணப்படுகிறது. இது ஸ்வான் ஃபெரேரா டி ஆல்மேடா என்பவரால் எழுதப்பட்டது. போர்ச்சுகீஸ் மொழியில் பைபிளை மொழிபெயர்த்துப் பிரசுரிப்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒருவருக்கு இந்தப் பொன்மொழி ஏகப் பொருத்தமே.
ஆல்மேடா, 1628-ல் டாரி டி டாவாரஸ் என்ற கிராமத்தில் பிறந்தார்; இது வடக்கு போர்ச்சுகலைச் சேர்ந்த ஒரு கிராமமாகும். குழந்தைப் பருவத்திலேயே அநாதையாகிவிட்டதால், அவரது சித்தப்பா அவரை வளர்த்தார். போர்ச்சுகலின் தலைநகரான லிஸ்பனில் வசித்த அவரது சித்தப்பா ஒரு மதத்துறவியாக இருந்தார். ஆல்மேடா ஒரு பாதிரியாக ஆவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த அதே சமயத்தில் சிறந்த கல்வியைப் பெற்றார் என வழிவழியாக நம்பப்படுகிறது; இளம் பிராயத்திலேயே பல மொழிகளைக் கற்றுக்கொள்வதில் அசாதாரண திறமையை வளர்த்துக்கொள்ள அந்தக் கல்வி அவருக்குக் கைகொடுத்தது.
என்றாலும், போர்ச்சுகலிலேயே இருந்திருந்தால் தன்னுடைய திறமைகளையெல்லாம் பயன்படுத்தி பைபிள் மொழிபெயர்ப்பில் அவர் இறங்கியிருக்க வாய்ப்பில்லை. வடக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் மதச் சீர்திருத்தவாதிகள் பரவியிருந்ததால் அங்கிருந்தவர்கள் தாய் மொழியில் பைபிள்களை வைத்திருந்தார்கள். போர்ச்சுகலோ கத்தோலிக்க ஒடுக்குமுறை மன்றத்தின் இரும்புப் பிடியில் இருந்தது. ஒருவர் தன்னுடைய மொழியில் ஒரு பைபிளை வைத்திருந்தாலே போதும், அவர் ஒடுக்குமுறை நீதிமன்றத்தின் முன்பு நிற்க வேண்டிய கதி ஏற்படும்.a
ஒருவேளை ஆல்மேடா இந்த அடக்குமுறையிலிருந்து விடுபட விரும்பியிருப்பார்; அதனால், தன் இளம் பிராயத்திலேயே நெதர்லாந்துக்கு மாறிச் சென்றார். அங்கிருந்து சீக்கிரத்திலேயே, 14 வயதில் இருக்கும்போதே ஆசியாவுக்குப் பயணப்பட்டார்; இந்தோனேஷியாவைச் சேர்ந்த பட்டேவியா என்ற இடத்தின் (இப்போது ஜகார்த்தா என அழைக்கப்படுகிறது) வழியாக அங்குச் சென்றார். தென்கிழக்கு ஆசியாவிலிருந்த டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாக மையமாக பட்டேவியா இருந்தது.
டீன்ஏஜ் மொழிபெயர்ப்பாளர்
தனது பயணத்தின் கடைசி கட்டமாக ஆசியாவில் காலூன்றியது ஆல்மேடாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருந்தது. பட்டேவியாவுக்கும் மேற்கு மலேஷியாவைச் சேர்ந்த மலாக்காவுக்கும் இடையே பயணிக்கையில் புராட்டஸ்டன்ட்டினருடைய ஒரு துண்டுப்பிரதி தற்செயலாக அவருக்குக் கிடைத்தது; ஸ்பானிய மொழியில் டிஃபெரென்ஸியாஸ் டி லா கிறிஸ்டியான்டாட் (கிறிஸ்தவமண்டலத்திற்குள் பேதங்கள்) என்ற தலைப்பில் அது இருந்தது. அதில் பொய்மத கொள்கைகளைத் தாக்கி எழுதப்பட்டிருந்தது. அதோடு, முக்கியமாக அதில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு வாசகம் இளம் ஆல்மேடாவின் மனதைக் கவர்ந்தது: “யாருக்குமே தெரியாத ஒரு மொழியை சர்ச்சில் பயன்படுத்தும்போது, ஏன், கடவுளை மகிமைப்படுத்தவும்கூட அப்படியொரு மொழியைப் பயன்படுத்தும்போது கேட்போருக்கு புரியவும் புரியாது பயனும் அளிக்காது.”—1 கொரிந்தியர் 14:9.
