உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரும் நற்செய்தியை அறிவிக்கிறார்கள்
“கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.”—சங்கீதம் 96:2.
1. என்ன நல்ல செய்தியை ஜனங்கள் கேட்க வேண்டும், அச்செய்தியை அறிவிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு முன்மாதிரிகளாக இருந்திருக்கிறார்கள்?
நாள்தோறும் பேரழிவுகள் ஏற்படுகிற ஓர் உலகில், போர், குற்றச்செயல், பசி, கொடுமை ஆகியவை சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என பைபிள் கூறுவதை அறிவது உண்மையிலேயே ஆறுதலளிக்கிறது. (சங்கீதம் 46:9; 72:3, 7, 8, 12, 16) இது அனைவருமே கேட்க வேண்டிய நல்ல செய்தி அல்லவா? யெகோவாவின் சாட்சிகள் அப்படித்தான் நினைக்கிறார்கள். அவர்கள், ‘நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவிப்பது’ யாவரும் அறிந்ததே. (ஏசாயா 52:7) நல்ல செய்தியை அறிவிப்பதில் உறுதியாக இருந்ததால் சாட்சிகளில் பலர் துன்புறுத்தப்பட்டனர் என்பது உண்மையே. ஆனால், அடிப்படையில் ஜனங்களுக்கு நல்லது செய்யவே அவர்கள் விரும்புகின்றனர். இந்த சாட்சிகள், ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் எத்தகைய பதிவை ஏற்படுத்தியிருக்கின்றனர்!
2 இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய ஆர்வம் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் ஆர்வத்திற்கு இணையானது. அவர்களை பற்றி ரோமன் கத்தோலிக்க செய்தித்தாளான லாஸேர்வாட்டோரே ரோமானோ இவ்வாறு கூறியது மிகவும் பொருத்தமானதே: “ஆரம்பகால கிறிஸ்தவர்கள் முழுக்காட்டப்பட்டவுடன் சுவிசேஷத்தை பரப்புவதே தங்கள் கடமை என்று நினைத்தார்கள். அந்த அடிமைகள் தங்கள் வாய் வார்த்தைகளால் சுவிசேஷத்தை பரப்பினார்கள்.” ஆரம்ப கால கிறிஸ்தவர்களைப் போலவே யெகோவாவின் சாட்சிகள் அவ்வளவு ஆர்வமாய் இருப்பதற்கு காரணம் என்ன? முதல் காரணம், அவர்கள் அறிவிக்கும் சுவிசேஷம் அல்லது நல்ல செய்தி யெகோவா தேவனிடமிருந்தே வந்திருக்கிறது. அவர்களுடைய ஆர்வத்திற்கு இதை காட்டிலும் மேம்பட்ட காரணம் இருக்க முடியுமா? “கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்” என்று கூறிய சங்கீதக்காரனின் வார்த்தைகளுக்கு இசைவாக அவர்கள் நல்ல செய்தியை அறிவிக்கின்றனர்.—சங்கீதம் 96:2.
3 யெகோவாவின் சாட்சிகளுடைய ஆர்வத்திற்கு இரண்டாவது காரணத்தையும் சங்கீதக்காரனின் வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. அவர்களுடைய செய்தி இரட்சிப்பை பற்றிய செய்தி. சக மனிதரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக சிலர் மருத்துவ, சமுதாய, பொருளாதார, இன்னும் மற்ற துறைகளில் பணியாற்றுகிறார்கள்; அவர்களுடைய முயற்சிகள் பாராட்டத்தக்கவையே. ஆனால், ஒரு மனிதன் மற்றொருவனுக்கு செய்யும் எதுவுமே ‘கடவுள் தரும் இரட்சிப்பிற்கு’ ஈடாகாது. மனத்தாழ்மை உள்ளவர்களை, பாவம், நோய், மரணம் போன்றவற்றின் பிடியிலிருந்து இயேசு கிறிஸ்துவின் மூலமாக யெகோவா மீட்பார். அவ்வாறு நன்மை அடைபவர்கள் என்றென்றுமாக வாழ்வார்கள்! (யோவான் 3:16, 36; வெளிப்படுத்துதல் 21:3, 4) பின்வரும் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிகையில் இன்று கிறிஸ்தவர்கள் அறிவிக்கும் ‘அதிசயங்களுள்’ இரட்சிப்பும் ஒன்றாகும்: “ஜாதிகளுக்குள் அவருடைய [கடவுளுடைய] மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.”—சங்கீதம் 96:3, 4.
