காவற்கோபுரம், விழித்தெழு!—சத்தியத்தின் காலத்திற்கேற்ற இதழ்கள்
“சத்திய தேவனாகிய யெகோவாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.”—சங்கீதம் 31:5, NW.
1, 2. (அ) காவற்கோபுரத்தில் தான் படித்த ஏதோவொன்றைப் பற்றி ஒரு சகோதரி எப்படி உணர்ந்தார்? (ஆ) நம் இதழ்களைப் பற்றி என்ன கேள்விகள் கேட்கப்படுகின்றன?
“மிக்க நன்றி, ‘துயர காலங்களில் நீங்கள் ஆறுதலைக் கண்டடையலாம்,’ என்ற காவற்கோபுர கட்டுரையில் கொடுத்த சுவாரஸ்யமான குறிப்புகளுக்காக” என்று கிறிஸ்தவ சகோதரி ஒருவர் எழுதினார்.a “நீங்கள் எடுத்துக்காட்டிய பெரும்பாலான குறிப்புகள் எனக்கு இருந்த அதே உணர்ச்சிகளாக இருந்தன. இந்தக் கட்டுரை எனக்கென்றே நேரடியாக எழுதப்பட்டதுபோல இருந்தது. அதை நான் முதலில் வாசித்தபோது, என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. நான் எப்படி உணர்கிறேன் என்பதை மற்றொருவர் அறிந்திருக்கிறார் என்று உணர்வது எவ்வளவு அதிசயமாக இருக்கிறது! யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பதில் நான் அதிக நன்றியுள்ளவளாயிருக்கிறேன். சமீப எதிர்காலத்தில் பரதீஸில் இருக்கப்போகும் முடிவிலா வாழ்க்கை சம்பந்தமான வாக்குறுதிகளையும், இன்று நம் ஆத்துமாக்களுக்கு ஆறுதலையும் நாம் வேறெங்கு காணமுடியும்! உங்களுக்கு நன்றி. லட்சக்கணக்கான தடவைகள் உங்களுக்கு நன்றி.”
2 நீங்கள் எப்போதாவது அப்படி உணர்ந்திருக்கிறீர்களா? காவற்கோபுரம் அல்லது அதன் துணை இதழ், விழித்தெழு! பத்திரிகைகளில் இருந்த ஏதாவது விஷயம் உங்களுக்கென்றே எழுதப்பட்டிருந்ததுபோல் தோன்றியதா? மக்களின் இருதயங்களைக் கவர்ந்திழுக்கும் நம் பத்திரிகைகளைப் பற்றி என்ன? அவற்றில் இருக்கும் உயிர்காக்கும் செய்தியிலிருந்து பயனடையும்படி மற்றவர்களுக்கு நாம் எப்படி உதவிசெய்யலாம்?—1 தீமோத்தேயு 4:16.
சத்தியத்தை ஆதரித்துப்பேசும் பத்திரிகைகள்
3. என்ன சரியான காரணத்தின்பிரகாரம் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் பல வாசகர்களின் இருதயத்தைக் கவர்ந்திருக்கின்றன?
3 யெகோவா ‘சத்திய தேவன்.’ (சங்கீதம் 31:5, NW) அவருடைய வார்த்தையாகிய பைபிள் ஒரு சத்திய புத்தகம். (யோவான் 17:17) நேர்மை இருதயமுள்ளோர் சத்தியத்திற்குப் பிரதிபலிக்கிறார்கள். (யோவான் 4:23, 24-ஐ ஒப்பிடுக.) காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் லட்சக்கணக்கான வாசகர்களின் இருதயங்களைக் கவர்ந்திழுக்க ஒரு காரணம், அவை உத்தமும் சத்தியமுமான இதழ்கள். உண்மையில், காவற்கோபுரம் பிரசுரிக்கப்பட ஆரம்பித்ததற்குக் காரணமே பைபிள் சத்தியத்திற்குப் பற்றுமாறாதிருக்கவேண்டும் என்ற பிரச்னையால்தான்.
4, 5. (அ) C. T. ரசல் ஆங்கில காவற்கோபுரம் பிரசுரிக்கும்படி செய்த சூழ்நிலைகள் யாவை? (ஆ) காவற்கோபுரம் இதழ் எப்படி ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையினால்’ பயன்படுத்தப்படுகிறது?