அதன் கருத்து ஆல்மேடாவுக்குப் பிடிபட்டது: மதத்தின் தப்பிதங்களை அம்பலப்படுத்துவதற்கு ஒரே வழி, எல்லாராலும் புரிந்துகொள்ள முடிகிற மொழியில் பைபிளை மொழிபெயர்ப்பதாகும். மலாக்காவுக்கு வந்ததும் டச் ரிஃபார்ம்ட் சர்ச்சுக்கு மாறினார், சீக்கிரத்திலேயே சுவிசேஷ புத்தகங்களில் சிலவற்றை ஸ்பானிய மொழியிலிருந்து போர்ச்சுகீஸ் மொழிக்கு மொழிபெயர்க்கத் துவங்கினார். “சத்தியத்தை அறிய உண்மையிலேயே வாஞ்சையாய் இருந்தவர்களுக்கு” அவற்றை விநியோகித்தார்.b
இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவர் மிகப்பெரிய ஒரு வேலைக்குத் தயாரானார். அதாவது, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முழுவதையும் லத்தீன் வல்கேட் பைபிளிலிருந்து மொழிபெயர்க்கத் தயாரானார். இந்த வேலையை ஒரு வருடத்திற்குள்ளாகவே முடித்து விட்டார். இது, 16 வயது இளைஞனின் அபார சாதனை அல்லவா! தன் மொழிபெயர்ப்பைப் பிரசுரிப்பதற்காக அதன் ஒரு பிரதியை பட்டேவியாவிலிருந்த டச் கவர்னர் ஜெனரலுக்கு அவர் தைரியமாக அனுப்பி வைத்தார். பட்டேவியாவிலிருந்த ரிஃபார்ம்ட் சர்ச், அவருடைய கையெழுத்துப் பிரதியை ஆம்ஸ்டர்டாமிலிருந்த வயதான பாஸ்டருக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. ஆனால், அந்த பாஸ்டர் இறந்துவிட்டதால் அப்பிரதி காணாமல் போய்விட்டது.
1651-ல் சிலோனிலிருந்த (இப்போது இலங்கை என அழைக்கப்படுகிறது) ரிஃபார்ம்ட் சபைக்காக ஆல்மேடாவுடைய மொழிபெயர்ப்பின் ஒரு நகலை எடுக்கும்படி சொல்லப்பட்டபோதுதான் சர்ச்சின் பொது ஆவணப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த அசல் பிரதி காணாமல் போயிருந்தது அவருக்குத் தெரியவந்தது. அதை நினைத்து அவர் மனமொடிந்து போகாமல், எப்படியோ மற்றொரு நகலைக் கண்டுபிடித்தார்; அது முதன்முதலில் எழுதியதாக இருக்கலாம். அடுத்த வருடத்திலேயே, சுவிசேஷ புத்தகங்கள் மற்றும் அப்போஸ்தலர் புத்தகத்தின் திருத்தப்பட்ட பதிப்பை எழுதி முடித்தார். அதற்காக பட்டேவியா ஆலோசனைக்குழு அவருக்கு 30 கில்டர் பணத்தைப் பரிசாக அளித்தது. “அவர் செய்த மிகப்பெரிய வேலையோடு ஒப்பிட அந்தப் பணம் வெறும் சல்லிக்காசாக இருந்தது” என அவருடைய சக பணியாளர் ஒருவர் எழுதினார்.