எஜமானரின் முன்மாதிரி
4 யெகோவாவின் சாட்சிகளுடைய ஆர்வத்திற்கு மூன்றாவது காரணமும் உள்ளது. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்றுகிறார்கள். (1 பேதுரு 2:21) அந்தப் பரிபூரண மனிதர், ‘சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்’ பொறுப்பை மனதார ஏற்றுக்கொண்டார். (ஏசாயா 61:1; லூக்கா 4:17-21) இவ்வாறு அவர் சுவிசேஷகராக அல்லது நல்ல செய்தியை அறிவிப்பவராக ஆனார். அவர் கலிலேயா மற்றும் யூதேயா முழுவதுமாக பயணித்து, “ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்”தார். (மத்தேயு 4:23) அந்த சுவிசேஷத்தை அல்லது நல்ல செய்தியை அநேகர் ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர் அறிந்திருந்ததால் தமது சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.”—மத்தேயு 9:37, 38.
5 இயேசு தமது ஜெபத்திற்கு இசைவாக, பிரசங்கிகளாகும்படி சீஷர்களுக்கு பயிற்சி அளித்தார். காலப்போக்கில், பிரசங்கிக்கும்படி தமது அப்போஸ்தலர்களை அனுப்புகையில் அவர்களிடம் இவ்வாறு கூறினார்: “போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.” பிரசங்கிப்பதற்கு பதிலாக, அன்றைய சமுதாய பிரச்சினைகளை தீர்க்கும் திட்டங்களை தீட்டுவது அவர்களுக்கு அதிக நடைமுறையானதாக இருந்திருக்குமா? அல்லது அன்று எங்கும் பரவியிருந்த ஊழலை ஒழிக்க அவர்கள் அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டுமா? இல்லை. அதற்கு பதிலாக, “போகையில் . . . பிரசங்கியுங்கள்” என்று தம் சீஷர்களிடம் கூறுவதன் மூலம் கிறிஸ்தவ பிரசங்கிகள் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தராதரத்தை இயேசு வைத்தார்.—மத்தேயு 10:5-7.
6 பிறகு, ‘தேவனுடைய ராஜ்யம் சமீபித்திருக்கிறது’ என அறிவிக்கும்படி சீஷர்களின் மற்றொரு தொகுதியை அவர் அனுப்பினார். அவர்கள் திரும்பி வந்து பிரசங்க ஊழியத்தில் பெற்ற வெற்றியை அறிவித்தபோது இயேசு பேரானந்தம் அடைந்தார். “பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” என ஜெபித்தார். (லூக்கா 10:1, 8, 9, 21) இயேசுவின் சீஷர்கள் கடினமாய் உழைக்கும் மீனவர்களாகவும், விவசாயிகளாகவும், தொழிலாளிகளாகவும் இருந்தார்கள்; கல்வியில் கரைகண்ட அத்தேசத்தின் மதத் தலைவர்களோடு ஒப்பிட இவர்கள் வெறும் பாலகர்களாகவே தோன்றினார்கள். ஆனால், மிகவும் சிறப்பான நற்செய்தியை அறிவிக்க இந்த சீஷர்கள் பயிற்சி பெற்றிருந்தார்கள்.
7 இயேசு பரலோகத்திற்கு சென்ற பிறகும் அவரைப் பின்பற்றியவர்கள் இரட்சிப்பு பற்றிய நற்செய்தியை தொடர்ந்து அறிவித்து வந்தார்கள். (அப்போஸ்தலர் 2:21, 38-40) அவர்கள் முதலாவதாக யாரிடம் பிரசங்கித்தார்கள்? கடவுளை அறியாத புறஜாதிகளிடம் சென்றார்களா? இல்லை, மாறாக 1,500-க்கும் அதிக வருடங்களாக யெகோவாவை அறிந்திருந்த இஸ்ரவேலர்களிடமே முதலில் சென்றார்கள். ஏற்கெனவே யெகோவாவை வணங்கி வந்த ஓர் நாட்டில் பிரசங்கிக்க அவர்களுக்கு உரிமை இருந்ததா? இருந்தது. ஏனெனில் இயேசு அவர்களிடம், “நீங்கள் . . . எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று கூறியிருந்தார். (அப்போஸ்தலர் 1:8) ஆகவே, மற்ற தேசத்தாரைப் போலவே இஸ்ரவேலர்களும் நற்செய்தியை கேட்க வேண்டிய அவசியம் இருந்தது.
