வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
மார்ச் 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 16-17
‘யெகோவாவே நல்லதையெல்லாம் எனக்குத் தருகிறீர்கள்’
இளைஞர்களே, திருப்தியான வாழ்க்கை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!
உண்மையான நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்
11 சங்கீதம் 16:3-ஐ வாசியுங்கள். நல்ல நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று தாவீதுக்குத் தெரிந்திருந்தது. யெகோவாவை நேசிக்கிறவர்களை அவர் நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தார்; அதனால், அவருடைய மனதில் ‘சந்தோஷம் பொங்கியது.’ தன்னுடைய நண்பர்களை ‘பரிசுத்தவான்கள்’ என்று அவர் சொன்னார். ஏனென்றால், யெகோவாவுடைய ஒழுக்கத் தராதரங்களின்படி வாழ அவர்கள் முயற்சி செய்தார்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தாவீது எப்படி உணர்ந்தாரோ, அதேபோல் உணர்ந்த இன்னொரு சங்கீதக்காரர் சொல்வதைக் கவனியுங்கள். “உங்களுக்குப் பயந்து நடக்கிற எல்லாருக்கும் நான் நண்பன். உங்கள் ஆணைகளின்படி நடக்கிற எல்லாருக்கும் நான் தோழன்” என்று அவர் சொன்னார். (சங். 119:63) முந்தின கட்டுரையில் பார்த்தபடி, யெகோவாவை நேசித்து, அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களின் மத்தியில் உங்களுக்கும் நல்ல நண்பர்கள் நிறைய பேர் கிடைப்பார்கள். அதற்காக, உங்கள் வயதில் இருப்பவர்களைத்தான் நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
‘யெகோவாவின் இனிய குணத்தைத் தியானியுங்கள்’
“யெகோவா என் பங்கு, எனக்குரிய சொத்து, என் கிண்ணம். நீர் என் சொத்துகளைப் பாதுகாக்கிறீர். இனிய சுகமான இடங்கள் எனக்கு ஆஸ்தியாக அருளப்பட்டிருக்கின்றன” என்று தாவீது பாடினார். (சங். 16:5, 6, NW) தன்னுடைய ‘பங்குக்கு,’ அதாவது யெகோவாவோடுள்ள உறவுக்கும் அவருக்குச் சேவை செய்யும் பாக்கியத்துக்கும் தாவீது நன்றியுள்ளவராக இருந்தார். தாவீதைப் போல, நாமும் ஒருவேளை துன்பத்தில் தவித்துக்கொண்டிருந்தாலும் ஏராளமான ஆன்மீக ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம். ஆகவே, உண்மை வழிபாட்டில் தொடர்ந்து மகிழ்ச்சி காண்போமாக! யெகோவாவின் ஆன்மீக ஆலயத்தை ‘நன்றியுணர்வோடு பார்ப்போமாக’!
யெகோவாவை எப்போதும் உங்கள் முன்பாக வைத்திருங்கள்
2 ஆபிரகாம், சாராள், மோசே, ரூத், தாவீது, எஸ்தர், அப்போஸ்தலன் பவுல் போன்ற மிகப் பிரபலமான பைபிள் கதாபாத்திரங்களின் அனுபவங்களிலிருந்து நாம் எல்லாருமே பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். எனினும், அந்தளவுக்குப் பிரபலமாகப் பேசப்படாத நபர்களைப் பற்றிய பைபிள் பதிவுகளில் இருந்தும்கூட நாம் பயன் அடையலாம். பைபிள் பதிவுகளைத் தியானிப்பது சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளுக்கு இசைவாகச் செயல்பட நமக்கு உதவும்: “கர்த்தரை [“யெகோவாவை,” NW] எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.” (சங். 16:8) இந்த வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
3 ஒரு போர் வீரர் பொதுவாக தன்னுடைய வலது கையில் பட்டயத்தைப் பிடித்திருப்பார். கேடயம் இடது கையில் இருப்பதால், இவருடைய வலப்புறம் பாதுகாப்பின்றி இருக்கும். எனினும், இவருடைய நண்பர் வலப்புறத்தில் இவருக்கு அருகே நின்று போர் செய்தபோது இவர் பாதுகாப்பைப் பெற்றார். நாமும் யெகோவாவை மனதில் வைத்து, அவருக்குப் பிரியமானதைச் செய்தால் அவர் நம்மைப் பாதுகாப்பார். எனவே, ‘யெகோவாவை எப்பொழுதும் நமக்கு முன்பாக வைத்திருப்பதற்கு’ பைபிள் பதிவுகளைச் சிந்திப்பது, நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு பலப்படுத்தும் என்பதை நாம் பார்ப்போம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 714
கண்மணி
எபிரெய மொழியில், அயின் (கண்) என்ற வார்த்தையுடன் இஷான் (உபா 32:10; நீதி 7:2) என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது அதனுடைய நேரடி அர்த்தம் “கண்ணின் குட்டி மனிதன்”; பாத் (மகள்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது அதனுடைய நேரடி அர்த்தம் “கண்ணின் மகள்.” இந்த இரண்டு அர்த்தங்களும் கண்மணியைத்தான் குறிக்கின்றன. கண்மணி என்ற வார்த்தையை ஆணித்தரமாகக் குறிப்பதற்காக சங்கீதம் 17:8-ல் இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்த்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, இஷான் பாத் அயின். அதன் நேரடி அர்த்தம், “கண்ணின் குட்டி மனிதனும் மகளும்” அல்லது “கண்மணி.” சங்கீதம் 17:8-ல் இருக்கும் வார்த்தைகளை, இன்னொருவருடைய கண்மணியில் தெரியும் ஒருவரின் உருவத்துக்கும் ஒப்பிட்டுச் சொல்லலாம்.
கண் ரொம்ப மென்மையான உறுப்பு. அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்ணில் சின்ன முடியோ தூசியோ விழுந்தால்கூட அது கண் இமைக்கும் கருவிழிக்கும் நடுவில் தெளிவாகத் தெரிந்துவிடும். கண்மணியைச் சுற்றி இருக்கும் கார்னியா என்ற பகுதி வழியாகத்தான் ஒளி உள்ளே போகும். அந்தப் பகுதியை நாம் ரொம்ப பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அதில் அடிபட்டாலோ அல்லது ஏதாவது நோயினால் மங்கலாக இருந்தாலோ, கண்பார்வை குறைந்துவிடலாம் அல்லது சுத்தமாகத் தெரியாமல் போய்விடலாம். பைபிளில் “கண்மணி” என்ற வார்த்தை, ரொம்பக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய விஷயத்தைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, கடவுளுடைய வார்த்தைக்கு நாம் அந்தளவுக்குக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக கண்மணி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (நீதி 7:2) உபாகமம் 32:10-ல் கடவுள் இஸ்ரவேல் மக்களை ஒரு அப்பா மாதிரி பார்த்துக்கொள்வதால் “கண்மணிபோல்” பார்த்துக்கொள்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கடவுளுடைய பாதுகாப்பும் அரவணைப்பும் வேண்டும் என்பதைச் சொல்வதற்காக “கண்மணிபோல் என்னைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று தாவீது சொன்னார். (சங் 17:8) குறிப்பாக எதிரிகள் தாக்க வரும்போது தன் சார்பாக யெகோவா களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்று தாவீது ஆசைப்பட்டதாகத் தெரிகிறது. (சகரியா 2:8-ல் “கண்மணி” என்பதற்கான எபிரெய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்).
மார்ச் 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 18
“யெகோவாதான் . . . என்னைக் காப்பாற்றுபவர்”
w09 10/1 பக். 20 பாரா. 4-5
பைபிளில் சொல்லோவியங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?
யெகோவாவை பைபிள் உயிரற்ற பொருள்களுடனும் ஒப்பிடுகிறது. அது அவரை “இஸ்ரவேலின் கன்மலை [அதாவது, கற்பாறை],” “கோட்டை,” ‘துருகம்’ என்றெல்லாம் வர்ணிக்கிறது. (2 சாமுவேல் 23:3; சங்கீதம் 18:2; உபாகமம் 32:4) இந்த ஒப்புமைகளிலுள்ள ஒற்றுமை என்ன? பெரிய கற்பாறை எப்படி அசைக்க முடியாதபடி உறுதியாய் இருக்கிறதோ அப்படியே யெகோவா தேவனும் அசைக்க முடியாதவராக இருப்பதால் உங்களுக்குப் பலத்த பாதுகாப்பாய் விளங்குவார்.
