குறிக்கோளற்ற நான் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கண்டேன்
ஓர் அதிகாலையில், வாட்டசாட்டமான இரண்டு பேர் எதிர்பாராமல் என்னை எழுப்பி என் படுக்கை அறையை சோதனையிட்டுக்கொண்டிருந்தபோது, என்னுடைய கலக்கத்தையும் அசௌகரியத்தையும் கற்பனைசெய்து பாருங்கள். தெரிந்தவிதமாகவே, என் அம்மா அதிர்ச்சியடைந்த நிலையில் வெளிறிப்போய், விக்கித்து நின்று பார்த்தார். அந்த ஆட்கள் துப்பறிபவர்கள்.
அவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பது எனக்கு உடனே தெரிந்துவிட்டது. தைரியசாலியாகவும் எதிர்ப்பவனாகவும் என்னைக் காட்டிக்கொண்டபோதிலும், உள்ளுக்குள் நான் பயந்துகொண்டிருந்தேன். அ.ஐ.மா.-ன் நியூ ஜெர்ஸியில் இருந்த எங்களுடைய இளம் திருடர் கும்பல், போலீஸ் வலையில் மாட்டிக்கொண்டது என்று எனக்குத் தெரியவந்தது. என்னை உடைமாற்றிக்கொள்ளுமாறு அதட்டலாகக் கூறினார்கள் அந்தத் துப்பறிபவர்கள். பிறகு விசாரணைக்காக என்னை போலீஸ் தலைமையகத்திற்கு அவசர அவசரமாக விரட்டிச் சென்றார்கள்.
இந்த இழிவான நிலைக்கு எவ்வாறு நான் தள்ளப்பட்டேன்? அது என் சிறுவயதிலேயே ஆரம்பமாகிவிட்டது. நான் மத்திப பருவ வயதில் இருக்கையில் ஏற்கெனவே என்னை கடின இருதயமுள்ள இளம் குற்றவாளியாகக் கருதினேன். 1960-களில் காரணம் ஏதுமின்றி கலகம் செய்தலை பல இளைஞர்கள் “சர்வசாதாரணமானதாக” கருதினார்கள், அதை நான் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டேன். இவ்வாறாக, 16 வயதில் மேல்நிலைப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், அக்கம் பக்கத்திலிருந்த சூதாட்ட அரங்கங்களில் திரிந்துகொண்டிருந்தவனாக என்னை நானே கண்டேன். இதோ, கொள்ளை அடித்துக்கொண்டிருந்த இளைஞர்களின் கும்பலில் என்னையும் சேர்த்துக்கொண்டேன். ஓரளவுக்குச் சிறிய கொள்ளைகளில் அவர்களுடன் சேர்ந்தபின், அதிலிருந்த குதூகலத்தையும் மர்மத்தையும் அனுபவிக்க ஆரம்பித்தேன்; உண்மையில் ஒவ்வொரு அனுபவமும் மிகவும் கிளர்ச்சியூட்டுவதாக நான் கண்டேன்.
ஆகவே, உடைத்து உட்புகும் ஒரு ஒன்பது மாத குதியாட்டம் ஆரம்பமானது. ஒரு கும்பலாக, பெரும்பாலும் பெரும் பணத்தொகையை வைத்திருந்த தொழில் முறை அலுவலகங்களை நாங்கள் முக்கியமாகக் குறிவைத்தோம். நாங்கள் பிடிபடாமலே எத்தனை முறை கொள்ளையடித்தோமோ அவ்வளவுக்கு அவ்வளவு துணிகரமுள்ளவர்களானோம். கடைசியாக, நாட்டு வங்கியின் ஒரு கிளையைக் கொள்ளையடிக்க தீர்மானித்தோம்.
முதல் முறையாகக் காரியங்கள், தப்பும் தவறுமாகச் செல்லத் துவங்கின. எந்தவித சிரமமுமின்றி வங்கியின் உள்ளே நாங்கள் நுழைந்தபோதிலும், அதன் உள்ளே அதிருப்தியான ஓர் இரவை கழித்தோம், ஏனெனில் எங்களால் காசாளரின் பண-பதிவேடுகளை மட்டுமே திறக்க முடிந்தது. ஒரு மிக ஆபத்தான பிரச்சினையானது, எங்கள் வங்கி கொள்ளை, ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனை (FBI) இந்த வழக்கில் கொண்டுவந்தது. எங்கள் வழக்கை FBI துப்புத்துலக்கியதால், நாங்கள் அனைவரும் கூடியவிரைவில் கைதானோம்.
