வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
ஜூலை 7-13
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 21
சந்தோஷமான மணவாழ்வுக்கு உதவும் ஞானமான ஆலோசனைகள்
நீங்கள் எவ்வாறு ஞானமான தீர்மானங்கள் எடுக்க முடியும்?
அவசரப்பட்டு எடுக்கப்படும் தீர்மானங்கள் எளிதில் ஞானமற்ற தீர்மானங்களாக ஆகிவிடக்கூடும். நீதிமொழிகள் 21:5 (பொது மொழிபெயர்ப்பு) இவ்வாறு எச்சரிக்கிறது: “திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற்றத்துடன் வேலை செய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.” உதாரணமாக, மோக வலைக்குள் கிடக்கும் பருவ வயதினர் சட்டுபுட்டென்று கல்யாணம் பண்ணிக்கொள்வதற்குப் பதிலாக ஆற அமர யோசித்துப் பார்ப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த வில்லியம் காங்ரீவ் என்ற ஆங்கில நாடகாசிரியர் கூறிய வார்த்தைகளின் உண்மையை அனுபவிக்க நேரிடலாம். அவர் இவ்வாறு கூறினார்: “அவசரப்பட்டு மணம் முடித்தால், சாவகாசமாக வேதனைப்படலாம்.”
கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க...
மனத்தாழ்மையாக இருங்கள். “எதையும் பகையினாலோ வறட்டு கௌரவத்தினாலோ செய்யாமல், மனத்தாழ்மையினால் செய்யுங்கள். மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்.” (பிலிப்பியர் 2:3) ஒரு பிரச்சினை வந்தால் அதைச் சரிசெய்வதற்கு கணவனும் மனைவியும் ஒன்றுசேர்ந்து மனத்தாழ்மையாக முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் ஒருவர்மேல் ஒருவர் பழிப்போடுவதால்தான் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது. அதற்குப் பதிலாக, கணவனும் மனைவியும் மனத்தாழ்மையாக இருந்தால், தங்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று வாக்குவாதம் செய்ய நினைக்க மாட்டார்கள்.
“உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு”
13 மணத்துணைகள் ஒருவரையொருவர் நடத்தும் விதத்தினால் மணவாழ்வு பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? தீர்வுகாண முயற்சி தேவை. உதாரணமாக, அன்பற்ற விதத்தில் பேசிக்கொள்ள ஆரம்பித்து கடைசியில் அதுவே வாழ்க்கையின் பாகமாகிவிடலாம். (நீதிமொழிகள் 12:18) முந்தைய கட்டுரையில் பார்த்தபடி, இது பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பைபிளில் ஒரு நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.” (நீதிமொழிகள் 21:19) நீங்கள் ஒரு மனைவியாக இருந்தால், உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் கணவர் என்னோடு நேரம் செலவிட விரும்பாததற்கு என்னுடைய குணம்தான் காரணமா?’ கணவர்களுக்கு பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.” (கொலோசெயர் 3:19) நீங்கள் ஒரு கணவராக இருந்தால் உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் மனைவியிடம் அன்பற்ற முறையில் நடந்துகொள்வதால் ஆறுதல் தேடி அவள் வேறொருவரிடம் செல்வதற்கு நானே காரணமாகி விடுகிறேனா?’ பாலியல் ஒழுக்கக்கேட்டை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதுதான். ஆனாலும், அப்படியொரு காரியம் நிகழ்வதற்கு முன்பே பிரச்சினைகளைக் குறித்து மனந்திறந்து பேசுவதே நல்லது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய முற்காட்சிகள் நிஜம் ஆகின்றன
9 கழுதைக்குட்டியின் மீது பவனி வருகிற சாதாரண நபராக இயேசு இப்போது இல்லை, அவர் தற்போது வல்லமைமிக்க ஒரு ராஜாவாக இருக்கிறார். அவர் குதிரை மீதேறி வருவதாக பைபிளில் வர்ணிக்கப்படுகிறார்; அடையாள அர்த்தத்தில் குதிரை என்பது போரைக் குறிக்கிறது. (நீதிமொழிகள் 21:31) “இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்” என்று வெளிப்படுத்துதல் 6:2 சொல்கிறது. மேலும், இயேசுவைப் பற்றி சங்கீதக்காரனான தாவீது இவ்வாறு எழுதினார்: “கர்த்தர் சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்யும்.”—சங்கீதம் 110:2.
ஜூலை 14-20
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 22
பிள்ளைகளை வளர்க்க உதவும் ஞானமான ஆலோசனைகள்
வளர்ந்த பிறகும் உங்கள் பிள்ளைகள் யெகோவாவுக்கு சேவை செய்வார்களா?
7 இப்போது, உங்களுடைய விஷயத்துக்கு வரலாம். நீங்கள் கல்யாணமானவரா? குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நாங்க யெகோவாவையும் அவரோட வார்த்தையையும் நேசிக்கிற மனத்தாழ்மையான ஆட்களா?’ ‘எங்கள நம்பி பிள்ளை செல்வத்த யெகோவா கொடுப்பாரா?’ (சங். 127:3, 4) ஒருவேளை, ஏற்கெனவே உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கலாம். அப்படியென்றால், இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடினமா உழைக்கறது நல்லதுங்கறத என்னோட பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்குறனா?’ (பிர. 3:12, 13) ‘சாத்தானோட இந்த உலகத்துல உடல் ரீதியிலயும் ஒழுக்க ரீதியிலயும் என் பிள்ளைகள பாதுகாக்குறதுக்கு என்னால முடிஞ்சத எல்லாம் நான் செய்றனா?’ (நீதி. 22:3) உங்கள் பிள்ளைகளுக்கு வருகிற எல்லா பிரச்சினைகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பது என்பது முடியாத காரியம். ஆனால், பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு அவர்களைத் தயார்படுத்த முடியும். எப்படி? உதவிக்காக பைபிளை நம்பியிருப்பது எப்படியென்று படிப்படியாகவும் அன்பாகவும் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதன் மூலம்தான்! (நீதிமொழிகள் 2:1-6-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, உங்களுடைய குடும்பத்தாரோ சொந்தக்காரரோ சத்தியத்தைவிட்டுப் போய்விட்டால், தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையோடு இருப்பது ஏன் முக்கியம் என்பதை பைபிளிலிருந்து தெரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். (சங். 31:23) அல்லது, உங்கள் பாசத்துக்குரியவர்கள் யாராவது இறந்துபோனால் அந்தத் துக்கத்தைச் சமாளிக்கவும் மனசமாதானத்தோடு இருக்கவும் பைபிள் எப்படி உதவும் என்பதைப் பிள்ளைகளுக்குக் காட்டுங்கள்.—2 கொ. 1:3, 4; 2 தீ. 3:16.