8 அதைப் போலவே இன்று யெகோவாவின் சாட்சிகள் பூமி முழுவதிலும் நல்ல செய்தியை அறிவிக்கிறார்கள். அவர்கள், யோவான் கண்ட தேவதூதனோடு ஒத்துழைக்கிறார்கள்; அவன் “பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்”தான். (வெளிப்படுத்துதல் 14:6) 2001-ம் ஆண்டில், பொதுவாய் கிறிஸ்தவ நாடுகளாக கருதப்படுபவை உட்பட 235 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் அவர்கள் நற்செய்தியை சுறுசுறுப்பாக அறிவித்து வந்தார்கள். கிறிஸ்தவமண்டலம் ஏற்கெனவே தன் சர்ச்சுகளை ஸ்தாபித்திருக்கிற நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியை அறிவிப்பது தவறா? தவறுதான் என சிலர் கூறுகிறார்கள்; அவ்வாறு அறிவிப்பது தங்களுடைய சர்ச் அங்கத்தினர்களை ‘திருடுவதற்கு’ சமம் என்றும்கூட அவர்கள் கருதலாம். என்றாலும், இயேசுவின் நாளில் வாழ்ந்த மனத்தாழ்மையுள்ள யூதர்களை அவர் எவ்வாறு கருதினார் என்பதை யெகோவாவின் சாட்சிகள் ஞாபகப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த ஜனங்களுக்கு ஓர் ஆசாரியத்துவம் இருந்தபோதிலும் அவர்களிடம் நற்செய்தியை சொல்ல இயேசு தயங்கவில்லை. ‘அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்.’ (மத்தேயு 9:36) யெகோவாவையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றி அறியாத மனத்தாழ்மையுள்ள நபர்களை யெகோவாவின் சாட்சிகள் சந்திக்கையில், அவர்கள்மீது அதிகாரம் இருப்பதாக ஏதோவொரு மதம் உரிமைபாராட்டுகிற காரணத்தால் அவர்களிடம் நல்ல செய்தியை அறிவிக்காமல் இருக்க வேண்டுமா? இருக்க வேண்டியதில்லை என இயேசுவின் அப்போஸ்தலருடைய முன்மாதிரியைப் பின்பற்றி பதிலளிக்கிறோம். இந்த நல்ல செய்தி எந்த விதிவிலக்குமின்றி “சகல ஜாதிகளுக்கும்” பிரசங்கிக்கப்பட வேண்டும்.—மாற்கு 13:10.
ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் அனைவருமே நற்செய்தியை அறிவித்தார்கள்
9 முதல் நூற்றாண்டில் பிரசங்க வேலையில் யார் பங்குகொண்டார்கள்? கிறிஸ்தவர்கள் அனைவருமே நற்செய்தியை அறிவித்ததை உண்மைகள் காட்டுகின்றன. எழுத்தாளரான டபிள்யு. எஸ். வில்லியம்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பூர்வ சர்ச்சை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் . . . சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள் என்றே பொதுவான அத்தாட்சி சுட்டிக்காட்டுகிறது.” பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளில் நடந்த சம்பவங்களை பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அவர்களெல்லாரும் [ஆண்களும் பெண்களும்] பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்.” இவ்வாறு பிரசங்கித்தவர்களில் ஆண்களும் பெண்களும், இளைஞரும் முதியோரும், அடிமைகளும் சுயாதீனரும் இருந்தார்கள். (அப்போஸ்தலர் 1:14; 2:1, 4, 17, 18; யோவேல் 2:28, 29; கலாத்தியர் 3:28) துன்புறுத்துதல் காரணமாக கிறிஸ்தவர்கள் பலர் எருசலேமைவிட்டு ஓடிப்போக நேர்ந்தபோதிலும் “சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.” (அப்போஸ்தலர் 8:4) நியமிக்கப்பட்ட சிலர் மட்டுமல்ல, “சிதறிப்போனவர்கள்” அனைவருமே நற்செய்தியை அறிவித்தார்கள்.
