கடவுள் உங்களுக்கு நிஜமானவரா?
இதயத்தை கசக்கிப் பிழியும் பிரச்சினைகள் உங்களை தாக்குகையில் நீங்கள் உடனடியாக கடவுளிடம் ஜெபம் செய்கிறீர்களா? அப்படியானால், நிஜமான ஒரு நபரிடம் பேசுவது போன்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படுகிறதா?
பரலோக தந்தையைப் பற்றி பேசுகையில் இயேசு கிறிஸ்து சொன்னார்: “என்னை அனுப்பினவர் நிஜமானவர்.” (யோவான் 7:28, NW) ஆம், யெகோவா தேவன் நிஜமானவரே. அவரிடம் ஜெபிப்பது, உதவிக்காகவும் அறிவுரைக்காகவும் நெருங்கிய நண்பரை நாடுவதைப் போன்றது. ஆனால் நம்முடைய ஜெபத்தை கடவுள் கேட்க வேண்டுமாகில், பைபிளில் சொல்லப்பட்டுள்ளபடி நாம் ஜெபிக்க வேண்டும். உதாரணமாக, ‘ஜெபத்தை கேட்கிறவரிடம்’ அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தாழ்மையோடு அணுக வேண்டும்.—சங்கீதம் 65:2; 138:6; யோவான் 14:6.
கடவுளை காணமுடியாததால் அவர் உருவமோ பண்புகளோ இல்லாத வெறுமனே ஒரு சக்தி என்பதாகவே சிலர் நினைக்கிறார்கள். இவர்களுக்கு கடவுள் மறைபொருளாக தோன்றலாம். கடவுளுடைய தலைசிறந்த குணங்களைக் கற்ற கிறிஸ்தவர்களுக்கும்கூட, கடவுள் எந்தளவுக்கு நிஜமானவர் என்பதைப் புரிந்துகொள்வது சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கலாம். உங்களுக்கும் இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா? அப்படியானால், யெகோவா தேவனை நீங்கள் நிஜமானவராக எண்ணுவதற்கு எது உங்களுக்கு உதவலாம்?
பைபிளை படியுங்கள்
நீங்கள் தவறாமல் பைபிள் படிக்கிறீர்களா? நீங்கள் எந்தளவுக்கு பைபிளை அடிக்கடியும் ஊக்கமாயும் படிக்கிறீர்களோ அந்தளவுக்கு யெகோவா தேவன் உங்களுக்கு நிஜமானவராக இருப்பார். இதனால் உங்களுடைய விசுவாசமும் பலப்படுத்தப்படும்; அதன் விளைவாக, உங்களால் ‘காணக்கூடாதவரை காணவும்’ முடியும். (எபிரெயர் 11:6, 27, NW) மறுபட்சத்தில், அத்திபூத்தாற்போல எப்பொழுதாவது பைபிளை படிப்பது உங்களுடைய விசுவாசத்தை நன்கு பலப்படுத்தாது.
உதாரணமாக, உடம்பில் தீராத தடிப்புகள் இருக்கின்றன; அதை தணிப்பதற்கு ஒரு ஆயின்மென்ட்டை ஒரு நாளைக்கு இருவேளை தடவும்படி டாக்டர் உங்களுக்கு சொல்லியிருக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோ தடவினால் உங்களுடைய தடிப்புகள் தணிந்துவிடுமா? கனவிலும்கூட போகாது. அதைப்போலவே, ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு சங்கீதக்காரன் நமக்கு ஒரு “மருந்துச்சீட்டு” கொடுக்கிறார். கடவுளுடைய வார்த்தையை ‘இரவும் பகலும் தியானியுங்கள்.’ (சங்கீதம் 1:1, 2) மென்மேலும் பயன்பெறுவதற்கு, அந்த “மருந்துச்சீட்டை,” அதாவது கிறிஸ்தவ பிரசுரங்களின் உதவியோடு கடவுளுடைய வார்த்தையை தினமும் சிந்திப்பதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.—யோசுவா 1:8.