4 சார்ல்ஸ் T. ரசல் 1876-ல், நியூ யார்க், ரோசெஸ்டரில் வாழ்ந்த நெல்ஸன் H. பார்பர் என்பவரோடு சேர்ந்துகொண்டார். பார்பரை முக்கிய ஆசிரியராகவும் ரசலை ஒரு துணை ஆசிரியராகவும் கொண்டிருந்த காலை தூதுவன் (Herald of the Morning) என்ற பார்பரின் மத இதழை தொடர்ந்து அச்சடிப்பதற்கான நிதி உதவியை ரசல் கொடுத்தார். எனினும், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கடந்தபின் ஆகஸ்ட் 1878 தூதுவன் இதழில் கிறிஸ்துவின் மரணத்தினுடைய மீட்பின் மதிப்பை மறுத்து பார்பர் ஒரு கட்டுரையை எழுதினார். பார்பரைவிட கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வயதில் குறைவுபட்டிருந்த ரசல், அதற்கடுத்த கட்டுரையிலேயே மீட்கும்பொருளினை உயர்த்தி காட்டும் ஒரு கட்டுரையை எழுதி பிரதிபலித்தார்; இதை “கடவுளுடைய வார்த்தையின் மிக முக்கியமான போதகங்களில் ஒன்று” என்று குறிப்பிட்டார். (மத்தேயு 20:28) பார்பரோடு பலமுறை நியாயம்காட்டிப் பேச முயற்சிசெய்த பின்பு, தூதுவன் இதழ் சம்பந்தமான தன்னுடைய எல்லா தொடர்புகளையும் நிறுத்திவிட இறுதியில் ரசல் தீர்மானித்தார். துணை ஆசிரியராக ரசலுடைய பெயர் அந்த இதழின் ஜூன் 1879 வெளியீட்டிலிருந்து ஒருபோதும் தோன்றவில்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு, 27 வயதாயிருந்த ரசல் சீயோனின் காவற்கோபுரம் மற்றும் கிறிஸ்துவின் பிரசன்னத் தூதுவன் (Zion’s Watch Tower and Herald of Christ’s Presence) (இப்போது காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்று அறியப்படுகிறது) என்ற பத்திரிகையைப் பிரசுரிக்க ஆரம்பித்தார்; இது மீட்கும்பொருள் போன்ற வேதாகம சத்தியத்தை ஆரம்பத்திலிருந்தே உயர்த்திக் காட்டிவருகிறது.
5 கடந்த 114 ஆண்டுகளாக, காவற்கோபுரம் (தி உவாட்ச்டவர்) ஒரு திறமைமிக்க வழக்கறிஞர்போல, பைபிள் சத்தியம் மற்றும் கோட்பாட்டைப் பரிந்துபேசும் ஒன்றாகத் தன்னை நிலைநாட்டியிருக்கிறது. இந்த வழியில் லட்சக்கணக்கான வாசகர்களின் நம்பிக்கையை அது சம்பாதித்திருக்கிறது. அது இன்னும் ஆணித்தரமாக மீட்கும்பொருளை ஆதரிக்கிறது. (உதாரணத்திற்கு செப்டம்பர் 15, 1992 பக்கங்கள் 3-7-ஐ பாருங்கள்.) இது ஸ்தாபிக்கப்பட்ட யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிப்பதற்கும் ஆவிக்குரிய உணவை “ஏற்றவேளையிலே” கொடுப்பதற்கும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யும் அதன் நிர்வாகக் குழுவும் பயன்படுத்தும் முக்கிய கருவியாகத் தொடர்ந்து இருக்கிறது.—மத்தேயு 24:14, 45, NW.
6, 7. தி கோல்டன் ஏஜ் இதழில் சொல்லப்பட்ட நோக்கம் என்ன, சிந்திக்கும் மக்கள் அதனுடைய செய்திக்குப் பிரதிபலித்தனர் என்று எது காண்பிக்கிறது?
6 விழித்தெழு! (அவேக்!) பத்திரிகையைப் பற்றி என்ன? அதன் ஆரம்பத்திலிருந்தே, விழித்தெழு! பத்திரிகையும் சத்தியத்தை ஆதரித்துவந்திருக்கிறது. ஆரம்பத்தில் தி கோல்டன் ஏஜ் என்று அழைக்கப்பட்ட இந்தப் பத்திரிகை பொது வினியோகிப்பிற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டது. இதன் நோக்கத்தைப் பற்றி, அக்டோபர் 1, 1919 தேதியிட்ட முதல் வெளியீடு இவ்வாறு சொன்னது: “இன்றைய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளின் உண்மையான அர்த்தத்தை தெய்வீக ஞானத்தின் கருத்தில் விளக்கி, சிந்திக்கும் மனங்களுக்கு மறுக்கமுடியாத மற்றும் நம்பவைக்கும் சான்றுகளினால், மனிதகுலத்திற்கு ஒரு மகத்தான ஆசீர்வாத காலம் இப்போது வெகுசமீபத்தில் இருக்கிறது என்று நிரூபிப்பது இதன் நோக்கமாகும்.” சிந்திக்கும் மக்கள் தி கோல்டன் ஏஜ் இதழின் செய்திக்குப் பிரதிபலித்தனர். பல ஆண்டுகளாக, இதன் வினியோகிப்பு எண்ணிக்கை தி உவாட்ச்டவரைவிட அதிகமாக இருந்தது.b
7 எனினும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வின் கவர்ச்சி, அவை கோட்பாடு சம்பந்தமான சத்தியத்தைப் பிரசுரித்து, உலக நிலைமைகளின் தீர்க்கதரிசன உட்பொருளை விளக்குகின்றன என்பதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. விசேஷமாக, கடந்த ஓரிரு பத்தாண்டுகளில், நம் பத்திரிகைகள் மற்றொரு காரணத்திற்காகவும் மக்களின் இருதயங்களைக் கவர்ந்திருக்கின்றன.
