பைபிள்—துன்பம் நிறைந்த இவ்வுலகில் ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் மூலம்
1 இந்த உலகம் மனிதவர்க்கத்தைப் பேரழுத்தத்திற்குள்ளும், ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் தேவையிலும் வைத்திருக்கிறது. பைபிள் மட்டுமே மெய்யான ஆறுதலின் ஒரே மூலம். நீதி வாசமாயிருக்கும் ஒரு புதிய உலகிற்கான நம்பிக்கையை அது அளிக்கிறது. (ரோ. 15:4; 2 பே. 3:13) உட்பார்வை (Insight) புத்தகம், தொகுதி 1, பக்கம் 311-ல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பைபிள் இல்லாமல் நாம் யெகோவாவைப்பற்றி அறிந்திருக்க மாட்டோம், கிறிஸ்துவின் கிரய பலியால் விளையும் அற்புதமான பலன்களைப்பற்றி அறிந்திருக்க மாட்டோம், நீதி வாசமாயிருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தில் அல்லது ராஜ்யத்தின்கீழ் நித்திய ஜீவனையடைய வேண்டுமானால் பூர்த்தி செய்யப்படவேண்டிய தேவைகளைப் புரிந்துகொண்டிருக்க மாட்டோம்.”
2 இவ்வுலகத்திலிருந்து வரும் அழுத்தங்களைச் சமாளிக்க மக்களுக்கு உதவுவதில், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் வகிக்கும் பங்கின்மீது நாம் நவம்பர் மாதத்தின்போது விசேஷித்த கவனத்தை ஈர்ப்போம். சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பையும் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? புத்தகத்தையும் நாம் அளிப்போம். சரியான மனநிலையைக் கொண்ட தனிநபர்கள் பைபிளின் மதிப்பை மதித்துணர உதவும்படி நாம் என்ன சொல்லலாம்?
3 உங்களையே அறிமுகப்படுத்திக்கொண்டபின் நீங்கள் இவ்வாறு ஏதேனும் சொல்லலாம்:
◼ “நம்முடைய சமாதானத்தைக் குலைக்கக்கூடிய பிரச்சினைகளால் நாம் சூழப்பட்டிருக்கிறோம் என்று நீங்கள் ஒருவேளை ஒத்துக்கொள்வீர்கள். இந்தப் பிரச்சினைகளையெல்லாம் சமாளிப்பதெப்படி என்று நமக்குக் காட்டும் நடைமுறையான ஆலோசனைகளை நாம் எங்குக் கண்டடையலாம்? [பதிலளிக்கக் காத்திருங்கள்.] பைபிளை நம்பிக்கையூட்டும் ஒன்றாக நான் கண்டிருக்கிறேன், ஏனென்றால் மகிழ்ச்சியாய் இருப்பது எவ்வாறு என்று அது நமக்குப் போதிக்கிறது. [லூக்கா 11:28-ஐ வாசியுங்கள்.] பைபிளை வாசிக்கும்படியும் அதன் போதனைகளிலிருந்து பயனடையும்படியும் ஆட்களை உற்சாகப்படுத்துவதே நாங்கள் செய்யும் வேலையின் நோக்கமாக இருக்கிறது. இதைச் செய்ய பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற இந்த பைபிள் துணைநூல் உங்களுக்கு உதவிசெய்யும். இந்த உலகத்தின் பிரச்சினைகள் பெரும்பாலானவற்றின் காரணத்தைப்பற்றி இது என்ன சொல்கிறதென்று கவனியுங்கள்.” [பக்கம் 187-ல் பாரா 9-ன் இரண்டாம் வாக்கியத்தை வாசியுங்கள்.] அரசாங்கம் மற்றும் நம்முடைய பிரச்னைகள் சிற்றேடுகளை அல்லது உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் புத்தகத்தை இதே முறையில் அளிக்கலாம்.
4 இதைப்போன்ற ஒரு எளிய அணுகுமுறையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்:
◼ “கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு ஆழ்ந்த மரியாதையைக் காட்டும்படி உற்சாகப்படுத்துவதில் நாங்கள் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம். நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் என்ற இந்தத் துண்டுப்பிரதியின் ஒரு பிரதியை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். ஒரு மேம்பட்ட உலகத்திற்கான நிச்சயமான நம்பிக்கையைக் கண்டடைய நாம் ஏன் பைபிளை எதிர்நோக்கியிருக்கலாம் என்று இது விவரிக்கிறது. [பக்கம் 6-க்குத் திருப்பி, சங்கீதம் 37:29-ஐ கடைசி பாராவோடு வாசியுங்கள்.] இந்தத் துண்டுப்பிரதியை நீங்களே வாசித்துப்பாருங்கள், அடுத்தமுறை நான் வரும்போது, பைபிள் கொடுக்கிற நம்பிக்கையைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குச் சொல்லுங்கள்.”
5 பொருத்தமான சந்தர்ப்பங்களில், ஒரு பைபிள் படிப்பைத் தொடங்குவதற்கு இந்த நேரடியான அணுகுமுறையை நீங்கள் உபயோகிக்கலாம்:
◼ “ஒரு இலவச பைபிள் படிப்பு நடத்துவதற்கு நான் உங்களைச் சந்திக்கிறேன். பைபிள் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது, ஆகவே அதன் போதனைகள் காரியங்களை நேர்படுத்துவதற்கு நமக்கு உதவக்கூடும். இந்தத் தற்கால மொழி பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு தனிப்பட்ட படிப்புக்காக உருவாக்கப்பட்டதாகும். நீங்கள் இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று நான் உங்களுக்குச் சுருக்கமாகக் காண்பிக்கிறேன். [பக்கம் 1653-க்குத் திருப்பி 23A பகுதிக்குக் கவனத்தைச் செலுத்துங்கள். கொடுக்கப்பட்டுள்ள வசனங்களில் ஒன்று அல்லது இரண்டைத் திறந்து பாருங்கள். கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளைத் திறந்து பார்ப்பது, கடவுள் தம்முடைய ராஜ்யத்தின் மூலம் எதை நிறைவேற்ற நோக்கம் கொண்டிருக்கிறார் என்று எவ்வாறு வெளிக்காட்டும் என்பதை விளக்குங்கள்.] நான் திரும்ப வந்து இந்த ராஜ்ய நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் கலந்தாலோசிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.”
6 பைபிள் ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் ஒரு மூலமாகவும், நம்மை நித்திய ஜீவனுக்கு வழிடத்தக்கூடிய சத்தியமாகவும்கூட இருக்கிறது. (யோவா. 17:3, 17) பைபிள் அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது, “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட . . . சித்தமுள்ளவராயிருக்கி”றவராகிய யெகோவாவை சந்தோஷப்படுத்துகிறது.—1 தீ. 2:4.