5 பைபிளிலுள்ள சங்கீதப் புத்தகம், யெகோவாவுடைய ஆளுமையின் பல்வேறு அம்சங்களை வர்ணிக்கும் சொல்லோவியங்களால் நிறைந்திருக்கிறது. உதாரணத்திற்கு, யெகோவா “சூரியனும் கேடகமுமானவர்” என்று சங்கீதம் 84:11 குறிப்பிடுகிறது; ஏனென்றால், அவர் ஒளி, உயிர், ஆற்றல், பாதுகாப்பு ஆகியவற்றின் உறைவிடமாய் இருக்கிறார். மறுபட்சத்தில், ‘யெகோவா உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்’ என்று சங்கீதம் 121:5 சொல்கிறது. நிழலான இடம் எப்படிச் சூரிய வெப்பத்திடமிருந்து பாதுகாப்பு அளிக்கிறதோ அப்படியே வேதனையின் வெப்பத்திலிருந்து யெகோவா தம் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்; அவர்களுக்குத் தம்முடைய “கரத்தின்” அல்லது “செட்டைகளின்” நிழலிலே பாதுகாப்பு அளிக்கிறார்.—ஏசாயா 51:16; சங்கீதம் 17:9; 36:7.
it-2-E பக். 1161 பாரா 7
குரல்
கடவுள் அவருடைய ஊழியர்களின் குரலைக் கேட்கிறார். கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் கடவுளை வணங்குகிறவர்கள் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கலாம். அவர்கள் எந்த மொழியில் ஜெபம் செய்தாலும்சரி, கடவுள் அதைக் கேட்பார். அவர்கள் மனதுக்குள் பேசினாலும் கடவுள் அதைக் கேட்பார். ஏனென்றால் மக்களுடைய மனதில் இருப்பதுகூட கடவுளுக்கு நன்றாகத் தெரியும். (சங் 66:19; 86:6; 116:1; 1சா 1:13; நெ 2:4) கஷ்டத்தில் உதவிக்காக நாம் கதறுவதையும் கடவுள் கேட்பார். தன்னுடைய மக்களுடைய எதிரிகள் சதித்திட்டம் போட்டாலும் அவர்களுக்குக் கெட்டது செய்ய நினைத்தாலும், அந்த எதிரிகளின் உள்நோக்கம் கடவுளுக்குத் தெரியும்.—ஆதி 21:17; சங் 55:18, 19; 69:33; 94:9-11; எரே 23:25.
கவலைகளை வெற்றிகரமாக சமாளிப்பது எப்படி?
2. இதுவரைக்கும் யெகோவா செய்திருக்கிற உதவியை யோசித்துப்பாருங்கள். ‘யெகோவாவின் உதவி இல்லாமல் இதை என்னால் சமாளித்திருக்கவே முடியாது’ என்பதைப் போன்ற சூழ்நிலைகள் சில சமயங்களில் உங்களுடைய வாழ்க்கையில் வந்திருக்கும். உங்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்திருக்கிறார்... பைபிள் காலங்களில் வாழ்ந்த அவருடைய ஊழியர்களுக்கு எப்படி உதவி செய்திருக்கிறார்... என்றெல்லாம் யோசித்துப்பார்த்தால், உங்களுக்குப் புதுத்தெம்பு கிடைக்கும், அவர்மேல் இருக்கிற நம்பிக்கையும் இன்னும் அதிகமாகும். (சங். 18:17-19) ஜோஷுவா என்ற ஒரு மூப்பர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “என்னோட ஜெபங்களுக்கு யெகோவா எப்படி பதில் கொடுத்திருக்குறார்னு கேட்டா, என்கிட்ட ஒரு பெரிய பட்டியலே இருக்கு. குறிப்பா நான் செஞ்ச ஜெபத்துக்கு யெகோவா எப்படி பதில் கொடுத்திருக்குறார்னு யோசிச்சுப் பாக்க இது எனக்கு உதவியா இருக்கு.” இதுவரைக்கும் யெகோவா நம் வாழ்க்கையில் செய்ததையெல்லாம் யோசித்துப்பார்க்கும்போது, கவலைகளை விரட்டியடிக்க புதுத்தெம்பு கிடைக்கும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 432 பாரா 2
கேருபீன்
அன்றிருந்த மற்ற தேசத்து மக்கள், இறக்கைகளை விரித்தபடி இருந்த பயங்கரமான உருவங்களை வணங்கினார்கள். வழிபாட்டுக் கூடாரத்தில் இருந்த கேருபீன்களின் உருவங்களும் பார்ப்பதற்கு அப்படித்தான் இருந்ததாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. அந்தக் கேருபீன்கள், மனித உருவத்தில் இருந்ததாக யூத பாரம்பரியம் சொன்னாலும் இதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. உண்மையில் அந்தக் கேருபீன்கள் ரொம்பவும் அழகான தேவதூதர்களுடைய உருவங்களைச் சித்தரித்த அருமையான கலைவேலைப்பாடாக இருந்தன. மோசேயிடம் யெகோவா சொன்ன “மாதிரியின்படியே,” அதாவது அதே நுணுக்கமான விவரத்தின்படியே அந்தக் கேருபீன்களின் உருவங்கள் செய்யப்பட்டன. (யாத் 25:9) பிராயச்சித்த மூடிமீது வைக்கப்பட்டிருந்த கேருபீன்களின் உருவங்கள் ‘மகிமையுள்ளதாக’ இருந்தன என்று அப்போஸ்தலன் பவுலும் சொன்னார். (எபி 9:5) இந்தக் கேருபீன்கள், யெகோவாவுடைய பிரசன்னத்துக்கு அடையாளமாக இருந்தன. சாட்சிப் பெட்டியின் மூடிக்கு மேலிருந்த இரண்டு கேருபீன்களுக்கு நடுவிலிருந்து யெகோவா பேசினார். (யாத் 25:22; எண் 7:89) “கேருபீன்களுக்கு மேலே [அல்லது, நடுவில்]” யெகோவா உட்கார்ந்திருப்பதாக பைபிள் சொல்கிறது. (1சா 4:4; 2சா 6:2; 2ரா 19:15; 1நா 13:6; சங் 80:1; 99:1; ஏசா 37:16) யெகோவா ஏறிப்போகிற அவருடைய ரதத்துக்கு அடையாளமாகவும் கேருபீன்கள் இருக்கிறார்கள். (1நா 28:18) அவர்களுடைய சிறகுகள், வேகமாகப் போவதற்கும் உதவி செய்கின்றன; பாதுகாப்பையும் தருகின்றன. யெகோவா தனக்கு உதவி செய்வதற்காக, “கேருபீனின் மேல் ஏறி . . . பறந்து வந்தார். தேவதூதரின் இறக்கைகள்மேல் காட்சி தந்தார்” என்று தாவீது சொன்னார்.—2சா 22:11; சங் 18:10.
மார்ச் 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 19-21
“வானம் கடவுளுடைய மகிமையைச் சொல்கிறது”
யெகோவாவின் மகிமையை அனைவரும் அறிவிப்பார்களாக!
ஈசாயின் மகன் தாவீது சிறுவனாக இருந்தபோது பெத்லகேமுக்கு அருகே ஆடுகளை மேய்த்து வந்தார். அமைதலான இரவு வேளையில், ஒதுக்குப்புறமான மேய்ச்சல் நிலங்களில் தனது தகப்பனாருடைய மந்தையை காவல் காத்துக் கொண்டிருந்தபோது, நட்சத்திரங்கள் மின்னும் பரந்துவிரிந்த வானத்தை அவர் எத்தனை முறை அண்ணாந்து பார்த்திருக்க வேண்டும்! 19-ம் சங்கீதத்தில் வரும் இந்த அழகான வார்த்தைகளை பரிசுத்த ஆவியின் ஏவுதலால் இயற்றியபோது அந்தப் பசுமையான நினைவுகள் அவருடைய மனத்திரையில் ஓடியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது . . . அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும் செல்லுகிறது” என அவர் பாடினார்.—சங்கீதம் 19:1, 4.
2 யெகோவாவின் படைப்பாகிய பிரமிக்க வைக்கும் வானங்கள் பேச்சின்றி, வார்த்தையின்றி, சத்தமின்றி இரவும் பகலும் அவருடைய மகிமையை அறிவிக்கின்றன. கடவுளுடைய மகிமையை அறிவிப்பதை படைப்பு ஒருபோதும் நிறுத்திவிடுவதில்லை. இந்த மௌனமான சாட்சி “பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும்” எல்லா குடிகளுக்கும் சென்றெட்டுவதை ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்பது நம்மை மிகவும் சிறியவர்களாக உணர வைக்கிறது. ஆனால், படைப்பின் மெளனமான இந்த சாட்சி மட்டும் போதாது. உண்மையுள்ள மனிதர்களும் அவற்றுடன் சேர்ந்து வாய் திறந்து சாட்சி கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். பெயர் குறிப்பிடப்படாத ஒரு சங்கீதக்காரன் உண்மையுள்ள வணக்கத்தாருக்கு கடவுளால் ஏவப்பட்ட இந்த வார்த்தைகளை சொன்னார்: ‘யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள். யெகோவாவின் திருநாமத்திற்குரிய மகிமையை அவருக்கே செலுத்துங்கள்.’ (சங்கீதம் 96:7, 8, தி.மொ.) யெகோவாவுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பவர்கள் இந்த அறிவுரைக்கு பெருமகிழ்ச்சியுடன் கீழ்ப்படிகிறார்கள். அப்படியானால் கடவுளுக்கு மகிமை செலுத்துவதில் என்ன உட்பட்டுள்ளது?
தேவனுடைய மகிமையை படைப்பு வெளிப்படுத்துகிறது!
