புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி
1 இந்த உலகின் மீடியாக்களும் அறிஞர்களும் செல்வத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கையில், “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக” இருக்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை தூண்டுகிறது. (1 தீ. 6:18) இதுவே, செப்டம்பர் 2002 முதல் துவங்கும் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சியின் பொருளாகும். இந்த மாநாட்டில் நாம் என்ன உற்சாகத்தைப் பெறுவோம்?
2 ‘கடவுளுடைய கண்ணோட்டத்தில் ஐசுவரியவான்களாக இருப்பதன்’ அர்த்தத்தைப் பற்றி வட்டார கண்காணி விளக்குவார்; ஆவிக்குரிய ஐசுவரியங்களைப் பெற கடினமாக உழைக்கும் சிலரை அவர் பேட்டி காண்பார். அன்றைய தினம் விசேஷ பேச்சாளர் கொடுக்கும் முதல் பேச்சில், கடவுளுடைய மக்கள் எவ்வாறு “இந்த அறுவடை காலத்தில் நற்கிரியைகள்” செய்கிறார்கள் என்பதை விளக்குவார். கடவுளுடைய கட்டளைக்கு இசைவாக இன்று நடைபெற்று வரும் அறுவடை வேலையில் எவ்வாறு இன்னும் முழுமையாக பங்கு பெறலாம் என்பதை சிந்தித்துப் பார்க்கும்படி நாம் ஒவ்வொருவரும் உற்சாகப்படுத்தப்படுவோம்.
3 கிறிஸ்தவ இளைஞர் ஆவிக்குரிய ஐசுவரியங்களைத் தேடுவதை காண்பது நமக்கு எவ்வளவாய் மகிழ்ச்சியளிக்கிறது! இது யெகோவாவை மகிமைப்படுத்துகிறது, மேலும் இளைஞர் எதிர்காலத்தில் ஊழிய சிலாக்கியங்களைப் பெற நல்ல அஸ்திவாரமாகவும் அமைகிறது. “யெகோவாவை துதிப்பதில் நற்கிரியைகள் செய்வதற்காக இளைஞரை பாராட்டுதல்” என்ற பகுதி, உள்ளூரிலுள்ள கிறிஸ்தவ இளைஞர் செய்துவரும் நற்கிரியைகளை சிறப்பித்துக் காண்பிக்கும்.
4 நற்கிரியைகளை நாடித்தேடுகையில் என்ன நன்மைகள் கிடைக்கும்? “தொடர்ந்து நற்கிரியைகள் செய்து யெகோவாவின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்” என்ற தனது கடைசிப் பேச்சில் விசேஷ பேச்சாளர் இதை விவரிப்பார். (1) தனிப்பட்டவர்களாக, (2) குடும்பங்களாக, (3) சபையாக, (4) ஓர் உலகளாவிய அமைப்பாக நாம் அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெறும் நான்கு வழிகளை அவர் கலந்தாலோசிப்பார்.
5 யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்போர் முழுக்காட்டுதல் எடுக்கும் வாய்ப்பை பெறுவர். இந்தப் படியை எடுக்க நீங்கள் தயாரா? அப்படியானால் நடத்தும் கண்காணிக்கு உடனே தெரியப்படுத்துங்கள்.
6 உங்கள் பகுதியில் நடக்கவிருக்கும் மாநாட்டின் தேதி அறிவிக்கப்பட்டதும் அதற்கு செல்ல சீக்கிரமாக திட்டவட்டமான ஏற்பாடுகளை செய்யுங்கள். ஆரம்ப பாடலிலும் ஜெபத்திலும் பங்குகொள்ள முன்னதாகவே அங்கிருப்பதற்கு முயலுங்கள். விசேஷ மாநாட்டு தினத்தின் எல்லா நிகழ்ச்சிக்கும் ஆஜராகியிருந்து கூர்ந்து கவனம் செலுத்துங்கள், இது நம் கடவுளாகிய யெகோவா தேவனுடைய கண்ணோட்டதில் உண்மையில் ஐசுவரியவான்களாக்கும் போக்கை பின்தொடர நம்மை பலப்படுத்தும்.