உங்களது படிப்பு விசுவாசத்தை அதிகம் பலப்படுத்த வேண்டுமென விரும்புகிறீர்களா? இதோ, உங்களுக்கு ஓர் ஆலோசனை: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பிலோ அல்லது ‘கிராஸ்-ரெஃப்ரன்ஸ்’ உள்ள மற்றொரு பைபிளிலோ ஓர் அதிகாரத்தை வாசியுங்கள்; அதன்பின், அக்கறையைத் தூண்டும் ஒரு வசனத்தைத் தெரிந்தெடுத்து, அதில் ரெஃப்ரன்ஸுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற வசனங்களை எடுத்துப் பாருங்கள். இது உங்களுடைய படிப்பை பலன்தரத்தக்க ஒன்றாக்கும். பைபிள் புத்தகங்கள் ஒன்றுக்கொன்று ஒத்திசைவாக இருப்பதைக் கண்டும் மனங்கவரப்படுவீர்கள். இது, அதன் ஆசிரியராகிய யெகோவா தேவனை உங்களுக்கு அதிக நிஜமானவராக்கும்.
‘கிராஸ்-ரெஃப்ரன்ஸ்’ பயன்படுத்துவது பைபிள் தீர்க்கதரிசனங்களோடும் அவற்றின் நிறைவேற்றங்களோடும் பரிச்சயமாவதற்கு உதவும். பாபிலோனியர்களால் எருசலேம் அழிக்கப்பட்டது போன்ற முக்கிய பைபிள் தீர்க்கதரிசனங்களை ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம். என்றபோதிலும், பைபிளில் தீர்க்கதரிசனங்களும் அவற்றின் நிறைவேற்றங்களும் நெட்வர்க் போன்று ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன. இவற்றில் சில நன்கு அறியப்படாதவை.
உதாரணமாக, எரிகோவை திரும்ப எடுப்பித்துக் கட்டினால் கிடைக்கும் தண்டனையைப் பற்றிய தீர்க்கதரிசனத்தையும் அவற்றின் நிறைவேற்றத்தையும் வாசியுங்கள். யோசுவா 6:26 (தி.மொ.) இவ்வாறு குறிப்பிடுகிறது: “அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக்கட்ட எழும்பும் மனுஷன் யெகோவாவின் சந்நிதியில் சாபத்திற்குரியவன்; அஸ்திபாரமிடுமையில் மூத்தமகனை இழப்பான்; வாசலைவைக்கையில் இளையமகனை இழப்பான்.” இது சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு நிறைவேறியது. 1 இராஜாக்கள் 16:34-ல் (தி.மொ.) நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவன் [ஆகாப் ராஜாவின்] நாட்களிலே பேதேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; யெகோவா நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போட்டபோது அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதில் வாசல்களை வைத்தபோது செகூப் என்னும் தன் இளைய குமாரனையும் இழந்தான்.”a மெய்யான தேவன் மட்டுமே இத்தகைய தீர்க்கதரிசனங்களை ஏவி அது நிறைவேறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
பைபிளை வாசிக்கையில், குறிப்பிட்ட ஒரு விஷயத்தை நீங்கள் அறிந்துகொள்ள துடிக்கலாம். உதாரணமாக, தீர்க்கதரிசனத்திற்கும் அதன் நிறைவேற்றத்திற்கும் இடையே எத்தனை ஆண்டுகள் கடந்துசென்றன என்பதைப் பற்றி நீங்கள் யோசிக்கலாம். யாரையாவது கேட்பதற்குப் பதிலாக, நீங்களே தெரிந்துகொள்ள ஏன் முயற்சி செய்யக்கூடாது? புதைபொருளை கண்டுபிடிக்க உதவும் வரைபடத்தை ஊக்கத்தோடு துருவி ஆராய்வதுபோல, வரைபடங்களையும் பைபிள் படிப்பு துணைநூல்களையும் பயன்படுத்தி பதிலைத் தேடிக் கண்டுபிடியுங்கள். (நீதிமொழிகள் 2:4, 5) பதில்களைக் கண்டுபிடிப்பது உங்களுடைய விசுவாசத்தை மிகவும் பலப்படுத்தும். மேலும் யெகோவா தேவனை உங்களுக்கு அதிக நிஜமானவராக்கும்.