8 அடுத்ததாக தாவீது யெகோவாவுடைய படைப்பின் மற்றொரு அற்புதத்தை விவரிக்கிறார்: “அவைகளில் [காணக்கூடிய வானங்களில்] சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப் போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.”—சங்கீதம் 19:4-6.
9 மற்ற நட்சத்திரங்களோடு ஒப்பிட சூரியன் நடுத்தரமான அளவுடையதுதான். ஆனாலும் இது குறிப்பிடத்தக்க ஒரு நட்சத்திரம் ஆகும்; அதனைச் சுற்றி வலம் வரும் கிரகங்கள் அதற்குப் பக்கத்தில் மிகச் சிறியவையாக தெரிகின்றன. “2-க்கு பக்கத்தில் 27 பூஜ்யங்கள் சேர்த்தால் எத்தனையோ அத்தனை டன் நிறையுடையது அது”—நம் முழு சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் அது 99.9 சதவீதம்! அதன் ஈர்ப்பு சக்தியினால் பூமி அதைவிட்டு தூர விலகாமலும் அதன் கிட்டே நெருங்காமலும் 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. சூரிய ஆற்றலில் சுமார் 200 கோடியில் ஒரு பங்குதான் நம் கிரகத்தை எட்டுகிறது; ஆனால் உயிரைக் காக்க அதுவே போதுமானது.
10 சங்கீதக்காரன் சூரியனை அடையாள மொழியில் குறிப்பிடுகிறார்; பகலில் ஒரு அடிவானத்திலிருந்து மறு அடிவானம் வரை ஓடி, இரவிலோ ‘கூடாரத்தில்’ தங்கும் ‘பராக்கிரமசாலியாக’ அதை அவர் சித்தரிக்கிறார். அந்த வல்லமைமிக்க நட்சத்திரம் அடிவானத்திற்கு கீழே இறங்கும்போது, பூமியிலிருந்து பார்க்கையில், அது இளைப்பாறுவதற்காக ஒரு ‘கூடாரத்திற்குள்’ போவதுபோல் தெரிகிறது. காலையில் ‘அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல்’ பிரகாசமாக திடீரென வெளியே வருகிறது. தாவீது மேய்ப்பனாக இருந்ததால் இரவின் கடுங்குளிரை நன்கு அறிந்திருந்தார். (ஆதியாகமம் 31:40) சூரியக் கதிர்கள் வேகமாக தன்னையும் தன்னைச் சூழ்ந்த நிலப்பரப்பையும் எவ்வாறு வெதுவெதுப்பாக்கும் என்பதை அவர் நினைவுகூர்ந்தார். நிச்சயமாகவே, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி “பயணிப்பதால்” சூரியன் களைப்படைவதில்லை; மாறாக அது “பராக்கிரமசாலியைப்போல்” மறுபடியும் பயணிக்க தயாராயிருக்கிறது.
g95 11/8 பக். 7 பாரா 3
மிகவும் அசட்டை செய்யப்பட்ட நமது காலத்து கலைஞர்
இயற்கையில் காணப்படும் கலைத் திறனுக்கான நம்முடைய போற்றுதலை அதிகரிப்பதானது, நம்மைச் சூழ்ந்திருக்கும் கைத்திறமுள்ள வேலைப்பாடுகளையெல்லாம் படைத்த நம்முடைய படைப்பாளரை அறிந்துகொள்ள நமக்கு உதவக்கூடும். கலிலேயாவில் வளர்ந்துவரும் காட்டு மலர்களைக் கூர்ந்து கவனிக்கும்படி இயேசு ஒரு சந்தர்ப்பத்தில் தம் சீஷர்களிடம் சொன்னார். அவர் சொன்னதாவது: “காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 6:28, 29) ஒரு அற்பமான காட்டு மலரின் அழகு, கடவுள் மனித குடும்பத்தின் தேவைகளை அசட்டை செய்யவில்லை என்பதை நமக்கு ஞாபகமூட்ட உதவக்கூடும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
“பழைய சுபாவத்தை” உங்களால் மாற்றிக்கொள்ள முடியும்
10 யெகோவாவின் நெறிமுறைகள்தான் மிகச் சிறந்தது என்பதை நம்புங்கள். யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிற விஷயங்களைச் செய்வதால் நமக்குத்தான் நன்மை. அவருடைய நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் சுயமரியாதையோடு வாழலாம். நம்முடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும். ரொம்ப சந்தோஷமாகவும் இருப்போம். (சங். 19:7-11) ஆனால், யெகோவாவின் நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனால் என்ன நடக்கும்? பாவ இயல்புக்குரிய செயல்களைச் செய்வதால் வருகிற பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஈலி என்பவருடைய அனுபவத்தைக் கவனியுங்கள். அவருடைய அப்பா-அம்மா யெகோவாவை ரொம்ப நேசித்தார்கள். அப்படிப்பட்ட குடும்பத்தில் வளர்ந்த ஈலி டீனேஜில் கெட்ட நண்பர்களுடன் பழக ஆரம்பித்தார். போதைப்பொருள்களை எடுத்துக்கொள்வது, ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வது, திருடுவது என்று மோசமான வாழ்க்கையும் வாழ ஆரம்பித்தார். போகப் போக ரொம்பக் கோபக்காரனாகவும் முரடனாகவும் ஆகிவிட்டதாக ஈலி சொல்கிறார். “எதையெல்லாம் செய்யக் கூடாதுனு அப்பா-அம்மா பைபிள்ல இருந்து சொல்லிக்கொடுத்தாங்களோ அதையெல்லாம் செஞ்சேன்” என்று அவர் சொல்கிறார். ஆனாலும், சின்ன வயதில் கற்றுக்கொண்ட விஷயங்களை ஈலி மறக்கவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, திரும்பவும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். கெட்ட பழக்கங்களை விடுவதற்கு கடினமாக முயற்சி செய்தார். 2000-ல் ஞானஸ்நானம் எடுத்தார். யெகோவாவின் நெறிமுறைகள்படி வாழ்ந்ததால் அவருக்கு என்ன நன்மை கிடைத்தது? “நான் இப்ப மன நிம்மதியோட, சுத்தமான மனசாட்சியோட வாழ்றேன்” என்று அவர் சொல்கிறார். இந்த அனுபவம் காட்டுகிறபடி, யெகோவாவின் நெறிமுறைகளை ஒதுக்கித் தள்ளுகிறவர்களுக்கு வேதனைதான் மிஞ்சும். ஆனாலும், அப்படிப்பட்டவர்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்கு உதவி செய்ய யெகோவா ஆசையாக இருக்கிறார்.
மார்ச் 25-31
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 22
இயேசுவின் மரணத்தைப் பற்றி பைபிளில் முன்பே சொல்லப்பட்ட விஷயங்கள்
அவர்கள் மேசியாவைக் கண்டுகொண்டார்கள்!
16 மேசியாவைக் கடவுள் கைவிட்டதுபோல் தோன்றும். (சங்கீதம் 22:1-ஐ வாசியுங்கள்.) இத்தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, “இயேசு ஒன்பதாம் மணிநேரத்தில் [மாலை சுமார் 3 மணிக்கு], ‘ஏலி, ஏலி, லாமா சபக்தானி?’ என்று உரத்த குரலில் சத்தமிட்டார்; அதற்கு, ‘என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?’ என்று அர்த்தம்.” (மாற். 15:34) தம் பரம தகப்பன்மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதால் இயேசு அப்படிச் சொல்லவில்லை. மரணத்தின்போது தமது எதிரிகளிடமிருந்து அவர் தம்மைக் காப்பாற்ற மாட்டார் என்று இயேசு அறிந்திருந்தார். தம்முடைய உத்தமத்தை முழுமையாய்ச் சோதிப்பதற்காகவே கடவுள் அப்படிச் செய்வார் என்பதை உணர்ந்திருந்தார். ஆகவே, இயேசு அவ்வாறு உரத்த குரலில் சத்தமிட்டதன் மூலம் சங்கீதம் 22:1-ஐ நிறைவேற்றினார்.
அவர்கள் மேசியாவைக் கண்டுகொண்டார்கள்!
13 மேசியா பழித்துப் பேசப்படுவார் என்று தாவீது முன்னுரைத்தார். (சங்கீதம் 22:7, 8-ஐ வாசியுங்கள்.) இயேசு கழுமரத்தில் வேதனைப்பட்டபோது பழித்துப் பேசப்பட்டார்; “அவ்வழியே போனவர்கள் ஏளனம் செய்கிற விதத்தில் தங்கள் தலைகளை ஆட்டி, ‘ஆலயத்தைத் தகர்த்துப்போட்டு மூன்று நாட்களில் கட்டப்போகிறவனே, உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! நீ கடவுளுடைய மகன் என்றால் கழுமரத்தைவிட்டு இறங்கி வா!’ என்று அவரைப் பழித்துப் பேசினார்கள்” என மத்தேயு எழுதினார். அதைப்போலவே, பிரதான குருமார்களும் வேத அறிஞர்களும் மூப்பர்களும் அவரைக் கேலி செய்து, “மற்றவர்களைக் காப்பாற்றினான், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவன் இஸ்ரவேலின் ராஜாவாம்; இப்போது கழுமரத்தைவிட்டுக் கீழே இறங்கி வருகிறானா பார்ப்போம், பிறகு இவனை நம்புவோம். இவன்தான் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறானே; ‘நான் கடவுளுடைய மகன்’ என்றுகூடச் சொன்னானே, அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்போது இவனைக் காப்பாற்றட்டும்” என்றார்கள். (மத். 27:39-43) இந்த எல்லா பாடுகள் மத்தியிலும் இயேசு அமைதியாக இருந்தார், தவறான எதையும் சொல்லவில்லை. நமக்கு எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி!
