பைபிள் படிப்பை ஆரம்பிக்க புதிய கருவி!
1 ராஜேந்திரன் ஒரு சிறிய கோவிலில் பூசாரி. இந்து சடங்குகளின்படி தவறாமல் பூஜை நடத்திவந்தார். அவர் வசித்துவந்த குடியிருப்பு பகுதியில் இருந்த வீடுகளுக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்காக ஓர் இளம் சகோதரர் வாரா வாரம் வருவதை கவனித்தார். அவ்வாறு தவறாமல் சந்தித்து வந்தது அவருடைய ஆவலைத் தூண்டியது. பின்னர் அந்த ஏரியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் சகோதரர்கள் ராஜேந்திரனை சந்தித்தனர். அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி அவரிடம் கூறினர். பைபிளை கற்றுக்கொள்ள அவருக்கு ஆர்வமிருந்ததால் அவர் மகிழ்ச்சியுடன் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்த அனுபவம் நமக்கு எதைக் கற்பிக்கிறது? இலவசமாக பைபிள் படிக்க யாரெல்லாம் சம்மதிப்பார்கள் என்று நமக்குத் தெரியாது என்பதையே.—பிர. 11:6.
2 ஆர்வம் காட்டும் எவருடனும் பைபிள் படிக்க நாம் தயாராயிருப்பதை மக்களிடம் சொல்ல எப்பொழுதாவது நீங்கள் தயங்கினதுண்டா? உங்கள் ஏரியாவிலுள்ள அனைவருக்கும் நாம் செய்யும் இந்த இலவச சேவை பற்றி தெரியுமா? அவர்களுக்குத் தெரியும் என்று எப்படி நாம் நிச்சயப்படுத்திக்கொள்வது? ஒரு புதிய கருவியை பயன்படுத்தி! பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற தலைப்பில் உள்ள அழகிய ஆறு பக்க துண்டுப்பிரதியே அது. இந்த துண்டுப்பிரதியில் என்னதான் உள்ளது என்பதை, உபதலைப்பு வாரியாக தெரிந்துகொள்வோம்.
3 “ஏன் பைபிள் வாசிக்க வேண்டும்?” இந்தத் துண்டுப்பிரதி அளிக்கும் காரணங்கள் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. பைபிளில், “கடவுளுடைய அன்பான போதனைகள்” அடங்கியுள்ளதை இது விளக்குகிறது; உதவி கேட்டு அவரை ஜெபத்தில் எவ்வாறு அணுகுவது, அவர் தரும் நித்திய ஜீவ பரிசை எவ்வாறு பெறுவது என்பதை காட்டுகிறது. (1 தெ. 2:13) நாம் இறந்த பின்பு என்ன நடக்கிறது, ஏன் பூமியில் இத்தனை தொல்லைகள் போன்ற பைபிளிலுள்ள “அறிவொளியூட்டும் சத்தியங்கள்” பலவற்றை இத்துண்டுப்பிரதி குறிப்பிட்டுக்காட்டுகிறது. ‘பைபிளில் கடவுள் தந்துள்ள நியமங்களை’ பொருத்துகையில் சரீர நன்மைகளைப் பெற முடியும் என்றும், சந்தோஷம், நம்பிக்கை, இன்னும் இதுபோன்ற இனிய பண்புகளை வளர்க்க முடியும் என்றும் இது விளக்குகிறது. பைபிளை வாசிப்பதற்கு தூண்டும் இன்னொரு விஷயத்தையும் இந்த துண்டுப்பிரதி குறிப்பிட்டுக் காட்டுகிறது; அதுவே, கூடிய விரைவில் என்ன நிகழவிருக்கிறது என்பதைக் காட்டும் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்.—வெளி. 21:3, 4.