தவறாமலும் ஊக்கமாயும் ஜெபியுங்கள்
ஜெபம் மற்றும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை அசட்டை செய்யாதீர்கள். “எங்களுக்கு அதிக விசுவாசத்தை கொடுப்பீராக” என்று இயேசுவின் சீஷர்கள் நேரடியாக கேட்டார்கள். (லூக்கா 17:5, NW) யெகோவா உங்களுக்கு நிஜமானவராக தோன்றவில்லையென்றால், அதிக விசுவாசத்திற்காக நீங்கள் அவரிடம் ஜெபிக்கலாம் அல்லவா? அவரை நீங்கள் நிஜமானவராக எண்ணுவதற்கு உதவிக்காக நம்பிக்கையோடு உங்களுடைய பரலோக தந்தையிடம் கேளுங்கள்.
ஏதாவது ஒரு பிரச்சினை உங்கள் மனதில் அலைமோதிக்கொண்டிருந்தால், இருதயப்பூர்வமான முறையில் உங்களுடைய பரலோக நண்பரிடம் தெரிவிப்பதற்கு தேவையான நேரமெடுத்துக்கொள்ளுங்கள். இயேசு மரணத்தை நெருங்குகையில், ஊக்கமாய் ஜெபித்தார். பொது மக்கள் பார்வையில் படும்படி நீண்டநேரம் ஜெபிக்கும் மதப் பழக்கத்தை அவர் கண்டனம் செய்தபோதிலும், தம்முடைய 12 அப்போஸ்தலரை தெரிந்தெடுப்பதற்கு முன்பு தனிமையில் இராமுழுவதும் ஜெபிப்பதற்கு செலவழித்தார். (மாற்கு 12:38-40; லூக்கா 6:12-16) தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் தாய் அன்னாளிடமிருந்தும்கூட நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். ஓர் ஆண் குழந்தை வேண்டுமென்ற ஏக்கத்தோடு, ‘அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம் பண்ணினார்.’—1 சாமுவேல் 1:12.
இவையனைத்திலும் உள்ள அடிப்படை பாடம் என்ன? உங்களுடைய ஜெபங்களுக்கு பதிலை எதிர்பார்ப்பீர்களாகில், நீங்கள் மனப்பூர்வமாகவும் ஊக்கத்தோடும் இடைவிடாமலும்—நிச்சயமாகவே கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாகவும்—ஜெபிக்க வேண்டும். (லூக்கா 22:44; ரோமர் 12:12; 1 தெசலோனிக்கேயர் 5:17; 1 யோவான் 5:13-15) இப்படிச் செய்வது உங்களுக்கு கடவுளை நிஜமானவராக்கும்.
படைப்பை உற்று கவனியுங்கள்
ஒரு கலைஞனின் குணாதிசயம் அவனுடைய ஓவியங்களில் வெளிப்படலாம். அதைப்போலவே, அண்டத்தின் வடிவமைப்பாளரும் படைப்பாளருமாகிய யெகோவாவின் ‘காணப்படாத குணாதிசயங்கள்’ அவருடைய படைப்பில் தெளிவாக காணப்படுகின்றன. (ரோமர் 1:20, NW) யெகோவாவின் கைவேலைப்பாடுகளை கவனமாக உற்றுப் பார்க்கையில், நாம் அவருடைய குணாதிசயங்களைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள முடியும், இவ்வாறாக அவர் நமக்கு அதிக நிஜமானவராக ஆகிறார்.