அவர்கள் மேசியாவைக் கண்டுகொண்டார்கள்!
14 மேசியாவின் உடைக்காகக் குலுக்கல் போடுவார்கள். “என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்” என்று சங்கீதக்காரன் தீர்க்கதரிசனமாக எழுதினார். (சங். 22:18) உண்மையில் நடந்ததும் அதுதான்; ரோமப் போர்வீரர்கள் இயேசுவை “கழுமரத்தில் அறைந்தபின், குலுக்கல் போட்டுப் பார்த்து அவருடைய மேலங்கிகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்.”—மத். 27:35; யோவான் 19:23, 24-ஐ வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நம் பரிசுத்த கூட்டங்களை மதித்தல்
7 நம்முடைய கூட்டங்களை மதிக்கிறோம் என்பதை வெளிப்படையாக காண்பிப்பதற்கு பல வழிகள் உள்ளன. ராஜ்ய பாடல்கள் பாடப்படும்போதே ஆஜராயிருப்பது ஒரு வழியாகும். அதில் பல பாடல்கள் ஜெபத்தின் வடிவில் இருப்பதால், அவற்றை நாம் மிகுந்த பயபக்தியோடு பாட வேண்டும். 22-ம் சங்கீதத்தை மேற்கோள் காட்டி, இயேசுவைக் குறித்து பவுல் பின்வருமாறு எழுதினார்: “உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன்.” (எபிரெயர் 2:12) ஆகவே, கூட்டத்தின் ஆரம்பத்தில் பாடல் எண்ணை சேர்மன் அறிவிப்பதற்கு முன்பே நம்முடைய இருக்கையில் அமர்ந்துவிட வேண்டும்; பாடல் வரிகளோடு மனம் ஒன்றி பாட வேண்டும்; இப்படிச் செய்வதை நாம் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். “செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்” என்று எழுதிய சங்கீதக்காரனைப் போலவே நாமும் பாடும்போது உணர வேண்டும். (சங்கீதம் 111:1) ஆம், யெகோவாவை துதிப்பதற்காக நாம் கூட்டங்களுக்கு முன்னதாகவே வந்து, அவை முடியும்வரை இருக்க வேண்டும்.
“சபை நடுவில்” யெகோவாவை துதியுங்கள்
முற்காலங்களில் இருந்ததைப் போலவே இன்றும், விசுவாசிகள் ஒவ்வொருவரும் “சபை நடுவில்” தங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்ய ஏற்பாடுகள் உள்ளன. சபை கூட்டங்களில் சபையாரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் சந்தர்ப்பம் அனைவருக்கும் இருப்பது அதில் ஒரு வழியாகும். பதில் சொல்வதில் அப்படி என்ன நன்மை இருக்கப்போகிறது என்று எண்ணி விடாதீர்கள். உதாரணமாக, பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது அல்லது தவிர்ப்பது என்பதை விளக்கும் பதில்கள், பைபிள் நியமங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நம் சகோதரர்களின் தீர்மானத்தை பலப்படுத்தும். மேற்கோள் காட்டப்படாமல் வெறுமனே குறிப்பிடப்பட்ட வசனங்களை விளக்கும் பதில்கள் அல்லது தனிப்பட்ட ஆராய்ச்சியில் கண்டறிந்த விஷயங்களை சேர்த்து சொல்லும் பதில்கள், இன்னும் நல்ல படிப்பு பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலை மற்றவர்களில் தூண்டலாம்.
ஏப்ரல் 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 23-25
‘யெகோவா என் மேய்ப்பர்’
யெகோவா நம் மேய்ப்பர்
9 முதலாவதாக, யெகோவா தம்முடைய மக்களை வழிநடத்துகிறார். தாவீது இவ்வாறு எழுதினார்: “அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.” (சங்கீதம் 23:2, 3) செழிப்பாக வளர்ந்திருக்கும் புற்களின் நடுவே அமைதியாகப் படுத்துக்கிடக்கும் ஒரு மந்தையை தாவீது இங்கே வர்ணிக்கிறார்; மனநிறைவை, புத்துணர்ச்சியை, பாதுகாப்பை வெளிப்படுத்துகிற ஒரு காட்சி இது. ‘புல்லுள்ள இடங்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை “இனிமையான இடம்” என்ற அர்த்தத்தையும் கொடுக்கலாம். அமைதியாகப் படுத்து, ஓய்வெடுத்து புத்துயிர் பெறுவதற்கான ஓர் இடத்தை ஆடுகளால் தானாகக் கண்டுபிடிக்க முடியாது என்றே சொல்லலாம். அத்தகைய ‘இனிமையான இடத்திற்கு’ மேய்ப்பர்கள்தான் அவற்றை வழிநடத்த வேண்டும்.
10 யெகோவா இன்று நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார்? ஒரு வழி, தம்முடைய முன்மாதிரியின் மூலமாகும். ‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாக’ ஆகும்படி அவருடைய வார்த்தை நம்மை ஊக்கப்படுத்துகிறது. (எபேசியர் 5:1) அந்த வசனத்தின் சூழமைவு தயவையும், மன்னிக்கிற குணத்தையும், அன்பையும் பற்றிக் குறிப்பிடுகிறது. (எபேசியர் 4:32; 5:2) நிச்சயமாகவே, அத்தகைய அருமையான குணங்களைக் காண்பிப்பதில் யெகோவா மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார். தம்மைப் பின்பற்றும்படி அவர் நம்மிடம் சொல்லும்போது, நம்மால் செய்ய முடியாத ஒன்றையா கேட்கிறார்? இல்லை. அந்த ஆலோசனை, நம்மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையே அருமையாக வெளிப்படுத்துகிறது. எவ்விதத்தில்? நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம், அதாவது தார்மீகப் பண்புகளுடனும் ஆன்மீக குணத்துடனும் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 1:26) எனவே, நாம் அபூரணர்களாக இருந்தாலும், யெகோவாவின் சிறந்த பண்புகளை வளர்த்துக்கொள்ளும் ஆற்றல் நமக்கு இருக்கிறது; இதை அவர் அறிந்திருக்கிறார். சற்று யோசித்துப் பாருங்கள்—நம்முடைய அன்பான கடவுளைப் போலவே நம்மால் இருக்க முடியுமென்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. அவருடைய முன்மாதிரியை நாம் பின்பற்றினால், அடையாள அர்த்தத்தில், ஓர் ‘இனிமையான இடத்திற்கு’ அவர் நம்மை வழிநடத்துவார். அப்போது, கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம் என்பதை அறிந்து, வன்முறைமிக்க இவ்வுலகின் மத்தியில்கூட மன சமாதானத்தில் நாம் ‘சுகமாய்த் தங்குவோம்.’—சங்கீதம் 4:8; 29:11.
w05 11/1 பக். 18, 19 பாரா. 13-15
யெகோவா நம் மேய்ப்பர்
13 தாவீது தன்னுடைய நம்பிக்கைக்கான இரண்டாவது காரணத்தைக் கொடுக்கிறார்: யெகோவா தம்முடைய ஆடுகளைப் பாதுகாக்கிறார். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.” (சங்கீதம் 23:4) தாவீது இங்கே “உமது” என்ற வார்த்தையை உபயோகித்து, யெகோவாவிடம் இன்னும் அன்யோன்யமாகப் பேசுகிறார், அதற்கு அடுத்த வசனத்தில் அவரை “நீர்” என்றும் அழைக்கிறார். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் இன்னல்களின்போது சகித்திருக்க தனக்கு யெகோவா எப்படி உதவினார் என்பதைப் பற்றியே அவர் இங்கு பேசிக்கொண்டிருக்கிறார். அநேக முறை ‘இருளின் பள்ளத்தாக்குகளை,’ ஆம், உயிருக்கு ஆபத்தான சமயங்களை, தாவீது கடந்துவந்திருந்தார். ஆனாலும் தன் மனதைப் பயம் கவ்விக்கொள்ள அவர் அனுமதிக்கவில்லை, காரணம், கடவுள் தமது ‘கோலுடனும்,’ ‘தடியுடனும்’ தயாராகத் தன்னோடு கூடவே வந்ததாக அவர் உணர்ந்தார். கடவுளுடைய பாதுகாப்பு இருக்கிறது என்ற உணர்வு தாவீதுக்கு ஆறுதலளித்தது, சந்தேகமில்லாமல் யெகோவாவிடம் அவரை நெருங்கிவரவும் செய்தது.
