உறுதியாக வேரூன்றியிருப்பவற்றை அகற்றுகிறோம்
1 பல நூற்றாண்டுகளாக, அநேகருடைய மனங்களிலும் இருதயங்களிலும் பொய் போதனைகளையும் சூழ்ச்சிகளையும் சாத்தான் உறுதியாக வேரூன்ற வைத்திருக்கிறான். திரித்துவம், அழியாத ஆத்துமா, எரி நரகம் போன்ற கோட்பாடுகளை அவன் பரப்பியிருக்கிறான். படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா, கடவுள்தான் பைபிளின் நூலாசிரியரா என்ற சந்தேகங்களைக் கிளப்பி இருக்கிறான். இனவெறியும், தேசப்பற்றும்கூட சத்தியத்தின் ஒளி பிரகாசியாதபடி மக்கள் மனதைக் குருடாக்குகிறது. (2 கொ. 4:4) இதுபோல் உறுதியாக வேரூன்றியிருக்கும் நம்பிக்கைகளை நாம் எப்படி அகற்றலாம்?—2 கொ. 10:4, 5; NW.
2 உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுங்கள்: உண்மையென பல காலமாக கற்பிக்கப்பட்டிருக்கும் மத நம்பிக்கைகளோடு மக்கள் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமாக ஒன்றிவிடுகிறார்கள். சிறு வயதிலிருந்தே தவறான மத நம்பிக்கைகளில் சிலர் ஊறிப்போய் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவுகையில், அவர்களுடைய கருத்துகளை மதிக்கும் விதத்தில் அவர்களிடம் நாம் பேச வேண்டும்.—1 பே. 3:15.
3 அவர்களுடைய நம்பிக்கை என்ன, ஏன் அப்படி நம்புகிறார்கள் என்பதை எல்லாம் சொல்வதற்கு இடமளிப்பதன்மூலம் நாம் அவர்களைக் கண்ணியமாக நடத்தலாம். (யாக். 1:19) தங்கள் அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்திருப்பதாலும் அவர்களை மீண்டும் பார்க்க விரும்புவதாலும் சிலர் ஆத்துமா அழிவதில்லை என்று உறுதியாக நம்பலாம். குடும்பத்துடன் சேர்ந்து சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கலாம் என்பதற்காக சிலர் பண்டிகைகளைக் கொண்டாடலாம். அவர்கள் சொல்லும் விஷயங்களைக் கேட்பது, அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, புண்படுத்தாமல் திறம்பட்ட விதத்தில் பதிலளிக்க நமக்கு உதவுகிறது. சில சந்தர்ப்பங்களில், அந்த விஷயத்தைக் குறித்து வேறொரு சமயம் கலந்துபேச தீர்மானிக்கலாம்.—நீதி. 16:23.
4 இயேசுவைப் பின்பற்றுங்கள்: வேதத்தில் தேறின ஒருவன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விதத்தில் இயேசு நமக்கு சிறந்த முன்மாதிரியாய் விளங்குகிறார். அவனுடைய கேள்விகளுக்கு இயேசு நேரடியான பதில்களை அளிக்கவில்லை. தன் மத நம்பிக்கைகளை அவன் நெஞ்சார நேசித்ததால் அந்தப் பதில்களை ஒருவேளை அவன் ஏற்றிருக்க மாட்டான். இயேசு என்ன செய்தார்? வேதவசனங்களிடம் அவனுடைய கவனத்தைத் திருப்பி, கருத்துகளை சொல்ல அவனுக்கு வாய்ப்பளித்து, ஓர் உதாரணத்தையும் சொல்லி அவனே சரியான முடிவெடுக்க உதவினார்.—லூக். 10:25–37.
5 கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியம், மக்கள் மனதில் உறுதியாக வேரூன்றியிருக்கும் பொய் மத நம்பிக்கைகளுக்கு எவ்விதத்திலும் ஈடாகாது. (எபி. 4:12) பொறுமையாகவும் சாதுரியமாகவும் சத்தியத்தைக் கற்பிக்கும்போது, பொய்களைக் களைந்து தங்களை விடுதலையாக்கும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மக்களுக்கு நாம் உதவலாம்.—யோவா. 8:32.