4 “பைபிளை புரிந்துகொள்ள உதவி”: இத்துண்டுப்பிரதி கூறுகிறது: “கடவுளுடைய வார்த்தையை புரிந்துகொள்ள நம் அனைவருக்கும் உதவி தேவை.” பிறகு, பைபிளை நாம் படிக்கும் முறையை இது விளக்குகிறது: “பொதுவாக, பைபிளின் அடிப்படை போதனைகளில் ஆரம்பித்து படிப்படியாக படிப்பதே சிறந்த வழி.” “பைபிளே அதிகாரப்பூர்வமான தகவல்களின் ஊற்றுமூலம்” என்று இந்த துண்டுப்பிரதி தெளிவாக கூறுகிறது; அதேசமயம், “பல்வகை விஷயங்களைப் பற்றி பைபிள் சொல்வதைப் புரிந்துகொள்ள” தேவைப்படுத்துகிறார் சிற்றேடு மாணாக்கருக்கு உதவும் என குறிப்பாக சொல்கிறது. அடுத்த உபதலைப்பு தூண்டுதலளிக்கும் கேள்வி ஒன்றை எழுப்புகிறது.
5 “பைபிளை புரிந்துகொள்ள ஒவ்வொரு வாரமும் நேரத்தை ஒதுக்க விருப்பமா?” மாணாக்கருக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும், அவருடைய வீட்டில் தனிமையிலோ, தொலைபேசியிலோகூட பைபிள் படிப்பு ஏற்பாடு செய்யப்படலாம் என்றும் இந்தத் துண்டுப்பிரதி விளக்குகிறது. இந்த சம்பாஷணையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்? இந்த துண்டுப்பிரதி பதில் தருகிறது: “உங்கள் முழு குடும்பமும் கலந்து கொள்ளலாம். உங்களுடைய நண்பர்களை அழைக்க விரும்பினால் அவர்களும் கலந்து கொள்ளலாம். அல்லது உங்களுக்கு விருப்பமென்றால், உங்களுக்கு மட்டும்கூட தனியாக நடத்தப்படும்.” ஒருவர் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்? இது விவரிக்கிறது: “பைபிளை கற்றுக்கொள்வதற்கு வாரத்தில் ஒரு மணிநேரத்தை அநேகர் ஒதுக்குகிறார்கள். ஒவ்வொரு வாரமும் அதிக நேரமோ குறைந்த நேரமோ ஒதுக்க முடிந்தால் யெகோவாவின் சாட்சிகள் அந்த நேரத்திற்கு வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள்.” அதுவே முக்கியமான குறிப்பு! ஒவ்வொரு மாணாக்கரின் சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்துகொடுக்க நாம் மனமுள்ளவர்களாக இருக்கிறோம்.
6 “பைபிளை கற்றுக்கொள்ள அழைப்பு”: கூப்பன் ஒன்று தரப்பட்டுள்ளது; அதில் இத்துண்டுப்பிரதியைப் பெற்றவர் தேவைப்படுத்துகிறார் சிற்றேடு சம்பந்தமாக கூடுதலான தகவலையோ நாம் நடத்தும் இலவச வீட்டு பைபிள் படிப்பு திட்டத்தைப் பற்றி விளக்கமளிக்க தன்னை சந்திக்கவோ கேட்டு எழுதலாம். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டின் அட்டை பல வண்ணங்களில் காட்டப்பட்டுள்ளது. நாம் அளிக்கும் உதவியைப் பெற இன்னுமநேக நேர்மை இருதயமுள்ளோரை இத்துண்டுப்பிரதி உந்துவிக்கும் என்று உங்களால் காண முடிகிறதல்லவா? இப்பொழுது, இப்புதிய கருவியை மிகச் சிறந்த வகையில் நாம் எவ்வாறு உபயோகிப்பது?