பெற்றோர்களே, யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்
17 சின்ன வயதிலேயே பயிற்சி கொடுக்க ஆரம்பியுங்கள். முடிந்தளவு சீக்கிரமாகவே பயிற்சி கொடுப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும். (நீதி. 22:6) அப்போஸ்தலன் பவுலோடு சேர்ந்து பயணம் செய்த தீமோத்தேயுவைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவருடைய அம்மா ஐனிக்கேயாளும் பாட்டி லோவிசாளும், அவருடைய “சிசுப் பருவத்திலிருந்தே” அவருக்குப் பயிற்சி கொடுத்தார்கள்.—2 தீ. 1:5; 3:15.
18 கோட் டீவாரில் இருக்கிற ஸான் க்ளோட்-பீஸ் என்ற இன்னொரு தம்பதி என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். அவர்களுக்கு ஆறு பிள்ளைகள். யெகோவாவை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் ஆறு பிள்ளைகளுக்கும் அவர்களால் உதவ முடிந்தது! இந்த வெற்றியின் ரகசியத்தைப் பற்றி அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்: “எங்க பிள்ளைங்க பிறந்து கொஞ்ச நாள்லயே, அதாவது அவங்க கைக்குழந்தைகளா இருந்தப்பவே, கடவுளுடைய வார்த்தைய அவங்க இதயத்துல பதிய வைக்க ஆரம்பிச்சிட்டோம்” என்று சொல்கிறார்கள். (உபா. 6:6, 7) ஐனிக்கேயாள் மற்றும் லோவிசாளின் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றியிருக்கிறார்கள்.
19 யெகோவா சொல்லியிருக்கும் விஷயங்களைப் பிள்ளைகளின் ‘மனதில் பதிய வைப்பது’ எதைக் குறிக்கிறது? ஒரு விஷயத்தை “கற்றுக்கொடுப்பதையும் அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பதையும்” குறிக்கிறது. இதற்கு, பிள்ளைகளோடு பெற்றோர்கள் நேரம் செலவு செய்ய வேண்டும். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது பெற்றோருக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனாலும், கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளவும் அதன்படி செய்யவும் பிள்ளைகளுக்கு உதவ பெற்றோர்கள் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.
பெற்றோரே—பிள்ளைகளுக்குச் சிறந்த முன்மாதிரியாக இருங்கள்
பிள்ளைகள் பொதுவாக பிள்ளைகளாகவே நடந்துகொள்வார்கள், சில பிள்ளைகள் முரண்டுபிடிக்கிறவர்களாக, ஏன் அடங்காதவர்களாகக்கூட இருப்பார்கள். (ஆதியாகமம் 8:21) அப்படியானால், பெற்றோர்கள் என்ன செய்யலாம்? “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:15) ‘பிள்ளையை முரட்டுத்தனமாக அடித்து வளர்த்ததெல்லாம் அந்தக் காலம்’ என சிலர் கருதுகிறார்கள். பார்க்கப்போனால், மனதை நோகடிக்கிற வார்த்தைகளைப் பயன்படுத்துவது, கொடுமைப்படுத்துவது, முரட்டுத்தனமாக நடத்துவது போன்றவற்றை பைபிள் துளிகூட ஆதரிப்பதில்லை. “பிரம்பு” என்ற வார்த்தை சில சமயங்களில் நிஜமாக அடிப்பதை அர்த்தப்படுத்தினாலும், பெற்றோரின் அதிகாரத்தையே அது குறிக்கிறது; அதாவது, பிள்ளையின் நித்திய நன்மை கருதி கண்டிப்புடன், அதே சமயத்தில் அன்புடன் தகுந்த விதத்தில் அதிகாரம் செலுத்துவதைக் குறிக்கிறது.—எபிரெயர் 12:7-11.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
இப்போது இருக்கும் பொறுப்புகளைச் சந்தோஷமாக செய்யுங்கள்
11 யெகோவாவின் சேவையில் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதில் மூழ்கிவிடுங்கள். அப்போது உங்களுக்குச் சந்தோஷம் கிடைக்கும். பிரசங்க வேலையை “முழுமூச்சோடு” செய்யுங்கள், சபை வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்யுங்கள். (அப். 18:5; எபி. 10:24, 25) நன்றாகத் தயாரித்துவிட்டு கூட்டத்துக்குப் போங்கள். மற்றவர்களை உற்சாகப்படுத்துகிற பதில்களைச் சொல்லுங்கள். வார நாட்களில் நடக்கிற கூட்டங்களில், உங்களுக்கு மாணவர் நியமிப்பு கிடைத்தால் அதை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். சபையில் ஏதாவது வேலையைச் செய்யச் சொல்லி உங்களிடம் சொன்னால் அதை நேரத்துக்குள் செய்யுங்கள். மற்றவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதியுங்கள். எந்த நியமிப்பையுமே, ‘இது ஒன்னும் அவ்வளவு முக்கியம் இல்ல. இதுக்கெல்லாம் இவ்வளவு நேரம் செலவு பண்ண வேண்டியது இல்ல’ என்று நினைக்காதீர்கள். உங்களுடைய திறமைகளை மெருகேற்றிக்கொண்டே இருங்கள். (நீதி. 22:29) யெகோவாவின் சேவையில் உங்களுக்கு இருக்கிற வேலைகளையும் நியமிப்புகளையும் முழுமூச்சோடு செய்யுங்கள். இதையெல்லாம் நீங்கள் எந்தளவுக்கு நன்றாகச் செய்கிறீர்களோ அந்தளவுக்குச் சீக்கிரம் முன்னேறுவீர்கள், உங்கள் சந்தோஷமும் அதிகமாகும். (கலா. 6:4) இப்படிச் செய்தால், மற்றவர்களுக்குப் பொறுப்பு கிடைக்கும்போது, அதைப் பார்த்து நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்.—ரோ. 12:15; கலா. 5:26.
