டிசம்பரில் பைபிள் படிப்புகள் ஆரம்பித்தல்
1 நற்செய்தியின் போதகர்களாக இருக்கும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். (மத். 28:19, 20) மற்றவர்களுக்குப் போதிப்பதற்கான நம்முடைய பிரதான வழி, பைபிள் படிப்புகள் நடத்துவதாகும். இந்த வேலையில் நீங்கள் பங்குகொண்டு வருகிறீர்களா? இல்லையென்றால், மற்றவர்களுக்குப் போதிப்பதில் பேரளவான பங்கை அனுபவிக்கும்படிக்கு, நீங்கள் எவ்வாறு ஒரு படிப்பை ஆரம்பிக்கலாம்?
2 ஒருவேளை வீட்டுக்காரருக்கு இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப்பிரதி ஒன்றை நாம் அளித்து, அதிலுள்ள பொருளடக்கத்தைக் கலந்தாலோசிப்பதற்கு கட்டாயமாக திரும்பிவருவதாக சொல்லியிருக்கலாம்.
“இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா?” என்ற துண்டுப்பிரதியை கொடுத்துவந்த வீட்டுக்காரரை மீண்டும் சந்திக்கும்போது, நாம் இவ்வாறு சொல்லலாம்:
◼ “ஒருசில நாட்களுக்கு முன்பு நான் இங்கு வந்திருந்தபோது, நம்முடைய காலங்களின் அவசரத்தன்மையையும் நம்முடைய நாளில் இருக்கிற நிலைமைகளை இயேசு துல்லியமாக விவரித்தார் என்பதையும் நாம் கலந்தாலோசித்தோம். ஒருசில நிமிடங்கள் செலவிட்டு, உங்களிடம் விட்டுச்சென்ற இந்தத் துண்டுப்பிரதியிலிருந்து சில தகவல்களைச் சுருக்கமாகச் சிந்திப்பதற்கு நான் விரும்புகிறேன். ‘அந்த அடையாளம்’ என்ற உபதலைப்பின்கீழ் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள்.” அந்தத் துண்டுப்பிரதியின் 3-ஆம் பக்கத்திற்குத் திருப்பி, அந்த உபதலைப்பின்கீழுள்ள முதல் இரண்டு அல்லது மூன்று பத்திகளைக் கலந்தாலோசியுங்கள். நேரம் அனுமதிக்கிறபடி இடக்குறிப்புக் கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களை வாசியுங்கள். இயேசுவின் தீர்க்கதரிசனம் இன்று எவ்வாறு நிறைவேற்றமடைந்து வருகிறது என்பதைச் சிறப்பித்துக் காட்டுங்கள். திரும்பிச்சென்று இந்த உபதலைப்பின்கீழுள்ள மற்ற பத்திகளைக் கலந்தாலோசிப்பதற்கு ஏற்பாடுசெய்யுங்கள். நீங்கள் திரும்பிவருவதற்கு முன்பாக அந்த விஷயத்தை வீட்டுக்காரர் வாசிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.
3 அல்லது இதுபோன்ற ஒன்றை நீங்கள் சொல்லலாம்:
◼ “கடந்தமுறை நாம் பேசியபோது, இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்று தலைப்பிடப்பட்ட இந்தத் துண்டுப்பிரதியை நான் உங்களிடம் விட்டுச்சென்றேன். அந்தச் சமயத்தில், உலக விவகாரங்களில் இயேசு கிறிஸ்துவின் பாகத்தைக் குறித்து நாம் பேசினோம். பைபிளில் யோவான் 17:3-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள அவருடைய வார்த்தைகளை நாம் வாசிக்கலாம். [வாசியுங்கள்.] நித்திய ஜீவனை நாம் விரும்புவோமானால் கடவுளையும் இயேசுவையும் பற்றி கற்றுக்கொள்வது முக்கியமாய் இருப்பதால், அப்படிப்பட்ட அறிவை எடுத்துக்கொள்வதற்கு நம்மால் முடிந்ததைச் செய்வது தகுதிவாய்ந்தது. இயேசு பூமியில் இருந்தபோது, கடவுளுடைய அநேக அதிசயமான பண்புகளை அவர் பிரதிபலித்தார். இயேசுவையும் அவருடைய ஊழியத்தையும் பற்றி எந்தளவுக்கு அதிகமாய் அறியவருகிறோமோ, அந்தளவுக்கு அதிகமாய் அவருடைய பிதாவைப் பற்றி அறியவருவோம் என்று நினைப்பது நியாயமானதாய் இருக்கிறதல்லவா? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற இந்தப் புத்தகம் சொல்வதைக் கவனியுங்கள்.” அதிகாரம் 116-ல் பத்தாவது பக்கத்திலுள்ள முதலாவது மற்றும் இரண்டாவது பத்திகளை வாசியுங்கள். இயேசுவைப்பற்றி நான்கு சுவிசேஷக விவரப்பதிவுகளிலுள்ள அனைத்து தகவலும் இந்தப் புத்தகத்தில் அடங்கியிருக்கிறது என்பதையும் சம்பவங்கள் நிகழ்ந்த அதே வரிசைக்கிரமத்தில் இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் வலியுறுத்திக் கூறுங்கள். குறிப்பாகவுள்ள அதிகாரத்தின் தலைப்புகள், விளக்கப்படங்கள், அந்தப் புத்தகத்தின் தொடக்கத்திலுள்ள நிலப்படம் ஆகியவற்றை சுட்டிக்காட்டுங்கள். நன்கொடையாக 40.00 ரூபாய்க்கு தனக்காக ஒரு பிரதியை அவர் பெற்றுக்கொள்ளலாம் என்பதை வீட்டுக்காரரிடம் சொல்லி, அந்தப் புத்தகத்தை அவரிடம் அளியுங்கள்.
4 “மிகப் பெரிய மனிதர்” புத்தகத்தை ஏற்றுக்கொண்ட வீட்டுக்காரரை வாழ்த்திய பிறகு, நாம் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நான் என்னுடைய முந்தின சந்திப்பில் குறிப்பிட்டபடி, மிகப் பெரிய மனிதர் புத்தகமானது பைபிள் படிப்புக்காகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இதை எவ்வாறு அதிகப் பலன்தரத்தக்க விதமாகப் பயன்படுத்தலாம் என்பதைச் சுருக்கமாக நடித்துக்காட்ட விரும்புகிறேன்.” அதிகாரம் 1, “பரலோகத்திலிருந்து செய்திகள்” என்பதற்குப் புத்தகத்தைத் திறந்துகொள்ளுங்கள். வீட்டுக்காரருடைய கவனத்தை அச்சிடப்பட்ட கேள்விகளுக்குத் திருப்புங்கள். முதல் கேள்வியை வாசித்து, பின்பு ஆரம்ப பத்திகளைச் சிந்தியுங்கள். இரண்டாவது பக்கத்திலுள்ள விளக்கப்படத்தைப் பொருத்தமாக இணையுங்கள். மீதமுள்ள கேள்விகளைக் கலந்தாலோசித்து, நேரம் அனுமதிக்கிறபடி பதில்களை சிறப்பித்துக் காட்டுங்கள். அந்தச் சந்திப்பை நிறைவுசெய்வதற்கு முன்பாக, மறுமுறைசென்று சம்பாஷணையைத் தொடர ஏற்பாடுசெய்யுங்கள்.
5 நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ளுதல், நன்றாகத் தயார்செய்தல், ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றின்மூலம், டிசம்பரில் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு நன்கு ஆயத்தமாக்கப்பட்டவர்களாய் இருப்போம்.