கேள்விப் பெட்டி
◼ எப்போது கூடுதலாக மற்றொரு சபை புத்தகப் படிப்பு தொகுதியை ஏற்படுத்துவது பொருத்தமானது?
ராஜ்ய மன்றத்தில் நடத்தப்படும் புத்தகப் படிப்பு உட்பட, எல்லா புத்தகப் படிப்பு தொகுதிகளிலும் சுமார் 15 அல்லது அதற்கும் சற்று குறைவானவர்களே இருக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் புதிதாக ஒரு தொகுதியை ஏற்படுத்துவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு ஏன் ஆலோசனை அளிக்கப்படுகிறது?
சபை புத்தகப் படிப்பு தொகுதிகள் சிறியவையாக இருக்கையில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்துவது நடத்துனருக்கு எளிது. மேலும், தங்கள் விசுவாசத்தை வெளிப்படையாய் அறிவிக்கும் விதத்தில் பதில்கள் சொல்ல இந்த சூழ்நிலை அனைவருக்கும் அதிக வாய்ப்பளிக்கிறது. (எபி. 10:23; 13:15) சபை பிராந்தியம் முழுவதிலும் பல இடங்களில் சிறு சிறு தொகுதிகள் இருப்பது சபை புத்தகப் படிப்பிற்கும் வெளி ஊழிய கூட்டங்களுக்கும் அதிக சௌகரியமாக இருக்கும். மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கும் சபைகள், புத்தகப் படிப்புக்கு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் கண்டிருக்கின்றனர்.
சிறிய தொகுதியாக இருந்தாலும் விசேஷித்த சூழ்நிலைமைகளின் காரணமாக மற்றொரு தொகுதியை ஏற்படுத்துவது தேவையாக இருக்கலாம். ஒதுக்குப் புறமாக இருப்பதாலோ தற்போதைய இடத்திற்கு அதிகமானோர் வருவதாலோ போதுமான இருக்கை வசதி இல்லாததாலோ அப்படி செய்ய வேண்டியிருக்கலாம். தேவைப்பட்டால், வயதானவர்கள், இரவு ஷிப்டு வேலைக்குச் செல்கிறவர்கள், சத்தியத்தில் இல்லாத கணவரை உடைய சகோதரிகள் போன்றவர்களுக்காக பகல் நேரத்தில் நடக்கும் ஒரு தொகுதியை ஏற்பாடு செய்யலாம்.
ஒவ்வொரு புத்தகப் படிப்பு தொகுதியிலும் ஆவிக்குரிய விதத்தில் பலமான, சுறுசுறுப்பான அநேக பிரஸ்தாபிகளும் தகுதியான நடத்துனரும் வாசிப்பவரும் இருக்க வேண்டும். சபையின் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு சகோதரர்கள் முன்னேற வேண்டும்.
சபை புத்தகப் படிப்பு தொகுதிகள் சரியான அளவுடன் இருப்பதையும், ஆவிக்குரிய விதத்தில் நன்கு கவனிக்கப்படுவதையும், சௌகரியமான இடங்களில் நடத்தப்படுவதையும் உறுதி செய்வதன்மூலம் சபையின் முன்னேற்றத்திற்கு மூப்பர்கள் உதவலாம். நடைமுறையாக இருக்கும்பட்சத்தில், இந்த விசேஷித்த ஆவிக்குரிய ஏற்பாட்டிலிருந்து முழு பலனைப் பெறுவதற்கு வசதியாக புதிய தொகுதிகளை ஏற்படுத்த வேண்டும். உங்கள் வீட்டை புத்தகப் படிப்பு நடத்துவதற்கு தந்துதவ முடியுமா? இவ்வாறு உதவியவர்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவித்திருக்கின்றனர்.