‘ஆட்டுக்குட்டியானவருடன் வெற்றி பெறுவதில்’ பேரானந்தம்
ஐ ம்பது ஆண்டுகள் உண்மை கடவுளுக்குச் சேவை செய்த பிறகு, அதைக் குறித்து காரி டபிள்யூ. பார்பர் 1971-ல் பின்வருமாறு கடிதம் எழுதினார்: “யெகோவாவுக்குச் சேவை செய்த அந்த ஆண்டுகள் விவரிக்க முடியாதளவுக்கு இனிய ஆண்டுகள். அவருடைய ஜனங்களோடு கூட்டுறவு; சாத்தானுடைய உலகிலுள்ள தீயோரிடமிருந்து பாதுகாப்பு; ஆட்டுக்குட்டியானவரான இயேசு கிறிஸ்துவுடன் வெற்றி பெறும் எதிர்பார்ப்பு; இவை எல்லாவற்றோடும் யெகோவாவுடைய அன்பின் அத்தாட்சியும் சேர்ந்து, சமாதானத்தையும் ஆத்ம திருப்தியையும் தருகின்றன; அதோடு, இறுதி வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.”
இதற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சகோதரர் பார்பர் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினராய்ப் பொறுப்பேற்று சேவை செய்ய ஆரம்பித்தார்; இவர், பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற்ற கிறிஸ்தவராவார். இந்தப் பொறுப்பில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அவர் சேவை செய்கையில், ‘ஆட்டுக்குட்டியானவருடன் வெற்றி பெறுவதை ’ எப்போதும் எதிர்நோக்கி இருந்தார். 2007, ஏப்ரல் 8, ஞாயிற்றுக்கிழமை அன்று தன் 101-வது வயதில் மரிக்கும்வரை உண்மையுள்ளவராய் நிலைத்திருந்து அதில் வெற்றியும் பெற்றார்.—1 கொரிந்தியர் 15:57.
காரி பார்பர் 1905-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார்; 1921-ல் கனடாவிலுள்ள வின்னிபெக் நகரில் முழுக்காட்டுதல் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய பணியில் உதவி செய்வதற்காக இரட்டையரில் ஒருவரான இவரும் இவருடைய சகோதரர் நார்மனும் நியு யார்க்கிலுள்ள புரூக்ளினுக்குச் சென்றார்கள். அந்தச் சமயத்தில் ‘பூலோகமெங்குமுள்ளவர்களுக்கு’ ராஜ்ய நற்செய்தியைப் பரப்புவதற்கு உதவும் புத்தகங்களை யெகோவாவின் ஜனங்களே அச்சிடவிருந்தார்கள். (மத்தேயு 24:14) சகோதரர் பார்பருடைய ஆரம்ப கால பணிகளில், சிறிய அச்சு இயந்திரத்தை இயக்குவதும் ஒன்று. அமெரிக்க உச்சநீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட வழக்குகள் சம்பந்தமான சட்ட விவரங்களின் சுருக்கத்தையும் அவர் அச்சிட்டார். காலப்போக்கில், சகோதரர் பார்பர் ஊழிய இலாகாவில் பணியாற்றினார்; சபை விவகாரங்களிலும் நாடெங்கும் செய்யப்படும் பிரசங்க வேலையிலும் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்.
1948-ல் இவர் பயண ஊழியராய் நியமிக்கப்பட்டார். ஊழிய இலாகாவில் பணியாற்றிய அனுபவம் இந்த நியமிப்பிற்கு அவரை அதிக தகுதியுள்ளவராக்கியது. எனவே, அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலுள்ள சபைகளைச் சந்திக்கச் சென்றார், அங்கு நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்டார். அவர் முக்கியமாய் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதை நெஞ்சார நேசிப்பதாய் சொன்னார். இந்தப் பொறுப்பில் அவர் சேவை செய்தபோது அநேக சகோதர சகோதரிகளுக்கு அவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. பிறகு, உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 26-ஆம் வகுப்பில் அவர் கலந்துகொண்டபோது அவருடைய மதிநுட்பமும் ஊழியத்திற்கான பக்திவைராக்கியமும் அவருக்குப் பெரிதும் உதவின. கனடாவைச் சேர்ந்த சிட்னீ லீ ப்ரூவர் என்ற சகோதரியும் அந்தப் பள்ளியில் கலந்துகொள்ள வந்திருந்தார்; சகோதரர் பார்பருக்கு இவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பள்ளியின் பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்; இவர்கள், இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோவிலுள்ள சபைகளைச் சந்திக்கும் குறுகிய கால பயணத்தை தங்கள் தேன்நிலவு பயணமாக்கினார்கள். அவர்களுடைய இருபது ஆண்டு கால பயண ஊழியத்தில் சகோதரி பார்பர் தன் கணவருக்கு எப்போதும் உற்ற துணையாகவும் பக்கபலமாகவும் இருந்தார்.
சகோதரர் பார்பர் மாவட்டக் கண்காணியாகவும் வட்டாரக் கண்காணியாகவும் சேவித்தபோது அல்லது ஆளும் குழுவின் அங்கத்தினராக 30 ஆண்டுகள் சேவை செய்த போது அநேகர் இவரைச் சந்தித்திருக்கிறார்கள், இவருடன் பழகியிருக்கிறார்கள்; இவர்கள் எல்லாருடைய மனதிலுமே இவருடைய பேச்சுகளும் உயிர்த்துடிப்புமிக்க இவருடைய பதில்களும் நீங்கா இடம்பிடித்திருக்கின்றன. இவர், ‘ஆட்டுக்குட்டியானவருடன் வெற்றி பெற்றதைக்’ குறித்து சந்தோஷப்பட நமக்குக் காரணம் உள்ளது.