10 அந்த ஆரம்ப காலங்கள் முழுவதுமே இது உண்மையாய் இருந்தது. “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார். (மத்தேயு 24:14) அந்த வார்த்தைகள் முதல் நூற்றாண்டில் முதலாவதாக நிறைவேறின; யூத மதத்தையும் அரசியல் அமைப்பையும் ரோம சேனைகள் அழிப்பதற்கு முன்பு இந்த சுவிசேஷம் எங்கும் பிரசங்கிக்கப்பட்டது. (கொலோசெயர் 1:23) மேலும், இயேசுவைப் பின்பற்றிய அனைவரும் அவருடைய இந்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) இன்றுள்ள சில பிரசங்கிகள், இயேசுவில் நம்பிக்கை வைக்கும்படி சாந்தகுணமுள்ளவர்களை தூண்டிய பிறகு எந்த வழிநடத்துதலும் கொடுக்காமல் அவர்கள் இஷ்டத்திற்கு கடவுளை சேவிக்கும்படி விட்டுவிடுகிறார்கள்; ஆரம்ப கால கிறிஸ்தவர்களோ அவ்வாறு விட்டுவிடவில்லை. மாறாக, இயேசுவின் சீஷராகும்படி கற்பித்து, அவர்களை சபைகளாக ஒழுங்குபடுத்தி, நற்செய்தியை பிரசங்கிக்கவும் சீஷராக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள். (அப்போஸ்தலர் 14:21-23) இன்று யெகோவாவின் சாட்சிகளும் அதே மாதிரியை பின்பற்றுகிறார்கள்.
11 முதல் நூற்றாண்டு முன்மாதிரிகளான பவுல், பர்னபா, இன்னும் மற்றவர்களை பின்பற்றி யெகோவாவின் சாட்சிகளில் பலர் மற்ற நாடுகளுக்கு மாறிச்சென்று நற்செய்தியை அறிவிக்கின்றனர். அவர்கள் அரசியலில் ஈடுபடாமலும், நற்செய்தியை பிரசங்கிக்கும் தங்கள் நியமிப்பிலிருந்து திசை திரும்பிவிடாமலும் இருப்பதால் அவர்களுடைய வேலை உண்மையிலேயே நல்ல பலனை தந்துள்ளது. “போகையில் . . . பிரசங்கியுங்கள்” என்ற இயேசுவின் கட்டளைக்கு மட்டுமே அவர்கள் கீழ்ப்படிந்திருக்கிறார்கள். எனினும், யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலானோர் அயல் நாடுகளுக்குச் சென்று பிரசங்கிப்பதில்லை. அவர்களில் அநேகர் வேலை செய்து பிழைக்கிறார்கள், மற்றவர்கள் இன்னும் பள்ளியில் படிக்கிறார்கள். சிலர் பெற்றோராக இருக்கிறார்கள். ஆனால் சாட்சிகள் அனைவருமே தாங்கள் கற்றுக்கொண்ட நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறார்கள். பைபிளின் பின்வரும் அறிவுரைக்கு இளைஞரும் முதியோரும், ஆண்களும் பெண்களும் சந்தோஷமாய் கீழ்ப்படிகிறார்கள்: “வார்த்தையைப் பிரசங்கி, சாதகமான காலத்திலும், பாதகமான காலத்திலும் அதில் மும்முரமாய் ஈடுபடு.” (2 தீமோத்தேயு 4:2, NW) முதல் நூற்றாண்டு முன்னோடிகளை போலவே இவர்களும் “இடைவிடாமல் உபதேசம் பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கி”க்கிறார்கள். (அப்போஸ்தலர் 5:42) மனிதவர்க்கத்திற்கு மிகச் சிறந்த நற்செய்தியை அறிவிக்கிறார்கள்.
பிரசங்கிப்பதா, மதம் மாற்றுவதா?
12 கிரேக்க மொழியில் ப்ராசிலைடாஸ் என்ற வார்த்தை உள்ளது, “மதம் மாறியவர்” என்பதே அதன் அர்த்தமாகும். இதிலிருந்தே மதம் மாற்றுதல் என அர்த்தப்படும் “ப்ராசலைடிஸம்” என்ற ஆங்கில வார்த்தை வந்துள்ளது. மதம் மாற்றுவது தீங்கானது என இன்று சிலர் கூறுகின்றனர். “மதம் மாற்றுவது பாவம்” என உலக சர்ச் கவுன்சில் வெளியிட்ட ஒரு ஆவணமும் கூறுகிறது. ஏன்? கேத்தலிக் உவர்ல்ட் ரிப்போர்ட் கூறுவதாவது: “ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிலிருந்து தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வந்ததன் விளைவாக மதம் மாற்றுவது என்பதே வற்புறுத்தி மதம் மாற்றும் கருத்தை பெற்றுள்ளது.”