14 யெகோவா தம்முடைய ஆடுகளை இன்று எவ்வாறு பாதுகாக்கிறார்? எந்த எதிரியாலும், அது மனிதனாக இருந்தாலும் சரி, பிசாசாக இருந்தாலும் சரி, அவருடைய ஆடுகளை இந்தப் பூமியிலிருந்து அழித்துப்போட முடியாது என்று பைபிள் உறுதி அளிக்கிறது. யெகோவா ஒருகாலும் அதற்கு அனுமதிக்க மாட்டார். (ஏசாயா 54:17; 2 பேதுரு 2:9) ஆனால், நம்முடைய மேய்ப்பரான அவர் எல்லாத் தீங்குகளிலிருந்தும் நம்மைப் பாதுகாத்திடுவார் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. மனிதர்களுக்குச் சகஜமாக வரக்கூடிய சோதனைகளை நாம் அனுபவிக்கிறோம், மெய்க் கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் வருகிற எதிர்ப்பையும் நாம் சந்திக்கிறோம். (2 தீமோத்தேயு 3:12; யாக்கோபு 1:2, 3) அடையாள அர்த்தத்தில், ‘இருளின் பள்ளத்தாக்குகளில் நடக்க’ வேண்டிய சந்தர்ப்பம் சில சமயம் நமக்கு வரலாம். உதாரணத்திற்கு, துன்புறுத்தல் காரணமாகவோ ஏதோவொரு நோயின் காரணமாகவோ நாம் மரண வாசலை நெருங்கலாம். அல்லது நமக்குப் பிரியமான ஒருவர் மரித்துப்போகும் நிலையில் இருக்கலாம், அல்லது மரித்தே போயிருக்கலாம். அப்படிப்பட்ட இருண்ட சமயங்களில், நம்முடைய மேய்ப்பர் நம்மோடு இருந்து, நம்மைப் பாதுகாப்பார். எப்படி?
15 ஏதோ அற்புதகரமாக நம்முடைய விஷயத்தில் தலையிட்டு நம்மைப் பாதுகாக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனால் ஒன்றைக் குறித்து மட்டும் நிச்சயமாய் இருக்கலாம்: நாம் எதிர்ப்படுகிற எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க யெகோவா நமக்கு உதவுவார். “பலவிதமான சோதனைகளில்” நாம் சகித்திருப்பதற்கு வேண்டிய ஞானத்தை அவரால் அருள முடியும். (யாக்கோபு 1:2-5) ஒரு மேய்ப்பன் தன்னுடைய கோலையோ தடியையோ, காட்டு மிருகங்களைத் துரத்தியடிக்க மட்டுமல்ல, தன்னுடைய ஆடுகள் சரியான திசையில் செல்லும்படி மென்மையாய்த் தட்டுவதற்கும் பயன்படுத்துகிறான். அதேபோல, யெகோவாவும் நம்மை ‘தட்டிவிடலாம்,’ ஒருவேளை சக வணக்கத்தார் ஒருவரைப் பயன்படுத்தி வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பைபிள் ஆலோசனையைக் கொடுப்பதன் மூலம் யெகோவா நம்மைத் ‘தட்டிவிடலாம்.’ அதுமட்டுமல்ல, சகித்திருப்பதற்கு வேண்டிய பலத்தையும் அவர் நமக்குத் தரலாம். (பிலிப்பியர் 4:13, NW) தமது பரிசுத்த ஆவியின் மூலம் “இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை” கொடுத்து, நம்மைத் தயார்படுத்தலாம். (2 கொரிந்தியர் 4:7, NW) சாத்தான் நம்மீது கொண்டுவரும் எந்தவொரு சோதனையிலும் சகித்திருக்க கடவுளுடைய ஆவி நம்மைப் பலப்படுத்தும். (1 கொரிந்தியர் 10:13) நமக்கு உதவுவதற்காக யெகோவா எப்போதும் தயாராய் இருக்கிறார் என்பது ஆறுதலளிக்கிறது, அல்லவா?
யெகோவா நம் மேய்ப்பர்
17 தன்னுடைய மேய்ப்பர்மீது தனக்கிருக்கும் நம்பிக்கைக்கான மூன்றாவது காரணத்தை தாவீது இப்போது குறிப்பிடுகிறார்: யெகோவா தமது ஆடுகளைப் போஷிக்கிறார், அதுவும் அபரிமிதமாகப் போஷிக்கிறார். அதைப் பற்றி தாவீது இவ்வாறு எழுதுகிறார்: “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.” (சங்கீதம் 23:5) இந்த வசனத்தில், உணவையும் பானத்தையும் அபரிமிதமாகத் தந்து உபசரிக்கிற தாராள குணமுடைய ஒருவராக தன் மேய்ப்பரை தாவீது விவரிக்கிறார். கரிசனைமிக்க மேய்ப்பர் மற்றும் தாராளமாய் உபசரிப்பவர்—இந்த இரண்டு உவமைகளும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன. ஒரு நல்ல மேய்ப்பன் தன்னுடைய ஆடுகள் ‘எதிலும் குறைவுபடக் கூடாது’ என்பதற்காகச் செழுமையான புல்வெளி எங்கிருக்கிறது என்றும், போதுமான தண்ணீர் எங்கு கிடைக்குமென்றும் தெரிந்துவைத்திருப்பார் தானே!—சங்கீதம் 23:1, 2; NW.
18 நம்முடைய மேய்ப்பர் தாராளமாக உபசரிப்பவரா? அதிலென்ன சந்தேகம்! இப்போது நாம் அனுபவித்துவரும் ஆன்மீக உணவின் தரத்தையும், அளவையும், வகைகளையும் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பின் மூலம் யெகோவா நமக்குப் பயனுள்ள பிரசுரங்களையும், சபை கூட்டங்கள், வட்டார, மற்றும் மாவட்ட மாநாடுகள் ஆகியவற்றின் மூலமாக அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளையும் அளித்து வந்திருக்கிறார்; இவையெல்லாமே நம்முடைய ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றன. (மத்தேயு 24:45-47, NW) நிச்சயமாக, ஆன்மீக உணவுக்குப் பஞ்சமே இல்லை. ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார்’ கோடிக்கணக்கான பைபிள்களையும் பைபிள் படிப்புப் புத்தகங்களையும் தயாரித்திருக்கின்றனர்; அத்தகைய பிரசுரங்கள் இப்போது 413 மொழிகளில் கிடைக்கின்றன. இத்தகைய ஆன்மீக உணவை யெகோவா விதவிதமாக அளித்திருக்கிறார்—‘பாலிலிருந்து,’ அதாவது பைபிளின் அடிப்படைப் போதனைகளிலிருந்து, ‘பலமான ஆகாரமாகிய’ கருத்தாழமிக்க போதனைகள் வரைக்கும் ஏகப்பட்ட விதங்களில் பிரசுரங்களை அளித்திருக்கிறார். (எபிரெயர் 5:11-14) எனவே, பிரச்சினைகளைச் சந்திக்கையில் அல்லது தீர்மானங்களை எடுக்கையில், நமக்குக் குறிப்பாக எது தேவையோ அதை அந்தப் பிரசுரங்களில் பெரும்பாலும் நாம் காணலாம். அப்படிப்பட்ட ஆன்மீக உணவுமட்டும் இல்லாதிருந்தால் நாம் எப்படியெல்லாம் தவித்திருப்போம்? நம்முடைய மேய்ப்பர் உண்மையிலேயே மாபெரும் கொடைவள்ளல்தான்!—ஏசாயா 25:6; 65:13.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
முழு இருதயத்தோடு நீதியை நேசியுங்கள்
யெகோவா தமது வார்த்தையின் வாயிலாக... சக்தியின் வாயிலாக... தமது மக்களை “நீதியின் பாதைகளில்” அழைத்துச் செல்கிறார். (சங். 23:3) ஆனால், நாம் அபூரணராக இருப்பதால் நீதியின் பாதையிலிருந்து வழிவிலகி விடுகிறோம். சரியான பாதையில் செல்ல வேண்டுமானால் விடாமுயற்சி அவசியம். அந்தப் பாதையில் தொடர்ந்து வீறுநடை போட எது நமக்குக் கைகொடுக்கும்? இயேசுவைப் போல், நாம் நீதியை நேசிக்க வேண்டும்.—சங்கீதம் 45:7-ஐ வாசியுங்கள்.
2 ‘நீதியின் பாதைகள்’ என்பது என்ன? இந்தப் ‘பாதைகள்’ நம் வாழ்க்கைப் போக்கைக் குறிக்கின்றன. யெகோவாவின் நெறிகளே இதைத் தீர்மானிக்கின்றன. எபிரெய, கிரேக்க மொழிகளில், “நீதி” என்பது “நேர்மையை” குறிக்கிறது; ஒழுக்க நெறிகளை உறுதியாகக் கடைப்பிடிப்பதைக் குறிக்கிறது. யெகோவாவே ‘நீதியின் வாசஸ்தலமாய்’ இருக்கிறார்; அதனால், அவரை வழிபடுவோரும் தாங்கள் பின்பற்ற வேண்டிய செம்மையான பாதை எது என்பதைத் தீர்மானிக்க அவரையே நோக்கியிருப்பதில் அகமகிழ்கிறார்கள்.—எரே. 50:7.
