எந்தெந்த சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வதெனத் தீர்மானித்துவிட்டீர்களா?
உலகெங்கும் ஏராளமான மருத்துவமனைகளில் இரத்தமில்லா அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. இரத்தமில்லா சிகிச்சை முறைகள் என்னென்ன இருக்கின்றன என்பது பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா? மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை சம்பந்தமாக அறிவுப்பூர்வமாய்த் தீர்மானங்கள் எடுப்பதற்கு இவற்றை நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இரத்தமில்லா சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலைச் சந்திக்கிறது என்ற ஆங்கில வீடியோவைப் பாருங்கள். ஆங்கிலம் தெரியாதவர்கள், இந்தக் கட்டுரையின் கடைசி பாராவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரசுரங்களின் தகவல்களைத் தங்களுடைய மொழியில் வாசித்துப்பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு, பின்வரும் கேள்விகளைச் சிந்தியுங்கள்; அதன் அடிப்படையில் நீங்கள் எடுக்கிற தீர்மானங்களைக் குறித்து ஜெபம் செய்யுங்கள்.—குறிப்பு: வீடியோவில் அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட சில காட்சிகள் வருவதால் குழந்தைகளுடன் இந்த வீடியோவைப் பார்க்கும்போது பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
(1) யெகோவாவின் சாட்சிகள் இரத்தமேற்ற மறுப்பதற்கு முக்கியக் காரணம் என்ன? (2) யெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட சிகிச்சையைப் பெற விரும்புகிறார்கள்? (3) என்ன அடிப்படை உரிமை நோயாளிக்கு இருக்கிறது? (4) இரத்தத்தின் சிறுகூறுகள் யாவை? (5) கிறிஸ்தவர்களில் சிலர் ஏன் (அ) இரத்தத்தின் சிறு கூறுகளை ஏற்றுக்கொள்கின்றனர்? (ஆ) இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட எதையுமே மறுத்துவிடுகின்றனர்? (6) இரத்த தானம் செய்வதை, தன்னுடைய இரத்தத்தையே சேமித்து வைத்து மீண்டும் உபயோகிப்பதை ஒரு கிறிஸ்தவர் எப்படிக் கருத வேண்டும்? (7) இரத்தத்தை உட்படுத்துகிற சில மருத்துவ முறைகள் யாவை? விளக்கவும். (8) இரத்தத்தை உட்படுத்துகிற மருத்துவ முறைகளைப் பொறுத்ததில் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் என்ன முக்கியமான பொறுப்பு இருக்கிறது? (9) மாற்று சிகிச்சைகள் பற்றிய என்ன விஷயங்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? (10) கஷ்டமான, சிக்கலான அறுவை சிகிச்சைகளை இரத்தமேற்றாமல் செய்ய முடியுமா?
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள சில சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதை, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் மனசாட்சியின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும். மாற்று சிகிச்சை முறைகளில் எதை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஏற்றுக்கொள்வீர்கள் எனத் தீர்மானித்துவிட்டீர்களா? உடல்நல பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையைப் பூர்த்தி செய்துவிட்டீர்களா? இவ்விஷயங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள காவற்கோபுரம், ஜூன் 15, 2004 மற்றும் அக்டோபர் 15, 2000 இதழ்களில் வெளிவந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைக் கவனமாக வாசித்துப் பாருங்கள். பின்பு, நவம்பர் 2006 நம் ராஜ்ய ஊழியத்தில் வெளிவந்த, “இரத்தத்தின் சிறு கூறுகளையும் என்னுடைய சொந்த இரத்தத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருத்துவ முறைகளையும் பற்றி நான் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும்?” என்ற உட்சேர்க்கையில் உள்ள வினாப்பட்டியல்களைப் பயன்படுத்தி, எந்தச் சிகிச்சை முறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்... எவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்... என்று தனிப்பட்ட தீர்மானங்களை எடுங்கள். பின்பு மறக்காமல், நீங்கள் தேர்ந்தெடுத்தவற்றை உங்கள் உடல்நல பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையில் திருத்தமாகக் குறிப்பிடுங்கள். தொடர்புகொள்வதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளவர்களிடமும், யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத குடும்ப அங்கத்தினர்களிடமும் உங்கள் தீர்மானங்களைப் பற்றித் தெளிவாகச் சொல்லி வையுங்கள்.