தவறிழைத்ததன் வேதனையான பாதிப்புகள்
78 கொள்ளைகளுக்கு நான் குற்றம்சாட்டப்பட்டு, ஒவ்வொன்றின் விவரங்களையும் நீதி மன்றத்தில் சத்தமாக வாசிக்கப்படுகையில் அவமானத்தால் கூனிக்குறுகிப்போனேன். இதனுடன்கூட, உள்ளூர் செய்தித்தாளில் எங்களுடைய குற்றச்செயல்களைப்பற்றிய அனைத்து விளம்பரங்களும், என் பெற்றோர்கள் மீது உருக்குலையச்செய்யும் பாதிப்பை விளைவித்தன. ஆனால், அவர்களுக்கு நான் இழைத்துக்கொண்டிருந்த அவமதிப்பும் அவமானமும் அந்தச் சமயத்தில் எனக்கு ஒரு கவலையையும் கொடுக்கவில்லை. அரசாங்க சீர்திருத்த நிலையத்தில் இருப்பதற்கான காலவரையறையற்ற தண்டனை அளிக்கப்பட்டேன், எனக்கு 21 வயது ஆகும் வரை நான் அதன் பொறுப்பில் இருப்பதை இது அர்த்தப்படுத்தி இருந்திருக்கக்கூடும். ஆயினும், திறமையான வழக்கறிஞரின் முயற்சிகளின் பெரும்பயனாக விசேஷித்த சீர்திருத்தப் பள்ளி ஒன்றிற்கு நான் மாற்றப்பட்டேன்.
எனக்குச் சிறைவாசம் தவிர்க்கப்பட்டபோதிலும், ஒரு நிபந்தனையானது சமுதாயத்திலிருந்தும் என்னுடைய அனைத்து பழைய சகாக்களிடமிருந்தும் நான் பிரிக்கப்பட்டவனாக இருக்கவேண்டும். இதற்காக, நியூயர்கிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டேன், இது என்போன்றே தவறிழைத்த பிள்ளைகளின் மீது தனிக்கவனம் செலுத்தியது. கூடுதலாக, நிபுணருடைய உதவியைப் பெறுவதற்காக வாரம்தோறும் மனநோய் மருத்துவரிடத்தில் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல நான் கோரப்பட்டேன். என் பெற்றோர்களின் நிதி சம்பந்தமான பெரும் தியாகத்தின் பேரில் இந்த அனைத்து ஏற்பாடுகளும் அவர்களால் செய்யப்பட்டன.
சீர்திருந்துவதற்கான முயற்சி
சந்தேகமின்றி, நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட எங்களுடைய விசாரணையின் காரணமாக, “பிரம்பைக் கையாடாமல் இருத்தல்” என்ற தலைப்பைக் கொண்ட ஆசிரியரின் பகுதி எங்கள் ஊர் செய்தித்தாளில் வெளிவந்தது. இந்தக் கட்டுரை எங்களுடைய கும்பல் இலேசான தண்டனையைப் பெற்றதைக்குறித்து பரிகசித்து எழுதப்பட்டதாகும். இந்த ஆசிரியர் பகுதியின் குறிப்புகள், முதல் முறையாக என் மனசாட்சியைத் தொட்டன. ஆகவே, அந்தப் பகுதியைச் செய்தித்தாளிலிருந்து வெட்டிவைத்துக்கொண்டு, என் பெற்றோர்களுக்கு ஏற்படுத்திய துன்பத்திற்கும், அவமானத்திற்கும், செலவுக்கும் ஏதேனும் ஒரு வழியில் ஒருநாள் ஈடுசெய்வேன் என்று எனக்கு நானே சபதம் பூண்டேன்.
என்னால் மாறமுடியும் என்பதை பெற்றோர்களுக்கு நிரூபிக்கும் ஒரே வழி, மேல்நிலைப் பள்ளியில் நான் விட்டுவிட்ட அதே வகுப்பில் தேர்ச்சி பெறுவதுதான் என்று நான் நினைத்தேன். என் வாழ்க்கையிலேயே முன்னொருபோதும் இல்லாதளவுக்கு நான் படிக்க ஆரம்பித்தேன். அதன் விளைவானது, பள்ளி ஆண்டு இறுதியில் என்னுடைய நன்னடத்தைப் பொறுப்பு அலுவலர் முன்னிலையில், எனக்குத் தண்டனை விதித்த அதே நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டேன், பள்ளியின் கால தேர்வு ஒவ்வொன்றிலும் நான் பெற்றிருந்த சராசரி பி-பிளஸ் தகுதியை அவர் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அவருடைய கடுமையான முகம் புன்முறுவல் பூக்கும் ஒன்றாக மாறியது. ஆகவே என்னுடைய பழைய பள்ளிக்கூடத்திற்கு திரும்புவதற்கான வழி இப்போது திறக்கப்பட்டது, அடுத்து வந்த ஆண்டில் மேல்நிலைப் பள்ளி கல்வியை முடித்தேன்.