கடவுளுடைய படைப்புகளை நீங்கள் உற்று கவனிப்பீர்களாகில், அவருடைய குணாதிசயங்கள் நிஜமானவையாக இருப்பதைக் கண்டு மனதில் வெகுவாக கவரப்படலாம். உதாரணமாக, பறவைகளுக்கு இருக்கும் திசையறியும் திறமைகளைப் பற்றிய தகவல், யெகோவாவின் ஞானத்திற்கான உங்களுடைய போற்றுதலை மேலும் அதிகரிக்கலாம். அண்டத்தைப் பற்றி வாசிக்கையில், சுமார் 1,00,000 ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள பால்வீதி மண்டலம், விண்வெளியிலுள்ள கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களில் ஒன்றே ஒன்று என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். இதிலிருந்து படைப்பாளரின் ஞானத்தை கற்றுக்கொள்கிறீர்கள். அவர் நிஜமானவர் என்பதை அது உங்களுடைய மனதில் பதியவைக்கவில்லையா?
நிச்சயமாகவே, யெகோவாவின் ஞானம் நிஜம்! ஆனால் அது உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? நாம் ஜெபத்தில் அவரிடம் சொல்லும் எவ்வித பிரச்சினைகளாலும் அவர் ஒருபோதும் திண்டாடிப்போவதில்லை. ஆம், படைப்பைப் பற்றிய சொற்ப அறிவும்கூட உங்களுக்கு யெகோவாவை அதிக நிஜமானவராக ஆக்கலாம்.
யெகோவாவுடன் நடவுங்கள்
யெகோவா எந்தளவு நிஜமானவர் என்பதை நீங்கள் தனிப்பட்ட விதமாக ருசித்தறிய முடியுமா? ஆம், உண்மையுள்ள கோத்திரப் பிதாவாகிய நோவாவைப் போல் இருப்பீர்களாகில் ருசித்தறிய முடியும். அவர் எப்பொழுதும் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து நடந்தார், அதனால் அவரைக் குறித்து இப்படி சொல்ல முடிந்தது: “நோவா கடவுளோடு நடந்தார்.” (ஆதியாகமம் [தொடக்க நூல்] 6:9, பொ.மொ.) தன் அருகில் யெகோவா இருப்பதைப் போலவே நினைத்து நோவா வாழ்ந்தார். கடவுள் அந்தளவு உங்களுக்கும் நிஜமானவராக இருக்க முடியும்.
நீங்கள் கடவுளோடு நடக்கையில், பைபிள் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து அவற்றிற்கு இசைவாக செயல்படுவீர்கள். உதாரணமாக, நீங்கள் இயேசுவின் இந்த வார்த்தைகளை நம்புவீர்கள்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் [பொருள் சம்பந்தமான தேவைகளெல்லாம்] உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:25-33) நீங்கள் எதிர்பார்க்கிற விதத்தில் எப்பொழுதும் யெகோவா உங்களுக்கு தேவையானதைக் கொடுக்க மாட்டார் என்பது உண்மைதான். ஆனாலும், ஜெபித்ததால் கடவுளிடமிருந்து வரும் உதவியை அனுபவிக்கும்போது, ஒருவர் உங்களுடைய பக்கத்தில் இருப்பதுபோலவே அவரும் உங்களுக்கு நிஜமானவராக இருப்பார்.
கடவுளோடு நடப்பதில் ஒருவர் உறுதியாக இருக்கையில் யெகோவாவுடன் இப்படிப்பட்ட நெருக்கமான உறவு வளருகிறது. எண்ணற்ற சோதனைகளை சகித்த ஸ்பானிய மொழி பேசும் சாட்சியாகிய மான்வேலாவை கவனியுங்கள். அவள் சொல்கிறாள்: “நான் வேதனையில் அல்லது ஏதாவது தேவையில் இருக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம், நீதிமொழிகள் 18:10-ல் (பொ.மொ.) உள்ள நியமத்தைப் பொருத்தியிருக்கிறேன். உதவிக்காக யெகோவாவிடம் ஓடிச்செல்வேன். அவர் எப்பொழுதும் எனக்கு ‘உறுதியான கோட்டையாக’ இருந்திருக்கிறார்.” இதைச் சொல்லும் மான்வேலா, கடந்த 36 வருடங்களாக யெகோவாவின்மீது சார்ந்திருந்து அவருடைய ஆதரவை அனுபவித்துவந்திருக்கிறார்.
