மறுபடியும் சேவிக்க அவர்களுக்கு உதவுங்கள்
1 தன் உடன் கிறிஸ்தவர்களுக்கு நேரிடவிருந்த ஆவிக்குரிய ஆபத்தை உணர்ந்தவராய் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாவது: ‘நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்று . . . நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.’ (ரோ. 13:11) ஆவிக்குரிய தூக்கக் கலக்கத்திற்கு உள்ளான தன்னுடைய சகோதரர்களைப் பற்றி பவுல் அக்கறையுள்ளவராய் இருந்தார்; புதுப்பிக்கப்பட்ட செயலுக்கு அவர்களை மீண்டும் உயிர்ப்பூட்டுவதற்காக அவர் கவலையுள்ளவராய் இருந்தார்.
2 இந்தப் பழைய உலகின் இரவினுடைய பெரும் பாகம் சென்றுபோயிற்று என்றும் புதிய உலகின் விடியல் வெகு சமீபத்தில் உள்ளது என்றும் உண்மையிலேயே சொல்லலாம். (ரோ. 13:12) நற்செய்தியின் பிரசங்கிப்பாளர்களாக நம்முடன் கூட்டுறவுகொள்ள நிறுத்திவிட்ட சகோதரர்களைப் பற்றி அக்கறைகொள்வதற்கான நல்ல காரணத்தை நாம் கொண்டுள்ளோம். கடந்த ஊழிய ஆண்டில், இந்தியாவில் மாத்திரம் 230-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் மீண்டும் உயிர்ப்பூட்டப்பட்டார்கள். செயலற்றவர்களாய் இருக்கும் மற்றவர்கள் யெகோவாவை மறுபடியும் சேவைசெய்வதற்கு நாம் எவ்வாறு உதவலாம்?
3 மூப்பர்கள் செய்யக்கூடியவை: செயலற்றவராக இருக்கும் அநேகர் சத்தியத்தை விட்டுவிடவில்லை; உற்சாகமிழத்தல், தனிப்பட்ட பிரச்சினைகள், பொருளாசை அல்லது வாழ்க்கையின் மற்ற கவலைகள் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் வெறுமனே பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டனர். (லூக். 21:34-36) கூடுமானவரை, அவர்கள் செயலற்றவர்களாக ஆவதற்கு முன்பே அவர்களுக்கு உதவுவது சாலச் சிறந்தது. ஒரு பிரஸ்தாபி ஊழிய நடவடிக்கையின் அறிக்கையை இடுவதில் ஒழுங்கற்று இருக்கையில் சபை செயலாளர் இதைக்குறித்து சபை புத்தகப் படிப்பு நடத்துனரை எச்சரிக்க வேண்டும். மேய்ப்பு சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படலாம். அவர்கள் பிரச்சினைக்கான அடிப்படை காரணத்தையும் எவ்வாறு உதவி அளிக்கப்படலாம் என்பதையும் தீர்மானிக்க முயல வேண்டும்.—செப்டம்பர் 15, 1993, காவற்கோபுரம், பக்கங்கள் 20-3-ஐக் காண்க.
4 மற்றவர்கள் எவ்வாறு உதவலாம்: செயலற்றவராக ஆகிவிட்ட எவரையாவது நம்மில் அநேகருக்குத் தெரியும். ஒருவேளை முன்பு நம்மிடம் மிகவும் நெருக்கமாக இருந்த நபராகவும் அவர் இருக்கலாம். உதவுவதற்கு நாம் என்ன செய்யலாம்? கொஞ்ச நேரம் போய் பார்த்துவிட்டு வரலாமே. அவரின் தோழமை இன்றி நீங்கள் தவிப்பதை அவரிடத்தில் கூறுங்கள். குதூகலத்துடனும் நம்பிக்கையுடனும் இருங்கள். அவர் ஆவிக்குரியவிதத்தில் நோயுற்றிருக்கிறார் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமலே உங்களுடைய அக்கறையைத் தெரியப்படுத்துங்கள். கட்டியெழுப்பும் அனுபவங்களை அல்லது சபையால் சாதிக்கப்பட்ட நல்ல காரியங்களைச் சொல்லுங்கள். “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாட்டைப்பற்றி உற்சாகமாக அவரிடத்தில் சொல்லுங்கள், அதற்கு வரும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள். ஒருவேளை மீண்டும் சபையுடன் கூட்டுறவுகொள்வதே அவருக்கு வேறு எதைக்காட்டிலும் அதிகம் உதவக்கூடியதாய் இருக்கலாம். அவருடன் கூட்டங்களுக்குக் கூடவே வருவதற்கு முன்வாருங்கள். நீங்கள் பெற்ற பிரதிபலிப்பை மூப்பர்களும் அறிந்திருக்கட்டும்.
5 செயலற்றவராக ஆன ஒரு நபர் மீண்டும் கூட்டத்திற்கு வரும்போது, முன்பு தனக்குத் தெரிந்த மற்ற ஆட்களை எதிர்ப்படுகையில் ஒருவேளை சங்கடமாக உணரலாம். “எங்கே ஆளையே காணோமே?” என்று கேட்காதீர்கள். மாறாக, வரவேற்கப்படுவதாக அவர் உணரும்படி செய்யுங்கள். உரையாடலில் அவரை ஈடுபடுத்துங்கள். அவருக்குத் தெரியாதவர்களை அறிமுகம் செய்துவையுங்கள். கூட்டத்தின்போது அவருடன் உட்காருங்கள், பாட்டுப் புத்தகமும் படிக்கவிருக்கும் மற்ற பிரசுரங்களும் அவர் கொண்டிருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். மீண்டும் வரும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள், தேவைப்படுமானால் உங்களுடைய உதவியை அளித்திட முன்வாருங்கள்.
6 வழிதப்பிப்போனவர்கள்மீது அனலான நேசத்தைக் கொண்டிருங்கள், அத்தகையோர் ஆவிக்குரிய குணமடையும்போது யெகோவாவும் இயேசுவும் சந்தோஷப்படுகிறார்கள். (மல். 3:7; மத். 18:12-14) யெகோவாவை மறுபடியும் சேவிக்கும்படி மற்றவர்களுக்கு உதவுவதில் நாம் வெற்றியடைந்தால் அதே சந்தோஷத்தை நாமும் அனுபவிக்கலாம்.