ஜூலை 21-27
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 23
மதுபானம் பயன்படுத்துவது பற்றிய ஞானமான ஆலோசனைகள்
மது அருந்துவது பற்றிய சமநிலையான கண்ணோட்டம்
5 ஒருவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; மற்றவர்கள் கண்டுபிடித்துவிடும் அளவுக்குக் குடிக்காதிருக்கும்படி அவர் ஜாக்கிரதையாக இருக்கிறார் என்றும் வைத்துக்கொள்வோம். இதில் ஏதாவது தீங்கு இருக்கிறதா? சிலர் பல கிளாஸ் மதுபானம் குடித்தாலும் குடிவெறிக்கான அறிகுறிகள் அவ்வளவாக தெரியாது. அதற்காக அப்படிக் குடிப்பதில் தீங்கில்லை என நினைப்பது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதாக இருக்கும். (எரேமியா 17:9) மெதுமெதுவாகவும் படிப்படியாகவும் அவர் மதுபானத்தை அதிகம் சார்ந்திருக்க ஆரம்பித்து, “குடிவெறிக்கு அடிமை”யாகி விடுகிறார். (தீத்து 2:3, பொது மொழிபெயர்ப்பு) மதுபானத்திற்கு அடிமையாவதைப் பற்றி காரலைன் நாப் என்ற எழுத்தாளர் இவ்வாறு சொல்கிறார்: “அது மெல்ல மெல்ல, படிப்படியாக, மறைமுகமாக நடக்கும் ஒன்று.” ஆக, மதுபானத்தை வரம்புமீறி குடிப்பது மிக ஆபத்தான கண்ணி!
6 இயேசுவின் பின்வரும் எச்சரிக்கையையும் கவனியுங்கள்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் [அதாவது, குடிவெறியினாலும்] லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.” (லூக்கா 21:34, 35) வெறிக்கும் வரை குடித்தால்தான் கெட்ட விளைவுகள் வரும் என்பதில்லை; அதற்கு முன்பே உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் மயக்கமும் மந்தமும் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் இருக்கையில் யெகோவாவின் நாள் வந்துவிட்டால்?
it-1 பக். 656
குடிவெறி
பைபிள் கண்டனம் செய்கிறது. குடிவெறியை, அதாவது அளவுக்கு அதிகமாகக் குடிப்பதை, பைபிள் கண்டனம் செய்கிறது. நீதிமொழிகளை எழுதியவர்கூட அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் எவ்வளவு மோசமான பாதிப்புகள் வரும் என்று சொல்கிறார். அவர் இப்படி எழுதியிருக்கிறார்: “யாருக்கு வேதனை? யாருக்குக் கவலை? யாருக்குச் சண்டை சச்சரவுகள்? யாருக்குப் புலம்பல்கள்? யாருக்குத் தேவையில்லாத காயங்கள்? யாருக்குச் சிவந்த கண்கள்? மதுவே கதி என்று கிடப்பவர்களுக்குத்தான். அதிக போதையேற்றும் மதுவை நாடிப் போகிறவர்களுக்குத்தான். திராட்சமதுவின் சிவப்பு நிறத்தைப் பார்க்காதே. அது கிண்ணத்தில் பளபளக்கும், தொண்டையில் இதமாக இறங்கும். கடைசியில், பாம்புபோல் கடிக்கும். விரியன் பாம்புபோல் விஷத்தைக் கக்கும் [மதுபானம் ஒருவரின் உடல்நலத்தைப் பாதிக்கும். உதாரணத்துக்கு, அது அவருடைய கல்லீரலை மோசமாக பாதிக்கும். அதுமட்டுமல்ல, அது அவருடைய மனதையும் பாதிக்கும். உதாரணத்துக்கு, பயங்கரமான குழப்பம், பதட்டம், பயம் மாதிரியான பிரச்சினைகள் வரலாம். மதுபானம் அவருடைய உயிருக்கே ஆபத்தாகப் போய் முடியலாம்]. உன் கண்கள் வினோதமான காட்சிகளைப் பார்க்கும் [மதுபானம் ஒருவருடைய மூளை வேலை செய்வதை பாதிக்கும். அதனால் அவர் வினோதமாக நடந்துகொள்ளலாம்]. உன் இதயம் தாறுமாறாகப் பேசும் [மனதுக்குள் அடக்கி வைத்திருக்கிற ஆசைகளையும் எண்ணங்களையும் அது வெளியே கொண்டு வரும்].”—நீதி 23:29-33; ஓசி 4:11; மத் 15:18, 19.
குடிகாரனுக்கு வேறு என்னவெல்லாம் நடக்கும் என்றுகூட அந்த எழுத்தாளர் தொடர்ந்து சொல்கிறார்: “நடுக்கடலில் படுத்திருப்பவனைப் போலவும் [குடிகாரனுக்கு தண்ணீரில் மூழ்குகிற மாதிரி இருக்கலாம் கடைசியில் அவன் சுயநினைவு இழந்துடலாம்], பாய்மரக் கம்பத்தின் உச்சியில் படுத்திருப்பவனைப் போலவும் நீ இருப்பாய் [கப்பல் இப்படியும் அப்படியும் தள்ளாடுகிற மாதிரி குடிகாரனுடைய உயிரும் ஊசலாடும். விபத்து, பக்கவாதம், சண்டை மாதிரி விஷயங்களால் அவனுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்]. ‘என்னை அடித்தார்கள், ஆனால் எனக்கு உறைக்கவில்லை. என்னை உதைத்தார்கள், ஆனால் நான் உணரவில்லை [இது குடிகாரன் தன்னிடமே பேசுகிற மாதிரி இருக்கிறது. அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே அவனுக்குத் தெரிவதில்லை. அதனால் அவனுக்கு கிடைக்கிற தண்டனையை அவன் உணருவதில்லை]. நான் எப்போது எழுந்திருப்பேன்? நான் மறுபடியும் குடிக்க வேண்டும்!’ என்று நீ சொல்வாய் [போதையில் தலை சுற்றுவதால் அவனையும் மீறி அவன் தூக்க மயக்கத்தில் இருக்கிறான். அதேநேரத்தில் அவன் குடிக்கு அடிமையாக இருப்பதால் போதை தெளிந்ததும் மறுபடியும் குடிக்க வேண்டும் என்பதில் அவன் குறியாக இருக்கிறான்].” குடிகாரனாக இருக்கும் ஒருவன் குடிக்க நிறைய காசு செலவு பண்ணுவதாலும் நம்பிக்கைக்கு தகுதியில்லாதவனாக இருப்பதாலும் வேலை செய்ய முடியாதவனாக இருப்பதாலும் ஏழை ஆகிவிடுவான்.—நீதி 23:20, 21, 34, 35.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
உதாரணமாக, உடல் பருமன் பெருந்தீனியின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால் எப்போதும் அதுவே காரணமாக இருக்க முடியாது. ஒருவரின் வியாதி அல்லது பரம்பரைகூட உடல் பருமனுக்கு காரணமாக இருக்கலாம். அதோடு உடல் பருமன் என்பது ஒரு சரீர நிலை, பெருந்தீனி என்பதோ ஒரு மன நிலை என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். உடல் பருமன் என்பது “மட்டுக்குமீறிய கொழுப்பு,” பெருந்தீனி என்பதோ பேராசையோடு அல்லது கட்டுப்பாடில்லாமல் உண்பது. எனவே பெருந்தீனிக்காரரின் அறிகுறி அவருடைய உருவம் கிடையாது, மாறாக, உணவு மீது அவர் கொண்டுள்ள மனப்பான்மையே. பார்ப்பதற்கு சராசரி உருவமுடையவராகவோ ஒல்லியாகவோ காணப்படும் நபரும்கூட பெருந்தீனிக்காரராக இருக்கலாம். அதோடு, சராசரி எடை அல்லது உருவம் என்பதும் இடத்திற்கு இடம் பெருமளவு வேறுபடுகிறது.