அவருடைய வேலையை அந்த ஆலோசனைக்குழு துச்சமாய் கருதியபோதிலும், ஆல்மேடா தன்னுடைய வேலையை நிறுத்தவில்லை. 1654-ல் புதிய ஏற்பாடு முழுவதன் திருத்திய பதிப்பைச் சமர்ப்பித்தார். மீண்டும் அவருடைய பைபிள் பிரசுரிக்கப்படுவதற்கான வாய்ப்பு கைகூடி வந்தது. என்றாலும், சில சர்ச்சுகளில் பயன்படுத்துவதற்காக ஒருசில பிரதிகள் மட்டுமே கையால் எழுதப்பட்டன.
ஒடுக்குமுறை மன்றத்தின் கண்டனம்
அடுத்த பத்தாண்டுகளில், ரிஃபார்ம்ட் சர்ச்சைச் சேர்ந்த பாஸ்டர்களுக்கு உதவி செய்வதிலும் மிஷனரி வேலையிலும் ஆல்மேடா மும்முரமாய் ஈடுபட்டார். 1656-ல் பாஸ்டராக நியமிக்கப்பட்டு, முதலில் சிலோனில் சேவை செய்தார்; அங்கே ஒரு யானையிடமிருந்து மயிரிழையில் தப்பினார், இல்லையெனில் மிதிபட்டு செத்திருப்பார். பிற்பாடு இந்தியாவில் மிஷனரியாக சேவை செய்தார்; இந்நாட்டிற்கு முதன்முதலில் வந்த புராட்டஸ்டன்ட் மிஷனரிகளில் இவரும் ஒருவர்.
அவர் புராட்டஸ்டன்ட்டினராக மாறியிருந்தார், அதோடு வேறொரு நாட்டிற்காக மிஷனரி சேவை செய்தார். ஆகவே, போர்ச்சுகீஸ் மொழி பேசும் சமுதாயத்தினரை அவர் சந்தித்தபோது பலரும் அவரை ஒரு விசுவாசதுரோகியாகவே கருதினார்கள். அதுமட்டுமல்ல, குருக்களின் மத்தியில் நடந்த ஒழுக்கச் சீர்கேடுகளை நேரடியாகக் கண்டித்ததாலும், சர்ச்சின் தவறான கொள்கைகளை அம்பலப்படுத்தியதாலும் கத்தோலிக்க மிஷனரிகளுக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. 1661-ல், இந்தியாவிலுள்ள கோவாவில் இருந்த ஒடுக்குமுறை நீதிமன்றம் அவருடைய மாறுபட்ட கொள்கையின் நிமித்தம் அவருக்கு மரண தண்டனை விதித்தபோது இந்த மோதல்கள் உச்சத்தை எட்டின. அவர் இல்லாத சமயத்தில் அவருடைய கொடும்பாவி எரிக்கப்பட்டது. ஆல்மேடா எப்போதும் எதிர்வாதம் செய்ததை அறிந்த டச் கவர்னர் ஜெனரல், சீக்கிரத்தில் அவரை பட்டேவியாவுக்கே அழைத்துக்கொண்டார்.
ஆல்மேடா பக்திவைராக்கியமுள்ள ஒரு மிஷனரியாக இருந்தார்; அதே சமயத்தில், போர்ச்சுகீஸ் மொழியில் ஒரு பைபிள் தேவை என்பதை அவர் ஒருபோதும் மறந்துவிடவில்லை. சொல்லப்போனால், குருக்களுக்கும் சரி மக்களுக்கும் சரி, பைபிள் அறிவு இல்லாதிருந்தது அவருடைய தீர்மானத்தை இன்னும் வலுப்படுத்தவே செய்தது. 1668 தேதியிட்ட மதத் துண்டுப்பிரதி ஒன்றின் முன்னுரையில், ஆல்மேடா தன் வாசகர்களுக்கு இவ்வாறு அறிவித்தார்: “இதுவரையில் யாருமே உங்களுக்குக் கொடுக்காத மிகப்பெரிய பரிசும் மிகவும் விலைமதிப்புள்ள பொக்கிஷமுமான பைபிளை சீக்கிரத்திலேயே உங்களுடைய சொந்த மொழியில் தந்து உங்களை கௌரவிப்பேன் . . . என்று நம்புகிறேன்.”
