பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்
1 ஒழுங்கமைக்கப்பட்ட நம்முடைய பிரசுர அளிப்பு ஏற்பாடு பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா? அது, ஜூலை 1, 1879, காவற்கோபுரம் (ஆங்கிலம்) முதன்முதலில் 6,000 பிரதிகள் விநியோகிக்கப்பட்ட சமயத்தில் ஆரம்பமானது. நாளடைவில் மடமடவென்று வளர்ந்து இன்று கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் பல வண்ணங்களில் பல்வேறு பிரசுரங்கள் அச்சிடப்பட்டு லட்சக்கணக்காண வாசகர்களின் கைகளில் தவழ்கின்றன.
எளிமையாக்கப்பட்ட பிரசுர அளிப்பு ஏற்பாடு
2 பிரஸ்தாபிகளுக்கும், ஆர்வம் காட்டும் மற்றவர்களுக்கும் பத்திரிகைகளும் மற்ற பிரசுரங்களும் எளிமையாக்கப்பட்ட பிரசுர அளிப்பு ஏற்பாட்டின் அடிப்படையில் கொடுக்கப்படும் என 1999, நவம்பர் மாத மத்திபத்தில் விளக்கப்பட்டது. அதாவது இந்த பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக கொடுக்கவேண்டும் என்று கேட்காமல் அல்லது சொல்லாமல் அளிப்பது. ஆனால் பிரசுரங்களை அளிக்கையில், அவர்களாகவே மனமுவந்து உலகளாவிய ராஜ்ய வேலையை ஆதரிக்க நன்கொடைகள் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த ஏற்பாட்டை யெகோவா ஆசீர்வதிப்பார் என உறுதியாய் நம்புகிறோம்.—ஒப்பிடுக: மத்தேயு 6:33.
இதை எப்படி செய்யலாம்?
3 சத்தியத்தில் மற்றவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் நற்செய்தியை நாம் தொடர்ந்து பிரசங்கிப்போம். நம் செய்திக்கு ஆர்வம் காட்டாத இடங்களில் பிரசுரங்களை அளிக்க அவசியமில்லை. அக்கறை இல்லாதவர்களுக்கு நம் பிரசுரங்களைக் கொடுத்து அவற்றை வீணாக்க விரும்புவதில்லை. ஆனால் அதே சமயத்தில் வீட்டுக்காரர் அந்த பிரசுரத்தை வாசிக்க விரும்புகையில் அதைக் கொடுக்கலாம். நம் பிரசுரங்களை நாம் ஞானமாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.
4 பிரசுரத்தை காண்பித்த பிறகு பின்வரும் சில குறிப்புகளை நீங்கள் சொல்லலாம்: “இந்த பிரசுரத்தை வாசிச்சு பாக்க உங்களுக்கு ஆர்வமிருந்தா இதை உங்ககிட்ட கொடுக்க விரும்புறோம்.” பெரும்பாலும் வீட்டுக்காரர், “இதோட விலை என்ன?” என்று கேட்பார். “இந்த பிரசுரத்த நாங்க விக்கிறதுக்கோ வியாபாரம் செய்றதுக்கோ வரல. ஆனா நாங்க எல்லா ஜனங்களும் நித்தியமா வாழ்றதுக்கான வழியைத் தெரிஞ்சிக்கிறதுக்கு உதவுறோம். இன்னிக்கு நாங்க உங்கள சந்திச்சு பேசரமாதிரி உலகம்பூராவும் 233 நாடுகள்ல மனமுவந்து இந்த வேலை செய்யப்படுது. இந்த உலகளாவிய வேலைக்கு நீங்க ஏதாவது நன்கொடை கொடுக்க விரும்புனீங்கனா, அத சந்தோஷமா வாங்கிக்கிறோம்” என்று நீங்கள் சொல்லலாம்.