என் குறிக்கோளற்றத்தன்மை தொடருகிறது
இதற்குள்ளாக 1966 வந்துவிட்டது, என்னுடைய சகமாணவர்களில் பலர் வியட்நாம் போருக்குச் சென்றபோது, நான் மேற்கு வர்ஜினியாவிலுள்ள கன்கார்டு கல்லூரிக்குச் சென்றேன். கல்லூரியில் எனக்குப் போதைப்பொருட்களும், சமாதான ஓட்டப்பந்தயங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன, முழுவதுமான ஒரு புதிய கலாச்சாரம், பாரம்பரிய மதிப்புகளின் பேரில் என்னை கேள்வி கேட்கவைத்தது. நான் எதையோ தேடிக்கொண்டிருந்தேன், ஆனால் என்ன தேடிக்கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நன்றிசெலுத்தும் பண்டிகை நாட்கள் (Thanksgiving holidays) வந்தபோது, வீட்டிற்கு செல்வதற்குப் பதிலாக, புளூ ரிட்ஜ் மலைகளைக் கடந்து ஃப்ளாரிடாவுக்கு கடந்துசெல்லும் வாகனங்களில் ஆங்காங்கே லிஃப்ட் கேட்டு பயணம் செய்தேன்.
இதற்குமுன் நான் எப்போதுமே அதிக பயணம் செய்ததில்லை, இத்தனை அநேக வெவ்வேறு புதிய இடங்களைக் காண்பதில் அருமையான நேரத்தை அனுபவித்து கொண்டிருந்தேன்—அது நன்றிசெலுத்தும் நாள் வரை நீடித்தது, சோம்பி திரிந்ததற்காக டேடொனா கடற்கரை சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவதில் முடிவடைந்தது. என் பெற்றோர்களுடன் தொடர்புகொள்ள எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது, ஆனால் சிறை அதிகாரிகள் அதைச் செய்துவிட்டார்கள். நான் சிறை தண்டனையை அனுபவிப்பதற்கு பதிலாக, கடும் அபராதத்தை செலுத்துவதற்கான ஏற்பாட்டை என்னுடைய அப்பா மீண்டும் ஒருமுறை செய்தார்.
அதற்குப் பின் நான் கல்லூரியைத் தொடரவில்லை. அதற்கு மாறாக ஒரு சூட்கேஸை எடுத்துக்கொண்டு, பயணம் செய்வதற்காகப் புதிதாக பிறந்த ஆவலோடு, மீண்டும் சாலைகளில் பயணமானேன், ஐக்கிய மாகாணங்களின் கிழக்கத்திய கடற்கரையில் அங்கும் இங்கும் குறிக்கோள் ஏதுமின்றி நடந்தும் நடு நடுவே கார்களிலும் பயணமானேன், என்னை ஆதரித்துக்கொள்ள கைக்கு கிடைத்த வேலையைச் செய்தேன். அவ்வப்போது என் பெற்றோர்களை நான் சென்று பார்த்தபோதிலும் நான் எங்கு இருக்கிறேன் என்று அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. என்னைப் பார்த்தபோதெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததாகத் தோன்றியது எனக்கு ஆச்சரியம் தந்தது. ஆனால் நிலையாகக் குடியிருக்க என்னால் முடியவில்லை.
இப்போது நான் மேற்கொண்டும் கல்லூரியில் இல்லை, அதனால் இராணுவ பணியில் சேருவதிலிருந்து தாமதிப்பதற்கு உரிமையளித்த மாணவன் என்னும் என்னுடைய தகுதியை இழந்தேன். இராணுவத்தில் சேருவதற்கான என்னுடைய தகுதி இப்போது 1-ஏ வாக மாறிவிட்டது. இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட எந்தத் தருணத்திலும் நான் அழைக்கப்படவிருந்தேன். இராணுவத்தில் கட்டுப்பாட்டுடன் ஒழுங்கமைக்கப்படும் எண்ணத்தையும் என்னுடைய புதிய சுதந்திரத்தின் இழப்பையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆகவே கப்பலில் நாட்டைவிட்டு வெளியேற தீர்மானித்தேன். இதற்கிடையே ஒரு புதிய வேலை வாய்ப்பானது எனக்குத் திறக்கப்பட்டது. கடைசியாக, இதுவாவது என் வாழ்வின் நோக்கமாயிருக்க முடியுமா?