மக்களின் வாழ்வைத் தொடும் காலத்திற்கேற்ற கட்டுரைகள்
8. சபைக்குள் என்ன செல்வாக்குகளை எதிர்த்துப் போராடும்படி தன்னுடைய வாசகர்களைத் தூண்டுவதற்கு யூதா தான் எழுதப்போனதில் என்ன மாற்றம் செய்தார்?
8 இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலிற்குப் பின் ஏறக்குறைய 30 ஆண்டுகளில் பைபிள் எழுத்தாளர் யூதா ஒரு சவால்மிக்க சூழ்நிலையை எதிர்ப்பட்டார். ஒழுக்கக்கேடுள்ள, மிருகத்தனமான மனிதர்கள் கிறிஸ்தவர்களின் மத்தியில் திருட்டுத்தனமாக நுழைந்திருந்தனர். அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் ரட்சிப்பு சம்பந்தமான கோட்பாடு விஷயத்தைப்பற்றி யூதா தன் உடன் கிறிஸ்தவர்களுக்கு எழுதவேண்டுமென எண்ணியிருந்தார். அதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டு, தன் வாசகர்களுக்குச் சபைக்குள் காணப்படும் தீங்குவிளைவிக்கும் செல்வாக்குகளை எதிர்த்துப் போராடும்படி தூண்டவேண்டும் என்ற தேவையை உணர்ந்தார். (யூதா 3, 4, 19-23) யூதா சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்துக்கொண்டு, அவருடைய கிறிஸ்தவ சகோதரர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்த, காலத்திற்கேற்ற ஆலோசனையைக் கொடுத்தார்.
9. நம் இதழ்களுக்காகக் காலத்திற்கேற்ற கட்டுரைகளை ஏற்பாடுசெய்து கொடுப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
9 அதைப்போலவே, நம் இதழ்களுக்கு காலத்திற்கேற்ற கட்டுரைகளைத் தயாரிப்பது ஒரு சவால்தரும் பொறுப்பாக இருக்கிறது. காலங்கள் மாறுகின்றன, அதற்கேற்றாற்போல் மக்களும் மாறுகின்றனர்—ஓரிரு பத்தாண்டுகளுக்கும் முன்பிருந்த அவர்களுடைய தேவைகள் மற்றும் அவர்களுடைய அக்கறைகள் இப்போது இல்லை. ஒரு பயணக் கண்காணி சமீபத்தில் இவ்வாறு கண்டுணர்ந்தார்: “நான் 1950-களில் ஒரு சாட்சியாக ஆனபோது, மக்களோடு பைபிளைப் படிப்பதற்கான எங்களுடைய அணுகுமுறை அடிப்படையில் கோட்பாடுகள் சம்பந்தப்பட்டதாக இருந்தது—அவர்களுக்குத் திரித்துவம், எரிநரகம், ஆத்துமா போன்றவை சம்பந்தமான சத்தியங்களைப் போதிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது மக்கள் வாழ்க்கையில் அவ்வளவு பிரச்னைகளும் கஷ்டங்களும் இருப்பதால் நாம் அவர்களுக்கு எப்படி வாழவேண்டும் என்று கற்பிப்பது அவசியமாயிருப்பதுபோல் தோன்றுகிறது.” ஏன் இது அப்படி?
10. 1914-லிருந்து மனிதர்களின் வாழ்க்கைப்போக்குகளில் படிப்படியான சீரழிவு இருந்துவருவது ஏன் நம்மை திகைப்படையச் செய்யக்கூடாது?
10 ‘கடைசி நாள்களைப்’ பற்றி பைபிள் இவ்வாறு முன்னறிவித்தது: “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.” (2 தீமோத்தேயு 3:1, 13) எனவே, 1914-ல் முடிவு காலம் ஆரம்பித்ததிலிருந்து மனிதர்களின் வாழ்க்கைப்போக்குகளில் படிப்படியான சீரழிவு இருந்துவருகிறது என்பது நம்மை திகைப்படையச் செய்யக்கூடாது. சாத்தானுடைய மீதி காலம், இதுவரை இருந்ததைவிட குறைவாக இருப்பதால், அவன் தன் கோபத்தை முன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்கு மனித சமுதாயத்தின்மீது வெளிப்படையாகக் காட்டுகிறான். (வெளிப்படுத்துதல் 12:9, 12) இதன்விளைவாக, அறநெறிமுறைகளும், குடும்பத்தின் மதிப்பீடுகளும் வெறும் 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல் இப்போது இல்லை. முந்தைய பத்தாண்டுகளில் இருந்ததைப்போல மக்கள் பொதுவாகவே மத சம்பந்தமான மனச்சாய்வு உடையவர்களாக இல்லை. குற்றச்செயல் அவ்வளவு பரவியிருப்பதால் வெறும் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் கேள்வியும்பட்டிராத முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மக்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.—மத்தேயு 24:12.
