முன்நின்று வழிநடத்தும் கண்காணிகள்—ஊழியக் கண்காணி
1 சபைக்கு நியமிக்கப்பட்டப் பிராந்தியத்தில் செய்யப்படும் சுவிசேஷ வேலையின் முன்னேற்றத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் ஊழியக் கண்காணி ஆழ்ந்த அக்கறையுடையவராய் இருக்கிறார். நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டிய நம்முடைய உத்தரவாதத்தை நிறைவேற்ற நமக்கு உதவுவதில் அவர் முக்கிய பாகம் வகிக்கிறார். வைராக்கியமுள்ள சுவிசேஷகராக, ஊழியம் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களையும் ஒழுங்கமைப்பதில் அவர் முன்நின்று வழிநடத்துகிறார். சிறந்த போதகராக, ஒவ்வொரு பிரஸ்தாபியும் ஊழியத்தில் தங்கள் திறமையை அதிகரிக்க அவர் உதவுகிறார்.—எபே. 4:12, 13.
2 புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் பிராந்தியங்களைக் கவனிக்க நியமிக்கப்பட்டிருக்கும் உதவி ஊழியர்களின் வேலையை இந்த மூப்பரே நேரடியாக கண்காணிக்கிறார். ஒவ்வொரு மாதமும் நம்முடைய உபயோகத்திற்காகப் புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் ஊழியப் படிவங்கள் தாராளமாய் கிடைக்கும்படி பார்த்துக்கொள்வது அவருடைய பொறுப்பாகும். நாம் சந்திக்கக்கூடாது என்று ஆலோசனை கூறப்பட்டிருக்கும் வீடுகளின் விலாசங்களுக்காகப் பிராந்திய ஃபைலை வருடத்திற்கு ஒருமுறை அவர் மறுபார்வை செய்கிறார்; இந்த வீடுகளை சந்திப்பதற்கு தகுதியுள்ள பிரஸ்தாபிகளை அவர் நியமிக்கிறார்.
3 வியாபார இடங்களிலும், தெருக்களிலும், தொலைபேசி மூலமும் சாட்சிகொடுத்தல் உட்பட, ஊழியத்தின் பல்வேறு முறைகளை மேற்பார்வையிடுவது ஊழியக் கண்காணியின் பொறுப்பாகும். விடுமுறை நாட்கள் உட்பட, வாரம் முழுவதும் ஊழியத்தில் பங்குகொள்ள உதவும் நடைமுறையான ஏற்பாடுகளை ஒழுங்கமைப்பதில் அவர் துரிதமாய் செயல்படுகிறார். நடத்தப்படும் பைபிள் படிப்புகளிலும் அவர் உண்மையான ஆர்வம் காட்டுகிறார். ஊழியத்தில் ஒழுங்கற்றவர்களாகவும் செயலற்றவர்களாகவும் இருப்போருக்கு ஆவிக்குரிய வகையில் உதவியளிக்க அவர் வழிகளை ஆராய்கிறார். பயனியர்களின் ஊழியத்தைக் குறித்து அவர் எப்பொழுதும் அக்கறையுடையவராயும், பயனியர்கள் மற்றவர்களுக்கு உதவுதல் திட்டத்தைக் கண்காணிப்பவராயும் இருக்கிறார்.
4 சபை ஊழியக்குழுவின் ஓர் அங்கத்தினராக இருக்கும் ஊழியக் கண்காணி சபை புத்தகப் படிப்பு தொகுதிகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களைக் குறித்து தெரிவிப்பார். அவர் உங்களுடைய தொகுதியை சந்திக்கையில், நீங்களும் ஆஜராயிருந்து, கண்டிப்பாக அவரோடு வெளி ஊழியத்தில் பங்குகொள்ளுங்கள்.
5 ஊழியக் கண்காணியால் கொடுக்கப்படும் வழிநடத்துதலுக்கு சபையில் உள்ள அனைவரும் மனமுவந்து ஒத்துழைக்கவேண்டும். இது, சீஷராக்கும் வேலையில் நமது திறமையை அதிகரிக்கவும், நமது ஊழியத்தில் பெரும் மகிழ்ச்சியைக் காணவும் உதவும்.