கூலிப்படையாளனாக கடலில் வாழ்க்கை
எங்களுடைய பழைய குடும்ப நண்பர் ஒருவர், ஐக்கிய மாகாணங்களின் வணிகக் கப்பல்களில் மாலுமியாக இருந்தார். கடல் துறைப் பொறியாளர்களுக்காகப் புதிதாகத் துவங்கப்பட்ட பயிற்சி திட்டத்தைப்பற்றி என்னிடத்தில் அவர் கூறினார். இரண்டாண்டு-திட்டம் என குறைக்கப்பட்டிருந்ததை நான் உடனடியாக ஏற்றுக்கொண்டேன், இது இராணுவத்தில் சேரவேண்டியதிலிருந்து ஒத்திவைப்பு மற்றும் கடல்துறைப் பொறியியற் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு என இரட்டிப்பான பயன்களை கொண்டிருந்தது. 1969-ல் நான் பட்டம் பெற்றேன், சான் பிரான்ஸிஸ்கோவில் என்னுடைய முதல் கப்பலில் மூன்றாம்-பிரிவு பொறியியல் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தேன். யுத்த தளவாடங்களாகிய சரக்கை ஏற்றிக்கொண்டு உடனே வியட்நாமுக்குப் பயணமானோம். பயணம் ஒன்றும் அவ்வளவு பிரமாதமாக இருக்கவில்லை, எனவே நாங்கள் சிங்கப்பூர் வந்தடைந்ததும், அந்தக் கப்பலிலிருந்து நான் ராஜினாமா செய்துவிட்டேன்.
சிங்கப்பூரில் ரன் அவே கொடிக்கப்பலில் நான் பணிக்குச் சேர்ந்தேன், இது இவ்வாறு அழைக்கப்படுவதற்கு காரணம், தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் அல்லாத, துறைமுகத்தில் காத்துக்கொண்டிருக்கும் ஆட்களை வேலைக்கு அமர்த்தியது. இந்தக் கப்பல் வியட்நாம் கடற்கரையோரமாக, தெற்கே காம் ரன் விரிகுடாவிலிருந்து வடக்கில் ராணுவம் இல்லாத பகுதிக்கு அருகிலிருக்கும் டா நாங்கிற்கும் இடையே பயன்படுத்தப்பட்டது. இங்கு இடைவிடாது வீசப்பட்ட குண்டுகளின் எதிரொலி எப்போதும் நிற்கவில்லை. ஆயினும், போரின் ஆபத்தும், சிலசமயங்களில் தாக்குதல்களும் வருமானத்தை உயர்த்தியதால் இந்த வழியில் செல்கையில் பொருள் ஆதாயமிருந்தது. குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் சென்றபோதெல்லாம் ஒரு போர் கூலியாளாக வருடத்திற்கு $35,000 நான் சம்பாதித்தேன். இந்தப் புதிய செல்வத்தின் மத்தியிலும், நான் இன்னும் குறிக்கோளற்றவனாக உணர்ந்தேன். வாழ்க்கை என்பது எதைப்பற்றியது—நான் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன்? என நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
வாழ்க்கையின் அர்த்தத்திற்கு சிறு ஒளிக்கீற்று
ஒரு குறிப்பிட்ட திகிலூட்டிய பகைவரின் வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின்னர், கொதிகலத்தின் என்னுடைய உதவியாள் ஆல்பர்ட், எவ்வாறு கடவுள் வெகுவிரைவில் ஒருநாள் இந்தப் பூமியில் சமாதானத்தைக் கொண்டுவரப்போகிறார் என்று சொல்லத் துவங்கினார். வழக்கத்திற்கு மாறான இந்த விஷயத்தை நான் கூர்ந்து கேட்டேன். நாங்கள் சிங்கப்பூருக்குத் திரும்பி பயணமாகும்போது, ஆல்பர்ட் தான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்ததாகவும், ஆனால் தற்போது முனைப்பான ஒரு சாட்சியாக இல்லை என்றும் கூறினார். எனவே, நாங்கள் இருவருமாகச் சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் சாட்சிகளைத் தேடி கண்டுபிடிக்க முயன்றோம். எங்களுக்கு எவரும் உதவக்கூடும் என்று தோன்றவில்லை, ஆனால், நாங்கள் பயணமாவதற்கு முந்தைய இரவில், சற்று முன் ஒரு ஹோட்டல் வரவேற்பு அறையில் காவற்கோபுர பத்திரிகை ஒன்றை ஆல்பர்ட் கண்டெடுத்தார். அதில் விலாசம் குத்தப்பட்டிருந்தது. ஆயினும், அந்த விலாசத்தைத் தேடி பார்ப்பதற்கான அவகாசம் எங்களுக்கு இருக்கவில்லை. ஏனெனில், மறுநாள் காலையில் நாங்கள் ஜப்பானிலுள்ள சாசபோவிற்கு பயணமானோம், அங்கு இரண்டு வாரங்களுக்குக் கப்பலைப் பழுதுபார்க்க விடுவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்தது.
