“இன்னொருவேளை” கேட்க அவர்களுக்கு உதவுங்கள்
1 “நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம்.” (அப். 17:32) மார்ஸ் மேடையில் பவுல் நடத்திய பிரபல பிரசங்கத்திற்கான சிலருடைய பிரதிபலிப்பு இப்படித்தான் இருந்தது. அதுபோலவே இன்று, நாம் முதல்முறையாக சந்தித்து ராஜ்ய செய்தியைப் பகிர்ந்துகொண்ட சிலர் அதைப்பற்றி அதிகத்தைக் கேட்க விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றனர்.
2 ஆர்வத்தை வளர்ப்பதற்காக நாம் மீண்டும் சந்திக்கையில், நம்முடைய போதிக்கும் வேலையின் பெரும்பகுதியைச் செய்கிறோம். நன்கு தயாரிப்பது நல்ல பலன்களைப் பெறுவதற்கு உதவும். பள்ளி துணைநூல் (School Guidebook) பக்கம் 51 இவ்வாறு சிபாரிசு செய்கிறது: “பொருளை நிலைநிறுத்த உதவும் விவாதங்களைத் தெளிவாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு காரியம் ஏன் அப்படி இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க முயற்சிசெய்யுங்கள். கருத்துக்களை உங்கள் சொந்த வார்த்தைகளில் அமைக்க முடியுமா என்பதைப் பாருங்கள். வேதாகம நிரூபணங்களின் நல்ல புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள். வேதவசனங்களைப் பலன்தரத்தக்கவிதமாகப் பொருத்திப் பிரயோகிக்கத் தயாராயிருங்கள்.”
3 நீங்கள் “பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா?” புத்தகத்தை அளித்திருந்தால், இப்படி ஏதாவது சொல்லலாம்:
◼ “இதற்குமுன் நாம் பேசியபோது, ஏன் பைபிள்மீது நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கான காரணங்களைக் கலந்தாலோசித்தோம். நான் உங்களிடம் கொடுத்துவிட்டுச் சென்ற புத்தகம், ‘பைபிளை ஏன் வாசிக்கவேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்புகிறது. [பக்கம் 5-ல் உள்ள அறிமுகத்தை வாசித்துவிட்டு, இறுதிக் கேள்விக்கான பதிலுக்காக காத்திருங்கள்.] மனிதவர்க்கத்தைக் கலக்கமடையச் செய்யும் அனைத்துப் பிரச்சினைகளையும் கடவுள்தாமே வெகு சீக்கிரம் தீர்த்துவைக்கப்போகிறார் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. அப்படிப்பட்ட மகிழ்ச்சியான சமயத்தில் கிடைக்கும் ஆசீர்வாதங்களை அனுபவித்துமகிழ நாம் போகவேண்டிய வழிக்கு அது நம்மை வழிநடத்துகிறது. [சங்கீதம் 119:105-ஐ வாசியுங்கள்.] இந்தப் புத்தகம் தனிப்பட்டவகையிலும் குடும்பமாகவும் பைபிளைப் படிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு துணைநூலாக இருக்கிறது. இதை எப்படிப் பயன்படுத்துவது என்று உங்களுக்குக் காண்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்.”
4 “நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்” என்ற துண்டுப்பிரதியை பெற்றவர்களிடம் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “எதிர்காலத்தில் நடக்கவிருப்பவற்றைப்பற்றி நாம் அனைவருமே அக்கறை உடையவர்களாக இருக்கிறோம். தற்போதைய உலக நிலைமைகளைப் பார்க்கையில், என்ன சம்பவிக்கப் போகிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக காத்திருங்கள்.] என்ன நடக்கப்போகிறது என்பதைப்பற்றி மனிதனால் ஊகிக்கமட்டுமே முடியும், ஆனால் சரியாக என்ன நடக்கப்போகிறது என்று கடவுள் அறிந்திருக்கிறார். [ஏசாயா 46:10-ஐ வாசியுங்கள்.] சீக்கிரத்தில் நாம் ஒரு பரதீஸிய புதிய உலகத்தின் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வோம் என பைபிள் முன்னுரைக்கிறது என்று அறிவது உங்களுக்கு ஆச்சரியமூட்டுவதாக இருக்கலாம். [பக்கம் 4-ல் உள்ள மூன்றாம் பாராவை வாசியுங்கள்.] இந்த அற்புதகரமான வாக்குறுதியைப்பற்றி நான் உங்களுக்கு நிறைய சொல்கிறேன்.”
5 ஒரு புத்தகத்தையோ “நம்முடைய பிரச்னைகள்” போன்ற சிற்றேட்டையோ பெற்றவர்களை நீங்கள் திரும்பவும் சந்திப்பீர்களானால், இந்த ஆலோசனை ஒருவேளை உங்களுக்குப் பலனளிப்பதாக இருக்கலாம்:
◼ “சமீபத்தில், பைபிள் அடிப்படையிலான ஒரு பிரசுரத்தை நான் உங்களிடம் கொடுத்துவிட்டு, அதை சிறந்தமுறையில் உபயோகப்படுத்த உங்களுக்கு உதவி செய்ய நான் திரும்பவும் வருவதாக சொல்லியிருந்தேன். மற்றவர்களோடு நட்புறவைக் காத்துக்கொள்வதே நம்முடைய பிரச்சினைகளில் அநேகத்திற்கு ஒரு தீர்வாக இருக்கிறது. இதை எவ்வாறு செய்வது என்பதன் பேரில் பைபிள் நல்ல அறிவுரைகளைத் தருகிறது. மேலும் நமக்குத் தேவையானது எது என்பதைக் கண்டுபிடிப்பதை புதிய உலக மொழிபெயர்ப்பு எளிதாக்குகிறது. [பக்கம் 1595-க்குத் திருப்பி “அன்பு” என்ற தலைப்பின்கீழ் பாருங்கள். 1 கொரிந்தியர் 13:4; கொலோசெயர் 3:14; 1 பேதுரு 4:8 போன்ற வசனங்களுக்குக் கவனத்தைச் செலுத்துங்கள். இந்த நியமங்களைப் பொருத்துவது எப்படி நல்ல பலன்களைத் தருகிறது என்று சுருக்கமாக விளக்குங்கள்.] நம்முடைய பிரச்சினைகளுக்கு பைபிள் எவ்வாறு நடைமுறையான பரிகாரங்களைத் தருகிறது என்பதைக் காட்டும் ஒரு உதாரணமாக இது இருக்கிறது. அடுத்தமுறை வரும்போது, மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கண்டடைய பைபிள் நமக்கு உதவக்கூடிய மற்றொரு வழியை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்.”
6 கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவைக்காட்டிலும் நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கக்கூடிய பெரிய பொக்கிஷம் வேறு எதுவும் இல்லை. அத்தகைய அறிவு யெகோவாவுக்கான பயத்தை நமக்குப் போதிக்கிறது; அவருடைய வழியில் நடக்க மக்களை ஊக்குவிக்கிறது; இவ்வாறு செய்வது நித்திய ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது.—நீதி. 2:20, 21.