ஊழியத்தில் சகிப்புத்தன்மை தேவை
1 எந்தவொரு நல்ல காரியத்திற்காகவும் முயற்சி எடுக்கும்போது பல கஷ்டங்கள் வரத்தான் செய்யும். அப்போஸ்தலன் பவுலுக்கும்கூட அவரது ஊழியத்தில் பல கஷ்டங்கள் வந்தன. (2 கொ. 11:23–29 ) என்றாலும், அவர் 30 வருடங்களுக்கு மேலாக மகிழ்ச்சியோடு முழுநேர ஊழியம் செய்துவந்தார்; சோர்ந்துபோய் ஊழியத்தை நிறுத்திவிடவில்லை. (2 கொ. 4:1 ) ஊழியம்செய்யும்போது வரும் சோதனைகளைத் தாங்கிக்கொள்வதற்குத் தேவையான பலத்தை யெகோவா தருவார் என்பதை அவர் புரிந்திருந்தார். (பிலி. 4:13, NW ) பவுல் இவ்வாறு உண்மையோடு சகித்திருந்து நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்ததால்தான், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்று அவரால் சொல்ல முடிந்தது.—1 கொ. 11:1.
2 ஊழியத்தில் சகிப்புத்தன்மை: நம் சகோதரர்களில் பெரும்பாலோர் பல்வேறு சோதனைகளை அன்றாடம் எதிர்ப்படுகிறார்கள். குடும்ப அங்கத்தினர்கள், சக பணியாளர்கள், சக மாணவர்கள் ஆகியோரின் கேலி கிண்டல்களுக்கோ எதிர்ப்புகளுக்கோ ஆளாகிறார்கள், அல்லது அவர்களால் அலட்சியம் செய்யப்படுகிறார்கள். (மத். 10:35; யோவா. 15:20 ) ஒருவேளை நீங்களும் அதே பிரச்சினைகளை எதிர்ப்படலாம். இல்லையென்றால், உடல்நலப் பிரச்சினைகளோடு போராடலாம்; அல்லது உங்கள் விசுவாசத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் சோதனையாக வருகிற கவனச்சிதறல்களையும் சபலங்களையும் எதிர்த்து அன்றாடம் நீங்கள் போராடலாம். பூர்வகாலத்தில் வாழ்ந்த உண்மை ஊழியர்கள் பலரும், இக்காலத்தில் வாழ்ந்துவரும் சக கிறிஸ்தவர்கள் பலரும் கஷ்டங்களை எதிர்ப்பட்டிருப்பதோடு அவற்றைச் சமாளித்தும் இருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவங்களைச் சிந்தித்துப் பார்ப்பதிலிருந்து நாம் பலம் பெறலாம்.—1 பே. 5:9.
3 நாம் தொடர்ந்து ஊழியம் செய்வதற்குத் தேவையான பலத்தைப் பெற வேண்டுமானால், ‘தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொள்வது’ அவசியம். (எபே. 6:10–13, 15 ) சகிப்புத்தன்மை தருமாறு ஜெபிப்பதும் அவசியம். சோதனைகளைச் சகிப்பதற்குக் கடவுள் தமது சக்தியை நமக்கு அருளுவார். (2 கொ. 6:4–7 ) இந்த ஆன்மீகப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் கடவுளின் நினைப்பூட்டுதல்களுக்கு நாம் செவிசாய்ப்பது அவசியம். (சங். 119:24, 85–88 ) ஒரு பிள்ளை தன் அன்பான அப்பாவிடமிருந்து பெற்ற கடிதத்தைத் திரும்பத் திரும்ப வாசித்துப் பார்ப்பதைப் போலவே, நாம் பைபிளைத் திரும்பத் திரும்ப வாசிப்பது யெகோவாவோடு உள்ள நம் பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள உதவும். தனிப்பட்ட படிப்பைத் தவறாமல் படிப்பதன் மூலம் சோதனைகளைச் சமாளிக்கத் தேவையான ஞானத்தை நாம் பெறுவோம்; அதன் பலனாக, கடவுளுடைய நோக்குநிலையில் தீர்மானங்களைச் செய்வோம், தொடர்ந்து யெகோவாவுக்கு உத்தமமாய் நடந்துகொள்ள பலத்தைப் பெறுவோம்.—நீதி. 2:10, 11.
4 சகிப்புத்தன்மையால் வரும் பலன்கள்: பவுலின் சகிப்புத்தன்மைக்குப் பலன் கிடைத்தது; அவ்வாறே, ஊழியத்தில் நாம் உண்மையோடு சகித்திருந்தால் நமக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்; அதனால் யெகோவாவுடைய இருதயம் சந்தோஷப்படும், அதோடு, நமக்கும் மற்றவர்களுக்கும் அளவில்லா ஆசீர்வாதங்கள் கிடைக்கும். (நீதி. 27:11 ) ஆகவே, ஊழியத்தில் விடாமுயற்சியோடு ஈடுபடத் தீர்மானமாய் இருப்போமாக; இதன் மூலம், நம்முடைய விசுவாசம் பலமானது என்பதையும், ‘அக்கினியால் சோதிக்கப்பட்டும் அழிந்துபோகிற பொன்னைவிட அதிக விலையேறப்பெற்றது’ என்பதையும் நிரூபிப்போமாக.—1 பே. 1:6, 7.