அங்கு நாங்கள் பணியாட்களுக்கெல்லாம் சம்பளத்தை வழங்கினோம், ஆல்பர்ட் தன்வழியே போய்விட்டார். ஆனால் ஒரே வாரத்திற்கு பிறகு, அந்த வார இறுதியில் யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு நடைபெறவிருக்கிறது என்று எனக்கு அறிவித்த தந்தியை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வதில் நான் வியப்படைந்தேன். இந்த மாநாடு எதைப்பற்றியது என்பதை போய்தான் பார்ப்போமே என்று முடிவுசெய்தேன்.
அந்த நாள்—ஆகஸ்ட் 8, 1970—அது எப்போதும் என் மனதில் நிற்கும் நாள். மாநாடு நடைபெற்ற இடத்திற்கு நான் டாக்ஸியில் சென்று, நூற்றுக்கணக்கான ஜப்பானியர்களின் மத்தியில் இறங்கினேன், அவர்கள் அனைவரும் நேர்த்தியாக உடையணிந்திருந்தார்கள். பெரும்பான்மையினரால் ஆங்கிலம் கொஞ்சம்கூட பேச தெரியாதபோதிலும், அனைவரும் என்னுடன் கைகுலுக்க விரும்பினார்கள் என தோன்றியது. இதற்கு முன் இதுபோன்று முன்னொருபோதும் நான் பார்த்ததே இல்லை. ஜப்பானிய மொழியிலிருந்த நிகழ்ச்சி நிரலின் ஒருவார்த்தைகூட விளங்காதபோதிலும், அடுத்த நாளும் செல்வதற்கு தீர்மானித்தேன்—அதேவிதமான வரவேற்பை மீண்டும் ஒருவேளை கிடைக்கப் பெறுவேனோ என்று சும்மா போய் பார்க்கவேண்டும் என நினைத்தேன். எனக்குக் கிடைத்ததே!
புதிய ஆட்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டு, ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் கடலில் இறங்கி, சிங்கப்பூருக்கு மிதந்து சென்றோம். வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக, டாக்ஸியைப் பிடித்து, காவற்கோபுரத்தில் இருந்த விலாசத்திற்கு சென்றேன். வீட்டிற்குள்ளே இருந்து சிநேகப்பான்மையான ஒரு பெண் வெளியே வந்தார், தன்னால் எவ்விதத்திலாவது எனக்கு உதவ இயலுமா என வினவினார். காவற்கோபுரத்தில் கொடுக்கப்பட்டிருந்த விலாசத்தை அவரிடத்தில் காண்பித்தேன், உடனே என்னை வீட்டிற்குள்ளே வரவேற்றார். பிறகு நான் அவருடைய கணவரையும் சந்தித்தேன், அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த மிஷனரிகளான நார்மனும் கிளாடிஸ் பெலாடீயும் என்று அறிந்துகொண்டேன். அவர்களுடைய விலாசம் எவ்வாறு கிடைத்தது என்று நான் விவரமாகக் கூறினேன். அவர்களால் மனமார வரவேற்கப்பட்டதை நான் உணரும்படி செய்தார்கள். என்னுடைய பல கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள். கெட்டியான காகிதப்பை நிறைய பிரசுரங்களுடன் நான் புறப்பட்டேன். அடுத்து வந்த சில மாதங்களில், வியட்நாம் கடற்கரையோரமாகப் பயணம் செய்தபோது, நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்திய பாதை என்ற புத்தகத்தையும் உள்ளடக்கிய அநேக புத்தகங்களை நான் படித்தேன்.
இப்போது, முதல்முறையாக என் வாழ்க்கையில், உண்மையான நோக்கத்தின் உட்கருத்தையும் போக்கையும் உணர்ந்தேன். மறுபடியும் சிங்கப்பூருக்குத் திரும்பிய பயணத்திற்கு பிறகு கப்பலிலிருந்து விலகிவிட்டேன்.
ஏமாற்றமடையச்செய்யும் வீடுதிரும்புதல்
வீட்டிற்கு போகவேண்டும் என உண்மையில் உணர்ந்ததுகூட இதுவே முதல் முறை. ஆகவே சில வாரங்களுக்குப்பின், ரொம்ப குஷியாக வீடு திரும்பினேன், என் பெற்றோரிடத்தில் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி அனைத்தையும் சொல்லவேண்டும் போலிருந்தது. என்னுடைய உற்சாகத்தை அவர்கள் பகிர்ந்துகொள்ளவில்லை. இது புரிந்துகொள்ளத்தக்கதே, ஏனெனில் என் நடத்தை ஒன்றுக்கும் உதவாததாக இருந்தது. நான் சில வாரங்களே வீட்டில் இருந்தேன், அப்போது, சீற்றத்தின் காரணமாக, உள்ளூர் இரவுவிடுதி ஒன்றை மூர்க்கவெறியோடு அடித்து நொறுக்கினேன். ஒரு சிறை அறையில்தான் என் உணர்வு வந்தது.
