தெய்வீக போதனைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நன்மைபெறுதல்
1 கீழ்ப்படியாத மனிதவர்க்கத்தினரின் அறிவீனமான செயல்களை நாம் எவ்வளவு அதிகமாய்ப் பார்க்கிறோமோ, அவ்வளவு அதிகமாய் தெய்வீக போதனைகளுக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு பயனுள்ளது என்பதை நாம் மதித்துணரக்கூடும். உனக்கு விருப்பமானதைச் செய் என்ற இந்த உலகத்தின் கொள்கை அதனை பின்பற்றும் அநேகருக்கு தேவையில்லாத வேதனைகளை ஏற்படுத்தியிருக்கிறது. என்றபோதிலும், இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்கு ஒரு முன்மாதிரியை பின்வைத்துப்போனார். அவர் எப்பொழுதுமே தம்முடைய பிதாவுக்கு கீழ்ப்படிந்தார் என்று பைபிள் காண்பிக்கிறது. இந்த உண்மையுள்ள போக்கிற்காக அவர் வெகுவாய் பலனளிக்கப்பட்டார்.—யோவான் 8:29; எபி. 5:8; பிலி. 2:7-11.
2 “தெய்வீக போதனைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நன்மைபெறுதல்” என்பதே விசேஷ மாநாடு தின நிகழ்ச்சிநிரலின் பொருளாகும். இது ஜூலை மாதம் தொடங்கும். கிறிஸ்தவ வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நமக்கு உதவி செய்வதற்காக நடைமுறையான யோசனைகளும் காலத்துக்கேற்ற அறிவுரைகளும் அளிக்கப்படும். உதாரணமாக, சத்தியத்தை உறுதியாக பற்றிக்கொள்வதற்கும் அதை அவர்கள் தங்களுக்கு சொந்தமானதாக ஆக்கிக்கொள்வதற்கும் பெற்றோர் எவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்கு உதவலாம்? ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் யெகோவாவை சேவிப்பதில் எப்படி தங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம்? தனிப்பட்ட விதமாக தனக்கும் மற்றும் அமைப்பு முழுவதற்கும் பயனை ஏற்படுத்தக்கூடிய எதைச் சபையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் செய்யலாம்? இவைகளே இந்தப் புதிய விசேஷ மாநாடு தின நிகழ்ச்சிநிரலில் கலந்தாலோசிக்கப்படும் ஒருசில காரியங்களாகும்.
3 எஜமானர்களுடனும் மற்றும் மேலான அதிகாரிகளுடனும் நமது தொடர்புகள் சம்பந்தப்பட்டதில் கிறிஸ்தவ கீழ்ப்படிதலின் பரீட்சையை எதிர்ப்படுகையில் தெய்வீக போதனையை பின்பற்ற வேண்டிய முக்கியத்துவத்திற்கு கவனம் செலுத்தப்படும். அக்கிரம சமுதாயம் நம்மை சூழ்ந்திருப்பதால் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட அதிகாரங்களினிடமாக வேதப்பூர்வமான நோக்குநிலையை காத்துக்கொள்வதற்கு கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். இன்று உலகத்தில் நிலவக்கூடிய தவறான மனநிலைகளை தவிர்க்கவேண்டும்.
4 நிகழ்ச்சிநிரல் அட்டவணையில் சில சரிமாற்றங்கள் செய்யப்படுகின்றன. மாநாடு சனிக்கிழமயன்று நடந்தாலும்சரி ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தாலும்சரி, காவற்கோபுர பாடத்தின் சுருக்கம் இந்த ஆண்டு நிகழ்ச்சிநிரலில் இடம்பெறும். அப்படியானால், சனிக்கிழமையன்று விசேஷ மாநாடு தினம் கொண்டிருக்கும் சபைகள் அடுத்த நாளன்று பொதுப்பேச்சையோ காவற்கோபுர படிப்பையோ கொண்டிராது. அதற்கு மாறாக, மூப்பர்கள் தொகுதியாக நீண்டநேர ஊழிய ஏற்பாட்டை ஒழுங்கு செய்வார்கள்.
5 முதல் மாநாடு தினம் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருந்தது என்பதைப்பற்றிய போற்றுதல் குறிப்புகள் வந்திருக்கின்றன. தனிப்பட்ட பைபிள் படிப்பு அமைப்பின் முன்னேற்றம் பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட ஆரோக்கியமான ஆவிக்குரிய போதனைகளால் அநேகர் உற்சாகமும் பலமும் அடைந்திருக்கின்றனர்.
6 நமக்கு முன்மாதிரியான இயேசு கிறிஸ்துவை பின்பற்ற பிரயாசப்படுகையில் இந்த ஆண்டிற்கான விசேஷ மாநாடு தின நிகழ்ச்சிநிரலும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நமக்கு மிகுந்த பலனை கொடுக்கும் ஒன்றாக இருக்கும். அந்த நிகழ்ச்சியின் எந்த பாகத்தையும் தவறவிடாதீர்கள். தெய்வீக போதனைகளுக்கு கீழ்ப்படிவதிலிருந்து நாமனைவரும் தொடர்ந்து பயனடைவோமாக.—எபி. 10:23-25.