11. (அ) மக்களின் மனங்களில் எப்படிப்பட்ட தலைப்புப்பொருள்கள் இருக்கின்றன, உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பு இந்தத் தேவைகளுக்கு எப்படிப் பிரதிபலித்திருக்கிறது? (ஆ) உங்கள் வாழ்க்கையைத் தொட்ட காவற்கோபுர அல்லது விழித்தெழு! கட்டுரையை உதாரணமாகக் குறிப்பிடுங்கள்.
11 எனவே, உணர்ச்சி, சமூக, குடும்ப பிரச்னைகள் போன்றவை பலருடைய மனங்களில் இருக்கின்றன என்பதில் வியப்பேதுமில்லை. உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பு, மக்களின் உண்மை தேவைகளைப் பற்றிய காலத்திற்கேற்ற கட்டுரைகளை காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! இதழ்களில் பிரசுரிப்பதன்மூலம் தைரியத்துடன் பிரதிபலித்திருக்கிறது; இது மக்கள் வாழ்க்கையை உண்மையில் தொடுகிறது. சில எடுத்துக்காட்டுகளைச் சிந்திக்கலாம்.
12. (அ) 1980-ல் ஆங்கில காவற்கோபுரத்திற்காக ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் பற்றிய கட்டுரைகள் ஏன் தயாரிக்கப்பட்டன? (ஆ) ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் பற்றிய கட்டுரைகளுக்காக ஒரு சகோதரி எவ்வாறு போற்றுதலை தெரிவித்தார்கள்?
12 குடும்பப் பிரச்னைகள். உலக அறிக்கைகள் ஒற்றைப் பெற்றோர் குடும்ப எண்ணிக்கையில் வேகமான அதிகரிப்பை எடுத்துக்காட்டியபோது, “ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள்—பிரச்னைகளைச் சமாளித்தல்” என்ற தலைப்பில் புதுமையான கட்டுரைகள் செப்டம்பர் 15, 1980, காவற்கோபுரம் (ஆங்கிலம்) வெளியீட்டிற்காகத் தயாரிக்கப்பட்டன. இந்தக் கட்டுரைகள் இரண்டுவிதமான நோக்கங்களைக் கொண்டிருந்தன: (1) ஒற்றைப் பெற்றோர் எதிர்ப்படும் விசேஷித்த பிரச்னைகளைச் சமாளிக்க உதவுவது, மற்றும் (2) மற்றவர்கள், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களுக்கு ‘இரக்கத்தை’ காண்பிக்கவும், உண்மையாக ‘கவனித்துக்கொள்ளவும்’ நல்லவிதத்தில் அறிந்திருக்க உதவுவது. (1 பேதுரு 3:8; யாக்கோபு 1:27) பல வாசகர்கள் இந்தக் கட்டுரைகளுக்காகப் போற்றுதலைத் தெரிவித்து எழுதியிருந்தனர். “உண்மையில், அட்டைப் பக்கத்தைப் பார்த்தவுடனேயே என் கண்களில் கண்ணீர்வழிய ஆரம்பித்தது; பின்பு நான் பத்திரிகையைத் திறந்து, குறிப்புகளை வாசித்தபோது, தேவையான சமயத்தில் இப்படிப்பட்ட தகவலைக் கொடுத்ததற்காக என் இருதயம் யெகோவாவிற்கு நன்றியுணர்வினால் பொங்கிவடிந்தது,” என்று எழுதினார் ஓர் ஒற்றைப் பெற்றோர்.
13. மனச்சோர்வைப் பற்றிய என்ன ஓர் ஆழ்ந்த கலந்தாலோசிப்பு 1981-ன் ஆங்கில விழித்தெழு! இதழில் பிரசுரிக்கப்பட்டது, இதைப் பற்றி ஒரு வாசகர் என்ன சொன்னார்?
13 உணர்ச்சிப் பிரச்னைகள். 1960-களிலிருந்து மனச்சோர்வு என்ற தலைப்புப்பொருள் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! இதழ்களில் கலந்தாராயப்பட்டுவருகிறது. (1 தெசலோனிக்கேயர் 5:14) ஆனால் இந்த தலைப்புப்பொருளில் புதிதான, உடன்பாடான ஆய்வு “மனச்சோர்வை நீங்கள் எதிர்த்துப் போரிடமுடியும்!” என்ற அட்டைப் பக்க தொடர்கட்டுரையில், செப்டம்பர் 8, 1981, ஆங்கில விழித்தெழு! இதழில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. உலகமெங்குமிருந்து உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு போற்றுதல் கடிதங்கள் பொழிந்தன. “என் இருதயத்திலுள்ள உணர்ச்சிகளை நான் எழுத்தில் வெளிக்காட்ட முடியுமா என்ன?” என்று எழுதினார் ஒரு சகோதரி. “எனக்கு வயது 24. கடந்த பத்து ஆண்டுகளாக பலமுறை மனச்சோர்வுகளை நான் அடைந்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் யெகோவாவிடம் நெருங்கிவந்திருப்பதுபோல் உணர்கிறேன். அவர் மனச்சோர்வில் இருக்கிறவர்களின் தேவைகளுக்கு இப்படிப்பட்ட அருமையான கட்டுரைகள்மூலம் பிரதிபலித்ததற்கு நன்றி. உங்களிடத்தில் இதைத் தெரிவிக்க வாஞ்சையாய் இருந்தேன்.”