ஆல்மேடாவும் ஆய்வுக் குழுவினரும்
1676-ல் ஆய்வு செய்வதற்காக பட்டேவியாவிலிருந்த சர்ச் ஆலோசனைக் குழுவுக்கு தன்னுடைய புதிய ஏற்பாட்டின் முற்றுப்பெற்ற கையெழுத்துப் பிரதியை அனுப்பினார். ஆரம்பத்திலிருந்தே, ஆல்மேடாவுக்கும் ஆய்வாளர்களுக்கும் இடையே இறுக்கமான சூழல் இருந்துவந்தது. டச் மொழி பேசிய அவரது சக பணியாளர்களால் அர்த்தத்திலும் மொழிநடையிலும் உள்ள நுட்ப வேறுபாடுகளை புரிந்துகொள்ள முடியாதிருந்திருக்கலாம் என வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஜெ. எல். ஸ்வெலங்க்ரேபல் விளக்குகிறார். எத்தகைய மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்பதில்கூட அவர்களுக்கிடையே சொற்போர் நடந்தது. மக்கள் சாதாரணமாகப் பேசுகிற போர்ச்சுகீசிய மொழியில் பைபிள் எழுதப்பட வேண்டுமா அல்லது அநேகருக்குப் புரியாத உயர் வழக்கு மொழியில் எழுதப்பட வேண்டுமா என்ற கருத்துவேறுபாடுகள் நிலவின. வேலையை விரைவில் முடிக்க வேண்டுமென்று ஆல்மேடா வைராக்கியமாய் இருந்ததாலும்கூட, அவர்களுக்கிடையே தொடர்ச்சியான உரசல்கள் ஏற்பட்டன.
அவருடைய வேலை கொஞ்சம் கொஞ்சமாகவே முன்னேறியது; கருத்துவேறுபாடுகளோ ஆய்வாளர்களின் ஆர்வமின்மையோ அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். நான்கு வருடங்களுக்குப் பிறகும்கூட ஆய்வாளர்கள், லூக்கா புத்தகத்தின் ஆரம்ப அதிகாரங்களின் பேரில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள். இப்படி இழுத்தடிப்பதைப் பார்த்து வயிறெரிந்துப்போன ஆல்மேடா, ஆய்வாளர்களுக்குத் தெரியாமல் தன்னுடைய கையெழுத்துப் பிரதியின் ஒரு நகலை பிரசுரிப்பதற்காக நெதர்லாந்துக்கு அனுப்பினார்.
அவருடைய பைபிள் பிரசுரிக்கப்படுவதைத் தடுக்க சர்ச் ஆலோசனைக் குழு பல முயற்சிகள் எடுத்தபோதிலும், 1681-ல் அவருடைய புதிய ஏற்பாடு ஆம்ஸ்டர்டாமிலுள்ள அச்சகத்தில் பிரசுரிக்கப்பட்டது. அடுத்த வருடத்தில் அதன் முதல் பிரதிகள் பட்டேவியாவுக்கு வந்து சேர்ந்தன. நெதர்லாந்திலிருந்த ஆய்வாளர்கள், தன்னுடைய மொழிபெயர்ப்பில் கண்டபடி கைவைத்திருப்பதைக் கவனித்தபோது ஆல்மேடாவுக்கு எப்படியிருந்திருக்கும் என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! ஏனென்றால், போர்ச்சுகீஸ் மொழி அவர்களுக்குத் தெரியாத ஒரு மொழியாக இருந்தது. அவர்கள் புகுத்திய “பொருத்தமற்ற, முரண்பாடான வார்த்தைகள் பரிசுத்த ஆவி என்பதற்கான அர்த்தத்தையே குழப்பிவிட்டிருந்ததை” ஆல்மேடா கவனித்தார்.