5 நீங்கள் பத்திரிகைகளை அளிக்கையில், ஒரு குறிப்பிட்ட கட்டுரையிடம் கவனத்தைத் திருப்பி அதை வாசிக்க தூண்டும் சில கேள்விகளை கேளுங்கள். பிறகு இவ்வாறு சொல்லலாம்: “இந்த கட்டுரையில இருக்கிற விஷயங்கள நீங்களும் தெரிஞ்சிக்கனும்னு விரும்புறேன். நீங்க இந்த இரண்டு பத்திரிகைகளையும் வாசிக்க விரும்புனீங்கனா, நீங்க எடுத்துக்கலாம்” அவர் அவற்றை எடுத்துக்கொண்டால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “இந்த விஷயங்கள உங்ககிட்ட பகிர்ந்துகிட்டதுல எனக்கு சந்தோஷம். இந்தக் கட்டுரையிலிருந்து நிச்சயமா நெறைய விஷயங்களை நீங்க தெரிஞ்சுக்குவீங்க. இதப்பத்தி உங்கள் கருத்த தெரிஞ்சிக்குறதுக்கு அடுத்த வாரம் மறுபடியும் உங்களை வந்து பாக்க விரும்புறேன். இந்த காவற்கோபுர பத்திரிகை 132 மொழிகள்ல பிரசுரிக்கப்பட்டு, 2,20,00,000 பிரதிகளுக்கும் அதிகமா உலகமுழுவதும் விநியோகிக்கப்படுது. இந்த வேலை முழுக்க முழுக்க மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடையினால ஆதரிக்கப்படுது. இந்தக் கல்வித்திட்டத்துக்கு நீங்களும் நன்கொடை அளிக்க விரும்புனீங்கன்னா, சந்தோஷமா வாங்கிக்கிறோம்.”
6 சில சமயங்களில், இந்த உலகளாவிய வேலைக்கு நன்கொடை என்ற விஷயத்தைப் பற்றி பேசுவது கொஞ்சம் சங்கடமாக தோணலாம். உதாரணமாக, ஆர்வமிக்க வீட்டுக்காரர் ஒருவர் இவ்வாறு கேட்கலாம்: “இத நீங்க குடுத்துட்டு போறீங்களா?” நாம் இவ்வாறு சொல்லலாம்: “இந்த பத்திரிகை உங்களுக்கு வேணும், அதை வாசிக்கணும்னு நினைச்சீங்கன்னா, இந்தாங்க வச்சுக்குங்க. இப்ப நம்ம பேசுன விஷயத்தைப் பத்தி கூடுதலா பேச அடுத்த வாரம் வரேன், அப்போ இந்த உலகளாவிய வேலையைப் பற்றியும் உங்களுக்கு அதிகமா சொல்றேன்.” அதற்கு பின் சந்திக்கையில் இந்த வேலைக்கு எவ்வாறு பொருளுதவி கிடைக்கிறது என்பதை அந்த வீட்டுக்காரருக்கு சொல்லலாம்.
7 அல்லது, வீட்டுக்காரர் அந்த பிரசுரத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு “நன்றி” சொல்லலாம். அப்போது, “ரொம்ப சந்தோஷம். நீங்க அதை அனுபவிச்சு படிப்பீங்க. நாங்க இந்த வேலையை இங்கே மட்டுமில்ல உலகம்பூராவும் செய்றதால, நிறையபேரு இந்த வேலைக்கு பணம் எங்கேயிருந்து வருதுன்னு யோசிக்கிறாங்க. எங்க பிரசுரங்கள வாங்கிக்கிட்ட நிறையபேர், அதை படிச்சிட்டு பாராட்டியிருக்காங்க, அதோட இந்த விநியோகிப்பு வேலையை அதிகரிக்கிறதுக்கு நன்கொடையையும் மனமுவந்து கொடுத்திருக்காங்க. அப்படி யாராவது கொடுக்க விரும்பினா, அத நாங்க சந்தோஷமா ஏத்துக்குறோம்” என நீங்கள் சொல்லாம்.