இதற்குள்ளாக, இனி நான் சீர்திருந்துவதற்கும் என்னுடைய பயங்கரமான கோபம் அடக்கப்படுவதற்கும் உண்மையில் ஒரு நம்பிக்கையும் இல்லை என உணர ஆரம்பித்தேன். ஒருவேளை நான் ஒரு காரணமுமின்றி எப்போதும் கலகக்காரனாக இருப்பேன் போலும். இனியும் என்னால் வீட்டில் தங்கியிருக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. நான் உடனே வெளியேற வேண்டும். ஆகவே, சில தினங்களுக்குள் இங்கிலாந்திற்கு செல்லவிருந்த நார்விஜியன் சரக்குக் கப்பலில் செல்வதற்காகப் பதிவு செய்தேன்.
இங்கிலாந்தும் நாடக சபாவும்
இங்கிலாந்தில் இருப்பதை நான் மிகவும் அனுபவித்தேன், ஆனால் வேலைகிடைப்பது பெரும் பிரச்சினையாக இருந்தது. ஆகவே வெவ்வேறு நாடக சபாக்களில் நடிப்பு நேர்முகத் தேர்வுக்குப் போக முடிவுசெய்தேன். நானே ஆச்சரியப்படும்படி, லண்டன் நாடக கலை சபாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டேன். லண்டனில் மிதமிஞ்சி குடிப்பதிலும், சமூக கூட்டுறவுகளில் ஈடுபடுவதிலும், எதிர்ப்பார்த்தவிதமாகவே, எல்லா விதமான போதைப்பொருட்களை உட்கொள்ளுவதிலும் என்னுடைய இரண்டு வருடங்கள் கழிந்தன.
ஐக்கிய மாகாணங்களில் இருந்த என் பெற்றோர்களை மீண்டும் ஒருமுறை போய் பார்க்கவேண்டும் என்று திடீரென முடிவுசெய்தேன். ஆனால், இம்முறை கண்ணைப்பறிக்கும் என்னுடைய தோற்றத்தை கண்டபோது எவ்வளவு அதிர்ச்சியுற்றிருப்பார்கள் என்பதை உங்களால் கற்பனைசெய்ய முடிகிறதா? நான் கறுப்பு நிறத்தில் கையில்லா மேலாடையை அணிந்திருந்தேன். அத்துடன் தங்கத்தாலான இரண்டு சிங்கங்களின் தலைகளை இணைத்த தங்கச்சங்கிலி கழுத்தில் தொங்கியது. சிகப்பு வெல்வெட்டில் இடுப்பளவுச் சட்டையை அணிந்து, தோலால் அலங்கரிக்கப்பட்ட கருப்பு வெல்வெட் கால்சட்டையை முழங்கால் நீளத்திற்கு உள்ள பூட்ஸில் செருகியிருந்தேன். தெரிந்தவிதமாகவே, என் பெற்றோர்கள் நல் அபிப்பிராயம் கொள்ளாததற்கும், அவர்களுடைய பாரம்பரிய சூழ்நிலைமைகளின் கீழ், முற்றிலும் வேறுபட்டவனாக நான் உணர்ந்ததற்கும் வியப்பு ஏதும் உண்டோ! ஆகவே நான் இங்கிலாந்திற்கு திரும்பினேன், அங்கு 1972-ல் நாடக கலையில் பட்டம் பெற்றேன். இப்போது நான் மற்றொரு இலக்கையும் அடைந்தேன். ஆனால் என்னை இன்னமும் நச்சரித்துக்கொண்டிருந்த, மீண்டும் மீண்டும் எழுந்த கேள்வியானது, இங்கிருந்து நான் எங்கே போகப் போகிறேன்? வாழ்க்கையில் உண்மையான நோக்கத்திற்கான தேவையை இன்னமும் நான் உணரக்கூடியவனாக இருந்தேன்.
கடைசியாகக் குறிக்கோளற்றத்தன்மை முடிவடைகிறது
இதற்கு பிறகு சில நாட்களிலேயே, என் வாழ்க்கையில் நிலையான தன்மை வருவதை நான் உணர ஆரம்பித்தேன். என்னுடைய அண்டையில் வசிக்கும் கேரலைனின் நட்புறவுடன் அது ஆரம்பமானது. அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர், பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்தார். இயல்பானவராகவும், தீர்க்கமானவராகவும் இருந்தார்—என்னுடைய ஆளுமைக்கு அப்படியே நேரெதிரானவர். எந்தவித காதல் உணர்வையும் பிணைத்துக்கொள்ளாமல் இரண்டு வருடங்களுக்கு நண்பர்களாக இருந்தோம் நாங்கள். மூன்று மாதங்களுக்கு கேரலைன் அமெரிக்காவிற்கு சென்றார், எங்களுடைய நல்ல நட்புறவின் காரணமாக, என் பெற்றோர்களுடன் அவர் பல வாரங்கள் தங்குவதற்கான ஏற்பாட்டை செய்தேன். என் போன்ற குணமுடைய ஒருவனுடன் அவருக்கு அப்படி என்னதான் இருக்கும் என்று அவர்கள் ஒருவேளை ஆச்சரியப்பட்டிருக்கலாம்.