டச் அரசாங்கமும் அதை விரும்பவில்லை, அதனால் அந்த முழு பதிப்பையும் அழித்துவிடும்படி உத்தரவிட்டது. இருந்தாலும், ஆல்மேடா அந்த அரசாங்க அதிகாரிகளை எப்படியோ சம்மதிக்க வைத்து, அதிலுள்ள பெரிய பெரிய தவறுகளை கையாலேயே திருத்தி தருவதாகச் சொல்லி சில நகல்கள் அழிக்கப்படாமல் பார்த்துக்கொண்டார். ஒரு திருத்திய பதிப்பு தயாராகும் வரையில் இப்பிரதிகள் பயன்படுத்தப்படும்.
பட்டேவியாவிலிருந்த ஆய்வாளர்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்து கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் ஆய்வு செய்யும் பணியைத் தொடர்ந்தார்கள். எபிரெய வேதாகமத்தின் புத்தகங்கள் ஒவ்வொன்றையும் ஆல்மேடா முடிக்க முடிக்க, அவற்றில் ஆய்வு செய்ய அவர்கள் தயாரானார்கள். ஆல்மேடா சட்டென பொறுமையிழந்து விடுவாரோ என பயந்த ஆலோசனைக் குழு, முற்றுப்பெற்ற பிரதியின் கையெழுத்திடப்பட்ட பக்கங்களை சர்ச்சின் காப்புப் பெட்டியில் வைக்கத் தீர்மானித்தது. அதன் தீர்மானத்தை ஆல்மேடா கடுமையாக எதிர்த்தார்.
இதற்குள்ளாக, பல பத்தாண்டுகள் பாடுபட்டு உழைத்ததாலும் வெப்பமண்டலப் பிரதேசத்தின் சாதகமற்ற சீதோஷ்ணத்தாலும் அவருடைய உடல்நிலை படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால், 1689-ல் அவர் தன்னுடைய சர்ச் வேலைகளிலிருந்து விடைபெற்று எபிரெய வேதாகமத்தை மொழிபெயர்ப்பதில் முழுமையாய் இறங்கினார். வருத்தகரமாக, 1691-ல் எசேக்கியேல் புத்தகத்தின் கடைசி அதிகாரத்தை மொழிபெயர்க்கையில் அவர் இறந்துபோனார்.
புதிய ஏற்பாட்டின் இரண்டாம் பதிப்பு அவர் இறப்பதற்கு சற்று முன்னர் முற்றுப்பெற்றது; 1693-ல் அது பிரசுரிக்கப்பட்டது. அவரது மொழிபெயர்ப்பு திறமையற்ற ஆய்வாளர்களின் கைகளில் சிக்கி, மீண்டும் படாதபாடு பட்டதெனத் தெரிகிறது. எ பிப்ளியா என் போர்ச்சுகல் (போர்ச்சுகல் மொழியில் பைபிள்) என்ற புத்தகத்தில் ஜி. எல். ஸான்டோஸ் ஃபெரேரா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “முதல் பதிப்பின் ஆய்வாளர்களிடமிருந்து தப்பிய ஆல்மேடாவின் அருமையான மொழிபெயர்ப்பில் . . . ஆய்வாளர்கள் . . . எக்கச்சக்கமாக கை வைத்ததால் அதன் அழகு கெட்டு உருக்குலைந்து போனது.”
