125-வது கிலியட் பள்ளிப் பட்டமளிப்பு விழா
எரேமியாவின் வழியில் செல்ல மிஷனரிகளுக்கு ஊக்கம்
“இந்த கிலியட் வகுப்பு சரித்திரத்திலேயே ஒரு மைல்கல்” என்றார் ஆளும் குழு அங்கத்தினர் ஜெஃப்ரி ஜேக்ஸன். 2008 செப்டம்பர் 13-ஆம் தேதி நடந்த உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 125-வது வகுப்பு பட்டமளிப்பு விழாவுக்கு வருகை புரிந்த 6,156 பேரிடம் இவர் உரை நிகழ்த்தினார். இந்த வகுப்பில் 56 பேர் பட்டம் பெற்றார்கள்; இதுவரை இந்த கிலியட் பள்ளி 8,000-க்கும் அதிகமானோரை மிஷனரிகளாக “பூமியின் கடைசிபரியந்தமும்” அனுப்பியிருக்கிறது.—அப். 1:8.
“நம்பகத்தன்மை உங்கள் ஊழியத்தின் மதிப்பை அதிகரிக்குமா?” என்று கேட்டார் சகோதரர் ஜேக்ஸன், பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கியவர். பின்பு, நம்பகத்தன்மையை வளர்ப்பதற்குத் துணைபுரியும் நான்கு அம்சங்களைப் பட்டியலிட்டார்: சரியான மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுதல், நல்ல முன்மாதிரி வைத்தல், கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் கற்பித்தல், யெகோவாவின் பெயரை பிரபலமாக்குவதில் கவனத்தை ஒருமுகப்படுத்துதல்.
“எல்லாவற்றையும் நீங்கள் புரிந்துகொள்வீர்களா?” என்ற தலைப்பில் உரையாற்றினார் போதனா குழுவுடன் இணைந்து சேவை செய்கிற டேவிட் ஷேஃபர். யெகோவாவையே தொடர்ந்து நாடி, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை”யின் பங்கை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டால், மிஷனரிகளாக சேவை புரிவதற்குத் தேவையான ‘எல்லாவற்றையும் புரிந்துகொள்ள’ முடியுமென கிலியட் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.—நீதி. 28:5; மத். 24:45; NW.
அடுத்து, “கடவுளுடைய அன்பிலிருந்து எதுவும் உங்களைப் பிரிக்க அனுமதிக்காதீர்கள்” என்ற பொருளில் ஆளும் குழுவைச் சேர்ந்த ஜான் ஈ. பார் பேசினார். புதிய மிஷனரிகள் தங்களுடைய சேவையில் எப்படிப்பட்ட சூழலைச் சந்திப்பார்களோ என்று யோசித்து பட்டதாரிகளும் அவர்களுடைய பெற்றோர்களும் ஒருவேளை பயந்திருக்கலாம்; ஆனால் தகப்பனைப் போல் சகோதரர் பார் வழங்கிய அறிவுரை அவர்களுடைய பயத்தைப் போக்கி நம்பிக்கையூட்டியது. “எப்போதும் கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பதுதான் நமக்குப் பாதுகாப்பு, அதுதான் நமக்கு அடைக்கலம்” என்று அவர் விளக்கினார். கடவுளிடமிருந்து மிஷனரிகளே தங்களைப் பிரித்துக்கொண்டால் தவிர வேறெதுவும் கடவுளுடைய அன்பைவிட்டு அவர்களைப் பிரிக்க முடியாது.
“மிகச் சிறந்த ஆடை”யை அணிந்துகொள்ளும்படி அவையோரை உற்சாகப்படுத்தினார் தேவராஜ்ய பள்ளி இலாகாவைச் சேர்ந்த சாம் ராபர்ஸன். இயேசுவின் அடிச்சுவடுகளைக் கற்று அவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், பட்டதாரிகள் ‘இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ள’ முடியும். (ரோ. 13:14, NW) அடுத்து, ஒருவருக்கு எது கௌரவம் அளிக்கிறது என்பதை தேவராஜ்ய பள்ளி இலாகா கண்காணி வில்லியம் சாம்யல்ஸன் சிறப்பித்துக் காட்டினார். ஒருவருக்கு எது கௌரவம் அளிக்கிறது என்பதை மனிதனுடைய கண்ணோட்டத்தில் அல்ல கடவுளுடைய கண்ணோட்டத்தில் பார்ப்பதே முக்கியம் என அவர் கூறினார்.