13 மதம் மாற்றுவதில் ஏதாவது தீங்கு இருக்கிறதா? இருக்கலாம். வேதபாரகரும் பரிசேயரும், மற்றவர்களை யூதமார்க்கத்தாராக்கும்படி கடும் முயற்சி செய்தபோதிலும் அதனால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என இயேசு கூறினார். (மத்தேயு 23:15) “வற்புறுத்தி மதம் மாற்றுவது” உண்மையில் தவறானதே. உதாரணமாக, மக்கபேயன் ஜான் ஹிர்கேனஸ், இதுமேயர்களை தோற்கடித்தபோது “அவர்கள் விருத்தசேதனம் செய்துகொண்டு, யூதரின் சட்டங்களை கடைப்பிடிக்க ஒப்புக்கொண்டால் அவர்களுடைய நாட்டிலேயே வாழ அனுமதித்த”தாக சரித்திராசிரியர் ஜொசிஃபஸ் கூறுகிறார். இதுமேயர்கள் யூத ஆட்சியில் வாழ விரும்பினால் யூத மதத்தை பின்பற்ற வேண்டும். பொ.ச. எட்டாவது நூற்றாண்டில் சார்லிமேன், வட ஐரோப்பாவை சேர்ந்த புறமத சாக்ஸன்களை வென்ற பிறகு மதம் மாறும்படி அவர்களை கொடூரமாக வற்புறுத்தினார் என சரித்திராசிரியர்கள் கூறுகிறார்கள்.a ஆனால், சாக்ஸன்கள், இதுமேயர்கள் ஆகியோரின் மத மாற்றம் எந்தளவுக்கு மனப்பூர்வமானதாக இருந்தது? குழந்தை இயேசுவையே கொல்ல முயன்ற இதுமேய அரசனாகிய ஏரோது, கடவுள் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்தை உண்மையோடு கடைப்பிடித்தான் என்று சொல்ல முடியுமா?—மத்தேயு 2:1-18.
14 மதத்தை மாற்றிக்கொள்ளும்படி இன்றும் ஜனங்கள் வற்புறுத்தப்படுகிறார்களா? ஒரு கருத்தில், சிலர் வற்புறுத்தப்படுகிறார்கள். கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் சிலர், மதம் மாற ஒப்புக்கொள்கிறவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகை கொடுக்கின்றனர் என அறிக்கை செய்யப்பட்டுள்ளது. அல்லது ஒரு பிரசங்கத்தை கேட்டால்தான் சாப்பாடு என பட்டினியால் வாடும் அகதியை உட்கார வைக்கின்றனர். “சில சமயம் பொருளாதார லாபத்தைக் காட்டியும், பல்வேறு வகையான வன்முறையை உபயோகித்தும் மத மாற்றம் செய்யப்படுகிறது” என 1992-ல் நடந்த ஆர்த்தடாக்ஸ் பிஷப்புகளின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை கூறுகிறது.
15 மதம் மாறும்படி ஜனங்களை வற்புறுத்துவது தவறு. யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறு செய்வதே கிடையாது.b அவர்கள் ஒருபோதும் தங்களுடைய கருத்துக்களை யார் மீதும் திணிப்பதில்லை. அதற்கு மாறாக, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை போலவே, நல்ல செய்தியை எல்லாருக்கும் அறிவிக்கிறார்கள். அதை மனமுவந்து ஏற்பவர்களை, பைபிள் படிப்பின் மூலமாக இன்னும் அதிக அறிவை பெறும்படி உற்சாகப்படுத்துகிறார்கள். அக்கறை காட்டும் அத்தகையோர் கடவுளிலும் அவருடைய நோக்கங்களிலும் விசுவாசம் வைக்க கற்றுக்கொள்கிறார்கள்; இந்த விசுவாசம் பைபிளின் திருத்தமான அறிவை அசைக்க முடியாத ஆதாரமாக கொண்டது. இதன் விளைவாக, இரட்சிப்பிற்காக கடவுளுடைய அதாவது யெகோவாவுடைய பெயரில் அழைக்கிறார்கள். (ரோமர் 10:13, 14, 17) நற்செய்தியை ஏற்கிறார்களா இல்லையா என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். இதில் வற்புறுத்துதலுக்கு இடமே இல்லை. வற்புறுத்துதல் இருந்தால் மத மாற்றத்தில் அர்த்தமே இல்லை. ஏனெனில், இருதயப்பூர்வமான வணக்கத்தையே கடவுள் ஏற்றுக்கொள்கிறார்.—உபாகமம் 6:4, 5; 10:12.