3 கடவுளுடைய நீதியான நெறிகளுக்கு இசைவாக வாழ நாம் ஊக்கமாய் முயற்சி செய்தால்தான் அவரை முழுமையாய்ப் பிரியப்படுத்த முடியும். (உபா. 32:4) இதற்காக, முதலில் யெகோவா தேவனைப் பற்றி அவரது வார்த்தையாகிய பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளத் தீவிர முயற்சி எடுக்க வேண்டும். அவரைப் பற்றி எந்தளவு அறிந்துகொள்கிறோமோ... அவரிடம் அனுதினமும் எந்தளவு அண்டி வருகிறோமோ... அந்தளவு அவரது நீதியை நேசிப்போம். (யாக். 4:8) அதோடு, வாழ்க்கையில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய கட்டத்தில், கடவுளுடைய சக்தியால் அருளப்பட்ட வார்த்தை தரும் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 26-28
யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க தாவீது என்ன செய்தார்?
உத்தமத்தில் நடந்திடுங்கள்
8 “கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப் பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் [அதாவது, சிறுநீரகங்களையும்] என் இருதயத்தையும் புடமிட்டுப் பாரும்” என தாவீது ஜெபம் செய்தார். (சங்கீதம் 26:2) சிறுநீரகங்கள் உடலில் மிக உள்ளே அமைந்திருக்கும் உறுப்புகளாகும். ஆகவே அடையாளப்பூர்வ சிறுநீரகங்கள் ஒருவரது உள்ளார்ந்த சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் குறிக்கின்றன. அவ்வாறே, அடையாளப்பூர்வ இருதயமானது உள்ளத் தூண்டுதல்கள், உணர்ச்சிகள், அறிவுத்திறன் என அனைத்தும் சேர்ந்த உள்ளான மனிதனைக் குறிக்கிறது. தன்னைச் சோதித்துப் பார்க்கும்படி யெகோவாவிடம் தாவீது வேண்டியபோது, தன் உள்ளார்ந்த சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் கூர்ந்து ஆராயும்படியே கேட்டுக்கொண்டார்.
9 தாவீது, தன் சிறுநீரகங்களையும் இருதயத்தையும் புடமிட்டுப் பார்க்கும்படி யெகோவாவிடம் கெஞ்சினார். நம் உள்ளார்ந்த இயல்பை யெகோவா எவ்வாறு புடமிடுகிறார்? தாவீது இவ்வாறு பாடினார்: “எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும் [“திருத்தும்,” NW].” (சங்கீதம் 16:7) இதன் அர்த்தம் என்ன? தெய்வீக ஆலோசனை தாவீதினுடைய உள்ளார்ந்த சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் எட்டி, அங்கேயே தங்கி, அவற்றைத் திருத்தின என்பதே இதன் அர்த்தம். தெய்வீக ஆலோசனை நம்மையும் அதேபோல் திருத்த முடியும்; அதற்காக கடவுளுடைய வார்த்தை, அவரது பிரதிநிதிகள், அவரது அமைப்பு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் ஆலோசனைகளை நன்றியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்; அவை நம்மில் உள்ளூர பதிந்திட அனுமதிக்கவும் வேண்டும். அதோடு, இவ்வகையில் நம்மை புடமிடும்படி தவறாமல் யெகோவாவிடம் கேட்பதும் உத்தமத்தில் நடக்க நமக்கு உதவும்.
உத்தமத்தில் நடந்திடுங்கள்
12 தாவீது தன் உத்தமத்தை பலப்படுத்திய மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டார்; “வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் [அதாவது, தங்கள் சுயரூபத்தை மறைப்பவர்களிடத்தில்] நான் சேருவதில்லை. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்” என்று கூறினார். (சங்கீதம் 26:4, 5) தாவீது துன்மார்க்கரோடு உட்காரவே இல்லை. கெட்ட தோழமையை அவர் அறவே வெறுத்தார்.
13 இவ்விஷயத்தில் நாம் எப்படி இருக்கிறோம்? டிவி நிகழ்ச்சி, வீடியோ, சினிமா, இன்டர்நெட் போன்றவற்றின் மூலம் வீணரோடு உட்காருகிறோமா அல்லது உட்கார மறுக்கிறோமா? சுயரூபத்தை மறைத்துக்கொள்ளும் வஞ்சகரை விட்டு விலகியிருக்கிறோமா? பள்ளியில் அல்லது அலுவலகத்தில் சிலர் நண்பர்கள் போல் நம்மிடம் கபடநாடகம் ஆடலாம். கடவுளுடைய சத்திய பாதையில் நடக்காத அப்படிப்பட்டவர்களோடு நெருக்கமாகப் பழக நாம் விரும்புகிறோமா? விசுவாச துரோகிகள்கூட, தாங்கள் நேர்மையானவர்களென சொல்லிக்கொள்வார்கள்; உண்மையில், யெகோவாவுக்குச் சேவை செய்வதிலிருந்து நம்மை வழிவிலக வைப்பதற்காகத் தங்கள் கெட்ட எண்ணத்தை மூடி மறைப்பார்கள். மேலும், கிறிஸ்தவ சபையில் சிலர் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்களா? அவர்களும் தங்கள் சுயரூபத்தை மறைத்துக்கொள்கிறார்கள். உதவி ஊழியரான ஜேசன் என்ற சகோதரருக்கு இளம் பிராயத்தில் அப்படிப்பட்ட சில நண்பர்கள் இருந்தார்கள்; அவர்களைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஒருநாள் ஒருவன் என்னிடம் இப்படி சொன்னான்: ‘நாம் இப்போது எப்படி நடந்துகொள்கிறோம் என்பது முக்கியமே இல்லை, ஏனென்றால் புதிய உலகம் வரும்போதுதான் செத்துவிடுவோமே, எதையோ அனுபவிக்காம போயிட்டோம் என்ற உணர்வுகூட நமக்கு இருக்காதே.’ இப்படிப்பட்ட பேச்சைக் கேட்டதும்தான் எனக்கு சுரீர் என்று உறைத்தது. புதிய உலகம் வரும்போது உயிரோடு இருக்க வேண்டுமென்றுதான் எனக்கு ஆசை.” ஆகவே ஜேசன் புத்திசாலித்தனமாக அப்படிப்பட்ட தோழர்களை விட்டு விலகினார். “ஏமாந்து போகாதீர்கள். கெட்ட தோழர்கள் நல்ல பழக்கவழக்கங்களை கெடுப்பார்கள்” என அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தார். (1 கொரிந்தியர் 15:33, NW) கெட்ட தோழர்களைத் தவிர்ப்பது எவ்வளவு அவசியம்!
உத்தமத்தில் நடந்திடுங்கள்
17 பலிபீடம் வைக்கப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரம் இஸ்ரவேலில் யெகோவாவின் வணக்கத்திற்கான மைய இடமாக இருந்தது. அந்த இடத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக தாவீது இவ்வாறு யெகோவாவிடம் சொன்னார்: “ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்புகின்றேன்; உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்.”—சங்கீதம் [திருப்பாடல்கள்] 26:8, பொது மொழிபெயர்ப்பு.
18 யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதற்காக நாம் கூடிவரும் இடங்களை அதிகம் விரும்புகிறோமா? ஆன்மீக போதனை அளிக்கப்படும் இடமாகிய ஒவ்வொரு ராஜ்ய மன்றமும் அந்தந்தப் பகுதியில் உண்மை வணக்கத்திற்கான மையமாகத் திகழ்கிறது. அதோடு, ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட மாநாடுகளும் வட்டார மாநாடுகளும் விசேஷ மாநாட்டு தினங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு யெகோவாவின் ‘நினைப்பூட்டுதல்கள்’ கலந்தாலோசிக்கப்படுகின்றன. அவற்றை ‘மிக அதிகமாய் நேசிக்க’ கற்றுக்கொண்டால், அப்படிப்பட்ட கூட்டங்களுக்குச் செல்லவும் அங்கு சொல்லப்படுபவற்றை கூர்ந்து கவனிக்கவும் ஆர்வமாக இருப்போம். (சங்கீதம் 119:167, NW) நம்முடைய நலனில் அக்கறை காட்டி, தொடர்ந்து உத்தமத்தில் நடந்திட உதவிசெய்யும் உடன் விசுவாசிகளோடு இருப்பது எப்பேர்ப்பட்ட புத்துணர்ச்சி அளிக்கிறது!—எபிரெயர் 10:24, 25.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
துன்பப்படுகிறவர்களை யெகோவா விடுவிக்கிறார்
15 சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு பாடினார்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (சங்கீதம் 27:10) எந்த மனிதப் பெற்றோரைக் காட்டிலும் யெகோவாவின் அன்பு மிக மேலானது என்பதை அறியும்போது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! பெற்றோரால் ஒதுக்கப்படுவது, மோசமாக நடத்தப்படுவது, கைவிடப்படுவது ஆகியவை வேதனையைத் தந்தாலும், அது யெகோவாவின் அன்பை எள்ளளவும் குறைத்துப்போடுவதில்லை. (ரோமர் 8:38, 39) கடவுள் தமக்குப் பிரியமானவர்களை தம்மிடமாக இழுத்துக்கொள்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். (யோவான் 3:16; 6:44) மனிதர்கள் உங்களை எப்படி நடத்தினாலும் சரி, உங்கள் பரலோகத் தகப்பன் உங்களை நேசிக்கிறார்.