நீங்கள் இப்பொழுதுதான் யெகோவாவின்மீது நம்பிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறீர்களா? நீங்கள் விரும்புகிற அளவுக்கு அவரோடு உங்களுடைய உறவு நெருக்கமாக இல்லாதிருந்தால் மனச்சோர்வடைந்து விடாதீர்கள். கடவுளோடு நடக்கிற நபரைப்போல ஒவ்வொரு நாளும் வாழுங்கள். உண்மைத்தன்மையோடு வாழும்போது, நீங்கள் யெகோவாவுடன் அதிக நெருங்கிய உறவை அனுபவிக்க ஆரம்பிப்பீர்கள்.—சங்கீதம் 25:14; நீதிமொழிகள் 3:26, 32; NW.
யெகோவாவுடன் நடப்பதற்கு மற்றொரு வழி அவருடைய சேவையில் மூழ்கியிருப்பதாகும். ராஜ்ய பிரசங்க வேலையில் ஈடுபடுகையில், நீங்கள் யெகோவாவோடு உடன் வேலையாளாக இருக்கிறீர்கள். (1 கொரிந்தியர் 3:9) இதை அறிந்திருப்பது கடவுள் உங்களுக்கு அதிக நிஜமானவராய் ஆக உதவுகிறது.
சங்கீதக்காரன் இவ்வாறு தூண்டுகிறார்: “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.” (சங்கீதம் 37:5) உங்களுக்கு சுமைகளோ வேதனைகளோ எதுவாக இருந்தாலும்சரி, அவற்றை யெகோவாவின்மீது போட்டுவிட ஒருபோதும் தவறாதீர்கள். உதவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் எப்பொழுதும் அவரை நோக்கியிருங்கள். நீங்கள் யெகோவாவிடம் ஜெபத்தில் சார்ந்திருந்து எப்பொழுதும் அவரை முழுமையாக நம்புவீர்களாகில், பாதுகாப்பாக உணருவீர்கள்; ஏனெனில் உங்கள் சார்பாக செயல்பட அவர் தவறமாட்டார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளோடு யெகோவாவை நெருங்கும்போது நீங்கள் நம்பிக்கையோடு இருக்கிறீர்களா? இருப்பீர்கள்—கடவுள் உங்களுக்கு நிஜமானவராக இருந்தால்.
[அடிக்குறிப்புகள்]
a மற்றொரு உதாரணமாக, 1 இராஜாக்கள் 13:1-3-ல் பலிபீடத்தின் புனிதத்தன்மையை யெரொபெயாம் கெடுத்ததைப் பற்றி முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை வாசித்துப் பாருங்கள். அதன் பின்பு 2 இராஜாக்கள் 23:16-18-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள நிறைவேற்றத்தை கவனியுங்கள்.
[பக்கம் 21-ன் படம்]
உங்களுடைய படிப்பு நேரங்களை விசுவாசத்தை பலப்படுத்துபவையாக ஆக்குங்கள்
[பக்கம் 22-ன் படம்]
தவறாமலும் ஊக்கமாகவும் ஜெபிப்பதற்கு நேரமெடுத்துக்கொள்ளுங்கள்
[பக்கம் 23-ன் படம்]
கடவுளுடைய குணாதிசயங்கள் எவ்வாறு படைப்பில் காணப்படுகின்றன என்பதை உற்று கவனியுங்கள்
[படத்திற்கான நன்றி]
தேன்சிட்டு: U.S. Fish and Wildlife Service, Washington, D.C./Dean Biggins; நட்சத்திரங்கள்: போட்டோ: Copyright IAC/RGO 1991, Dr. D. Malin et al, Isaac Newton Telescope, Roque de los Muchachos Observatory, La Palma, Canary Islands