7 இத்துண்டுப்பிரதியை யாருக்கு அளிக்கலாம்? மக்களிடம் நேரில் சென்று கொடுக்கலாம்; வீட்டில் யாரும் இல்லாதபோது போட்டுவிட்டு வரலாம். வீடு வீடாக, தெருவில், வியாபார பிராந்தியங்களில் இதை விநியோகிக்கலாம். மக்கள் நம் பிரசுரங்களை வாங்கினாலும் சரி மறுத்தாலும் சரி, இதை அவர்களுக்குக் கொடுங்கள். பத்திரிகைகளையோ மற்ற பிரசுரங்களையோ அளிக்கையில் அவற்றுடன் இதையும் சேர்த்து கொடுங்கள். கடிதங்கள் எழுதுகையில் இதையும் சேர்த்து அனுப்பலாம். தொலைபேசியில் நீங்கள் பேசுபவர்களிடம், இதை தபாலில் அனுப்புவதாக தெரிவிக்கலாம். கடைக்குச் செல்கையில், பொது வாகனங்களில் பயணிக்கையில், சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில் அளிப்பதற்காக உங்களிடம் நிறைய பிரதிகளை எப்பொழுதும் வைத்திருங்கள். உங்கள் வீட்டுக்கு வரும் எவரிடமாவது கொடுங்கள். உங்கள் உறவினர்கள், அக்கம் பக்கத்தார், உங்களோடு வேலை பார்ப்பவர்கள், உங்களோடு பள்ளியில் படிப்பவர்கள், உங்களுக்குத் தெரிந்த மற்றவர்கள் ஆகியோரிடம் அளியுங்கள். நீங்கள் சந்திக்கும் அனைவரின் கைகளிலும் இத்துண்டுப்பிரதி கிடைக்க வழி செய்யுங்கள்! அதற்குப் பிறகு?
8 உடனே சாதகமாக பிரதிபலித்தால்: பைபிள் படிப்பை தங்களுக்கு நடத்த தாங்கள் விரும்புவதாக சொல்லி சிலர் உடனே சாதகமாக பிரதிபலிப்பார்கள். ஆகவே, வெளி ஊழியத்தில் ஈடுபடும்போதெல்லாம், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் இரண்டு பிரதிகள்—ஒன்று மாணாக்கருக்கு, மற்றொன்று உங்களுக்கு—எப்பொழுதும் உங்களிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அந்நபர் விரும்பினால், உடனே படிப்பை ஆரம்பித்துவிடுங்கள். அட்டையின் உட்புறத்திற்குத் திருப்புங்கள்; “இந்தச் சிற்றேட்டை எப்படி பயன்படுத்துவது” என்பதை வாசியுங்கள். பின்பு நேரடியாக முதல் பாடத்திற்கு செல்லுங்கள்; படிப்பை நடத்திக் காட்டுங்கள். இந்த அணுகுமுறை மிக எளிதாக இருக்கிறதல்லவா?
9 கேட்பவர் யோசித்து சொல்ல நேரம் தேவைப்பட்டால்: விரைவிலேயே அவரை மீண்டும் சந்திக்க முயலுங்கள். அவ்வாறு நீங்கள் செல்கையில், மறக்காமல் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை உங்களிடம் வைத்திருங்கள். ஆரம்ப பக்கத்தில் உள்ள பொருளடக்கத்தை அவருக்கு காட்டுங்கள். அவருக்கு ஆர்வமூட்டுவதாக தோன்றும் பாடத்தை அவர் தெரிவு செய்யட்டும். அந்த தலைப்புக்குத் திருப்பி, அவர் தெரிந்தெடுத்த பாடத்தை கலந்தாலோசிக்க தொடங்குங்கள்.
