நற்செய்தியை அறிவிக்க துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள்
1. கடவுளுடைய மக்கள் துண்டுப்பிரதிகளை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள்?
1 யெகோவாவின் மக்கள் நற்செய்தியை அறிவிக்க நீண்ட காலமாகவே துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். சி.டி. ரஸலும் அவருடைய நண்பர்களும் 1880-ல் பைபிள் ஸ்டூடன்ஸ்சஸ் டிராக்ட்ஸ் என்ற துண்டுப்பிரதியைப் பிரசுரித்தார்கள். இவை காவற்கோபுர பத்திரிகையின் வாசகர்களிடம் கொடுக்கப்பட்டு, பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. துண்டுப்பிரதிகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதென்றால், நற்செய்தி அறிவிக்கும் வேலையை விஸ்தரிப்பதற்காக 1884-ல் சி.டி. ரஸல் லாபம் ஈட்டாத சட்டப்பூர்வ அமைப்பை நிறுவினபோது அதன் பெயரில் “டிராக்ட்” (துண்டுப்பிரதி) என்ற வார்த்தையும் சேர்த்துக்கொண்டார். அதாவது சையன்ஸ் உவாட்ச் டவர் டிராக்ட் சொஸைட்டி என்று பெயரிட்டார் (இப்போது உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்சில்வேனியா). 1918-ற்குள் பைபிள் மாணாக்கர்கள் 30 கோடிக்கும் மேலான துண்டுப்பிரதிகளை விநியோகித்திருந்தார்கள். இன்றும், நற்செய்தியை அறிவிக்க துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தும்போது சிறந்த பலன் கிடைக்கிறது.
2. துண்டுப்பிரதிகள் ஏன் பலன்தரத்தக்கது?
2 ஏன் சிறந்தது? துண்டுப்பிரதிகள் கண்கவர் வண்ணங்களில் இருக்கின்றன. அதிலிருக்கும் செய்தி ரத்தினச் சுருக்கமாக இருந்தாலும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் தகவல் நிறைந்ததாகவும் இருக்கிறது. பத்திரிகையையோ புத்தகத்தையோ படிக்க அலுத்துக்கொள்கிறவர்களுக்கு இவை சிறந்தவை. துண்டுப்பிரதிகளை அறிமுகப்படுத்துவது சுலபம். புது பிரஸ்தாபிகளும் பிள்ளைகளும்கூட ஊழியத்தில் இதைச் சுலபமாகக் கொடுக்கலாம். அதோடு, துண்டுப்பிரதிகள் கைக்கடக்கமாக இருப்பதால் எடுத்துச் செல்வதும் சுலபம்.
3. துண்டுப்பிரதியின் நன்மையை விளக்குவதற்கு, சொந்த அனுபவத்தையோ பிரசுரத்தில் உள்ள அனுபவத்தையோ சொல்லுங்கள்.
3 துண்டுப்பிரதிகளைப் படித்தே நிறைய பேர் சத்தியத்திற்குள் வந்திருக்கிறார்கள். ஒரு பெண் தெருவில் ஒரு துண்டுப்பிரதி கிடப்பதைப் பார்த்தார். அதை எடுத்து படித்துவிட்டு, “இதுதான் சத்தியம்!” என்று சொல்லி சந்தோஷப்பட்டார். அதன்பின் ராஜ்ய மன்றத்திற்குப் போக ஆரம்பித்தார், பைபிள் படித்து ஞானஸ்நானமும் பெற்றார். இதற்கெல்லாம் அந்தச் சின்ன துண்டுப்பிரதியில் இருந்த கடவுளுடைய செய்திதான் காரணம்.
4. பத்திரிகை அளிப்பில் துண்டுப்பிரதிகள் இருக்கும்போது என்ன செய்வது நம் நோக்கமாக இருக்க வேண்டும்?
4 வீட்டுக்கு வீடு ஊழியம்: நற்செய்தியை அறிவிப்பதில் துண்டுப்பிரதிகள் சிறந்த பலன் தருவதால் நவம்பர் மாதத்திலிருந்து அவ்வப்போது பத்திரிகை அளிப்பில் துண்டுப்பிரதிகளையும் நாம் கொடுக்கப்போகிறோம். வெறுமனே துண்டுப்பிரதியைக் கொடுத்துவிட்டு வருவது நம் நோக்கமல்ல, உரையாடலை ஆரம்பிக்க இவற்றைப் பயன்படுத்துவதுதான் நம் நோக்கம். ஒருவேளை, முதல் சந்திப்பிலோ மறுசந்திப்பிலோ வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து அல்லது வேறு பிரசுரத்திலிருந்து பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் துண்டுப்பிரதிகளை எப்படி அளிக்கலாம்? எல்லா துண்டுப்பிரதிகளும் ஒரே மாதிரி இருக்காது. அதனால், எல்லாவற்றையும் நன்கு படித்து வைத்திருந்தால் ஊழியத்தில் அளிப்பது சுலபம்.
5. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் துண்டுப்பிரதிகளை எப்படி அளிக்கலாம்?
