நன்மை செய்வீர், பாராட்டு பெறுவீர்!
1 “எந்த மக்கள் மத்தியிலும் நான் கண்டிராத ஒருவகை அமைதி அவர்களிடையே நிலவுகிறது.” “இவர்கள் இங்கு வந்து தங்கியது சந்தோஷம்.” கடந்த வருட மாவட்ட மாநாடுகளுக்குப் பின் நம்மை கவனித்தவர்களிடமிருந்து நாம் பெற்ற அநேக பாராட்டுகளுக்கு இவை ஒருசில உதாரணங்கள். ஒரு அமைப்பாக நமக்கிருக்கும் நல்ல பெயரை இவை சிறப்பித்துக் காட்டுகின்றன. (நீதி. 27:2; 1 கொ. 4:9) இந்த பாராட்டு உண்மையில் யெகோவாவுக்கு போய் சேருகிறது. (மத். 5:16) இந்த வருட “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” மாவட்ட மாநாட்டில், யெகோவாவுக்கு துதிசேர்க்க மீண்டும் ஒரு சிறந்த வாய்ப்பு நமக்கு இருக்கிறது.
2 மாநாட்டில் தகுந்த நடத்தை பற்றி ஒவ்வொரு வருடமும் தயவாக நினைப்பூட்டப்படுகிறோம். ஏன்? உலகத்தாரின் மனப்பான்மையும், உடையும், நடத்தையும் சீரழிந்து கொண்டே வருவதால், அவர்கள் நடத்தையை பின்பற்ற நாம் இடமளிப்பதில்லை. நம்முடைய நல்ல பெயரை கெடுத்துக்கொள்ள நாம் விரும்பவில்லை. (எபே. 2:2; 4:17) பின்வரும் எச்சரிக்கைகளை நாம் மனதில் வைப்போமாக.
3 நன்மை செய்வீர்—ஹோட்டல்களில்: நாம் நேர்மையுள்ளவர்களென அறியப்பட்டிருக்கிறோம். (எபி. 13:18) எனவே, ஹோட்டல் அறையில் நம்முடன் எத்தனை பேர் தங்குகிறார்கள் என்பதை சொல்வதில் உண்மையாக இருக்க வேண்டும். அறையில் சமைக்க அனுமதி இல்லை என்றால் சமைக்கக் கூடாது. யெகோவாவின் சாட்சிகள் தங்கிவிட்டு போன பிறகு காணமற்போன டவல்களை மீண்டும் வாங்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை; அதனால் அவர்களுக்கு அறை வாடகையை குறைப்பதாக ஒரு மானேஜர் சொன்னார். ஹோட்டல் சொத்து பத்திரமாக இருக்கும் என்று தனக்குத் தெரியும் என்றார் அவர். ஹோட்டலிலிருந்து “ஞாபக சின்னமாக” எதையாவது நிச்சயமாகவே எடுத்துச் செல்ல மாட்டோம். மாறாக, அங்கு பெற்ற சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் டிப்ஸ் கொடுக்கும் பழக்கம் உள்ள இடங்களில் பொருத்தமான டிப்ஸ் கொடுங்கள். ஹோட்டல் ஊழியர்களிடம் எப்போதும் தயவாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ளுங்கள்.
4 பிள்ளைகளின் பண்பட்ட, கீழ்ப்படிதலுள்ள நடத்தை, காண்பவர்களை கவருகிறது. (எபே. 6:1, 2) பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்; நீச்சல் குளத்தையோ மற்ற பொழுதுபோக்கு வசதிகளையோ பிள்ளைகள் பயன்படுத்தும் சமயங்களிலும் இதை கவனியுங்கள். கதவுகளை தடாலென மூடுவதையோ முக்கியமாக பிந்திய இரவு நேரங்களில் கூச்சல் கும்மாளம் போடுவதையோ அனைவரும் தவிர்க்க வேண்டும்.
5 அதே ஹோட்டலில் தங்கும் சாட்சிகளல்லாத மற்றவர்களைக் குறித்து கரிசனை உள்ளவர்களாய் நடப்பதன்மூலம் நன்மையானதை செய்யலாம். மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள், ஐஸ் மெஷின்களிலுள்ள எல்லா ஐஸையும் தங்கள் கூலர்களில் நிரப்பிக் கொண்டதாக சில ஹோட்டல்கள் புகார் செய்கின்றன. இதேபோல், இலவச உணவு ஏற்பாட்டில் கிடைக்கும் உணவை பின்னர் சாப்பிட எடுத்து வைப்பதும், காப்பியை நிரப்பி வைத்துக்கொள்வதும் சரியல்ல. ஹோட்டல் நியதிகளுக்கு நாம் விதிவிலக்கானவர்கள் என்று ஒருபோதும் நினைத்துவிடக் கூடாது.