10 பத்திரிகையை பெற்றுக்கொண்டவர்களை மீண்டும் சந்தித்தல்: பத்திரிகைகளோடு சேர்த்து துண்டுப்பிரதியை கொடுத்திருந்தால், அடுத்த சந்திப்பில் பின்வருமாறு நீங்கள் சொல்லலாம்: “போனமுறை உங்களிடம் பேசிவிட்டு, ஒரு காவற்கோபுர பத்திரிகையையும் கொடுத்துவிட்டுச் சென்றேன். அந்த பத்திரிகையின் முழு தலைப்பு, காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்பதை ஒருவேளை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இந்த ராஜ்யம் என்ன என்றும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அது எதைக் குறிக்கும் என்பதையும் இன்று விளக்க விரும்புகிறேன்.” பின்பு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை 6-ம் பாடத்திற்குத் திருப்புங்கள். முதல் பாராவில் தொடங்கி, வீட்டுக்காரருக்கு நேரம் அனுமதிக்கும் வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாராக்களை வாசித்து கலந்தாலோசியுங்கள். பின்பு, வேறொரு நாளில் திரும்பிச் சென்று அந்தப் பாடத்தை முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
11 துண்டுப்பிரதிகள் தீர்ந்துவிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்: ஊழிய கண்காணியும் பிரசுரங்களை கையாளும் சகோதரர்களும், பைபிளை தெரிந்துகொள்ளுங்கள் துண்டுப்பிரதியை தங்கள் சபையில் எப்பொழுதும் ஏராளமாய் கைவசம் வைத்திருப்பது அவசியம். உங்கள் பாக்கெட்டிலோ, பர்ஸிலோ, உங்கள் காரிலோ, நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ, பள்ளியிலோ, உங்கள் வீட்டு வாசலண்டையிலோ—எளிதில் எடுக்கத்தக்கதாக எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கொஞ்சம் பிரதியை தயாராக வைத்திருங்கள். நீங்கள் பைபிளைப் பற்றி யாருடனாவது உரையாட செல்லும் சந்தர்ப்பங்களில் அளிப்பதற்காக உங்கள் வெளி ஊழியப் பையிலும் கொஞ்சம் வைத்துக்கொள்ளுங்கள்.
12 யெகோவா நம் முயற்சிகளை ஆசீர்வதிப்பாராக: பைபிளை மற்றொருவருக்கு கற்பிப்பது எல்லா கிறிஸ்தவர்களுமே விரும்பும் லட்சியங்களில் ஒன்று. (மத். 28:19, 20) நீங்கள் தற்சமயம் வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை நடத்தி வருகிறீர்களா? நடத்தி வருகிறீர்களென்றால், மற்றொரு பைபிள் படிப்பையும் நடத்த உங்கள் வாராந்தர அட்டவணையில் நேரத்தை ஒதுக்க முடியுமா? நீங்கள் தற்சமயம் பைபிள் படிப்பு ஒன்றை நடத்தவில்லையென்றால், நிச்சயமாக உங்களுக்கு ஒரு பைபிள் படிப்பு வேண்டும் என்று விரும்புவீர்கள். பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளும் எவரையாவது கண்டுபிடிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்க ஜெபியுங்கள். பின்பு அந்த ஜெபங்களுக்கு இசைவாக உழையுங்கள்.—1 யோ. 5:14, 15.
13 படிப்புகளை ஆரம்பிக்க ஒரு புதிய கருவி நமக்கிருக்கிறது! அதை நன்கு படித்து வையுங்கள். அதை தாராளமாய் விநியோகியுங்கள். ‘நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கவும்,’ கடவுளுடைய வார்த்தையைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டவற்றை பகிர்ந்துகொள்வதில் ‘உதார குணமுள்ளவர்களாயிருக்கவும்’ முடிந்தளவு முயலுங்கள்.—1 தீ. 6:18.
[பக்கம் 4-ன் பெட்டி]
துண்டுப்பிரதியை விநியோகிக்கும் சந்தர்ப்பங்கள்
◼ அன்றாடம் உரையாடுகையில்
◼ நம் பிரசுரங்களை எவராவது ஏற்றுக்கொள்கையில்
◼ வீட்டில் யாரும் இல்லாதிருக்கையில்
◼ மறுசந்திப்புகள் செய்கையில்
◼ தெரு ஊழியத்தில் எவரையாவது சந்திக்கையில்
◼ வியாபார பிராந்தியத்தில் சாட்சி கொடுக்கையில்
◼ சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில்
◼ கடிதங்கள் எழுதுகையில்
◼ பொது வாகனங்களில் பயணிக்கையில்
◼ நம் வீட்டிற்கு எவராவது வருகையில்
◼ உறவினர்கள், அக்கம் பக்கத்தார், உடன் வேலை பார்ப்பவர்கள், பள்ளியில் படிப்பவர்கள், தெரிந்த மற்றவர்கள் ஆகியோருடன் பேசுகையில்