ஜூலை 28–ஆகஸ்ட் 3
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 24
நெருக்கடியான சமயங்களை மனபலத்தோடு சமாளிக்க...
it-2 பக். 610 பாரா 8
துன்புறுத்தல்
சகித்திருந்தால் பலன் கிடைக்கும் என்று கிறிஸ்தவர்களான நமக்குத் தெரியும். அதைப் பற்றி இயேசு இப்படிச் சொல்லியிருக்கிறார்: “நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.” (மத் 5:10) உயிர்த்தெழுதலைப் பற்றியும் அதைச் செய்யப்போகிறவரைப் பற்றியும் நாம் தெரிந்துவைத்திருப்பது நமக்குப் பலத்தைக் கொடுக்கிறது. துன்புறுத்துகிறவர்கள் நம்மைக் கொன்றுவிடுவதாக மிரட்டினாலும்கூட கடவுளுக்கு உண்மையாக இருக்க இது நமக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, இயேசுவின் மரணத்தால் நமக்குக் கிடைக்கிற பலன்கள்மேல் நம்பிக்கை வைப்பதால், மரண பயத்திலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கிறது. (எபி 2:14, 15) துன்புறுத்தலை அனுபவிக்கும்போது நாம் உண்மையாக இருக்க வேண்டுமென்றால், நமக்கு சரியான மனப்பான்மை இருப்பது முக்கியம். இந்த விஷயத்தில், இயேசு நமக்கு தலைசிறந்த முன்மாதிரி. “கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த இதே மனப்பான்மை உங்களுக்கும் இருக்கட்டும். . . . சாகும் அளவுக்கு, ஆம், சித்திரவதைக் கம்பத்தில் சாகும் அளவுக்கு, தன்னையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார்.” (பிலி 2:5-8) “[இயேசு] தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் காரணமாக அவமானத்தைப் பொருட்படுத்தாமல் மரக் கம்பத்தில் வேதனைகளைச் சகித்தார்.”—எபி 12:2; இதையும் பாருங்கள்: 2கொ 12:10; 2தெ 1:4; 1பே 2:21-23.
w09 12/15 பக். 18 பாரா. 12-13
துன்ப காலங்களில் சந்தோஷம் காத்திடுங்கள்
12 “துன்பக் காலத்தில் நீ தைரியமிழந்து போவாயானால், உண்மையிலேயே நீ பலவீனன் ஆவாய்” என்று நீதிமொழிகள் 24:10 (ஈஸி டு ரீட் வர்ஷன்) சொல்கிறது. “மனத்துயரால் உள்ளம் உடையும்” என்று மற்றொரு நீதிமொழி சொல்கிறது. (நீதி. 15:13, பொது மொழிபெயர்ப்பு) கிறிஸ்தவர்கள் சிலர் சோகத்தில் மூழ்கிப்போய், தனிப்பட்ட விதமாக பைபிள் படிப்பதையும் அதைக் குறித்துத் தியானிப்பதையும் நிறுத்திவிடுகிறார்கள்; ஏனோதானோவென்று ஜெபம் செய்கிறார்கள், சக விசுவாசிகளிடமிருந்து ஒதுங்கிவிடுகிறார்கள். ஆகையால், சோகமாகவே இருப்பது கெடுதலைத்தான் விளைவிக்கும்.—நீதி. 18:1, 14.
13 நம்பிக்கையான மனநிலையோ, நமக்குச் சந்தோஷத்தை அள்ளித் தருகிற காரியங்களில் மனதை ஒருமுகப்படுத்த உதவும். “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” என்று தாவீது எழுதினார். (சங். 40:8) நம்முடைய வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்ப்படும்போது, ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதை நிறுத்திவிடுகிற எண்ணம்கூட நம் மனதில் வரக் கூடாது. சொல்லப்போனால், சந்தோஷமளிக்கிற காரியங்களில் ஈடுபடுவதுதான் சோகத்திற்கு அருமருந்து. கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் வாசித்து, அதிலுள்ளவற்றைக் கூர்ந்து கவனித்தால் மகிழ்ச்சி காணலாமென்று யெகோவா சொல்கிறார். (சங். 1:1, 2; யாக். 1:25) பைபிளை வாசிக்கும்போதும் கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும் நாம் ‘இனிய சொற்களை’ கேட்கிறோம்; இவை நம்மை ஊக்கப்படுத்துகின்றன, நம் இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்றன.—நீதி. 12:25; 16:24.
வாசகர் கேட்கும் கேள்விகள்
“நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான்” என்று நீதிமொழிகள் 24:16 சொல்கிறது. அப்படியென்றால், ஒருவர் திரும்பத் திரும்ப பாவம் செய்தாலும் கடவுள் அவரை மன்னிப்பதைப் பற்றி இந்த வசனம் சொல்கிறதா?
