எல்லாச் சந்தர்ப்பத்திலும் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லத் தயாராய் இருங்கள்
1. மத்தேயு 28:19, 20-ல் காணப்படும் இயேசுவின் கட்டளையை நிறைவேற்றுவதில் என்ன உட்பட்டுள்ளது?
1 ‘சீடர்களாக்கி . . . அவர்களுக்குக் கற்பியுங்கள்’ என்று இயேசு நமக்குக் கட்டளை கொடுத்தார். (மத். 28:19, 20) அப்படியானால், எல்லாச் சந்தர்ப்பத்திலும் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்ல நாம் தயாராய் இருக்க வேண்டும். பின்வரும் ஆலோசனைகள் உதவியாய் இருக்கலாம்.
2. பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி நாம் யாருக்கெல்லாம் சொல்லலாம்?
2 பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்: பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகச் சொல்கிறோமோ அவ்வளவு அதிகமாக பைபிள் படிப்புகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். (பிர. 11:6) நம் செய்தியில் ஆர்வம் காட்டுகிற எல்லாரிடமும் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்களா? ஒரு சபையில் ஒரு மாதம் முழுவதும் பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு மும்முரமாக முயற்சி எடுக்கப்பட்டது. 42 புதிய பைபிள் படிப்புகளை ஆரம்பித்தபோது அந்தச் சபையாருக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்! நீங்கள் சந்திக்கிறபோது ஆர்வம் காட்டுகிற அந்த நபருக்கு பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி ஏற்கெனவே தெரியுமென்று நீங்களாகவே நினைத்துக்கொள்ளாதீர்கள். அடுத்த முறை அவரைச் சந்திக்கும்போது பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி நீங்கள் சொல்லலாம், அல்லவா? அவர் வேண்டாமென்று சொன்னாலும் பரவாயில்லை; அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவருடைய ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் திரும்பத் திரும்ப அவரைச் சந்திக்கலாம். உங்களோடு சேர்ந்து பைபிளைப் படிக்க விருப்பம் இருக்கிறதா என உங்கள் அக்கம்பக்கத்தாரிடமும் உறவினர்களிடமும் சக பணியாளர்களிடமும் சக மாணவர்களிடமும் கேட்டுப்பார்த்திருக்கிறீர்களா? உங்கள் பைபிள் மாணாக்கருடைய நண்பர்களிலோ உறவினர்களிலோ பைபிள் படிப்பில் ஆர்வம் காட்டுகிற யாராவது இருக்கிறார்களா என அவர்களிடம் நீங்கள் கேட்கலாம்.
3. பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு, பயனுள்ள என்ன துண்டுப்பிரதி நம்மிடம் இருக்கிறது, அதை நாம் எப்போது உபயோகிக்கலாம்?
3 பயனுள்ள ஒரு துண்டுப்பிரதி: பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க உதவுகிற ஓர் அருமையான துண்டுப்பிரதி, உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்பதாகும். நற்செய்தியில் உண்மையிலேயே ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு நீங்கள் அதைக் கொடுக்கலாம். மறுசந்திப்பிலும் அதைப் பயன்படுத்தலாம். வெளி ஊழியத்தில் ஈடுபடும்போதும், பொது வாகனங்களில் பயணம் செய்யும்போதும், கடைக்குச் செல்லும்போதும், வேலைக்குச் செல்லும்போதும் இந்தத் துண்டுப்பிரதிகளை எடுத்துச் செல்லலாம், அல்லவா? அதன் கடைசிப் பக்கத்தில், பைபிள் படிப்பு ஏற்பாடு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது; பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
4. உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை எப்படித் துவங்கலாம்?
4 ஆர்வமுள்ள நபரிடம் இந்தத் துண்டுப்பிரதியைக் கொடுத்த பிறகு, முதல் பக்கத்திலுள்ள கேள்விகளைக் காட்டி, அவரிடம் இப்படிக் கேட்கலாம்: “இந்தக் கேள்விகளில் எதற்குப் பதிலைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்?” பிறகு, அந்தத் துண்டுப்பிரதியிலிருந்தே பதிலை இருவருமாய்ச் சிந்தியுங்கள். பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிக் கடைசிப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை வாசியுங்கள் அல்லது சுருக்கமாகச் சொல்லுங்கள். அந்த விஷயத்தைப் பற்றிய கூடுதலான தகவல் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் எங்கே இருக்கிறது என்று காட்டலாம்; பின்னர் அந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுத்து, மறுசந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள், அந்த விஷயத்தைப் பற்றித் தொடர்ந்து பேசுங்கள்.
5. எல்லாச் சந்தர்ப்பத்திலும் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்ல நாம் ஏன் தயாராய் இருக்க வேண்டும்?
5 பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவோர் நமது பிராந்தியத்தில் இன்னும் இருக்கிறார்கள். அதே சமயம், நம் பிராந்தியத்தில் உள்ளவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசி அவர்களுடைய மனதை அநாவசியமாகப் புண்படுத்தாதபடி சாதுரியத்தோடும் பகுத்துணர்வோடும் நடந்துகொள்ள வேண்டும். எல்லாச் சந்தர்ப்பத்திலும் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லத் தயாராய் இருப்பதன் மூலம், வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையில் நடக்க மற்றவர்களுக்கு உதவி செய்து, அதனால் வரும் மகிழ்ச்சியை அனுபவிக்க நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.—மத். 7:13, 14.