கேரலைன் புறப்பட்ட உடனே, நானும் வீட்டிற்கு போகப் போகிறேன் என்று என் நண்பர்களிடத்தில் கூறினேன். அவர்கள் எனக்குப் பெரிய வழியனுப்பு விழா நடத்தினார்கள். ஆனால், அமெரிக்காவிற்கு போவதற்கு பதிலாக, லண்டனிலுள்ள தெற்கு கென்ஸிங்டன் வரைதான் சென்றேன். அங்கு, அடுக்கு மாடி ஒன்றின் கீழ்-அடுக்கை வாடகைக்கு எடுத்து, லண்டனிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசினேன். என் வாழ்க்கையில் என்ன போக்கை எடுக்கவேண்டும் என்பதை உணர்ந்துவிட்டிருந்தேன். ஒரு வாரத்திற்குள் ஓர் அருமையான தம்பதியர் என்னை வந்து பார்த்தார்கள், என்னுடன் ஒழுங்காக பைபிள் படிப்பதற்கான ஏற்பாட்டை உடனே செய்தார்கள். சாட்சிகளின் பிரசுரங்களை ஏற்கெனவே நான் படித்திருந்ததன் காரணமாக இப்போது படிப்பதற்கு மிகவும் ஆர்வமுள்ளவனாக இருந்தேன். வாரம் இருமுறை வந்து படிக்குமாறு கேட்டுக்கொண்டேன். என்னுடைய உற்சாகத்தை கண்டு, விரைவிலேயே என்னை ராஜ்ய மன்றத்திற்கு வரும்படி வரவேற்றார் பாப். அதற்கு பிறகு, கூடிய விரைவில் நான் அனைத்து வாராந்தர கூட்டங்களுக்குச் சென்றேன்.
யெகோவாவின் சாட்சிகள் புகைபிடிப்பதில்லை என்று நான் அறிந்தபோது, அந்தப் பழக்கத்தை உடனடியாக விட்டுவிட முடிவுசெய்தேன். ஆனால் என் தோற்றத்தைப் பற்றியது என்ன? மேற்கொண்டும் வித்தியாசமாகத் தோற்றமளிக்க நான் விரும்பவில்லை. ஆகவே ஒரு ஷர்ட், ஒரு டை மற்றும் ஒரு சூட்டை வாங்கினேன். வெகுவிரைவில் வீட்டுக்கு வீடு பிரசங்கவேலை செய்வதற்கான தகுதியை நான் பெற்றேன். ஆரம்பத்தில் நான் மிகவும் பயந்தபோதிலும், அதை அனுபவிக்க துவங்கினேன்.
கேரலைன் திரும்பி வந்தபோது, அவர் பெரும் வியப்பில் இருந்ததாக நான் நினைத்தேன். அது முற்றிலும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு கூற்றாக மாறியதே! இவ்வளவு குறுகிய காலத்திற்குள் என் சிகையலங்காரம், என் தோற்றம் இன்னும் பல விதங்களில் ஏற்பட்ட மாற்றத்தை அவரால் நம்ப முடியவில்லை. பைபிள் படிப்பு எனக்கு எவ்வாறு உதவியது என்று விவரமாக அவரிடத்தில் கூறிவிட்டு, அவரையும் ஒரு பைபிள் படிப்பை கொண்டிருக்க தூண்டினேன். முதலில் ஐயுற்றபோதிலும், அவர் என்னோடு மாத்திரம் படிப்பதாக நிபந்தனை விதித்து கடைசியில் ஒத்துக்கொண்டார். இவ்வளவு விரைவில் அவர் பிரதிபலித்ததை காண்கையில் நான் மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு பைபிள் சத்தியங்களைச் சரியாக கணிக்கத் துவங்க அதிக நாளாகவில்லை.
சில மாதங்களுக்குப்பின், கேரலைன் ஆஸ்திரேலியாவுக்குப் போக தீர்மானித்தார், அங்கு சிட்னியில் தன்னுடைய பைபிள் படிப்பைத் தொடர்ந்தார். நான் முழுக்காட்டுதல் பெறும்வரைக்கும் லண்டனில் தங்கிவிட்டேன், அதை ஏழு மாதங்களுக்குப் பிறகு செய்தேன். இப்போது, ஐக்கிய மாகாணங்களில் இருந்த வீட்டிற்கு மறுபடியும் போய், என் குடும்பத்தினரை பார்க்க விரும்பினேன். ஆனால், இம்முறை சாதித்துவிட நான் தீர்மானமாய் இருந்தேன்!