14, 15. (அ) நம் இதழ்களில் குழந்தை துர்ப்பிரயோகம் எவ்வாறு கையாளப்பட்டது? (ஆ) ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு குதிரைப் பந்தயக்காரரை எந்தப் பத்திரிகை கட்டுரைகள் கவர்ந்தன?
14 சமூகப் பிரச்னைகள். “கடைசி நாட்களில்” மனிதர்கள் “தற்பிரியராயும், . . . சுபாவ அன்பில்லாதவர்களாயும், . . . இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்” இருப்பார்கள் என்று பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1-5) எனவே, குழந்தை துர்ப்பிரயோகம் இன்று பேரளவில் நடத்தப்படுகிறது என்பது நம்மை வியப்படையச் செய்யக்கூடாது. இந்தத் தலைப்புப்பொருள், அக்டோபர் 1, 1983, (ஆங்கில) காவற்கோபுரத்தில் வந்த “முறைதகாப் புணர்ச்சிக்குப் பலியானவர்களுக்கு உதவி” என்ற கட்டுரையில் வெளிப்படையாக ஆய்வுசெய்யப்பட்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு, அக்டோபர் 8, 1991, விழித்தெழு! இதழில் “குழந்தை துர்ப்பிரயோகத்தின் காயங்களைக் குணப்படுத்துதல்” என்ற அட்டைப் பக்க தொடர்கட்டுரைகளில், புரிந்துகொள்ளுதலையும் பலியாட்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்து, ஆறுதல்தரும் உதவியைக் கொடுப்பதற்கு மற்றவர்களை அறிவுறுத்துவதாகவும் இருக்கும்படி கவனமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தொடர்கட்டுரைகள் எங்கள் இதழ்களின் சரித்திரத்திலேயே அதிகமான வாசகர்களின் பிரதிபலிப்பைத் துண்டியது. ஒரு வாசகர் இவ்வாறு எழுதினார்: “நான் குணப்படுவதற்குப் பெரிய உதவியாக இருந்தது இந்தக் கட்டுரைகளிலிருந்த ஆறுதலளிக்கும் எண்ணங்களும் வேதாகம மேற்கோள்களுமே. யெகோவா என்னைக் கீழ்த்தரமாக நினைக்கவில்லை என்பது மிகப் பெரிய ஆறுதலைத் தந்தது. நான் தன்னந்தனியாய் இப்படியில்லை என்று அறிவதும், என்னை அதேயளவிற்கு ஆறுதல்படுத்துவதாக இருந்தது.”
15 ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னில் ஒரு குதிரை பந்தயக்காரர் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் சிட்னி அலுவலகத்திற்கு ஒரு தொலைதூர ஃபோன் அழைப்புச் செய்து, குதிரைப் பந்தய வட்டாரங்களின் நிலைமையைக் குறித்து தன்னுடைய வெறுப்பைத் தெரிவித்தார். அவர் “கற்பழிப்பு—ஒரு பெண்ணின் கொடுங்கனவு” என்பதன்பேரில் வந்த ஜூன் 8, 1993, விழித்தெழு!-வை அப்போதுதான் வாசித்திருந்தார். இப்படிப்பட்ட ஒரு மதிப்புக்குரிய பத்திரிகை இருந்தது என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கேள்விகளைக் கேட்டார்; கொடுக்கப்பட்ட பதில்களைக் கேட்பதில் சந்தோஷமடைந்தார்.
16 உங்களைப் பற்றி என்ன? காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட விசேஷித்த கட்டுரை ஏதும் உங்களுடைய வாழ்க்கையைத் தொட்டிருக்கிறதா? அப்படியென்றால், எங்கள் இதழ்களுக்கு நீங்கள் ஆழமான நன்றியுணர்வை உணர்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. உங்களுடைய போற்றுதலை நீங்கள் எப்படிச் செயலில் காட்டலாம்? ஒவ்வொரு வெளியீட்டையும் நீங்கள்தானே வாசிப்பதன்மூலம் நிச்சயமாகவே வெளிக்காட்டலாம். இந்த அருமையான இதழ்களுக்கு இயன்றளவிற்கு மிகப் பரவலான வினியோகிப்பைப் பெறும்படி செய்வதிலும் நீங்கள் பங்குகொள்ளலாம். இதை எப்படிச் செய்யலாம்?
மற்றவர்களோடு அவற்றை பகிர்ந்துகொள்ளுங்கள்!
17. பத்திரிகை வினியோகிப்பை அதிகரிப்பதற்குச் சபைகள் என்ன செய்யலாம்?
