நாம் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்?
1. இயேசு ஊழியத்தை முக்கியமானதாய்க் கருதினார் என்பதை எவ்வாறு வெளிக்காட்டினார்?
1 இயேசு ஊழியத்திற்கு முதலிடம் கொடுத்தார். முடிந்தவரை எல்லாரிடமும் பிரசங்கிப்பதற்காக பாலஸ்தீனா முழுவதும் நூற்றுக்கணக்கான மைல்கள் காலார நடந்தார். அவர் எளிமையாக வாழ்ந்ததால் ஊழியத்தில் அதிக கவனம் செலுத்தவும் நிறைய நேரம் செலவிடவும் முடிந்தது. (மத். 8:20) நோயாளிகளைக் குணப்படுத்துவதற்காக மக்கள் கூட்டம் அவரைப் போக விடாமல் தடுக்கப் பார்த்தபோது, அவர்: “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்றார்.—லூக். 4:43.
2. இயேசு ஊழியத்தை ஏன் மிக முக்கியமானதாய்க் கருதினார்?
2 இயேசு ஊழியத்தை ஏன் மிக முக்கியமானதாய்க் கருதினார்? யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதே அவருடைய பிரதான நோக்கமாக இருந்தது. (மத். 6:9) அவர் தம் பரலோகத் தகப்பனை நேசித்ததால் அவருடைய சித்தத்தைச் செய்து முடிக்கவும், அவருடைய எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்படிந்து நடக்கவும் விரும்பினார். (யோவா. 14:31) அதுமட்டுமல்ல, மக்கள்மீது அவருக்கு உண்மையான அக்கறை இருந்ததால் அவர்களுக்கு உதவவும் விரும்பினார்.—மத். 9:36, 37.
3. நாம் ஊழியத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை எவ்வாறு வெளிக்காட்டலாம்?
3 இயேசுவைப் பின்பற்றுங்கள்: இயேசுவைப் போல ஊழியத்தில் அதிக கவனம் செலுத்துவது நமக்குச் சவாலாக இருக்கலாம்; ஏனெனில், இந்த உலகம் நம்முடைய நேரத்தைச் சக்கையாகப் பிழிந்துவிடுகிறது, நம் கவனத்தைச் சிதறடித்துவிடுகிறது. (மத். 24:37-39; லூக். 21:34) ஆகவே, மிக முக்கியமான காரியங்கள் எவை என்பதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்; பிரசங்க வேலையில் தவறாமல் ஈடுபடுவதற்கும் அதற்காகத் தயாரிப்பதற்கும் அட்டவணை போடுவதும் அதில் அடங்கும். (பிலி. 1:10) ஆகவே, நாம் எளிமையாக வாழவும் இந்த உலகத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாதிருக்கவும் முயலுவது அவசியம்.—1 கொ. 7:31.
4. சரியானவற்றிற்கு இப்போதே முக்கியத்துவம் கொடுப்பது ஏன் முக்கியம்?
4 நேரம் குறைவாக இருக்கும்போது, ஞானமான ஒரு நபர் எதை முதலில் செய்ய வேண்டுமோ அதற்கே முக்கியத்துவம் கொடுப்பார். உதாரணமாக, பயங்கரமான புயல் தாக்கப்போகிறது எனத் தெரிய வந்தால், அவர் தன் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதற்கும் அக்கம்பக்கத்தாரை எச்சரிப்பதற்குமே தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் செலவிடுவார். அந்தளவு முக்கியமில்லாத காரியங்களை பிறகு செய்வார். அர்மகெதோன் எனும் புயல் தாக்குவதற்குக் கொஞ்ச காலம்தான் இருக்கிறது. (செப். 1:14-16; 1 கொ. 7:29) நாமும் நம் செய்திக்குச் செவி கொடுப்போரும் மீட்படைவதற்காக, நம்மீதும் நம் போதனைமீதும் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும்; சபையிலும் சரி வெளியிலும் சரி நாம் அவ்வாறு கவனம் செலுத்த வேண்டும். (1 தீ. 4:16) ஆம், நாம் ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தோமென்றால் மீட்பு கிடைக்கும் என நிச்சயமாய் இருக்கலாம்!