மாற்றாம் பெற்றோருக்கு உதவிக் குறிப்புகள்
ஐ.மா.-வின் மக்கள் தொகை கணக்கெடுப்புச் செயலகம், 1995-ல் மாற்றாங்குடும்பங்கள் இயற்கை குடும்பங்களைவிட எண்ணிக்கையில் அதிகரிக்கும் என முன்னறிவிக்கிறது. அப்போது, ஒவ்வொரு 100 பிள்ளைகளிலும் 59 பிள்ளைகள் 18 வயதை அடையுமுன்பே “கலப்புக் குடும்பங்களில்” (ஒரு மாற்றாம் பெற்றோரைக் கொண்ட குடும்பங்கள்) வாழ்வார்கள். அதிகரித்துவரும் மாற்றாம் பெற்றோருக்கு உதவ கீழே ஒரு சில உதவிக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
நேரத்தை அனுமதியுங்கள்: மாற்றாம் பிள்ளைகள் ஒரு புதிய பெற்றோரை ஏற்றுக்கொள்வதற்கு நாளாகும் என்பதை மாற்றாம் பெற்றோர் நினைவில் வைத்திருக்கவேண்டும். முதல் சில மாதங்கள்—அல்லது வருடங்கள்—ஏன் அவ்வளவு கடினமானதாக இருக்கும் என மன-நல நிபுணர் மேவிஸ் ஹெதரிங்டன் விவரிக்கிறார்: “மறுமணத்தின் துவக்க காலத்தில், மகன்கள், மகள்கள் ஆகிய இருசாரருமே தங்களுடைய மாற்றாந்தந்தையோடு மட்டுமல்லாமல் தங்களுடைய தாயோடும் எதிர்ப்பவர்களாய், பிணக்கத்துடனும் வெறுப்புடனும் கோபத்துடனும் நடந்துகொள்வார்கள். மறுமணம் செய்துகொண்டதற்குத் தங்களுடைய தாயோடு . . . அவர்கள் கோபமாக இருக்கின்றனர்.” மாற்றாம் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள—அது சவாலாக இருந்தாலும் சரி—முயற்சிக்கவேண்டும்.—நீதிமொழிகள் 19:11-ஐ பார்க்கவும்.
முதலாவதாக நல்ல ஓர் உறவைக் கட்டுங்கள்: மாற்றாம் பெற்றோர் தங்கள் மாற்றாம் பிள்ளைகளோடு நல்ல ஓர் உறவைக் கட்டிய பிறகே அவர்களுடைய நடத்தையைச் சரிசெய்ய இயலும் ஒரு நல்ல நிலையில் இருப்பார்கள் என்று மாற்றாங்குடும்பங்கள் (Stepfamilies) என்ற தன்னுடைய புத்தகத்தில் ஜாய் கானலி விவேகமாக எச்சரிக்கிறார். அதற்கிடையில், இயற்கை பெற்றோர் தேவையான சிட்சிப்பைக் கையாளுவது மிகச் சிறந்ததாக இருக்கலாம். (நீதிமொழிகள் 27:6-ஐ ஒப்பிடவும்.) மறுபட்சத்தில், ஒன்றாகச் சேர்ந்து நீண்டதூரம் நடத்தல், அல்லது விளையாடுதல் போன்ற, பிள்ளைகள் நீண்ட காலமாக அனுபவித்து மகிழ்ந்த வழக்கமுறைகளை ஆதரிப்பதன் மூலம், அவர்களுடைய வாழ்க்கையில் ஏதோவொன்று நிலையாகத்தான் இருக்கிறதென்ற உணர்வை மாற்றாம் பெற்றோர் அவர்களுக்கு அளிக்கலாம். மாற்றாந்தந்தைகள், உணவு வேளைகளைக் குடும்பத்திற்குப் பிரசங்கம் செய்யும் சந்தர்ப்பங்களாகப் பயன்படுத்தக்கூடாது.
ஓரவஞ்சனையைத் தவிருங்கள்: மாற்றாந்தகப்பன் அல்லது மாற்றாந்தாய், முடியுமானால், சிலநேரங்களில் எவ்வளவுதான் கடினமாக இருந்தாலும், அவனோ அவளோ தன்னுடைய இயற்கை குழந்தைகளிடம் ஓரவஞ்சனையாக நடந்து கொள்வதற்கான எந்தவித சான்றுகளையும் தவிர்த்துப்போட வேண்டும்.—ரோமர் 2:11-ஐ ஒப்பிடவும்.