இல்லை. இந்த வசனம் அதைப் பற்றி சொல்லவில்லை. ஒருவருக்குக் கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வந்தாலும், அதைச் சகித்திருந்து அதிலிருந்து அவர் மீண்டுவருவதைப் பற்றி சொல்கிறது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பாவத்தில் ‘விழுவதை’ பற்றி நீதிமொழிகள் 24:16 சொல்லவில்லை என்பது தெரிகிறது. கஷ்டங்களிலும் பிரச்சினைகளிலும் விழுவதைப் பற்றித்தான் அது சொல்கிறது. திரும்பத் திரும்ப பிரச்சினைகளில் விழுவதையும் அது குறிக்கிறது. மோசமான இந்த உலகத்தில், நீதிமானாக இருக்கிற ஒருவருக்கு உடல்நலப் பிரச்சினைகளோ மற்ற பிரச்சினைகளோ வரலாம். அரசாங்கத்திடமிருந்தும் எதிர்ப்பு வரலாம். ஆனால், கடவுள் தனக்குத் துணையாக இருப்பார் என்றும், பிரச்சினைகளிலிருந்து மீண்டுவர தனக்கு உதவுவார் என்றும் அவர் உறுதியாக நம்பலாம். நம்முடைய சகோதர சகோதரிகளின் விஷயத்தில் இது எந்தளவு உண்மை என்பதை நீங்கள் நிறைய தடவை பார்த்திருப்பீர்கள். “கீழே விழுகிற எல்லாரையும் யெகோவா தாங்கிப்பிடிக்கிறார். துவண்டுபோனவர்களைத் தூக்கி நிறுத்துகிறார்” என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.—சங். 41:1-3; 145:14-19.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w09 10/15 பக். 12
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பூர்வ காலங்களில், ஒரு மனிதன் ‘வீட்டைக் கட்ட’ வேண்டுமென்றால், அதாவது கல்யாணம் கட்டிக்கொண்டு குடும்பஸ்தனாய் ஆக வேண்டுமென்றால், தன்னையே இவ்வாறு கேட்டுக்கொள்வது அவசியமாக இருந்தது: ‘என் மனைவியையும் எனக்குப் பிறக்கப்போகிற பிள்ளைகளையும் வைத்துக் காப்பாற்ற என்னால் முடியுமா? அதற்கு நான் தயாராய் இருக்கிறேனா?’ திருமணம் செய்வதற்கு முன்பே ஒருவர் வேலை செய்ய வேண்டியிருந்தது, தன் வயல் நிலங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதனால்தான், டுடேஸ் இங்கிலீஷ் வெர்ஷன் இந்த வசனத்தை இவ்வாறு தெளிவாக மொழிபெயர்த்திருக்கிறது: “வருமானத்திற்கு முதலில் வழி செய்; உன் வயல் நிலங்களை உழுது பண்படுத்து; பிறகு உன் வீட்டைக் கட்டு.” இந்த நியமம் இன்றும் பொருத்தமானதா?
ஆம், பொருத்தமானதே. திருமணம் செய்ய விரும்புகிற ஓர் ஆண், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குமுன் அதற்காக நன்கு தயார் செய்ய வேண்டும். அவரால் வேலை செய்ய முடிகிறதென்றால், கட்டாயம் வேலை செய்ய வேண்டும். அதற்கென்று, வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக்கொடுப்பதற்காக மட்டுமே அவர் கடினமாய் உழைக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. தன் குடும்பத்தாரைச் சரீர ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் கவனித்துக்கொள்ளாத ஒருவர் விசுவாசத்தில் இல்லாதவரைவிட மோசமானவர் என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (1 தீ. 5:8) எனவே, திருமணத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் தயாராகிற ஓர் இளம் ஆண் தன்னையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘பொருளாதார ரீதியில் என் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள ஓரளவாவது நான் தயாராய் இருக்கிறேனா? ஆன்மீக ரீதியில் குடும்பத்தாரை வழிநடத்த நான் தயாராய் இருக்கிறேனா? என் மனைவி மக்களோடு தவறாமல் குடும்பப் படிப்பை நடத்துவேனா?’ முக்கியமான இந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்று கடவுளுடைய வார்த்தை வலியுறுத்துகிறது.—உபா. 6:6-8; எபே. 6:4.
ஆகவே, திருமணத்திற்குப் பெண் பார்த்துக்கொண்டிருக்கிற ஓர் இளம் ஆண், நீதிமொழிகள் 24:27-ல் உள்ள நியமத்தைக் கவனமாகச் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஓர் இளம் பெண்ணும்கூட இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘ஒரு மனைவியாக, ஒரு தாயாக இருக்க வேண்டிய பொறுப்புகளை என்னால் நிறைவேற்ற முடியுமா?’ பிள்ளைகள் பெற்றுக்கொள்வது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிற இளம் தம்பதியரும் அதுபோன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம். (லூக். 14:28) கடவுள் கொடுத்திருக்கும் இத்தகைய வழிநடத்துதலுக்கு இசைய அவருடைய மக்கள் வாழும்போது சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வார்கள், தேவையில்லாத சிக்கல்களில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள்.
ஆகஸ்ட் 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 25
நல்ல விதத்தில் பேச உதவும் ஞானமான ஆலோசனைகள்
எப்போதும் நல்ல விதத்தில் பேசுங்கள்
6 சரியான நேரத்தில் பேசுவது ரொம்ப முக்கியம். “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்” என்று நீதிமொழிகள் 25:11 சொல்கிறது. உதாரணத்துக்கு, தங்கத்தில் செய்யப்பட்ட ஆப்பிள் பழங்கள் பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும். அதுவும் அதை வெள்ளித்தட்டில் வைத்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருக்கும்! அதேபோல், நாம் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோஜனமான விஷயங்களைச் சொல்ல நினைக்கலாம். அதைச் சரியான நேரத்தில் சொன்னால் அந்த நபருக்கு இன்னும் எவ்வளவு உதவியாக இருக்கும்! இதை நாம் எப்படிச் செய்யலாம்?
7 ஒரு விஷயத்தைச் சரியான நேரத்தில் சொல்லவில்லை என்றால் அதை மற்றவர்களால் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. (நீதிமொழிகள் 15:23-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, மார்ச் 2011-ல் பூமியதிர்ச்சியும் சுனாமியும் கிழக்கு ஜப்பானில் இருந்த நிறைய இடங்களை நாசமாக்கியது. 15,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துவிட்டார்கள். நிறைய சகோதரர்கள் அவர்களுடைய குடும்பத்தையும் நண்பர்களையும் இழந்தார்கள். இருந்தாலும், அவர்களைப் போலவே கஷ்டத்தில் இருந்த மற்றவர்களுக்கு பைபிளிலிருந்து ஆறுதல் சொல்ல விரும்பினார்கள். ஆனால், நிறையப் பேர் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்களுக்கு பைபிளைப் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை. அதனால், உயிர்த்தெழுதலைப் பற்றி அந்த நேரத்தில் பேசுவதற்குப் பதிலாக நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் பற்றி பேசினார்கள்.
