இன்டெக்ஸ் எவ்வாறு குடும்பத்துக்கு பயனளிக்கக்கூடும்
1 குடும்ப அங்கத்தினர்களைப் பற்றி பேசுகையில், 1 தீமோத்தேயு 5:4 குறிப்பிடுகிறது: “இவர்கள் முதலாவது தங்கள் சொந்த குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரிக்கக்கடவர்கள்.” உண்மையிலேயே, நம் குடும்ப அங்கத்தினர்களோடு உள்ள தொடர்புகளில் தேவபக்தியை பயிற்றுவிப்பது கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாய் இருக்கிறது. இதில் நமக்கு தெய்வீக வழிநடத்துதல் தேவைப்படுகிறது, ஏனென்றால் குடும்ப அங்கத்தினர்களிடம் அக்கறைக் காட்டுவது நம் கிறிஸ்தவ கடமையின் பாகமாய் இருக்கிறது. காவற்கோபுர பிரசுர இன்டெக்ஸ், குடும்ப வாழ்க்கையில் எழும் பல்வேறு சூழ்நிலைமைகளுக்கு வழிநடத்துதலை கண்டுபிடிக்க நமக்கு உதவக்கூடும்.
2 ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது ஒரு குடும்பம் தோன்றுகிறது. (ஆதி. 2:24) நீங்கள் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி அக்கறையோடு ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? “திருமணம்,” என்ற தலைப்பின் கீழ் “ஒரு துணையை தேர்ந்தெடுத்தல்” என்ற உபதலைப்பை நீங்கள் காண்பீர்கள். சில சமயங்களில் கடினமாய் இருக்கும் இந்தப் பெரும் முயற்சிக்கு, சுட்டுக்குறியீடுகள் உதவியளிக்கும் ஆலோசனைக்கு உங்களை வழிநடத்தும். “கணவனின் பங்கு” மற்றும் “மனைவியின் பங்கு” போன்ற உபதலைப்புகளும்கூட இன்டெக்ஸில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஏற்கெனவே திருமணமானவர்களுக்கும், திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கும், பயனளிக்கும் தகவலுக்கு சுட்டுக்குறியீடுகளை அளிக்கின்றன. கூடுதலாக, “பேச்சுத் தொடர்பு,” “நெருக்கம்,” “சமாதானம்” போன்ற உபதலைப்புகள் திருமணத்தை செழிப்பாக்கும் பொருளுக்கு சுட்டிக்காட்டுகின்றன. கஷ்டங்கள் எழும்புகையில், “பிரச்னைகள்” என்ற உபதலைப்பு, இவைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பதன் பேரில் உள்ள திறம்பட்ட ஆலோசனைக்கு உங்களை வழிநடத்தக்கூடும்.
3 பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து வரும் சுதந்திரம். (சங். 127:3) பெற்றோர்கள் எவ்வாறு தங்கள் பிள்ளைகளை “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்த்து வரலாம்? (எபே. 6:4) யெகோவா தம்முடைய வார்த்தை மற்றும் உண்மையுள்ள அடிமை வகுப்பின் மூலம் ஏற்பாடு செய்யும் வழிநடத்துதல் அதிக முக்கியத்துவமுள்ளதாய் இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உணர்ச்சிகள் மற்றும் தேவைகளின் பேரில் உட்பார்வை கொண்டிருத்தல் அவசியம். “பிள்ளைகள்” மற்றும் “இளைஞர்கள்” போன்ற இன்டெக்ஸ் தலைப்புகள் மூலம் உதவியளிக்கும் புத்திமதியும் ஆலோசனைகளும் கண்டுபிடிக்கப்படலாம். யெகோவாவின் சட்டத்தை அவர்களுடைய இளமையான இருதயங்களில் ஆழப்பதிய வைப்பதைப் பற்றி என்ன? “பிள்ளை பயிற்றுவிப்பு” என்ற தலைப்பு, யெகோவாவோடு ஒரு தனிப்பட்ட உறவையும், சத்தியத்துக்காக வாஞ்சையையும் வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பது உட்பட, பிள்ளை வளர்ப்பைப் பற்றிய ஒவ்வொரு அம்சத்தையும் அறியக் கூடிய கலந்தாலோசிப்புகளுக்கு வழிநடத்துகிறது.—1 பேதுரு 2:2.
4 முன்பாகவே ஏற்பாடு செய்யப்பட்ட குடும்ப பைபிள் கலந்தாலோசிப்புகள், குடும்ப வெற்றிக்கு இன்றியமையாதவை. (உபா. 6:6–9; ஏசா. 54:13; எபே. 5:25, 26) “குடும்பங்கள்” என்ற தலைப்பின் கீழ், மகிழ்ச்சியான குடும்ப கலந்தாலோசிப்புகளை கொண்டிருப்பதற்கான கருத்துக்களைப் பற்றிய சுட்டுக்குறியீடுகளை காணலாம். தற்போதைய இன்டெக்ஸில் “பைபிள் படிப்பு” என்ற உபதலைப்பு, “அதை திறம்பட்டதாக்குதல்,” “அதை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்,” “அதை கவர்ச்சியுள்ளதாக்குதல்” போன்ற உபதலைப்புகளை கொண்டிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளின் வாழ்க்கை சரிதை ஒன்றை அவ்வப்போது ஏன் சிந்திக்கக்கூடாது? “முழு நேர ஊழியம்” என்ற தலைப்பின் கீழ், “நான் ஒருபோதும் வருத்தப்படாத தேர்ந்தெடுப்பு,” “என் இருதயத்தின் வேண்டுதல்களை பெற்றுக்கொள்ளுதல்” போன்ற தலைப்புகளையுடைய வாழ்க்கை சரிதைகளுக்கு நீங்கள் சுட்டுக்குறியீடுகளை காண்பீர்கள். அப்பேர்ப்பட்ட மற்ற சில சரிதைகள் “மிஷனரிகள்” என்பதன் கீழ் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. “யெகோவாவின் சாட்சிகளின் வாழ்க்கை சரிதைகள்” என்பதன் கீழ் ஒரு முழு பட்டியல் காணப்படுகிறது.
5 காவற்கோபுர பிரசுர இன்டெக்ஸ் குடும்ப வாழ்க்கைக்கான புத்திமதியையும், கருத்துக்களையும் சேகரிப்பதற்கு ஒரு மகத்தான கருவி. குடும்பத்துக்குள் உங்கள் உத்தரவாதங்களை நிறைவேற்றுவதில் நீங்கள் பெரும் மகிழ்ச்சி காண அது உங்களுக்கு உதவி செய்வதாக.