ஏப்ரல் 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 29-31
கண்டிப்பு—யெகோவாவின் அன்புக்கு ஒரு அடையாளம்
it-1-E பக். 802 பாரா 3
முகம்
‘முகத்தை மறைப்பது’ என்ற வார்த்தை, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி வித்தியாசமான அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யெகோவா அவருடைய முகத்தை மூடிக்கொள்கிறார், அதாவது மறைத்துக்கொள்கிறார், என்றால் கீழ்ப்படியாத ஒருவரிடமிருந்து அல்லது இஸ்ரவேல் மக்கள் மாதிரி ஒரு தொகுதியிடமிருந்து யெகோவா அவருடைய ஆதரவை எடுத்துவிடுகிறார் என்று அர்த்தம். (யோபு 34:29; சங் 30:5-8; ஏசா 54:8; 59:2) சிலசமயங்களில், சரியான சமயத்தில் பதில் கொடுப்பதற்காகக் காத்துக்கொண்டிருப்பதால், யெகோவா எதுவும் சொல்லாமல் அல்லது செய்யாமல் இருப்பதைக் காட்டுவதற்காகவும் இந்த வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (சங் 13:1-3) செய்த தவறுக்காக தாவீது யெகோவாவிடம் மன்னிப்பு கேட்டபோது, “என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி உங்கள் முகத்தைத் திருப்பிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்.—சங் 51:9; சங் 10:11-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
யெகோவாவுக்குக் காத்திருப்பதில் மகிழ்ச்சி
யெகோவா தரும் சிட்சையிலிருந்து கிடைக்கும் பலனை ஒரு காய் கனிந்து பழமாவதற்கு ஒப்பிடலாம். கடவுள் தரும் சிட்சை சம்பந்தமாக பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அதில் பழகினவர்களுக்கு [அதாவது, பயிற்சி பெற்றவர்களுக்கு] அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” (எபிரெயர் 12:11) ஒரு பழம் கனிவதற்குக் காலம் எடுப்பதைப்போல, கடவுள் தரும் பயிற்சியை ஏற்று நம் மனப்பான்மைகளை மாற்றிக்கொள்வதற்கும் காலம் எடுக்கிறது. உதாரணமாக, நம்முடைய தவறான நடத்தையினால் சபையில் சில பொறுப்புகளை இழந்துவிடுவோமானால், கடவுளுக்காகக் காத்திருக்க மனமுள்ளவராய் இருப்பது சோர்ந்துவிடாமலும் நம்பிக்கை இழக்காமலும் இருக்க நமக்கு உதவும். அத்தகைய சந்தர்ப்பங்களில், தேவ ஆவியால் தாவீது எழுதிய பின்வரும் வார்த்தைகள் நமக்குத் தெம்பூட்டுகின்றன: “அவருடைய [கடவுளுடைய] கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.” (சங்கீதம் 30:5) காத்திருக்கும் மனப்பான்மையை வளர்த்து, கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் அமைப்பிலிருந்தும் கிடைக்கிற ஆலோசனையைப் பின்பற்றினால், “களிப்புண்டாகும்” காலம் நமக்கும் வரும்.
உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால் என்ன?
18 சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் உண்மையிலேயே மனம் திருந்தியிருந்தால், தவறாமல் கூட்டங்களுக்கு வருவார். மூப்பர்கள் கொடுத்த ஆலோசனையின்படி எப்போதும் ஜெபம் செய்வார், தவறாமல் பைபிளைப் படிப்பார். பாவம் செய்வதற்கு என்னென்ன சூழ்நிலைகள் காரணமாக இருந்தனவோ அவற்றையெல்லாம் தவிர்ப்பார். யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைச் சரிசெய்வதற்கு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தால் யெகோவா தன்னை மன்னிப்பார் என்றும், சபையில் மறுபடியும் ஒருவராக ஆவதற்கு மூப்பர்கள் உதவி செய்வார்கள் என்றும் அவர் நம்பலாம். சபைநீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொருவருடைய விஷயமும் வித்தியாசமானது. அதனால், ஒருவரை சபையில் திரும்பவும் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு, மூப்பர்கள் நன்றாக யோசித்துப்பார்த்து கவனமாக முடிவெடுப்பார்கள். அதே சமயத்தில், அவரிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்து அவரை சபையில் சேர்க்காமலும் இருக்க மாட்டார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
wp23 எண் 1 பக். 6 பாரா 3
கடவுளிடம் பேசுங்கள்—“உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்”
யெகோவாவிடம் பேசும்போது, அவருக்கு நம்மேல் அக்கறை இருக்கிறது என்ற நம்பிக்கை அதிகமாகிறது. ஒரு கவிஞர் இப்படி எழுதினார்: “நான் படுகிற கஷ்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். என் அடிமனதிலுள்ள வேதனையை அறிந்திருக்கிறீர்கள்.” (சங்கீதம் 31:7) ஜெபம் செய்யும்போது நாமும் இந்த கவிஞரை மாதிரியே உணர்வோம். நம் கஷ்டங்களை யெகோவா பார்க்கிறார் என்பதை தெரிந்துகொள்வதே, அவற்றை சமாளிக்க பலம் தரும். யெகோவா அந்த கஷ்டங்களை வெறுமனே பார்த்துவிட்டு சும்மா இருந்துவிட மாட்டார். அவர் நம்மை புரிந்துகொள்கிறார். நமக்கு தேவையான ஆறுதலும் உற்சாகமும் பைபிள் மூலம் கிடைப்பதற்கு வழி செய்கிறார்.
ஏப்ரல் 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 32-33
மோசமான பாவத்தை ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும்?
w93-E 3/15 பக். 9 பாரா 7
யெகோவாவுடைய இரக்கம் துக்கத்திலிருந்து நம்மை தூக்கி நிறுத்தும்
7 நாம் ஏதாவது மோசமான பாவத்தைச் செய்துவிட்டோம் என்றால், அதை ஒத்துக்கொண்டு வெளிப்படையாகச் சொல்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதை யெகோவாவிடம் சொல்வதுகூட கஷ்டமாக இருக்கலாம். செய்த தவறைச் சொல்லாமல் அமைதியாக இருந்தபோது தாவீதுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்று சங்கீதம் 32-ல் அவரே சொல்லியிருக்கிறார். “நான் எதையும் வெளியே சொல்லாத வரைக்கும், நாளெல்லாம் குமுறிக் குமுறியே என் எலும்புகள் தளர்ந்துபோயின. ராத்திரி பகலாக உங்களுடைய கை என்னை அழுத்திக்கொண்டே இருந்தது. கோடை வெயிலில் வற்றிப்போகும் தண்ணீர்போல் என் சக்தியெல்லாம் வற்றிப்போனது” என்று அவர் சொன்னார். (சங்கீதம் 32:3, 4) தாவீது அவருடைய பாவத்தை மறைக்க நினைத்தபோது, குற்ற உணர்ச்சியினால் துடித்துப்போய்விட்டார். உடலளவிலும் மனதளவிலும் அவரால் அந்த வலியைத் தாங்கவே முடியவில்லை. கோடை காலத்தில் காய்ந்துபோன மரம்போல் ஆகிவிட்டார். அதனால் அவருடைய சந்தோஷமும் காணாமல் போனது. நாம் அவருடைய சூழ்நிலையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
‘மன்னிக்க தயாராயிருக்கிற’ கடவுள்
8 மனந்திரும்பிய தாவீது இவ்வாறு கூறினார்: ‘நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; . . . தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.’ (சங்கீதம் 32:5) “மன்னித்தீர்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை, “தூக்கியெடு” அல்லது “சுமந்துசெல்” என அடிப்படையில் அர்த்தப்படுத்துகிறது. இங்கே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது, “குற்றத்தை, பாவத்தை, மீறுதலை” நீக்கிவிடுவதைக் குறிக்கிறது. ஆகவே, தாவீதின் பாவங்களை யெகோவா தூக்கியெடுத்து சுமந்து சென்றதாக சொல்லலாம். இது, தாவீது சுமந்து கொண்டிருந்த குற்றவுணர்ச்சிகளை தணித்தது என்பதில் சந்தேகமே இல்லை. (சங்கீதம் 32:3) இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைத்து, மன்னிப்பை நாடுகிறவர்களுடைய பாவங்களை சுமந்து செல்கிற இப்படிப்பட்ட கடவுளில் நாமும் முழு நம்பிக்கை வைக்கலாம்.—மத்தேயு 20:28.
