கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்திப் பேச ஆரம்பிப்பது எப்படி?
ஜனவரி 2018-லிருந்து, வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சிப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் “இப்படிப் பேசலாம்” என்ற பகுதி கொடுக்கப்பட்டது. மக்களிடம் பிரசுரங்களை மட்டும் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களிடம் பேசுவது முக்கியம் என்பது வலியுறுத்தப்பட்டது. பைபிளை மட்டும் பயன்படுத்தி எப்படிப் பேச ஆரம்பிக்கலாம் என்று “இப்படிப் பேசலாம்” வீடியோக்களில் காட்டப்பட்டது. பிரஸ்தாபிகள் தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்வதற்காகவே இந்த வீடியோக்கள் தயாரிக்கப்பட்டன. அப்படியென்றால், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நாம் பிரசுரங்களைப் பயன்படுத்தவே கூடாதா? இல்லை! பிரசுரங்களை நாம் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, பேச்சை ஆரம்பிக்க துண்டுப்பிரதிகள் ரொம்ப உதவியாக இருக்கும். ஏதாவது ஒரு துண்டுப்பிரதியைப் பயன்படுத்தும்போது பின்வரும் விஷயங்களை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளலாம்:
முன்பக்கத்தில் இருக்கும் கேள்விகளைக் கேளுங்கள்.
இரண்டாவது பக்கத்தில் இருக்கும் பைபிள் வசனம் அதற்கு எப்படிப் பதிலளிக்கிறது என்பதைக் காட்டுங்கள். நேரம் இருந்தால், துண்டுப்பிரதியில் இருக்கும் சில விஷயங்களை வாசித்துக் கலந்துபேசுங்கள்.
அதிலுள்ள மற்ற விஷயங்களை நேரம் கிடைக்கும்போது படித்துப் பார்க்கும்படி சொல்லி, வீட்டுக்காரரிடம் துண்டுப்பிரதியைக் கொடுங்கள்.
கிளம்புவதற்கு முன்பு, “சிந்தித்துப் பாருங்கள்” என்ற பகுதியில் உள்ள கேள்வியைக் காட்டிவிட்டு, அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று அடுத்த தடவை காட்டுவதாகச் சொல்லுங்கள்.
மறுசந்திப்பு செய்யும்போது, அதற்கான பதிலைச் சொல்லுங்கள். கடைசியில், இன்னொரு கேள்வியைக் கேட்டுவிட்டு அதைப் பற்றி அடுத்த தடவை பேசுவதாகச் சொல்லுங்கள். துண்டுப்பிரதியின் பின்பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் பிரசுரத்திலோ நம்முடைய வெப்சைட்டிலோ உள்ள ஒரு கேள்வியை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். பொருத்தமான சமயத்தில், “கற்பிப்பதற்கான கருவிகள்” பகுதியில் இருக்கும் கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! என்ற சிற்றேட்டையோ வேறொரு பைபிள் படிப்புப் பிரசுரத்தையோ அறிமுகப்படுத்துங்கள்.