எப்போதும் நல்ல விதத்தில் பேசுங்கள்
15 நாம் மற்றவர்களிடம் என்ன சொல்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதை எப்படி சொல்கிறோம் என்பதும் முக்கியம். இயேசு ‘பேசிய மனங்கவரும் வார்த்தைகள்,’ அதாவது அன்பான, கனிவான வார்த்தைகள் மக்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. (லூக். 4:22) நாமும் அன்பாகப் பேசினால் மற்றவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்; நாம் சொல்வதையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். (நீதி. 25:15) நாம் மற்றவர்களிடம் அன்பாகப் பேச வேண்டும் என்றால் அவர்களை மதிக்க வேண்டும், அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதைத்தான் இயேசுவும் செய்தார். உதாரணத்துக்கு, அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் எடுத்த முயற்சிகளை பார்த்தபோது ‘அவர்கள்மேல் மனதுருகினார்.’ அவர்களுக்கு நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார். (மாற். 6:34) சிலசமயம் மக்கள் அவரை அவமானப்படுத்தியபோது அவர் பதிலுக்கு அவர்களை அவமானப்படுத்தவில்லை.—1 பே. 2:23.
16 குடும்பத்தில் இருப்பவர்கள்மீதும் நண்பர்கள்மீதும் நமக்கு அன்பும் பாசமும் இருப்பதால் அவர்களிடம் ரொம்ப உரிமையாக பேசலாம். மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிடலாம். சிலசமயம் அவர்களிடம் கோபமாகவும் பேசிவிடலாம். ஆனால், இயேசு அப்படி செய்யவில்லை அவருடைய நண்பர்களிடம்கூட ரொம்ப அன்பாகப் பேசினார். யார் பெரியவன் என்று சீடர்கள் சண்டைபோட்டபோது அவர்களை ரொம்ப அன்பாகத் திருத்தினார். ஒரு சின்ன குழந்தையின் உதாரணத்தை சொல்லி சீடர்களை யோசிக்க வைத்தார். (மாற். 9:33-37) மூப்பர்களும் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றி மற்றவர்களுக்கு அன்பாக ஆலோசனை கொடுக்க வேண்டும்.—கலா. 6:1.
w95 4/1 பக். 17 பாரா 8
அன்புக்கும் நற்பணிகளுக்கும் தூண்டியெழுப்புவது—எப்படி?
8 நம் கடவுளைச் சேவிப்பதில், அனைவரும் முன்மாதிரியாய் இருப்பதன் மூலம் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பலாம். இயேசு தமக்குச் செவிசாய்த்தவர்களை நிச்சயமாகத் தூண்டியெழுப்பினார். அவர் கிறிஸ்தவ ஊழிய வேலையை விரும்பி, அவ்வூழியத்தை உயர்த்திப் பேசினார். அது போஜனம்போல இருந்ததாகச் சொன்னார். (யோவான் 4:34; ரோமர் 11:13) அப்படிப்பட்ட உற்சாகம் தொற்றும் தன்மையுடையது. அதேபோல ஊழியத்தில் உங்களுடைய மகிழ்ச்சியைக் காட்ட முடியுமா? கவனத்துடன் தற்புகழ்ச்சியான முறையைத் தவிர்த்து, சபையில் பிறரிடம் உங்களுக்கிருக்கும் நல்ல அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களோடு ஊழியம் செய்ய நீங்கள் பிற ஆட்களை அழைக்கையில், நம்முடைய மகத்தான படைப்பாளராகிய யெகோவாவைப் பற்றி பிறரிடம் பேசுவதில் உண்மையான சந்தோஷத்தைப்பெற அவர்களுக்கு உதவ முடியுமா என்று பாருங்கள்.—நீதிமொழிகள் 25:25.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2 பக். 399
சாந்தம்
சாந்தக்குணத்தைக் காட்டாதவர்களைப் பற்றி நீதிமொழிகள் 25:28 இப்படிச் சொல்கிறது: “கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத மனிதன், மதில் இடிந்த நகரம்போல் இருக்கிறான்.” இந்த மாதிரி நபருடைய மனதில், கெட்ட எண்ணங்கள் ரொம்ப சுலபமாக நுழைந்துவிடும். கெட்ட விஷயங்களைச் செய்வதற்கு அது அவரைத் தூண்டலாம்.
ஆகஸ்ட் 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 26
‘முட்டாளிடமிருந்து’ விலகியிருங்கள்
it-2 பக். 729 பாரா 6
மழை
பருவகாலங்கள். வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் இரண்டு முக்கியமான பருவகாலங்கள் இருந்தன. ஒன்று, கோடைக்காலம். மற்றொன்று குளிர்காலம். கோடைக்காலம் வறண்ட காலமாக இருந்தது. குளிர்காலத்தில் மழை பெய்தது. (சங் 32:4; உன் 2:11, அடிக்குறிப்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.) கிட்டத்தட்ட ஏப்ரல் மாதத்தின் பாதியிலிருந்து அக்டோபர் மாதத்தின் பாதி வரைக்கும் பொதுவாக மழையே பெய்யாது. அந்தச் சமயத்தில்தான் அறுவடை நடக்கும். அறுவடைக் காலத்தில் மழை பெய்வது கொஞ்சம்கூட பொருத்தமே இல்லாத ஒன்றாக இருக்கும். அதனால், அதை யாரும் வரவேற்கவோ விரும்பவோ மாட்டார்கள்.—நீதி 26:1.
கண்டிப்பு சமாதான பலனைத் தரும்
12 சில பேருக்குக் கடுமையான கண்டிப்பு தேவைப்படலாம். அதைத்தான் நீதிமொழிகள் 26:3 சொல்கிறது: “குதிரைக்குச் சாட்டையும் கழுதைக்குக் கடிவாளமும் தேவை. அதேபோல், முட்டாளின் முதுகுக்குப் பிரம்படி தேவை.” இஸ்ரவேல் மக்கள் கீழ்ப்படியாமல் போனபோது, அவர்கள் கஷ்டங்களை அனுபவிப்பதற்கு யெகோவா அவர்களை விட்டுவிட்டார். மற்ற தேசத்து ஜனங்கள் அவர்களை அடக்கி ஒடுக்க அனுமதிப்பதன் மூலமாக, அவர்களுடைய ஆணவத்தை யெகோவா அடக்கினார். (சங்கீதம் 107:11-13) ஆனால், சில முட்டாள்கள் திருந்துவதே இல்லை. அவர்களை எவ்வளவுதான் கண்டித்தாலும் அவர்கள் போகிற போக்கிலேயே பிடிவாதமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.—நீதிமொழிகள் 29:1.