5 பிராந்தியத்திற்கு ஏற்றார்போலும் துண்டுப்பிரதிகளுக்கு ஏற்றார்போலும் நம் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். வீட்டுக்காரரின் கையில் துண்டுப்பிரதியைக் கொடுத்தே உரையாடலை ஆரம்பிக்கலாம். கண்ணைக் கவரும் அட்டைப்படம் அவருடைய ஆர்வத்தைத் தூண்டலாம். அல்லது வெவ்வேறு துண்டுப்பிரதிகளைக் காண்பித்து அவருக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க சொல்லலாம். வீட்டுக்காரர் கதவைத் திறக்க யோசித்தால், அட்டைப்படம் அவருக்குத் தெரிவதுபோல் காட்டி அல்லது கதவின் கீழ் இடுக்கு வழியாக நுழைத்து அந்தத் துண்டுப்பிரதியைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்கலாம். பிறகு, துண்டுப்பிரதியின் தலைப்பு கேள்வியாக இருந்தால், அதைக் காட்டி அவருடைய பதிலைக் கேளுங்கள். அல்லது நீங்களாகவே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியை கேளுங்கள். அதன்பிறகு, துண்டுப்பிரதியிலிருந்து ஒரு பகுதியை படித்து காட்டுங்கள். அதில் ஏதேனும் கேள்வி வந்தால், அதைப் பற்றி அவருடைய கருத்தைச் சொல்லச் சொல்லுங்கள். முக்கிய வசனங்களைப் பைபிளிலிருந்து படித்துக் காட்டுங்கள். இப்படி சில பாராக்களைக் கலந்தாலோசித்த பிறகு, மறுசந்திப்பிற்கு அடித்தளம் போடுங்கள். நாளையும் நேரத்தையும் குறித்துக்கொள்ளுங்கள். பூட்டியிருக்கும் வீடுகளில் பிரசுரத்தைப் வைத்துவிட்டு வருவது உங்கள் சபையின் வழக்கம் என்றால், மற்றவர்கள் கண்ணில் படாதவாறு ஒரு துண்டுப்பிரதியை போட்டுவிட்டு வரலாம்.
6. தெரு ஊழியத்தில் துண்டுப்பிரதிகளை எப்படிக் கொடுக்கலாம்?
6 தெரு ஊழியம்: தெரு ஊழியத்தில் துண்டுப்பிரதிகளைக் கொடுத்திருக்கிறீர்களா? சிலர் அரக்கப்பரக்க போய்க்கொண்டிருப்பார்கள், நின்று பேச அவர்களுக்கு நேரமிருக்காது. அவர்களுக்கு பத்திரிகைகளைப் படிக்க ஆர்வமிருக்கிறதா என்று கண்டுபிடிப்பது கஷ்டம். படிப்பார்களா இல்லையா என்று தெரியாமலேயே புதிய பத்திரிகையைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒரு துண்டுப்பிரதியைக் கொடுக்கலாமே! அட்டைப்படம் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், தகவல் சுருக்கமாகவும் இருப்பதால் படிக்க வேண்டுமென்று அவருக்கே ஆர்வம் வரும். அதேசமயம், சிலர் தெருவில் சாவகாசமாகப் போய்க்கொண்டிருந்தால், துண்டுப்பிரதியிலுள்ள விஷயத்தை நன்கு விளக்கலாம். என்றாலும், பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக சுற்றிலும் நடப்பவற்றைக் குறித்து கவனமாக இருங்கள்.
7. துண்டுப்பிரதியை வைத்து எப்படிச் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கலாம் என்பதற்கு சில அனுபவங்களைச் சொல்லுங்கள்.
7 சந்தர்ப்ப சாட்சி: துண்டுப்பிரதிகளை வைத்து சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது ரொம்பவே சுலபம். ஒரு சகோதரர் வீட்டைவிட்டு வெளியே போகும்போதெல்லாம் சில துண்டுப்பிரதிகளை தன் பாக்கெட்டில் எடுத்துச் செல்வார். யாரையாவது சந்திக்கும்போது, உதாரணமாக கடையில் வேலை செய்கிறவர்களைச் சந்திக்கும்போது, ‘இதை படித்து பாருங்கள்’ என்று சொல்லி துண்டுப்பிரதியைக் கொடுத்துவிடுவார். ஒரு தம்பதி ஒரு நகரத்திற்குச் சுற்றுலா போனார்கள். வெவ்வேறு நாட்டவர்களை அங்கு சந்திக்க வாய்ப்பிருப்பதால், சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறுபுத்தகத்தையும் நிறைய மொழிகளில் துண்டுப்பிரதிகளையும் கையோடு எடுத்துச் சென்றார்கள். வீதியில் கடை போட்டிருப்பவரோ, பூங்கா அல்லது ஹோட்டலில் தங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரோ வேற்றுமொழியில் பேசினால், அவர்களுடைய மொழியிலேயே துண்டுப்பிரதியைக் கொடுத்தார்கள்.
8. துண்டுப்பிரதிகளை எப்படி விதைகளுக்கு ஒப்பிடலாம்?
8 “விதையை விதை”: துண்டுப்பிரதிகள் விதை மாதிரி. எந்த விதை முளைத்து வளரும் என்று தெரியாததால் விவசாயி விதைகளை எங்கும் வீசுவார். பிரசங்கி 11:6 சொல்கிறது: “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.” எனவே, துண்டுப்பிரதிகளை வைத்து எங்கும் ‘அறிவை இறைத்து விடுங்கள்.’—நீதி. 15:7.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
நற்செய்தியை அறிவிப்பதில் துண்டுப்பிரதிகள் சிறந்த பலன் தருவதால் நவம்பர் மாதத்திலிருந்து அவ்வப்போது பத்திரிகை அளிப்பில் துண்டுப்பிரதிகளையும் நாம் கொடுக்கப்போகிறோம்.