கிறிஸ்தவ கூட்டுறவு எவ்வளவு முக்கியம்?
1 “எந்தத் தனிமரமும் காடு ஆகாது.” இது போன்ற கூற்றை 17-ம் நூற்றாண்டு கவிஞர் ஒருவர் கூறினார். மனிதனின் அடிப்படை தேவையைப் பற்றி பைபிள் குறிப்பிடுவதையே அக்கூற்று எதிரொலிக்கிறது; அதுவே கூட்டுறவு. (நீதி. 18:1) நம் கிறிஸ்தவ நட்புறவு இத்தேவையை பூர்த்தி செய்கிறது. என்னென்ன பயனுள்ள வழிகளில்?
2 ஊழியத்தில்: வெளி ஊழியத்தில் நம் சகோதரர்கள் நமக்கு பக்கபலமாய் இருந்து உதவுவது நமக்கு முக்கியமாய் பயன்தரும் வழிகளில் ஒன்றாகும். பிரசங்கிக்கும்படி இயேசு தம் சீஷர்களை “இரண்டு இரண்டுபேராக” அனுப்பினார். (மாற். 6:7, 11; லூக். 10:1) இந்த மாதிரியைப் பின்பற்றி, வெளி ஊழியத்தில் மற்றவர்களுடன் நாம் வேலை செய்கையில், பிரசங்கி 4:9, 10-ல் சொல்லப்பட்டவை எவ்வளவு உண்மை என்பதை புரிந்துகொள்கிறோம். சேர்ந்து ஊழியம் செய்துவருகையில், நம்மோடு ஊழியத்தில் ஈடுபடுகிற நண்பர்களது விசுவாசமும், கீழ்ப்படிதலும், அன்பும் இரண்டற கலந்து, தைரியத்தை தந்து, நம் ஆர்வக் கனலை மூட்டிவிடுகின்றன.
3 தனிப்பட்ட உதவி: பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் சோதனைகளை எதிர்ப்பதற்கும் தேவையான ஊக்கமூட்டுதலையும் வழிநடத்துதலையும் தரும் ஊற்றுமூலமாயும் நம் சகோதரத்துவம் உள்ளது. நம் கிறிஸ்தவ கூட்டாளிகள் நமக்கிருக்கும் தனிப்பட்ட கவலைகளை தீர்க்க உதவும் வேத வசனங்களிடம் நம் கவனத்தை திருப்பலாம். நாம் அவர்களுக்காக ஜெபிப்பதைப் போலவே அவர்களும் நம் சார்பாக ஜெபிக்கலாம். (2 கொ. 1:11) அவர்களது நல்ல முன்மாதிரி, சரியானவற்றை செய்ய நம்மை உந்துவிக்கிறது; நம்மை பலப்படுத்துகிறது.
4 கூட்டங்களில்: நாம் சபைக் கூட்டங்களுக்கு தவறாமல் சென்றுவருகையில் கிறிஸ்தவ கூட்டுறவின் ஆசீர்வாதத்தை அனுபவிக்கிறோம். (எபி. 10:24, 25) கூட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆவிக்குரிய போதனை நிறைந்தவை; அதுமட்டுமின்றி கூட்டங்களில் நாம் ஆஜராகியிருப்பது நம் உடன் விசுவாசிகளுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துகிறது. நம் சகோதரர்களும் சகோதரிகளும் தங்கள் விசுவாசத்தை மேடையில் இருந்தோ அல்லது தங்கள் இருக்கையில் அமர்ந்தவாறோ வெளிப்படுத்துவதை கேட்பதற்கு கூட்டங்கள் வாய்ப்பளிக்கின்றன. (ரோ. 1:12, NW) கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் ஒருவருக்கொருவர் நலம் விசாரிப்பது நம் கூட்டுறவின் பந்தத்தை பலப்படுத்துகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும் நம் சொந்த அனுபவங்களைச் சொல்வதற்கு வாய்ப்புகளை அளிக்கின்றன. யெகோவாவையும் அவருடைய வார்த்தையையும் அவருடைய வேலையையும் அவருடைய ஜனங்களையும் நேசிப்போரிடம் சகஜமாக நட்புறவு கொள்கையில், நம்முடைய குணங்களிலும் பலன்தரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.—பிலி. 2:1, 2.
5 நமக்கு கிறிஸ்தவ கூட்டாளிகள் தேவை. அவர்களின்றி, ஜீவனுக்கு வழிநடத்தும் இடுக்கமும் நெருக்கமுமான பாதையில் நடப்பது மிகவும் கஷ்டம். அவர்களது அன்பிலும் உற்சாகத்திலுமே யெகோவாவின் நீதியுள்ள புதிய உலகை நோக்கி நாம் தொடர்ந்து பயணிக்க முடியும்.—மத். 7:14.