சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் வழிநடத்தும் கடவுளுடைய வழியைப் பிரசங்கியுங்கள்
1 மனிதர் சமாதானமும் பாதுகாப்பும் கொண்டுவருவதற்கு அநேக திட்டங்களைச் செய்தனர், ஆனால் உலகமுழுவதிலும் உள்ள மக்களின் உண்மையான தேவைகளை எந்தத் திட்டங்களும் பூர்த்திசெய்யவில்லை. பாதுகாப்பான சமாதானமான உலகம் வருவதற்கு மத, இன, தேச விரோதங்களோடு அரசியல் பதவியடையவேண்டுமென்ற ஆசையும் பேராசையும் மிகப்பெரிய இடறல் கற்களாக இருந்தாலும் உண்மையில் இதற்குத் தடைகளாக இருப்பது பிசாசாகிய சாத்தானும் யெகோவா தேவனுக்கு மனிதர் கீழ்ப்பட்டிருக்க மறுப்பதே ஆகும் என்று உண்மை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கின்றனர்.—சங். 127:1; எரே. 8:9; 1 யோ. 5:19.
2 ஜனவரி மாதத்தின்போது, சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமுரிய கடவுளுடைய வழியே ஒரே வழியாக இருக்கிறது என்றும் யெகோவா மனிதவர்க்கத்தினரின் பிரச்னைகளுக்கு முடிவான தீர்வைக் கொண்டிருக்கிறார் என்றும் நம்முடைய அயலகத்தார் காண்பதற்கு உதவிசெய்ய நாம் முயற்சி செய்வோமாக.
3 துண்டுப்பிரதிகளை உபயோகியுங்கள்: சங்கம் நமக்குத் தயாரித்துக் கொடுத்திருக்கும் இந்த நல்ல துண்டுப்பிரதிகளை உபயோகிப்பதன் மூலம் இந்தக் கட்டியெழுப்பக்கூடிய செய்தியை நாம் பகிர்ந்துகொள்வோமாக. வித்தியாசமான துண்டுப்பிரதிகளை பயன்படுத்தி சம்பாஷணைகளைத் தொடங்கி பைபிள் படிப்பிற்கு எவ்வாறு வழிநடத்தலாம் என்பதைப் பற்றிய நடிப்புகளை நாம் கடந்த வருடங்களில் பார்த்திருக்கிறோம். நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் (துண்டுப்பிரதி எண் 13) என்ற துண்டுப்பிரதியின் 5-ம் 6-ம் பக்கங்களில் இந்த உலகத்தின் முடிவைக் குறித்த வித்தியாசப்பட்ட பைபிள் தீர்க்கதரிசனங்களின் முனைப்பான நிறைவேற்றங்களில் ஒருசிலவற்றை மேற்கோள்காட்டியிருப்பது அநேக ஆட்களுடைய கவனத்தை கவர்ந்திழுக்கவேண்டும்.
4 யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? என்ற கேள்விக்குரிய சுருக்கமான விடைகளைத் துண்டுப்பிரதி எண் 14 அளிக்கிறது. நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் நம்பிக்கைகளோடு ஏன் வித்தியாசமாயிருக்கிறது என்பதையும் மக்கள் கடவுளுடைய ராஜ்யத்தின்பேரில் தங்கள் விசுவாசத்தை வைப்பதற்கு நாம் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருப்பதற்குக் காரணங்களையும் கொடுக்கிறது. இந்த ராஜ்யம் கூடிய சீக்கிரத்தில் எதை நிறைவேற்றப்போகிறது என்பதையும் வரக்கூடிய அழிவைத் தப்பிப்பிழைத்து வாழக்கூடிய மகத்தான நம்பிக்கையையும் அது குறித்துக் காட்டுகிறது.
5 இன்று லட்சக்கணக்கான மக்கள் சோர்வுற்றிருக்கின்றனர், அவர்கள் ஆறுதல் மிகுந்த மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும் அமைதியும் நிறைந்த காலத்துக்கு ஏங்கியிருக்கின்றனர். சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15) அநேக ஆட்களுக்கு உண்மையிலேயே ஆறுதலை அளிக்கும்.
6 துண்டுப்பிரதி எண் 16, மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? என்பது, மரணத்தில் ஒருவரை இழந்தவர்களுக்கு ஆறுதலளித்து தங்களுடைய அன்பான ஆட்களை கடவுளுடைய புதிய உலகத்தில் மீண்டும் உயிரோடே எழுந்து வருவதைக் காணும் நம்பிக்கையை அளிக்கிறது.
7 பைபிள் படிப்புகளை ஆரம்பியுங்கள்: ஒரு துண்டுப்பிரதியையோ, புரோஷுரையோ, பத்திரிகையையோ, புத்தகத்தையோ கொண்டு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம். வீட்டுக்காரர் ஒருவேளை நம்முடைய பிரசுரத்தை உடையவராயிருந்தால் சாதுரியமாக அதைப் பயன்படுத்தி எப்படி பைபிள் படிப்பைக் கொண்டிருக்கலாம் என்று நடித்துக்காட்டுங்கள். வீட்டுக்காரருடைய அக்கறையைத் தூண்டியெழுப்புவதற்கும் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கும் நம்முடைய துண்டுப்பிரதிகளும் நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? என்ற புரோஷுரும் மிகச் சிறந்த சாதனங்களாக இருக்கின்றன. மேலும் இம்மாதம் பழைய 192-பக்க பிரசுரங்களையும் நாம் அளிப்போம். தயவுசெய்து ‘அறிவிப்புகள்’ பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கிற புத்தகங்களை உங்களுடைய மொழியில் அளிக்கப்படுவதற்குவேண்டிய புத்தகங்கள் என்று கருதி, வெளி ஊழியத்தில் இவற்றைப் பயன்படுத்தக் கையிருப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.
8 உண்மையான பாதுகாப்பு யெகோவா தேவனாகிய சிருஷ்டிகரிடமிருந்தே வர முடியும். கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்திற்குத் தங்கள் இருதயங்களையும் மனங்களையும் மக்கள் திறந்து நமக்கு அது கொடுக்கும் நம்பிக்கையை பேணிக்காத்துக்கொள்ள நம்மால் கூடியவரை அநேகருக்கு நாம் உதவிசெய்வோமாக. சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமுரிய கடவுளுடைய வழியை பிரசங்கிக்க நம்மிடம் கற்பிப்பதற்கு உள்ள உதவிபிரசுரங்களைச் சிறந்த முறையில் நாம் பயன்படுத்துவோமாக.—ஏசா. 2:3, 4.