வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒன்று யோவான் 4:18 நமக்குச் சொல்கிறது: “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்.” ஆனால் பேதுரு எழுதினார்: “சகோதரர்களின் முழு கூட்டுறவின்மீதும் அன்புகூருங்கள், கடவுளுக்குப் பயந்திருங்கள்.” (1 பேதுரு 2:17, NW) இந்த இரண்டு வசனங்களையும் நாம் எவ்வாறு ஒத்திசைவிக்கலாம்?
பேதுருவும் யோவானுமாகிய இருவருமே இயேசு கிறிஸ்துவிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொண்ட அப்போஸ்தலர்கள். இதனால், அவர்கள் எழுதியவை ஒத்திசைவாகவே இருக்கும் என்று நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள வசனங்களைப் பொறுத்தவரையில், அந்த இரண்டு அப்போஸ்தலர்களும் வெவ்வேறு வகையான பயத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர் என்பதே அதன் தீர்வாக இருக்கிறது.
பேதுருவின் ஆலோசனையை முதலாவதாகச் சிந்திப்போம். சூழமைவு காண்பிக்கிறபடி, அதிகாரத்திலிருக்கிறவர்களிடமாக கிறிஸ்தவர்கள் என்ன மனநிலையைக் காண்பிக்கவேண்டும் என்பதுபற்றி பேதுரு உடன் கிறிஸ்தவர்களுக்கு கடவுளால் ஏவப்பட்ட புத்திமதியை அளித்துக் கொண்டிருந்தார். இன்னொருவிதமாகச் சொன்னால், ஒருசில அம்சங்களில் கீழ்ப்பட்டிருத்தலைக் குறித்த சரியான மனநிலையைப்பற்றி அவர் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். இவ்வாறாக, ராஜாக்கள் அல்லது அதிகாரிகள் என்பதுபோன்று மனித அரசாங்கங்களில் அதிகாரத்திற்குரிய பதவிகளை வகிக்கிறவர்களுக்கு கீழ்ப்பட்டிருக்கும்படியாக கிறிஸ்தவர்களுக்கு அவர் புத்திமதி அளித்தார். (1 பேதுரு 2:13, 14) தொடர்ந்து பேதுரு எழுதினார்: “எல்லா வகையான மனிதரையும் கனம் பண்ணுங்கள், சகோதரர்களின் முழு கூட்டுறவின்மீதும் அன்புகூருங்கள், கடவுளுக்குப் பயந்திருங்கள், ராஜாவைக் கனம் பண்ணுங்கள்.”—1 பேதுரு 2:17, NW.
சூழமைவைக் கவனிக்கையில், “கடவுளுக்குப் பயந்திருங்கள்” என்று பேதுரு கிறிஸ்தவர்களுக்குச் சொன்னபோது, நாம் கடவுளிடம் ஓர் ஆழ்ந்த, பயபக்திக்குரிய மரியாதையை, மிக உயர்ந்த அதிகாரத்திலிருப்பவருக்கு பிரியமில்லாததைச் செய்துவிடக் கூடாது என்ற பயத்தை அர்த்தப்படுத்தினார் என்பது தெளிவாக இருக்கிறது.—எபிரெயர் 11:7-ஐ ஒப்பிடுக.
அப்போஸ்தலன் யோவானின் குறிப்பைப் பற்றியதென்ன? 1 யோவான் 4-ம் அதிகாரத்தின் ஆரம்பத்தில், கள்ளத் தீர்க்கதரிசிகளிடமிருந்து வருவதைப் போன்ற ‘ஏவப்பட்ட கூற்றுகளை’ (NW) சோதித்துப் பார்ப்பதற்கான அவசியத்தைப் பற்றி அப்போஸ்தலன் பேசினார். அந்தக் கூற்றுகள் நிச்சயமாகவே யெகோவா தேவனிடமிருந்து உண்டாவதில்லை; அவை பொல்லாத உலகிலிருந்து வருபவை அல்லது அதைப் பிரதிபலிப்பவை.
மாறாக, அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் “தேவனால் உண்டான”வர்கள். (1 யோவான் 4:1-6) அது அவ்வாறு இருக்கையில், யோவான் இவ்வாறு தூண்டுவித்தார்: “பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது.” அன்பு காண்பிப்பதில் கடவுள் முந்திக்கொண்டார்—அவர் ‘நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினார்.’ (1 யோவான் 4:7-10) நாம் எப்படிப் பிரதிபலிக்கவேண்டும்?
தெளிவாகவே, நம்முடைய அன்பான கடவுளுடன் ஒன்றுபட்டவர்களாக நாம் இருக்கவேண்டும். நாம் அவரிடம் பயந்து நடுங்குபவர்களாக அல்லது அவரிடம் ஜெபத்தில் அணுகுவதைக் குறித்து அஞ்சி நடுங்குபவர்களாக இருக்கக்கூடாது. யோவான் முன்னரே இவ்வாறு அறிவுரை கூறினார்: “நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு . . . நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.” (1 யோவான் 3:21, 22) ஆம், செயலிழக்கச்செய்யும் அல்லது தடைசெய்யும் பயமின்றி கடவுளை அணுகுவதற்கு தைரியத்தை ஒரு நல்ல மனச்சாட்சி அளிக்கிறது. அன்பின் காரணமாக, நாம் ஜெபத்தில் யெகோவாவை நெருங்குவதற்கு அல்லது அணுகுவதற்கு தைரியமாக உணருவோம். இந்த அர்த்தத்தில், “அன்பிலே பயமில்லை.”
அப்படியானால், நாம் இந்த இரண்டு கருத்துக்களையும் ஒன்றுசேர்ப்போம். யெகோவாவின் ஸ்தானம், வல்லமை, மற்றும் நியாயத்திற்கான ஆழ்ந்த மரியாதையின் காரணமாகப் பிறக்கும் பக்தியுடன்கூடிய பயத்தை ஒரு கிறிஸ்தவன் அவர்பேரில் எப்போதும் கொண்டிருக்கவேண்டும். அதேநேரத்தில் நாம் கடவுளை நம் தகப்பனாகவும் கருதி அன்புகூருகிறோம்; அவரிடம் ஒரு நெருக்கத்தையும், அவரை அணுகுவதற்கு ஒரு தைரியத்தையும் உணருகிறோம். அவரைக் குறித்து ஏதோ ஒரு திகிலால் தடுக்கப்படுவதற்கு மாறாக, ஒரு பிள்ளை தன் அன்பான பெற்றோரிடம் தைரியமாக உணருவதுபோல நாமும் அவரை அணுகமுடியும் என்று நம்புகிறோம்.—யாக்கோபு 4:8.