it-2 பக். 191 பாரா 4
முடம், முடமாவது
நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருப்பது. முட்டாளை நம்புகிற ஒருவன், தன்னுடைய காலை வெட்டி முடமாக்கிக்கொண்டு தனக்கே கேடு வரவைத்துக்கொள்ளும் ஒருவனைப் போல இருப்பதாக நீதிமொழி சொல்கிறது. (நீதி 26:6) முட்டாளை நம்பி ஒரு வேலையை ஒப்படைக்கிறவன், தனக்கே பிரச்சினைகளை வர வைத்துக்கொள்கிறான். அவனுடைய திட்டங்களெல்லாம் கண்டிப்பாகத் தோற்றுத்தான் போகும். அதனால் வருகிற பின்விளைவுகளையும் அவன் அனுபவிப்பான்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1 பக். 846
முட்டாள்
“முட்டாளுக்கு அவனுடைய முட்டாள்தனத்தின்படி பதில் சொல்லாதே” என்று நீதிமொழிகள் 26:4 சொல்கிறது. அதாவது, நாம் முட்டாளாகக் கூடாது என்றால், அவனைப் போலவே முட்டாள்தனமாக விதத்தில் அவனோடு நாம் வாக்குவாதம் செய்யக் கூடாது. அப்படி நாம் வாக்குவாதம் செய்தோம் என்றால், அவனைப் போலவே முட்டாள்தனமாக யோசிக்கிற மாதிரி அல்லது நடக்கிற மாதிரி ஆகிவிடும். அதே சமயத்தில், “முட்டாளுக்கு அவனுடைய முட்டாள்தனத்தின்படி பதில் சொல்” என்று நீதிமொழிகள் 26:5 சொல்கிறது. அதாவது, அவனுடைய வாக்குவாதங்கள் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறது என்றும் அவன் யோசிக்கிற விதம் எவ்வளவு தவறாக இருக்கிறது என்றும் அவன் புரிந்துகொள்கிற மாதிரி நாம் பேச வேண்டும். இதிலிருந்து 4-வது வசனமும் 5-வது வசனமும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆகஸ்ட் 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 27
உதவிக்கரம் நீட்டும் உண்மை நண்பர்கள்
மனத்தாழ்மையுள்ளவர்கள் யெகோவாவுக்குத் தங்கமானவர்கள்!
12 மனத்தாழ்மையுள்ள ஒருவர், ஆலோசனைகளை நன்றியோடு ஏற்றுக்கொள்வார். இதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். கூட்டம் முடிந்த பிறகு, நீங்கள் எல்லாரிடமும் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது ஒரு சகோதரர், உங்களைத் தனியாகக் கூட்டிக்கொண்டுபோய், ‘உங்க பல்லுல ஏதோ ஒட்டிட்டு இருக்கு’ என்று சொல்கிறார். அப்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? சங்கடமாகத்தான் இருக்கும்! ஆனால், அவர் அப்படிச் சொன்னதற்காக நீங்கள் அவருக்கு நன்றியோடு இருப்பீர்கள், இல்லையா? ‘முன்னாடியே யாராவது சொல்லியிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்’ என்று நீங்கள் நினைப்பீர்கள். யாராவது நமக்கு ஆலோசனை கொடுக்கும்போது, மனத்தாழ்மையோடும் நன்றியோடும் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆலோசனை கொடுப்பவரை ஓர் எதிரியைப் போல் நாம் பார்க்க மாட்டோம்; நம்முடைய நண்பனாகத்தான் பார்ப்போம்.—நீதிமொழிகள் 27:5, 6-ஐ வாசியுங்கள்; கலா. 4:16.
it-2 பக். 491 பாரா 3
சக மனிதர்
பிரச்சினைகள் வரும்போது, “தூரத்தில் இருக்கிற சகோதரனைவிட [நெருக்கமான சொந்தக்காரனைவிட] பக்கத்தில் இருக்கிற நண்பனே [நமக்கோ நம் குடும்பத்துக்கோ நெருக்கமாக இருக்கும் நண்பனே] மேல்” என்று நீதிமொழிகள் 27:10 சொல்கிறது. ஏனென்றால், தூரத்தில் இருக்கிற சொந்தக்காரர்களைவிட பக்கத்தில் இருக்கிற நண்பர்கள், நமக்குத் தேவைப்படுகிற உதவிகளை உடனடியாகச் செய்யும் நிலைமையில் அநேகமாக இருப்பார்கள். அதனால், அவர்களிடம் நாம் தயங்காமல் உதவி கேட்க வேண்டும், அவர்களை உயர்வாக மதிக்க வேண்டும்.
இளம் பிள்ளைகளே—உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?
7 யோவாஸ் எடுத்த தப்பான முடிவிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற பாடம் என்ன? யெகோவாமேல் பாசம் வைத்திருக்கிறவர்களை, அவருக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களை நம்முடைய நண்பர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். சரியானதை செய்வதற்கு அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள். நம் வயதில் இருப்பவர்களோடு மட்டும்தான் பழக வேண்டும் என்று அவசியம் கிடையாது. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! யோவாஸ், தன்னைவிட வயதில் பெரியவராக இருந்த யோய்தாவோடும் நண்பராக இருந்தார். நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாமேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்களா? யெகோவா எதிர்பார்ப்பது போல் வாழ்வதற்கு அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்களா? யெகோவாவைப் பற்றியும் அவர் சொல்லி தந்திருக்கிற அருமையான உண்மைகளை பற்றியும் அவர்கள் என்னிடம் பேசுகிறார்களா? கடவுள் கொடுத்திருக்கிற நெறிமுறைகளை மதிக்கிறார்களா? நான் ஏதாவது தப்பு செய்தால் அதை மூடிமறைக்காமல் என்னிடம் நேராக சொல்கிறார்களா? இல்லையென்றால் எனக்கு பிடித்ததை மட்டும்தான் சொல்கிறார்களா?’ (நீதி. 27:5, 6, 17) நேரடியாக சொன்னால், உங்களுடைய நண்பர்களுக்கு யெகோவாமேல் பாசம் இல்லையென்றால் அவர்கள் உங்களுக்கு தேவையே இல்லை. அதேசமயத்தில், யெகோவாவை நேசிக்கிற நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்களை விட்டுவிடாதீர்கள்; அவர்கள்தான் உங்களுக்கு நல்ல நண்பராக இருப்பார்கள்!—நீதி. 13:20.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
27:21. புகழ்ச்சியானது, நாம் யார் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். புகழ்ச்சியானது யெகோவாவுக்கு நாம் எந்தளவு கடன்பட்டிருக்கிறோம் என்பதை உணர வைத்தால், அவருக்குத் தொடர்ந்து சேவை செய்ய நம்மை ஊக்குவித்தால், அது நமக்கு மனத்தாழ்மை இருப்பதைக் காட்டும். ஆனால், அந்தப் புகழ்ச்சி, தற்பெருமை அடையச் செய்தால் அது மனத்தாழ்மை இல்லாததைக் காட்டும்.