6 நன்மை செய்வீர்—மாநாடு நடக்குமிடத்தில்: மாநாட்டுக்கு வந்திருக்கும் சிலர் அங்குள்ள அட்டன்டண்டுகளோடு ஒத்துழைக்க மறுப்பதும், சிலர் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாத விதத்தில் பேசுவதும்கூட கவனிக்கப்பட்டிருக்கிறது. சகோதரர்களின் அறிவுரையை கேட்காமல், சட்டப்படி அனுமதியில்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தியதால், மாநாட்டுக்கு வந்திருந்த சிலருடைய கார்கள் போலீஸாரால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. நிச்சயமாகவே, நான்-முதல் என்ற மனப்பான்மை நல்லது செய்பவராக ஒருவரை அடையாளம் காட்டுவதில்லை; யெகோவா தேவனுக்கு துதியைக் கொண்டுவருவதுமில்லை. ஆகவே, நாம் அன்பும், பொறுமையும், ஒத்துழைப்பும் காண்பிக்கிறவர்களாய் இருப்போமாக.—கலா. 5:22, 23, 25.
7 மாநாட்டு மன்றம் காலை 8 மணிக்கு திறக்கப்படுகையில், “நல்ல” இடம் பிடிப்பதற்காக சில சகோதர சகோதரிகள் முண்டியடித்து ஓடுவதையும், இடித்து நெருக்கி தள்ளுவதையும் காண முடிகிறது. இந்த விதமான நடத்தையின் காரணமாக, சிலர் காயமடைந்திருக்கின்றனர். மதியம் உண்பதற்காக எளிய உணவை கொண்டு வரும்படி ஆலோசனை கொடுக்கப்பட்டிருந்தாலும், அதிக உணவை கொண்டுவந்து விருந்துபோல் சாப்பிடுவது சரியல்ல. அவ்வாறு செய்வது, உல்லாசமாக சென்றுவரும்போது, அல்லது அதைப்போன்ற கூட்டுறவுகளின்போது பொதுவாக காணப்படும் பிக்னிக் அல்லது பார்ட்டிகளை போல் தோன்றும்.
8 நன்மை செய்வீர்—உடை, சிகை அலங்காரத்தின் மூலம்: கடந்த வருட மாவட்ட மாநாடு ஒன்றுக்கு பிறகு, ஒரு மாநகர செய்தித்தாள் பதிப்பாசிரியர் இவ்வாறு எழுதினார்: “எல்லாவற்றிற்கும் மேலாக, சாட்சிகளின் நடையுடை பாங்குதானே மிகவும் கவனத்தை கவருவதாய் இருந்தது. அவ்வளவு கண்ணியமாய் உடுத்தி, நேர்த்தியாக காட்சியளித்த திரளான மக்களை பார்ப்பது எவ்வளவு புத்துணர்ச்சி அளிப்பதாய் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று, பல்வேறு இன, கலாச்சார பின்னணிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் மிகச் சிறந்த ஆடைகளில் அமைதியாக அரங்கத்தினுள் அணி திரண்டு வந்தன. இவர்களது நடத்தை, அரங்கத்தினுள் திரண்டு வரும் பல்வேறு கூட்டத்தாரிலிருந்து முற்றிலும் வித்தியாசமாய் இருந்தது. உண்மையில், சாட்சிகள் பொதுவாகவே பெரும்பாலான கும்பல்களிலிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். பொதுவிடங்களில் நாகரிகமற்ற நடத்தை இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. . . . உண்மையிலேயே, சாட்சிகளின் கூட்டம் புத்துணர்ச்சி அளிக்கிறது.” நம் உடை, சிகை அலங்காரமோ நம் நடத்தையோ மாநாட்டின் ஆவிக்குரிய சூழலிலிருந்து எந்த விதத்திலும் கவனத்தை திசை திருப்ப ஒருபோதும் அனுமதிக்காதிருப்போமாக.—பிலி. 1:10, NW; 1 தீ. 2:9, 10.
9 நன்மை செய்வீர்—முழுக்காட்டப்படுகையில்: முழுக்காட்டுதல் பெறுகிறவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த மதிப்பு காட்ட வேண்டும். அடக்கமான குளியல் ஆடைகளை அணிந்து கொள்வது பரிசுத்தமான அந்த நிகழ்ச்சிக்கு மதிப்பு காண்பிப்பதாக இருக்கும். மாநாட்டுக்கு முன்பு பைபிள் படிப்பு நடத்துகிறவர்கள் தங்கள் மாணவர்களிடம் காவற்கோபுரம், 1995, ஏப்ரல் 1-ம் தேதியிட்ட பிரதியிலுள்ள “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியை மறுபார்வை செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
10 நம்முடைய பண்பான, தேவ பக்தியுள்ள நடத்தை நம் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு சான்றளித்து, நேர்மை இருதயமுள்ளவர்கள் சத்தியத்தை சுலபமாக கண்டுபிடிக்க உதவுகிறது. ஆகவே “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” மாவட்ட மாநாட்டுக்கு போகும்போது, ‘தொடர்ந்து நன்மை செய்து’ பாராட்டை பெறுவோமாக.—ரோ. 13:3, NW.