17 முதலாவதாக, ஒவ்வொரு சபையும் செய்யவேண்டிய ஏதோவொன்று இருக்கிறது. இன்ஃபார்மென்ட் (இப்போது நம் ராஜ்ய ஊழியம்) அக்டோபர் 1952 வெளியீடு இவ்வாறு சொன்னது: “பத்திரிகைகளை வினியோகிப்பதில் மிகப் பயன்தரும் முறை, வீட்டுக்குவீடு மற்றும் கடைக்குக்கடை முறையாகும். எனவே பத்திரிகை வினியோகிப்பின் இந்த இடங்கள், பத்திரிகை நாள் நடவடிக்கையின் ஒழுங்கான பாகமாக இருக்கும்படி சங்கம் சிபாரிசுசெய்கிறது.” அந்த ஆலோசனை இன்றும் பொருந்தும். விசேஷமாகப் பத்திரிகை ஊழியம் செய்வதற்கென்றே ஒதுக்கப்பட்ட ஒழுங்கான பத்திரிகை நாள் ஒன்றைச் சபைகள் திட்டமிடலாம். பெரும்பாலான சபைகளுக்கு திட்டமிடப்பட்ட சனிக்கிழமைகள் சந்தேகமின்றி ஒரு நல்ல சமயமாக இருக்கும். ஆம், ஒவ்வொரு சபையும் விசேஷித்த தினங்களை அல்லது மாலைநேரங்களைப் பத்திரிகை ஊழியத்திற்காக—வீட்டுக்குவீடு, கடைக்குக்கடை, தெரு ஊழியம், பத்திரிகை மார்க்கம் ஆகியவற்றிற்காக—ஒதுக்கி வைக்கலாம். கூடுதலாக, ராஜ்ய பிரஸ்தாபியாகிய நீங்கள், பத்திரிகை வினியோகிப்பை அதிகரிப்பதற்கு உதவிசெய்வதில் என்ன செய்யலாம்?
18, 19. (அ) “காவற்கோபுரம்,” “விழித்தெழு!” உணர்வுடையோராக இருத்தல் எப்படிப் பத்திரிகைகளைக் கொடுப்பதற்கு உதவிசெய்யலாம்? (ஆ) பத்திரிகைகளைக் கொடுப்பதில் குறுகிய, பொருத்தமான அளிப்பின் அனுகூலம் என்ன? (இ) மக்களின் வீடுகளுக்குள் பத்திரிகைகளை உட்புகும்படி செய்வதன் மதிப்பை எது காண்பிக்கிறது?
18 “காவற்கோபுரம்,” “விழித்தெழு!” உணர்வுடையோராக இருத்தல் முதல் படியாகும். பத்திரிகைகளை முன்பே படியுங்கள். நீங்கள் ஒவ்வொரு கட்டுரையையும் படிக்கும்போது உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம், ‘யாருக்கு இந்தக் கட்டுரை அக்கறைக்குரியதாக இருக்கும்?’ கட்டுரையில் அக்கறையைத் தூண்டும்படி நீங்கள் சொல்லக்கூடிய ஒருசில வார்த்தைகளைச் சிந்தித்துப் பாருங்கள். பொதுவான பத்திரிகை நாளை ஆதரிப்பதோடு, மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும்—பயணம்செய்கையிலோ கடைக்குப்போகையிலோ மேலும் உடன்வேலைசெய்பவர்களிடம், அயலாரிடம், பள்ளி சகாக்களிடம், அல்லது ஆசிரியர்களிடம் பேசும்போது—பயன்படுத்தும்படி ஏன் பிரதிகளை நீங்கள் எடுத்துப்போகக்கூடாது?
19 உங்கள் பிரசங்கத்தை எளிமையாக வைப்பதே இரண்டாம் ஆலோசனை. டிசம்பர் 1, 1956, ஆங்கில காவற்கோபுரம் சொன்னது: “ஒரு குறுகிய, பொருத்தமான பிரசங்கிப்பே பத்திரிகைகளைக் கொடுப்பதற்கு மிகச் சிறந்தது. பல பிரதிகளை அளிப்பதே அதன் நோக்கம். அவைதானே ‘பேசும்.’” சில பிரஸ்தாபிகள் ஒரு கட்டுரையிலிருந்து ஒரு கருத்தை எடுத்து, அதை ஒருசில வார்த்தைகளாக அமைத்து, பத்திரிகைகளைக் கொடுப்பது பயனுள்ளதாக இருப்பதாய் உணர்கின்றனர். வீட்டிற்குள் பத்திரிகைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, பத்திரிகைகள் அவற்றை வாங்கினவரோடுங்கூட மற்றவர்களோடும் “பேசக்கூடும்.” ஐயர்லாந்தில் செப்டம்பர் 1, 1991 ஆங்கில காவற்கோபுர வெளியீட்டை ஒரு பல்கலைக்கழக இளம் மாணவி வாசித்தார்; இதை அவளுடைய அப்பா ஒரு சாட்சியிடமிருந்து பெற்றிருந்தார். பேச்சுத்தொடர்பு சம்பந்தமான கட்டுரைகள், மற்ற தலைப்புப்பொருள்கள் அவளுடைய அக்கறையைத் தூண்டின. அவள் பத்திரிகையைப் படித்தவுடன், ஃபோன் புத்தகத்தில் பட்டியலிடப்பட்ட எண்ணிற்குக் கூப்பிடுவதன்மூலம் அவள் சாட்சிகளுக்கு ஃபோன் செய்தாள். ஒரு பைபிள் படிப்பு சீக்கிரத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. பின்பு ஜூலை 1993 “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டில் அந்த இளம்பெண் முழுக்காட்டுதல் பெற்றாள். ஆம், பத்திரிகைகளை வீடுகளுக்குள் போகும்படி செய்வோமாக, அங்கே அவை மக்களோடு பேசும்! ஒரு பயணக் கண்காணி மற்றொரு எளிமையான ஆலோசனையைக் கொடுத்தார்: “உங்களுடைய புத்தகப் பையிலிருந்து பத்திரிகையை வெளியே எடுங்கள்.” உண்மையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது வீட்டுக்காரரின் அக்கறையைக் கவர்ந்திழுக்கவில்லையென்றால், ஒருவேளை அக்கறையைக் கவர்ந்திழுக்கும் அவற்றின் அட்டைப்படங்கள் உங்களுக்காகப் பத்திரிகைகளைக் கொடுக்கும்.