வெளி ஊழியத்தில் மாணவர்கள் பெற்ற அனுபவங்களை போதனையாளர்களில் ஒருவரான மைக்கேல் பர்னட் பேட்டி கண்டார். பலமுறை ஊழியம் செய்யப்பட்ட பிராந்தியங்களே நியூயார்க், பேட்டர்ஸன் கிலியட் பள்ளியில் படித்த மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டன; என்றாலும், அக்கறை காட்டுகிற ஆட்களை அவர்கள் அங்கேயும் கண்டுபிடித்தார்கள். கிளை அலுவலக அங்கத்தினர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ள வந்திருந்த மூன்று சகோதரர்களை மாநாட்டு அலுவலகத்தில் சேவை செய்கிற ஜெரல்டு கிரிஸல் பேட்டி எடுத்தார். அவர்கள் சொன்ன முத்தான குறிப்புகள், அயல்நாட்டு சேவையில் எதிர்ப்படும் சவால்களைச் சந்திக்க கிலியட் பட்டதாரிகளைத் தயார்படுத்தின.
“எரேமியாவைப் போலிருங்கள்” என்ற தலைப்பில் ஆளும் குழு அங்கத்தினரும் 42-வது வகுப்பு பட்டதாரியுமான டேவிட் ஸ்ப்லேன் சொற்பொழிவு ஆற்றினார். எரேமியா தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் குறித்து பயந்தாலும், யெகோவா அவரைப் பலப்படுத்தினார். (எரே. 1:7, 8) அதேபோல் புதிய மிஷனரிகளையும் கடவுள் பலப்படுத்துவார். “யாருடனாவது உங்களுக்குப் பிரச்சினை இருந்தால், அந்த நபரிடம் உங்களுக்குப் பிடித்த பத்து குணங்களை முதலில் உட்கார்ந்து எழுதுங்கள். அப்படிப் பத்து குணங்களை எழுத முடியவில்லையென்றால், அந்த நபரைப் பற்றி உங்களுக்கு இன்னும் நன்றாகத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம்” என கூறினார் சகோதரர் ஸ்ப்லேன்.
எரேமியா சுயதியாக குணம் படைத்தவராய் இருந்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட நியமிப்பைக் கைவிட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தபோது ஜெபம் செய்தார், அப்போது யெகோவா அவருக்குப் பக்கபலமாய் இருந்தார். (எரேமியா 20:11) “நீங்கள் மனந்தளர்ந்து இருக்கும்போது உங்கள் பிரச்சினையைப் பற்றி யெகோவாவிடம் பேசுங்கள். யெகோவா செய்யும் உதவியைக் கண்டு மலைத்துப்போவீர்கள்” என்று சகோதரர் ஸ்ப்லேன் கூறினார்.
பட்டமளிப்பு விழாவின் முடிவில், பட்டதாரிகள் தங்களுடைய நம்பகத்தன்மையை வளர்ப்பதற்குக் கற்றுக்கொண்ட பல்வேறு வழிகளை அவையோருக்கு விழா தலைவர் நினைப்பூட்டினார். மிஷனரிகள் நம்பகமானவர்கள் என்று மக்களுக்குத் தெரிய வரும்போது அவர்கள் சொல்லும் செய்தி இன்னும் அதிக வலிமை பெறும்.—ஏசா. 43:8–12.
[பக்கம் 22-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 6
அனுப்பப்பட்ட நாடுகள்: 21
மாணவர்கள்: 56
சராசரி வயது: 32.9
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 17.4
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 13
[பக்கம் 23-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 125-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) ஹாஜ்ஸன், ஏ.; வால், ஏ.; பீரென்ஸ், கே.; ஹார்டலானோ, எம்,; நூமன், எல்.; டிகாஸோ, ஏ. (2) ஜெங்கன்ஸ், ஜே.; ஜர்ஸெம்ஸ்கி, டி.; மென்டெஸ், என்.; கோரோனா, வி.; கானாலிடா, எல். (3) ஃப்ரையர், எச்.; சாவிஜ், எம்.; டிட்வெல், கே.; எரிக்ஸன், என்.; டிக், ஈ.; மக்பெத், ஆர். (4) பெரெஸ், எல்.; பூஸ், எல்.; ஸ்கிட்மார், ஏ.; யங், பி.; மக்பிரைட், என்.; ரான்டான், பி.; குட்மன், ஈ. (5) பீரென்ஸ், எம்.; ஃபர்கஸன், ஜே.; பிர்ஸன், என்.; சப்மன், எல்.; வார்டல், ஜே.; கானாலிடா, எம். (6) பெரஸ், பி.; டிகாஸோ, டி.; யங், டி.; ரான்டான், டி.; குட்மன், ஜி.; ஜெங்கன்ஸ், எம்.; டிக், ஜி. (7) கோரோனா, எம்.; வால், ஆர்.; பூஸ், எஸ்.; மென்டெஸ், எஃப்.; ஜர்ஸெம்ஸ்கி, எஸ்.; சாவிஜ், டி. (8) நூமன், சி.; ஃபர்கஸன், டி.; ஸ்கிட்மார், டி.; எரிக்ஸன், டி.; மக்பிரைட், ஜே.; பிர்ஸன், எம்.; சப்மன், எம். (9) ஹாஜ்ஸன், கே.; வார்டல், ஏ.; மக்பெத், ஏ.; டிட்வெல், டி.; ஃப்ரையர், ஜே.; ஹார்டலானோ, ஜே.