வேறுப்பட்டவனாக வீடுதிரும்புதல்
நான் மிகவும் மதிப்புக்குரியவனாகக் காணப்பட்டதால்—திகைப்படைந்த என் பெற்றோர்கள், இம்முறை என்ன நடந்துகொண்டிருந்தது என்று அறிந்துகொள்ள ஆவலாக இருந்தார்கள்! ஆனால் இப்போது உண்மையிலேயே சகஜமான சூழலை உணர்வதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். என்னுடைய இந்தத் திடீர் மாற்றத்தைப்பற்றி என் பெற்றோர்கள் இயல்பாகவே வியந்தபோதிலும், அவர்கள் சாதுரியமாக இருந்தார்கள். அவர்களுடைய வழக்கமான இரக்கத்துடனும் பொறுமையுடனும் பிரதிபலித்தார்கள். தொடர்ந்து வந்த மாதங்களில், அவர்களுடன் பைபிள் படிப்பை பகிர்ந்துகொள்ளும் சிலாக்கியத்தைப் பெற்றேன். என்னுடைய இரண்டு மூத்த சகோதரிகளுடன் பைபிள் படிப்பை ஆரம்பித்தேன், சந்தேகமின்றி அவர்களும் மாற்றமடைந்த என் வாழ்க்கை பாணியால் கவரப்பட்டார்கள். ஆம், இதுதான் உண்மையான வீடுதிரும்புதல்.
ஆகஸ்ட் 1973-ல், கேரலைனைத் தொடர்ந்து நானும் ஆஸ்திரேலியாவுக்குப் போனேன். அங்கு, 1973-ல் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டில், மற்ற 1,200 பேருடன் அவர் முழுக்காட்டப்பட்டதை காண்பதில் மகிழ்ச்சியடைந்தேன். அதையடுத்து வந்த வார இறுதியில், ஆஸ்திரேலியாவின் தேசிய தலைநகர் கென்பர்ராவில் நாங்கள் திருமணம் செய்தோம். இங்கு நான் முழுநேர பிரசங்கிப்பு வேலையைக் கடந்த 20 வருடங்களாகச் செய்துவருகிறவனாக இருக்கிறேன், 14 வருடங்களாக உள்ளூர் சபையில் மூப்பராக சேவிக்கிறேன்.
என் மனைவியின் ஒத்துழைப்புக்கு நன்றி சொல்லவேண்டும். எங்களுக்கு மூன்று பிள்ளைகள்—டோபி, அம்பர், மற்றும் ஜானத்தன். குடும்பத்தில் இயல்பாக வரும் பிரச்சினைகளை நாங்கள் எதிர்ப்பட்டபோதிலும், இன்னும்கூட என்னால் ஒரு பயனியராக முழுநேர பிரசங்க வேலையில் பங்கெடுக்க முடிகிறது. அதே சமயத்தில் எங்கள் குடும்பத்தின் பொருள் சம்பந்தமான தேவைகளை பராமரிப்பதற்கும் முடிகிறது.
இன்று, ஐக்கிய மாகாணங்களில், என்னுடைய பெற்றோர்கள் யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாக இருக்கிறார்கள். தற்போது தங்களுடைய 80-களில் அவர்கள் இருந்தபோதிலும், இன்னும்கூட பொதுமக்களிடம் ராஜ்யத்தை பிரசங்கிப்பதில் பங்குபெறுகிறார்கள். உள்ளூர் சபையில் என்னுடைய அப்பா உதவி ஊழியராக சேவை செய்கிறார். என்னுடைய இரண்டு மூத்த சகோதரிகள்கூட யெகோவாவின் சேவையில் வைராக்கியத்துடன் இருக்கிறார்கள்.
குறிக்கோள் இன்றி அலைந்துதிரிந்த என்னுடைய அந்த வருடங்கள், இப்போது என்றோ கடந்துபோன ஒன்றாக மாறியதற்காக யெகோவா தேவனுக்கு எவ்வளவு ஆழமாக நன்றி சொல்கிறேன்! என்னுடைய வாழ்க்கையை மிகச் சிறந்த வழியில் உபயோகிப்பதற்கு அவர் உதவியதோடு மாத்திரமல்ல, ஐக்கியப்பட்ட, கரிசனையான குடும்பத்தை கொடுத்தும் என்னை ஆசீர்வதித்துள்ளார்.—டேவிட் ஜூக் பார்ட்ரிக் சொன்னபடி.
[பக்கம் 23-ன் படம்]
டேவிட், அவருடைய மனைவி கேரலைன்