இன்று நற்செய்தியை அறிவித்தல்
16 மத்தேயு 24:14-ன் பெரிய நிறைவேற்றமாக ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை யெகோவாவின் சாட்சிகள் நவீனகாலங்கள் முழுவதும் பிரசங்கித்து வந்திருக்கிறார்கள். காவற்கோபுரம் என்ற பத்திரிகையே அவர்களுடைய பிரசங்க வேலையில் முக்கிய கருவியாக இருந்திருக்கிறது.c காவற்கோபுரம் முதன்முதலாக 1879-ல் பிரசுரிக்கப்பட்டபோது ஒரேயொரு மொழியில் ஏறக்குறைய 6,000 பிரதிகள் விநியோகிக்கப்பட்டன. 122-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு பிறகு 2001-ம் ஆண்டில் இந்த பத்திரிகை 141 மொழிகளில் 2,30,42,000 பிரதிகள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இந்த அதிகரிப்போடுகூட யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையிலும் அதிகரிப்பு இருந்திருக்கிறது. நற்செய்தியை அறிவிப்பதற்காக 19-வது நூற்றாண்டில் ஒவ்வொரு வருடமும் சில ஆயிரம் மணிநேரமே செலவிடப்பட்டது; 2001-ம் ஆண்டிலோ பிரசங்கிப்பதற்காக 116,90,82,225 மணிநேரம் செலவிடப்பட்டது. சராசரியாக ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்ட 49,21,702 இலவச பைபிள் படிப்புகளையும் சிந்தித்துப் பாருங்கள். எத்தகைய மகத்தான வேலை நிறைவேற்றப்பட்டுள்ளது! இது, சுறுசுறுப்பாக ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்கும் 61,17,666 பேரால் செய்யப்பட்டுள்ளது.
17 “சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்” என சங்கீதக்காரன் சொல்கிறார். (சங்கீதம் 96:5) இன்றைய மதசார்பற்ற உலகில், நாட்டுப் பற்று, தேசிய சின்னங்கள், பிரசித்தி பெற்ற நபர்கள், உலக பொருட்கள், செல்வம் போன்றவையே கடவுட்களாக கருதப்படுகின்றன. (மத்தேயு 6:24; எபேசியர் 5:5; கொலோசெயர் 3:5) “இன்று ஐரோப்பா பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவத்தை ஏற்றிருக்கிறது. உண்மையில் அது மேமனை [செல்வத்தை] வணங்குகிறது என்பதே என் உறுதியான அபிப்பிராயம்” என மோஹன்தாஸ் கே. காந்தி ஒருமுறை கூறினார். இந்த நற்செய்தியை அனைவரும் கேட்டாக வேண்டும் என்பதே உண்மை. எந்த மொழி, தேசம், அல்லது சமூக நிலையில் இருந்தாலும் அனைவருமே யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி அறிந்தாக வேண்டும். “கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், . . . கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்”துங்கள் என கூறும் சங்கீதக்காரனின் வார்த்தைகளுக்கு அனைவருமே கீழ்ப்படிய வேண்டுமென நாம் விரும்புகிறோம். (சங்கீதம் 96:7, 8) யெகோவாவுக்கு உரிய மகிமையை செலுத்துவதற்கு அவரை பற்றி கற்றுக்கொள்ள யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள். அதை ஏற்பவர்கள் பெருமளவு நன்மை அடைகிறார்கள். அவர்கள் என்ன நன்மைகளை அனுபவித்து மகிழ்கிறார்கள்? இவை அடுத்த கட்டுரையில் ஆராயப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a சமய சீர்திருத்த காலத்தின்போது ஜனங்கள்மீது கட்டாயமாக மதத்தை திணிக்கும் பழக்கம் ஒரு லத்தீன் வாசகத்தால் தெரிவிக்கப்பட்டது; “தேசத்தை ஆளுகிறவரே அதன் மதத்தையும் தீர்மானிக்கிறார்” என்பதே அவ்வாசகத்தின் கருத்து என த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது.