கடைசியில் போர்ச்சுகீஸ் பைபிள்
ஆல்மேடா இறந்த பிறகு, போர்ச்சுகீஸ் பைபிளில் ஆய்வு செய்வதற்கும் அதைப் பிரசுரிப்பதற்கும் தூண்டுதல் அளிக்க பட்டேவியாவில் யாரும் இல்லாமற்போனார்கள். ஆனால் கிறிஸ்தவ அறிவைப் பரப்புவதற்கான லண்டன் சங்கமே 1711-ல் ஆல்மேடாவுடைய புதிய ஏற்பாட்டின் மூன்றாம் பதிப்பை வெளியிடுவதற்கு நிதியுதவி அளித்தது; தென்னிந்தியாவைச் சேர்ந்த ட்ரான்கூபாரில் இருந்த டேனிஷ் மிஷனரிகளின் கோரிக்கைக்கு இணங்கியே அவ்வாறு செய்தது.
ட்ரான்கூபார் என்ற இடத்தில் அச்சடிக்கும் வேலையை ஆரம்பிக்க அச்சங்கம் தீர்மானித்தது. என்றாலும், இந்தியாவுக்கு வரும் வழியில், அச்சடிப்புக்குத் தேவையான சாதனங்களையும் போர்ச்சுகீஸ் பைபிள்களையும் ஏற்றிவந்த கப்பலை பிரெஞ்சு கடற்கொள்ளையர் கைப்பற்றினர்; பின்னர், பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ துறைமுகத்தில் அம்போவென விட்டுவிட்டு சென்றனர். ஸான்டோஸ் ஃபெரேரா இவ்வாறு எழுதுகிறார்: “என்ன காரணமோ தெரியவில்லை; அற்புதகரமாக, சரக்குகளை வைக்கும் தளத்தில் அச்சடிப்புக்குரிய சாதனங்களின் பெட்டிகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படாமல் அவை அப்படியே இருந்தன; பிறகு அதே கப்பலில் அவை ட்ரான்கூபாருக்குப் போய்ச் சேர்ந்தன.” அந்த டேனிஷ் மிஷனரிகள், ஆல்மேடாவுடைய மொழிபெயர்ப்பின் மீதமுள்ள பைபிள் புத்தகங்களில் கவனமாக ஆய்வு செய்து பிரசுரித்தார்கள். போர்ச்சுகீஸ் பைபிளின் முழு தொகுப்பு 1751-ல் பிரசுரிக்கப்பட்டது; ஒரு மொழிபெயர்ப்பாளராக ஆல்மேடா தனது வேலையை ஆரம்பித்து ஏறக்குறைய 110 வருடங்களுக்குப் பிறகு அது பிரசுரிக்கப்பட்டது.
அழியாமல் தப்பிய ஆஸ்தி
போர்ச்சுகீசியர் தங்களுடைய மொழியில் சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கு ஒரு பைபிள் தேவை என்பதை இளம் வயதிலேயே ஆல்மேடா உணர்ந்தார். கத்தோலிக்க சர்ச்சின் எதிர்ப்பு, சக பணியாட்களின் அக்கறையின்மை, ஆய்வு செய்வதில் ஏகப்பட்ட பிரச்சினைகள், சுகவீனங்கள் என இவை எல்லாவற்றின் மத்தியிலும் தனது இலட்சிய கனவை நனவாக்க அவர் விடாப்பிடியாக முயன்றார். அதில் பலனும் கண்டார்.
போர்ச்சுகீஸ் பேசும் சமுதாயங்களில் ஆல்மேடா எங்கெல்லாம் பிரசங்கித்தாரோ அவற்றில் பலவும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டன. ஆனால் அவருடைய பைபிள் மட்டும் மறையாமல் இன்றும் இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டின்போது, பிரிட்டிஷ் மற்றும் அயல்நாட்டு பைபிள் சங்கமும் அமெரிக்க பைபிள் சங்கமும் ஆல்மேடா மொழிபெயர்ப்பின் ஆயிரக்கணக்கான பிரதிகளை போர்ச்சுகலிலும் பிரேசில் நாட்டின் கடற்கரையோர நகரங்களிலும் விநியோகித்தன. அதன் விளைவாக, ஆல்மேடாவின் கைவண்ணத்தில் உருவான பைபிளிலிருந்து தோன்றிய பிரதிகள், போர்ச்சுகீஸ் மொழி பேசப்படும் நாடுகளில் இன்று மிகப் பிரபலமாகக் காணப்படுகின்றன, மிகப் பரவலாகவும் விநியோகிக்கப்படுகின்றன.
