நாம் ‘திருவசனத்தைப் பிரசங்கிக்கிறோம்’
1 ‘கடைசி நாட்களைக்’ பற்றிய பைபிள் விவரிப்புக்கு இசைவாக, இன்று பெரும்பாலான மக்கள் வெறுமனே ‘தேவபக்தியின் வேஷத்தைத் தரித்தவர்களாகவே’ இருக்கிறார்கள். (2 தீ. 3:1, 5) மதத் தலைவர்கள் தங்களுடைய மந்தைகளுக்கு உண்மையான ஆவிக்குரிய வழிநடத்துதலைக் கொடுக்க தவறியதே இதற்கு காரணமாகும். கிறிஸ்தவமண்டல பாதிரிமார் பைபிளை ஆதரித்துப் பேசுவதில்லை. அவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்குப் பதிலாக, தத்துவ ஞானிகள் மற்றும் இறையியலாளர்களுடைய வீணான போதனைகளையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப சொல்லுவதற்கு அல்லது சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளையே முன்வைப்பதற்கு விரும்புகிறார்கள். மதத் தலைவர்கள் அநேகர் பைபிளை நம்புவது இல்லை. அது பழம்பாணியானது என உணருகிறார்கள், இதனால் மகத்தான படைப்பாளரைப் பற்றிய பைபிள் போதனைக்குப் பதிலாக பரிணாமக் கோட்பாட்டை உண்மைக்கு மாறாக முன்னேற்றுவிக்கிறார்கள். குருமார்கள் கடவுளுடைய தனிப்பட்ட பெயரைப் பயன்படுத்துவதுகூட இல்லை, பெரும்பாலான நவீன பைபிள் மொழிபெயர்ப்புகளிலிருந்து அந்தப் பெயர் நீக்கப்பட்டதைக் குறித்து எந்தவித ஆட்சேபணையும் எழுப்பவில்லை.
2 இயேசுவின் நாளிலிருந்த மதத் தலைவர்களுடைய விஷயத்தில் உண்மையாய் இருந்ததுபோலவே, இன்றைய பாதிரிமார் வீணாக பிரசங்கம் செய்துவருகிறார்கள். (மத். 15:8, 9) இது ஆமோஸ் தீர்க்கதரிசி முன்னறிவித்தபடியே இருக்கிறது. ‘ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம்’ அங்கு நிலவுகிறது. (ஆமோஸ் 8:11) வேறு எதைக்காட்டிலும், மக்களுக்கு கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆவிக்குரிய உணவு அவசியம்.
3 மக்களுடைய ஆவிக்குரியத் தேவையை எவ்வாறு பூர்த்திசெய்வது: “[ஒருவரை] இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை” உறுதியாகப் பற்றிக்கொள்ளும்படி தீமோத்தேயுவுக்குப் பவுல் புத்திமதி கூறினார்; ஆகையால் மற்றவர்களுக்கு “திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு”ம்படி அவரை முறைப்படி நியமித்தார். (2 தீ. 3:14, 15; 4:2) யெகோவாவின் சாட்சிகளாக, நாம் பிரசங்கம் செய்யும்போது பைபிள் என்ன போதிக்கிறதோ அதையே உறுதியாக போதிக்க வேண்டும், இவ்விதமாக நம்முடைய முன்மாதிரியாளர் இயேசுவைப் பின்பற்ற வேண்டும். அவர் சொன்னார்: “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.” (யோவான் 7:16) நாம் கடவுளுடைய வார்த்தையை நம்முடைய போதனைக்கான ஆதாரமாக பயன்படுத்துகிறோம், ஏனென்றால் அதில் கடவுளுடைய ஞானம் அடங்கியிருக்கிறது என நாம் ஒப்புக்கொள்கிறோம், மேலும் மக்களுடன் பகிர்ந்துகொள்ளுகிற தகவலின் ஊற்றுமூலத்தை அவர்கள் அறிந்துகொள்ளும்படி விரும்புகிறோம்.—1 கொ. 2:4-7.
4 யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டு அவரில் விசுவாசம் வைப்பதற்கு, மக்கள் முதலாவதாக பைபிளிலிருந்து சத்தியத்தைக் கேள்விப்பட வேண்டும். பவுல் தர்க்கரீதியில் எழுதினார்: “அவரைக்குறித்து கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?” (ரோ. 10:14) கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதன் மூலம், திருத்தமான அறிவின் வாயிலாக விசுவாசத்தைப் பெற்றுக்கொள்ள நாம் மற்றவர்களுக்கு உதவிசெய்கிறோம். இப்படிப்பட்ட அறிவு வாழ்க்கையை மேம்பட்ட விதமாக மாற்றமுடியும், மாற்றவும் செய்கிறது. பைபிளைக் குறித்து ஆங்கில ஆசிரியர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் இவ்வாறு எழுதினார்: “உலகில் இருந்த புத்தகத்திலேயே, இருக்கப்போவதிலேயே அது மிகச் சிறந்த புத்தகம், ஏனென்றால் அது உங்களுக்கு மிகச் சிறந்த பாடங்களைக் கற்பிக்கிறது, இப்பாடங்கள் மூலம் உண்மையுள்ளவனாகவும் பற்றுமாறாதவனாகவும் இருக்க முயலுகிற எந்த மனித சிருஷ்டியும் வழிநடத்தப்பட முடியும்.”
5 ஆவிக்குரிய சத்தியத்திற்கான பசியுள்ளவர்கள், இது கடவுளுடைய வார்த்தையின் அதிகாரத்தினால் ஆதரிக்கப்படுகிறது என்பதை உணர ஆரம்பிக்கிறார்கள். 1913-ல், ஒரு இளம் கல்லூரி மாணவனாக இருந்த ஃபிரெட்ரிக் டபிள்யு. ஃபிரான்ஸுக்கு மரித்தோர் எங்கே இருக்கின்றனர்? என்று தலைப்பிடப்பட்ட சிறுபுத்தகம் கொடுக்கப்பட்டது. இந்தக் கேள்விக்கான பைபிளின் பதிலை மிக்க ஆர்வத்துடன் வாசித்தப் பிறகு, அவர் சொன்னார்: “இதுவே சத்தியம்.” சத்தியத்தை நாடும் இலட்சக்கணக்கானோர் இதைப் போலவே உணர ஆரம்பித்திருக்கிறார்கள். ஊக்கத்துடனும் வைராக்கியத்துடனும் நாம் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணி, “இதுவே சத்தியம்” என்று மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்கும் சந்தோஷத்தில் பங்குகொள்வோமாக.