20, 21. (அ) பத்திரிகை ஊழியத்தில் பங்கெடுக்கும்போது, நீங்கள் எப்படி வளைந்துகொடுப்போராய் இருக்கலாம்? (ஆ) ஒவ்வொரு மாதமும் அநேக பத்திரிகைகளைக் கொடுப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
20 மூன்றாவது ஆலோசனை, வளைந்துகொடுப்போராய் இருங்கள். (1 கொரிந்தியர் 9:19-23-ஐ ஒப்பிடவும்.) ஒருசில சிறிய பிரசங்கங்களைத் தயாரித்துக்கொள்ளுங்கள். ஆண்களைக் கவரும் ஒரு கட்டுரையையும் பெண்களைக் கவரும் ஒரு கட்டுரையையும் மனதில்வைத்துக்கொள்ளுங்கள். இளைஞருக்கு “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரையைக் காண்பிக்கலாம். பத்திரிகை ஊழியத்தில் பங்கெடுக்கும்போதும் வளைந்துகொடுப்போராய் இருங்கள். பத்திரிகை நாளோடுகூட, மாலைநேர ஊழியம் வீட்டுக்குவீடு பத்திரிகைகளைக் கொடுப்பதில் ஒரு மிகச் சிறந்த வாய்ப்பை அளிப்பதாக நீங்கள் காணலாம்.
21 நான்காவது ஆலோசனை தனிப்பட்ட இலக்கை வையுங்கள். ஏப்ரல் 1984 நம் ராஜ்ய ஊழியத்தில் வந்த “பத்திரிகைகள் ஜீவனுக்கான வழியைக் காண்பிக்கின்றன,” என்ற உட்சேர்க்கை இவ்வாறு சொன்னது: “ஓர் ஆலோசனையாக, பிரஸ்தாபிகள் அவர்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு மாதத்திற்கு 10 பத்திரிகைகள் என்ற இலக்கை வைத்துக்கொள்ளலாம்; பயனியர்கள் 90 பத்திரிகைகள் கொடுக்க கடும்முயற்சிசெய்யலாம். ஆனாலும், சில பிரஸ்தாபிகள் ஒரு மாதத்திற்கு அதிகமான பத்திரிகைகளை வினியோகிக்க முடிகிறவர்களாக இருக்கலாம். எனவே, அதிகமான தனிப்பட்ட இலக்கை வைத்துக்கொள்ளவேண்டும். எனினும், சுகமில்லாமை, பிராந்தியத்தின் வகை ஆகியவற்றின் காரணமாக, அல்லது மற்ற நல்ல காரணங்களுக்காக மற்றவர்களின் இலக்கு குறைவானதாக இருக்கலாம். ஆனாலும் யெகோவாவிற்கு அவர்கள் செய்யும் சேவையும் போற்றத்தக்கதே. (மத். 13:23; லுக். 21:3, 4) முக்கியமான காரியமானது, ஒரு தனிப்பட்ட இலக்கை வைத்திருப்பதாகும்.”
22. காலத்திற்கேற்ற நம்முடைய இந்தச் சத்தியத்தின் இதழ்களுக்காக யெகோவாவுக்கு நன்றியுடையோராக இருக்கிறோம் என்பதை நாம் என்ன வழியில் காண்பிக்கலாம்?