ஆகஸ்ட் 25-31
பைபிளில் இருக்கும் புதையல்கள் நீதிமொழிகள் 28
பொல்லாதவனுக்கும் நீதிமானுக்கும் இருக்கிற வித்தியாசம்
w93 5/15 பக். 26 பாரா 2
யெகோவாவை முழுமையாகப் பின்பற்றுகிறீர்களா?
“நீதிமான்கள் சிங்கத்தைப் போலத் தைரியமாக நிற்கிறார்கள்.” (நீதிமொழிகள் 28:1) அவர்கள் கடவுள்மேல் விசுவாசம் வைக்கிறார்கள், அவருடைய வார்த்தையை முழுமையாக நம்புகிறார்கள், எப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலைகளிலும் அவருடைய சேவையைத் தைரியமாகச் செய்கிறார்கள்.
it-2 பக். 1139 பாரா 3
புரிந்துகொள்ளுதல்
புரிந்துகொள்ளுதலைக் கொடுப்பவரிடமிருந்து விலகிப்போகிறவர்கள். கடவுளிடமிருந்து விலகிப்போகிற ஒரு பொல்லாதவன், தீர்மானங்களை எடுக்கும்போது கடவுளுடைய ஆலோசனைகளை அசட்டை செய்கிறான். (யோபு 34:27) அவன் செய்வது தவறு என்று அவனுக்கே தெரிவதில்லை. அதோடு, புரிந்துகொள்ளும் திறமையையும் அவன் இழந்துவிடுகிறான். (சங் 36:1-4) கடவுளை வணங்குவதாக அவன் சொல்லிக்கொண்டாலும், கடவுள் சொல்வதைவிட மனிதர்கள் சொல்வதைத்தான் அவன் முக்கியமாக நினைக்கிறான். (ஏசா 29:13, 14) தவறு செய்துவிட்டு “விளையாட்டாக” செய்ததாகச் சொல்லி தன்னையே அவன் ஏமாற்றிக்கொள்கிறான். (நீதி 10:23) அவன் யோசிக்கும் விதம் தவறாக இருப்பதால் அவன் முட்டாளாகிவிடுகிறான். சொல்லப்போனால், தான் செய்யும் தவறுகளை கடவுள் பார்ப்பதே இல்லை என்றுகூட அவன் நினைத்துக்கொள்கிறான். (சங் 94:4-10; ஏசா 29:15, 16; எரே 10:21) இப்படியெல்லாம் நடந்துகொள்வதன் மூலமாக, ஒருவிதத்தில், “யெகோவா என்று யாருமே கிடையாது” என்று அவன் சொல்கிறான். (சங் 14:1-3) கடவுள் சொல்கிற மாதிரி அவன் நடக்காததால், விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவோ, சரியாக எடைப்போட்டுப் பார்க்கவோ அவனால் முடிவதில்லை. சரியான முடிவுகளையும் அவனால் எடுக்க முடிவதில்லை.
it-1 பக். 1211 பாரா 4
உத்தமம்
பணக்காரனாக இருக்கும் பொல்லாதவனைவிட ஏழையாக இருக்கும் நீதிமான் மதிப்புள்ளவராக இருக்கிறார். யெகோவாமேல் இருக்கும் பலமான விசுவாசமும் நம்பிக்கையும் உண்மையாக இருக்க அவருக்கு உதவி செய்கிறது. (சங் 25:21) உத்தமமாக நடக்கிறவர்களுக்கு ‘கேடயமாகவும்’ ‘கோட்டையாகவும்’ இருப்பதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (நீதி 2:6-8; 10:29; சங் 41:12) உத்தமமாக நடக்கிறவர், எப்போதும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ முயற்சி செய்வார், அதனால் வாழ்க்கையில் அவர் நிலைதடுமாற மாட்டார். (சங் 26:1-3; நீதி 11:5; 28:18) குற்றமற்றவர்கள் கெட்டவர்களால் கஷ்டப்பட வேண்டியிருந்தாலும், நடப்பதையெல்லாம் யெகோவா பார்க்கிறார், அவர்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கையை சீக்கிரத்தில் தரப்போவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (யோபு 9:20-22; சங் 37:18, 19, 37; 84:11; நீதி 28:10) பணம்-பொருளைவிட யெகோவாவுக்குத் தொடர்ந்து உத்தமமாக நடப்பதுதான் மதிப்புள்ளது என்பதை யோபுவின் உதாரணத்திலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம்.—நீதி 19:1; 28:6.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஆவிக்குரிய மாரடைப்பை நீங்கள் தவிர்க்கலாம்
மிதமிஞ்சிய தன்னம்பிக்கை. பலர் மாரடைப்புக்கு முன்பாக தங்கள் உடல் ஆரோக்கியத்தைக் குறித்து மிக நம்பிக்கையாக இருந்திருக்கின்றனர். மருத்துவ பரிசோதனை தங்களுக்கு தேவையில்லை என்று நினைத்து அவற்றை முற்றிலும் அலட்சியப்படுத்தியும் இருக்கிறார்கள். அதே விதமாக, பல காலம் கிறிஸ்தவர்களாக இருந்துவருவதால் தங்களுக்கு எதுவும் நடக்காது என சிலர் நினைக்கலாம். பெரிதாக ஏதோவொன்று சம்பவிக்கும் வரை ஆவிக்குரிய செக்கப் அல்லது சுயபரிசோதனை செய்துகொள்ளாமல் அசட்டையாக இருந்துவிடுவார்கள். மிதமிஞ்சிய தன்னம்பிக்கையைக் கண்டித்து அப்போஸ்தலன் பவுல் கொடுத்த இந்த நல்ல புத்திமதியை மனதில் வைப்பது மிகவும் அவசியம்: “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” நம்முடைய அபூரண இயல்பை ஒப்புக்கொண்டு அவ்வப்போது ஆவிக்குரிய பரிசோதனை செய்து கொள்வதே ஞானமான காரியமாகும்.—1 கொரிந்தியர் 10:12; நீதிமொழிகள் 28:14.