ஆல்மேடாவைப் போன்ற பூர்வ பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அநேகர் நன்றிகடன் பட்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயத்தில் பைபிள் மூலமாக நம்மிடம் தொடர்புகொள்கிற யெகோவாவுக்கு அதைவிட அதிக நன்றிகடன் பட்டவர்களாய் நாம் இருக்க வேண்டும். அவர் ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் சித்தமுள்ளவராயிருக்கிறார்.’ (1 தீமோத்தேயு 2:3, 4) ஆக, தம்முடைய வார்த்தையை இன்றுவரையாக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறவரும் நம்முடைய நன்மைக்காக அதைக் கிடைக்கும்படி செய்திருக்கிறவரும் அவரே. நம் பரலோகத் தகப்பனிடமிருந்து கிடைத்த ‘மிகவும் விலைமதிப்புள்ள இந்தப் பொக்கிஷத்தை’ எப்போதும் பொன்னெனப் போற்றி ஊக்கமாய்ப் படிப்போமாக.
[அடிக்குறிப்புகள்]
a பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தடைசெய்யப்பட்ட புத்தகங்களின் இன்டெக்ஸ் என்ற புத்தகத்தை வெளியிடுவதன்மூலம் கத்தோலிக்க சர்ச், தாய்மொழியில் பைபிளைப் பயன்படுத்துவது சம்பந்தமாக கடும் தடைகளை விதித்தது. த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறபடி, இந்த ஏற்பாடு, “அடுத்த 200 வருடங்களுக்கு கத்தோலிக்கர்கள் பைபிளை மொழிபெயர்ப்பதை வெற்றிகரமாகத் தடுத்தது.”
b ஆல்மேடா எழுதிய பைபிளின் பழைய பதிப்புகளில் பாட்ரே (ஃபாதர்) ஆல்மேடா என்று அவரை குறிப்பிட்டிருப்பதால், அவர் ஒரு கத்தோலிக்கப் பாதிரியாக இருந்திருக்கிறார் என சிலர் நினைத்தார்கள். ஆனால், ஆல்மேடாவுடைய பைபிளின் டச் பதிப்பாளர்கள், இது [புராட்டஸ்டன்ட்] பாஸ்டருக்கோ ஊழியருக்கோ பயன்படுத்தப்படுகிற சிறப்புப் பெயராக இருக்கலாம் என நினைத்து தவறுதலாகத்தான் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
[பக்கம் 21-ன் பெட்டி/படம்]
கடவுளின் பெயர்
ஒரு மொழிபெயர்ப்பாளராக ஆல்மேடாவின் உண்மைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு, எபிரெய டெட்ரக்ராமட்டனை மொழிபெயர்த்து கடவுளுடைய பெயரை அவர் பயன்படுத்தியிருப்பதாகும்.
[படத்திற்கான நன்றி]
Cortesia da Biblioteca da Igreja de Santa Catarina (Igreja dos Paulistas)
[பக்கம் 18-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
அட்லாண்டிக் பெருங்கடல்
லிஸ்பன்
போர்ச்சுகல்
டாரி டி டாவாரஸ்
[பக்கம் 18-ன் படம்]
17-ஆம் நூற்றாண்டில் பட்டேவியா
[படத்திற்கான நன்றி]
From Oud en Nieuw Oost-Indiën, Franciscus Valentijn, 1724
[பக்கம் 18, 19-ன் படம்]
1681-ல் பிரசுரிக்கப்பட்ட முதல் போர்ச்சுகீஸ் புதிய ஏற்பாட்டின் தலைப்புப் பக்கம்
[படத்திற்கான நன்றி]
Courtesy Biblioteca Nacional, Portugal