22 “சத்திய தேவனாகிய” யெகோவா, காலத்திற்கேற்ற இந்த இதழ்களை நமக்குத் தர உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பையும் அதன் நிர்வாகக் குழுவையும் பயன்படுத்துவதற்கு நாம் எவ்வளவு நன்றியுடையோராய் இருக்கிறோம்! (சங்கீதம் 31:5) யெகோவாவின் சித்தம் இருக்கும்வரை, இந்த இதழ்கள் மக்களின் உண்மையான தேவைகளைத் தொடர்ந்து பூர்த்திசெய்துவரும். அவை யெகோவாவின் ஒழுக்கநெறி சம்பந்தமான உயர்ந்த தராதரங்களைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கும். சரியான கோட்பாட்டை எடுத்துச்சொல்ல அவை தயங்காது. கடவுளுடைய ராஜ்யம் ஆட்சிசெய்துவருகிற காலமாகவும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான எண்ணிக்கையில் யெகோவாவின் உண்மையான வணக்கத்தினர் பூமியில் கடவுளுடைய சித்தத்தைச் செய்யும் காலமாகவும் நம்முடைய நாள்களை அடையாளப்படுத்தும் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்திற்கு நமது கவனத்தை ஈர்ப்பதில் அவை தொடர்ந்து நிலைத்திருக்கும். (மத்தேயு 6:10; வெளிப்படுத்துதல் 11:15) காவற்கோபுரம், விழித்தெழு! இதழ்களில் என்னே ஒரு மதிப்பிடமுடியாத பொக்கிஷத்தைப் பெற்றிருக்கிறோம் நாம்! மக்களின் வாழ்க்கையைத் தொட்டு, ராஜ்ய சத்தியங்களைப் பரிந்துபேசும் இந்த முக்கியமான இதழ்களை, சாந்த இருதயமுடையோரோடு பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் அனுகூலப்படுத்திக்கொள்வோமாக.
16. நம் இதழ்களுக்கு என்ன வழிகளில் உங்களுடைய போற்றுதலைக் காண்பிக்கலாம்?
[அடிக்குறிப்புகள்]
a அக்டோபர் 15, 1992, பக்கங்கள் 19-22.
b பல ஆண்டுகளாக தி உவாட்ச்டவர் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு மட்டுமேயுரிய பத்திரிகை என்று கருதப்பட்டுவந்தது. எனினும் 1935-ன் ஆரம்பத்திலிருந்து, பூமியில் முடிவில்லா வாழ்க்கையைப் பெறும் நம்பிக்கையோடிருக்கும் ‘திரள் கூட்டத்தினர்’ தி உவாட்ச்டவர் இதழை வாங்கிப் படிக்கும்படி உற்சாகப்படுத்துவதற்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டது. (வெளிப்படுத்துதல் 7:9) ஒருசில ஆண்டுகளுக்குப் பின், 1940-ல், தி உவாட்ச்டவர் இதழ், தெருவில் காணப்படும் மக்களிடம் ஒழுங்காக அளிக்கப்பட்டது. அப்போதிருந்து வினியோகிப்பு எண்ணிக்கை விரைவாக அதிகரித்தது.
உங்கள் பதில் என்ன?
◻ காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் சத்தியத்தின் இதழ்கள் என்று எது காண்பிக்கிறது?
◻ காவற்கோபுரம், விழித்தெழு! இதழ்கள் எப்படி மக்களின் வாழ்வைத் தொட்டிருக்கின்றன?
◻ பத்திரிகை வினியோகிப்பை அதிகரிப்பதற்குச் சபைகள் என்ன செய்யலாம்?
◻ அநேக பத்திரிகைகளைக் கொடுப்பதற்கு என்ன ஆலோசனைகள் உங்களுக்கு உதவிசெய்யலாம்?
[பக்கம் 22-ன் பெட்டி]
மக்களின் வாழ்க்கையைத் தொட்டிருக்கும் சில கட்டுரைகள்
காவற்கோபுரம், விழித்தெழு! இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட விசேஷித்த கட்டுரைகளை வருடக்கணக்காக பல வாசகர்கள் போற்றி எழுதியிருக்கிறார்கள். நம் வாசகரிடம் நல்ல பாதிப்பைக் கொண்டிருந்த பல தலைப்புப்பொருள்களில் வெறுமனே ஒருசில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரைகள் அல்லது மற்ற கட்டுரைகள் உங்களுடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறதா?
காவற்கோபுரம்
“இரகசியமான தவறுகளை மேற்கொள்ள கடவுளின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்” (டிசம்பர் 1, 1985)
“வயதான பெற்றோர்களிடமாக தேவபக்தியாய் நடந்துகொள்ளுதல்” (டிசம்பர் 1, 1987)
“ஒரு நோக்குமுடைய கல்வி” (பிப்ரவரி 1, 1993)
விழித்தெழு!
“மனச்சோர்வை நீங்கள் எதிர்த்துப்போரிட முடியும்!” (செப்டம்பர் 8, 1981, ஆங்கிலம்)
“நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் . . .” (பிப்ரவரி 8, 1986)
“உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!” (அக்டோபர் 8, 1993, ஆங்கிலம்)
[பக்கம் 23-ன் படம்]
கனடாவில்—பத்திரிகைகளைக்கொண்டு வீட்டுக்குவீடு பிரசங்கித்தல்
[பக்கம் 24-ன் படம்]
மயன்மாரில்—ஜீவப் பாதையைக் காண்பிக்கும் பத்திரிகைகளைக் கொடுத்தல்