எச்சரிக்கையோடு நெருங்குங்கள்: குறிப்பாக மாற்றாந்தகப்பன்களும் மாற்றாம் மகள்களும் ஒருவரோடொருவர் ஒத்துப்போவது அவர்களுக்கு அடிக்கடி கடினமாக இருக்கிறதென்று மாற்றாங்குடும்பங்களில் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சி ஒன்று காட்டிற்று. ஓர் ஆசிரியர் இவ்வாறு விளக்குகிறார்: “மாற்றாந்தகப்பன்கள் பேச்சுத் தொடர்புகொள்ள முயற்சிக்கின்றனர், ஆனால் மாற்றாம் மகள்களோ தயங்குகின்றனர். மாற்றாந்தகப்பன்கள் ஓரளவு சிட்சிக்க முயற்சிக்கின்றனர், மாற்றாம் மகள்களோ எதிர்க்கின்றனர்.” அந்த ஆசிரியர் சுருக்கிக் கூறுகிறார்: “ஒரு மாற்றாந்தகப்பன் மகள்களோடு விரைவில் வெற்றிகரமான யாதொன்றையும் செய்யமுடியாதுபோலத் தோன்றுகிறது.” இதன் காரணமாக அதிக பொறுமையும் ஒத்துணர்வும் தேவையாக இருக்கின்றன. பெண்கள் தங்கள் மாற்றாந்தகப்பனிடமிருந்து பாராட்டும் வார்த்தைகளைப் போற்றுகின்றனர். ஆனால் கட்டியணைத்தல் போன்ற சரீரப்பிரகாரமான பாராட்டுதல்களைக் காண்பிக்கும்போது பெரும்பாலும் கூச்சப்படுகின்றனர். ஒரு பெண் இவ்வாறு உணரலாம் என்று மாற்றாந்தகப்பன் அறிந்திருக்கவேண்டும். அவ்வாறு உணருவாளேயானால், அவன் சரீரப்பிரகாரமான அன்பின் வெளிக்காட்டுதல்களுக்குப் பதிலாகப் பாராட்டும் வார்த்தைகளுக்கும் பேச்சுத் தொடர்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.—நீதிமொழிகள் 25:11-ஐ ஒப்பிடவும்.
பொறாமையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்: அநேக மாற்றாம் மகள்கள் மாற்றாந்தாயை ஒரு போட்டியாளராக உணரும் மனச்சாய்வைக் கொண்டிருக்கிறார்கள் என்று அனுபவம் காட்டுகிறது. அப்பெண்ணின் உணர்ச்சிகளை எதிர்நோக்கி அவற்றோடு தன்னை ஒன்றித்து வைத்துக்கொள்ளும் ஒரு மாற்றாந்தாய், இவ்வாறு கவனத்தைக் கவருவதற்கான அநாவசிய போராட்டங்களை ஞானமாகத் தவிர்க்கலாம். அந்தத் தகப்பனும்கூட தன்னுடைய மகளுக்குத் தொடர்ந்த அன்பையும் நன்மதிப்பையும் உறுதியளிப்பதன் மூலம் அழுத்தத்தை விடுவிப்பதில் அதிகத்தைச் செய்யலாம். (நீதிமொழிகள் 15:1) மாற்றாந்தாய்மார் தங்களுடைய புதிய மாற்றாம் மகள்களால் வெகு விரைவிலேயே சொந்தத் தாயாக ஏற்றுக் கொள்ளப்பட மிகக் கடினமாக முயற்சிக்கின்றனர். மறுபடியும், பொறுமையே அதற்குத் திறவுகோல்.
மாற்றாம் பெற்றோராயிருப்பது சுலபமல்ல. ஆனால் ஆயிரக்கணக்கான வெற்றிகரமான எடுத்துக்காட்டுகள் காண்பிக்கிறதுபோல, மாற்றாம் பெற்றோராக இருப்பது சாத்தியமே. “பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்,” என்று சொல்லும்போது, எந்தக் குடும்ப சூழ்நிலையிலும் வெற்றி பெறுவதற்கான தலைசிறந்த அறிவுரையை பைபிள் தருகிறது என்பதை நினைவில் வையுங்கள்.—கொலோசெயர் 3:14. (g93 7/8)