ஆவிக்குரிய சுகத்தை அளிக்கும் பாவ அறிக்கை
தாவீது பாவத்தை அறிக்கையிட்ட பின்பு, தன்னை தகுதியற்றவராக கருதி நம்பிக்கையற்ற மனநிலையை வளர்த்துக்கொள்ளவில்லை. அவ்வாறு எல்லாவற்றையும் அறிக்கை செய்த பின்பு எழுதின சங்கீதங்களில் அவர் சொன்ன வார்த்தைகள், அவர் பெற்ற மனநிம்மதியையும், கடவுளை உண்மையுடன் சேவிப்பதற்கான அவருடைய தீர்மானத்தையும் வெளிப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு சங்கீதம் 32-ஐ ஆராய்வோம். முதலாம் வசனத்தில், “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான் [“சந்தோஷமுள்ளவன்,” NW]” என வாசிக்கிறோம். எவ்வளவு மோசமான பாவத்தை ஒருவர் செய்திருந்தாலும் உண்மையான மனந்திரும்புதலைக் காட்டுகையில் சந்தோஷமான பலனை பெற முடியும். இப்படிப்பட்ட உண்மையான மனந்திரும்புதலைக் காட்ட ஒரு வழி, தாவீதைப் போல் தன் செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகும். (2 சாமுவேல் 12:13) யெகோவாவுக்கு முன்பாக தான் செய்தது சரியே என நிரூபிக்கவோ பழியை மற்றவர்கள்மீது சுமத்தவோ அவர் முயலவில்லை. “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன். என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன். தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” என 5-ம் வசனம் சொல்கிறது. மனந்திறந்து அறிக்கையிடுவது மனசமாதானத்தைத் தருகிறது; எனவே கடந்த கால தவறுகளின் நிமித்தம் வாட்டி வதைக்கும் மனசாட்சியின் உறுத்துதலை ஒருவர் இனிமேலும் அனுபவிக்க வேண்டியதில்லை.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—முதல் பகுதி
33:6—யெகோவாவுடைய ‘வாயின் சுவாசம்,’ என்பது என்ன? இது யெகோவாவின் செயல் நடப்பிக்கும் சக்தியை, அதாவது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது; இதைப் பயன்படுத்தியே வானத்தை அவர் படைத்தார். (ஆதியாகமம் 1:1, 2) பலமான சுவாசத்தைப்போல யெகோவாவின் ஆவியும் தொலைதூரம்வரை சென்று அவர் நினைத்தவற்றைச் சாதிப்பதால் அது அவருடைய வாயின் சுவாசம் என அழைக்கப்படுகிறது.
ஏப்ரல் 29–மே 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 34-35
‘எல்லா சமயத்திலும் யெகோவாவைப் புகழுங்கள்’
நாம் ஒருமித்து யெகோவாவின் பெயரை உயர்த்துவோமாக
11 “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.” (சங்கீதம் 34:1) நாடோடியாக அலைந்து கொண்டிருந்ததால், பொருளாதார தேவைகளைப்பற்றிய பல கவலைகள் தாவீதுக்கு இருந்திருக்கும். என்றாலும், யெகோவாவைத் துதிக்க வேண்டுமென்ற தீர்மானத்தில் அவர் கொஞ்சமும் தளர்ந்துவிடவில்லை என்பதையே இவ்வார்த்தைகள் காண்பிக்கின்றன. பிரச்சினைகளை எதிர்ப்படுகையில் நாம் பின்பற்றுவதற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி! பள்ளியிலோ, வேலை செய்யுமிடத்திலோ, சக கிறிஸ்தவர்களோடு இருக்கையிலோ, ஊழியத்திலோ எங்கிருந்தாலும் யெகோவாவைத் துதிக்க வேண்டுமென்ற விருப்பமே எப்போதும் நம் மனதில் மேலோங்கி இருக்க வேண்டும். அவரைத் துதிப்பதற்கு நமக்கு எத்தனை எத்தனை காரணங்கள் இருக்கின்றன என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! உதாரணமாக, யெகோவாவின் மலைக்க வைக்கும் படைப்புகளில் புதிது புதிதாய் கண்டுபிடித்து மகிழ்வதற்கு எல்லையே இல்லை. அதோடு, யெகோவா தம்முடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தின் மூலமாக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்! அபூரணர்களாக இருக்கிறபோதிலும், தமக்கு உண்மையுள்ளவர்களைப் பெரிய பெரிய காரியங்களைச் செய்ய யெகோவா இந்தக் காலங்களில் பயன்படுத்தியிருக்கிறார். இந்த உலகம் பூஜிக்கிற ஆட்களின் சாதனைகளை கடவுளுடைய செயல்களோடு ஒப்பிட முடியுமா? “ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை” என்ற தாவீதின் வார்த்தைகளை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?—சங்கீதம் 86:8.
நாம் ஒருமித்து யெகோவாவின் பெயரை உயர்த்துவோமாக
13 “கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.” (சங்கீதம் 34:2) தாவீது தன்னுடைய சாதனைகளைப்பற்றி இங்கே பெருமையடிக்கவில்லை. உதாரணமாக, தான் காத் பட்டணத்தின் ராஜாவை ஏமாற்றிய விதத்தைப்பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லை. காத்தில் இருந்தபோது தன்னை யெகோவா பாதுகாத்தார் என்பதையும், அவருடைய உதவியால்தான் தப்பிக்க முடிந்தது என்பதையும் தாவீது உணர்ந்திருந்தார். (நீதிமொழிகள் 21:1) ஆகையால், தாவீது தன்னைக் குறித்து அல்ல, மாறாக யெகோவாவைக் குறித்தே பெருமையாகப் பேசினார். அவர் இப்படிச் செய்ததால் மனத்தாழ்மையுள்ளோர் கடவுளிடம் ஈர்க்கப்பட்டார்கள். அதைப்போல் இயேசுவும் யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்தினார். ஆகையால், தாழ்மையும் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும் உள்ளவர்கள் கடவுளிடமாகக் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். இன்று, எல்லா நாடுகளையும் சேர்ந்த தாழ்மையுள்ளோர் கிறிஸ்துவின் தலைமையின்கீழ் செயல்படும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அடங்கிய சர்வதேச சபையிடம் ஈர்க்கப்படுகிறார்கள். (கொலோசெயர் 1:18) கடவுளுடைய மனத்தாழ்மையுள்ள ஊழியர்கள் அவரைத் துதிப்பதைக் கேட்கையிலும், பரிசுத்த ஆவியின் உதவியோடு பைபிளிலுள்ள விஷயங்களைப் புரிந்துகொள்கையிலும் அவர்களுடைய மனம் தூண்டப்படுகிறது.—யோவான் 6:44; அப்போஸ்தலர் 16:14.
நாம் ஒருமித்து யெகோவாவின் பெயரை உயர்த்துவோமாக
15 “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.” (சங்கீதம் 34:4) இந்த அனுபவம் தாவீதுக்கு முக்கியமானதாய் இருந்தது. ஆகையால், “இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்” என்று அவர் குறிப்பிட்டார். (சங்கீதம் 34:6) சக விசுவாசிகளோடு கூடிவரும்போது, கடினமான சூழ்நிலைகளைச் சகித்துக்கொள்ள யெகோவா நமக்கு எப்படி உதவியிருக்கிறார் என்பதைப் பற்றிய உற்சாகமூட்டும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள நமக்கு அநேக வாய்ப்புகள் கிடைக்கின்றன. தாவீதின் வார்த்தைகள் அவருடைய ஆதரவாளர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தியதைப் போலவே, நம்முடைய உற்சாகமூட்டும் அனுபவங்களும் நம் சக வணக்கத்தாரை ஊக்கப்படுத்துகின்றன. தாவீதின் விஷயத்தில், அவருடைய தோழர்கள் “[யெகோவாவை] நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.” (சங்கீதம் 34:5) சவுல் ராஜாவிடமிருந்து தப்பித்து நாடோடியாக அலைந்துகொண்டிருந்தபோதிலும், அவர்கள் வெட்கப்படவில்லை. தாவீதுக்கு யெகோவா துணை நிற்கிறார் என்பதில் அவர்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது; ஆகவே, அவர்களுடைய முகங்கள் பிரகாசித்தன. அதேபோல, புதிதாகச் சத்தியத்தில் ஆர்வம் காட்டுகிறவர்களும், அதிக காலம் உண்மைக் கிறிஸ்தவர்களாக இருப்பவர்களும் யெகோவாவின் உதவியையே எதிர்நோக்கியிருக்கிறார்கள். அவருடைய உதவியைத் தனிப்பட்ட விதமாக ருசித்திருப்பதன் காரணமாக, உண்மையோடு நிலைத்திருக்க வேண்டுமென்ற உறுதி அவர்களுடைய முகங்களில் பிரகாசிக்கிறது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—முதல் பகுதி
35:19—சத்துருக்கள் தன்னைப் பார்த்து கண் சிமிட்டாமல் இருக்கும்படி கடவுளிடம் தாவீது மன்றாடியதன் அர்த்தம் என்ன? கண் சிமிட்டுவது, தாவீதின் விரோதிகள் அவருக்கு எதிராக தீய திட்டங்கள் தீட்டி அவற்றில் வெற்றி பெற்று மகிழ்ச்சி அடைந்ததை அர்த்தப்படுத்தியிருக்கலாம். அவர்கள் அப்படிச் செய்யாதிருப்பதற்காக தாவீது மன்றாடினார்.