b ஐக்கிய மாகாணங்களின் சர்வதேச மத சுயாதீன கமிஷனின் கூட்டம் 2000, நவம்பர் 16-ம் தேதியன்று நடைபெற்றது. அதில் பங்கு கொண்ட ஒருவர் வற்புறுத்தி மதம் மாற்ற முயலுபவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டினார். யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களிடம் பிரசங்கிக்கும்போது, “எனக்கு விருப்பமில்லை” என்று சொல்லிவிட்டு ஒருவர் கதவை எளிதில் மூடிவிடலாம் என்று குறிப்பிட்டார்.
c காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்பதே இந்த பத்திரிகையின் முழு பெயராகும்.
உங்களால் விளக்க முடியுமா?
• யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஆர்வத்தோடு பிரசங்கிக்கிறார்கள்?
• கிறிஸ்தவமண்டலம் சர்ச்சுகளை ஸ்தாபித்திருக்கிற நாடுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் ஏன் பிரசங்கிக்கிறார்கள்?
• மதம் மாற்றுகிற மற்ற அநேகரைவிட யெகோவாவின் சாட்சிகள் ஏன் வித்தியாசமானவர்கள்?
• இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை எவ்வாறு அதிகரித்துள்ளது?
2. யெகோவாவின் சாட்சிகளுடைய ஆர்வத்திற்கு ஒரு காரணம் என்ன?
3. (அ) யெகோவாவின் சாட்சிகளுடைய ஆர்வத்திற்கு இரண்டாவது காரணம் என்ன? (ஆ) ‘கடவுள் தரும் இரட்சிப்பில்’ என்ன உட்பட்டுள்ளது?
4-6. (அ) யெகோவாவின் சாட்சிகளுடைய ஆர்வத்திற்கு மூன்றாவது காரணம் என்ன? (ஆ) நற்செய்தியை பிரசங்கிப்பதில் இயேசு எவ்வாறு ஆர்வம் காட்டினார்?
7. இயேசு பரலோகத்திற்கு சென்ற பிறகு அவரைப் பின்பற்றியவர்கள் முதலாவதாக யாரிடம் நற்செய்தியை பிரசங்கித்தார்கள்?
8. முதல் நூற்றாண்டில் இயேசுவைப் பின்பற்றியவர்களின் மாதிரியை இன்று யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு பின்பற்றுகிறார்கள்?
9. முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவ சபையிலிருந்த யார் பிரசங்கிப்பதில் பங்குகொண்டார்கள்?
10. யூத ஒழுங்குமுறை அழிவதற்கு முன்பு என்ன இரண்டு காரியங்கள் செய்து முடிக்கப்பட்டன?
11. மனிதவர்க்கத்திற்கு மிகச் சிறந்த நற்செய்தியை இன்று யார் அறிவிக்கிறார்கள்?
12. பிரசங்கிப்பதும், மதத்தை மாற்றுவதும் தவறு என இன்றுள்ள அநேகர் நினைக்க காரணம் என்ன?
13. மதமாற்றத்தால் விளைந்த தீங்கிற்கு சில உதாரணங்கள் யாவை?
14. மதம் மாறும்படி கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் சிலர் எவ்வாறு ஜனங்களை வற்புறுத்துகிறார்கள்?
15. மதத்தை மாற்றிக்கொள்ள யெகோவாவின் சாட்சிகள் வற்புறுத்துகிறார்களா அல்லது பலத்தை உபயோகிக்கிறார்களா?
16. இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை எவ்வாறு அதிகரித்துள்ளது?
17. (அ) இன்று என்ன வகையான பொய் கடவுட்கள் வணங்கப்படுகின்றன? (ஆ) ஒருவருடைய மொழி, தேசம், அல்லது சமூக நிலை என்னவாயிருந்தாலும் எல்லாரும் எதை அறிந்தாக வேண்டும்?
[பக்கம் 9-ன் படம்]
இயேசு ஆர்வத்தோடு பிரசங்கித்தார், அதையே செய்ய மற்றவர்களையும் பயிற்றுவித்தார்
[பக்கம் 10-ன் படம்]
முதல் நூற்றாண்டு சபையிலிருந்த அனைவரும் பிரசங்கிப்பதில் பங்குகொண்டார்கள்
[பக்கம் 11-ன் படம்]
மதத்தை மாற்றிக்கொள்ள ஜனங்களை வற்புறுத்துவது தவறு