ஆர்வமுள்ளோரை கண்டுபிடிக்க
8 நம்முடைய பிரசுரங்களை குருட்டாம்போக்கில் எல்லோருக்கம் விநியோகிக்க வேண்டும் என்பது நம் நோக்கமல்ல. நேர்மை மனமுள்ளோர் யெகோவாவின் அற்புதமான நம்பிக்கைகளை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நம் பிரசுரத்தின் நோக்கத்தை நிறைவேற்றவே நாமும் விரும்புகிறோம். ஆவிக்குரிய விஷயங்களில் அக்கறை காட்டாதவர்களிடம் பிரசுரங்களை கொடுப்பது வீணே. (எபி. 12:16) பிரசுரங்களை திறம்பட விநியோகிப்பது, உண்மை மனமுள்ளோரை கண்டுபிடிக்கும் உங்கள் திறமையிலேயே சார்ந்துள்ளது. அப்படிப்பட்ட ஆர்வம் காட்டுவோரை நீங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கலாம்? உங்களுடன் பேச அவருக்கு விருப்பம் இருந்தாலே அது பச்சை கொடி காட்டுவதுபோல்தான். அல்லது நீங்கள் பேசும்போது உன்னிப்பாக கவனிப்பது, கேட்கும் கேள்விகளுக்கு டாண் டாண் என பதிலளிப்பது, அவருடைய கருத்தை தெரிவிப்பது ஆகியவை கலந்தாலோசிப்பில் அவருக்கிருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது. உங்களுடன் மரியாதையாகவும், சிநேகப்பான்மையுடனும் பேசுவது அவருடைய தயவான மனப்பான்மையை காட்டுகிறது. நீங்கள் பைபிளிலிருந்து வாசிக்கும்போது அவரும் அதை கவனிப்பது கடவுளுடைய வார்த்தையிடம் அவருக்கிருக்கும் மதிப்பு மரியாதையை காட்டுகிறது. பிரசுரத்தை கொடுத்தால் அதை ‘வாசிப்பீர்களா’ என்று கேட்பதும்கூட அநேக சமயங்களில் உதவியாக இருக்கும். மேலும், உங்கள் கலந்தாலோசிப்பை தொடர்வதற்கு மறுசந்திப்பைப் பற்றி குறிப்பிடுங்கள். அதற்கு அவர் ஒத்துக்கொள்வது அவருக்கிருக்கும் ஆர்வத்திற்கு மற்றொரு அத்தாட்சி. உண்மையான ஆர்வத்தைக்காட்டும் அத்தாட்சிகளை நீங்கள் பார்த்து பிரசுரங்களை கொடுத்தால், கொடுக்கப்படும் பிரசுரங்கள் வீணாகாது, மாறாக அவருக்கு பிரயோஜனமாக இருக்கும்.
9 நம் ஊழிய முறையில் செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றம், நாம் ‘கடவுளின் வார்த்தையை லாபத்திற்கென்று விற்பவர்கள் அல்ல’ என்பதற்கு கூடுதல் அத்தாட்சியை அளிக்கிறது. (2 கொ. 2:17, NW) நாம் இந்த உலகத்தின் பாகமானவர்கள் அல்ல என்பதையும் இது நிரூபிக்கிறது.—யோவா. 17:14.
10 மகா பாபிலோனின் அழிவு நெருங்கிவரும் இந்த சமயத்தில், எல்லா மத அமைப்புகளுக்கும் எதிராக அழுத்தம் அதிகரிக்கிறது. இன்றியமையாத இந்த உலகளாவிய ராஜ்ய பிரசங்க வேலை எந்தவித தடங்கலுமில்லாமல் தொடர்ந்து முன்னேறி, அநேகரை இரட்சிப்பிற்கு வழிநடத்துவதே நம்முடைய மிக முக்கியமான இலக்கு.—மத். 24:14; ரோ. 10:13, 14.