கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிள் மொழிபெயர்ப்புக்கு உதவும் சரித்திரப் புகழ்பெற்ற படைப்பு
ஏறக்குறைய 1455-ம் வருடத்தில் பைபிளைப் பிரசுரிப்பதில் ஒரு புரட்சி நிகழ்ந்தது. யோஹானஸ் குட்டன்பர்க் என்பவர் எழுத்துக்களை அச்சுக் கோர்த்து முதன்முறையாக அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி பைபிளை வெளியிட்டார். கைப்பட எழுதப்பட்ட பைபிள் பிரதிகள் குறைவாக இருந்ததால் அவை பலருக்கும் கிடைக்காதிருந்த நிலை பின்பு மாறியது. ஒருவழியாக, எண்ணற்ற பைபிள்களை ஓரளவு குறைந்த செலவில் அச்சிட முடிந்தது. அதன் பின் சீக்கிரத்திலேயே பைபிள் உலகெங்கும் அதிகளவில் விநியோகிக்கப்படும் புத்தகமாக ஆனது.
குட்டன்பர்க் பைபிள் லத்தீன் மொழியில் இருந்தது. ஆனால் விரைவிலேயே, பைபிளின் மூல மொழிகளான எபிரெயுவிலும் கிரேக்குவிலும் நம்பகமான பைபிள் தங்களுக்கு தேவையென ஐரோப்பிய கல்விமான்கள் உணர்ந்தார்கள். லத்தீன் வல்கேட்டை மட்டுமே பைபிளின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாக கத்தோலிக்க சர்ச் கருதியது; எனினும் அதில் முக்கியமாய் இரண்டு பிரச்சினைகள் இருந்தன. 16-ம் நூற்றாண்டில் பெரும்பாலானோருக்கு லத்தீன் மொழி புரியாத மொழியாகிவிட்டது. மேலும் ஆயிர வருட காலமாக வல்கேட் மொழிபெயர்ப்பை நகலெடுத்து வருகையில் ஏராளமான பிழைகள் ஏற்பட்டிருந்தன.
மொழிபெயர்ப்பாளர்களுக்கும் கல்விமான்களுக்கும் மூல மொழிகளில் பைபிள் தேவைப்பட்டது; அதோடு லத்தீன் மொழியில் இன்னும் தரமான மொழிபெயர்ப்பும் தேவைப்பட்டது. ஒரே புத்தகத்தின் வாயிலாக இவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய கார்டினல் ஹிமேநேத் தே திஸ்னிரோஸ் என்பவர் 1502-ல் தீர்மானித்தார்; இவர் ஸ்பெயின் நாட்டு அரசியான முதலாம் இஸபெல்லாவுக்கு அரசியல், மத ஆலோசகராக இருந்தார். மொழிபெயர்ப்புக்கு உதவும் சரித்திரப் புகழ்பெற்ற இந்தப் படைப்பே, கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிள் என அறியப்படலாயிற்று. எபிரெயு, கிரேக்கு, லத்தீன் ஆகிய மொழிகளில் மிகச் சிறந்த பதிவையும் அரமேயிக் மொழியில் சில பகுதிகளையும் கொண்ட பன்மொழி பைபிளைப் பிரசுரிக்க திஸ்னிரோஸ் திட்டமிட்டார். அன்றைய நாளில் அச்சுத் தொழில் அதன் ஆரம்ப நிலையிலிருந்தது; எனவே இப்படி பன்மொழி பைபிளை அச்சடிக்கும் சாதனை அச்சுக் கலையிலும் ஒரு மைல்கல்லாக திகழவிருந்தது.
அந்தக் கடினமான பணியின் முதற்படியாக, ஸ்பெயினில் எக்கச்சக்கமாக இருந்த பூர்வ எபிரெயு கையெழுத்துப் பிரதிகளை திஸ்னிரோஸ் விலைக்கு வாங்கினார். கிரேக்கிலும் லத்தீனிலுமிருந்த பல்வேறு கையெழுத்துப் பிரதிகளையும் அவர் சேகரித்தார். இவை பன்மொழி பைபிளுக்கு அடிப்படையாய் அமையவிருந்தன. இவற்றைத் தொகுக்கும் வேலையை கல்விமான்கள் அடங்கிய ஒரு குழுவிடம் திஸ்னிரோஸ் ஒப்படைத்தார்; ஸ்பெயினில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டிருந்த ஆல்காலா தே ஏனாரேஸ் என்ற பல்கலைக்கழகத்தில் அவர்களை கூட்டிச் சேர்த்தார். அந்தக் குழுவில் சேர்ந்துகொள்ளும்படி அழைக்கப்பட்டவர்களில் ரோட்டர்டாமை சேர்ந்த இராஸ்மஸ் என்பவரும் ஒருவர்; ஆனால் பிரபலமான இந்த பன்மொழியறிஞர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.
தனிச்சிறப்புமிக்க இந்தப் படைப்பைத் தொகுத்து முடிப்பதற்கு கல்விமான்கள் பத்து வருடங்கள் அரும்பாடுபட்டார்கள்; அதற்குப் பின்பு அச்சடிக்கும் வேலை இன்னும் நான்கு வருடங்களுக்குத் தொடர்ந்தது. ஸ்பானிய அச்சகத்தாரிடம் எபிரெயு, கிரேக்கு, அரமேயிக் எழுத்து வடிவங்கள் (type fonts) இல்லாதிருந்ததால் அநேக தொழில்நுட்ப பிரச்சினைகள் எழுந்தன. அப்போது, இம்மொழிகளில் எழுத்து வடிவங்களைத் தயாரித்துக் கொடுப்பதற்கு அச்சக வேலையில் திறம்பட்டு விளங்கிய ஆர்னால்டோ கியெர்மோ ப்ரோகார் என்பவரை திஸ்னிரோஸ் வேலைக்கு அமர்த்தினார். இறுதியில் 1514-ல் அச்சகத்தார் பைபிளை அச்சிட ஆரம்பித்தார்கள். திஸ்னிரோஸ் இறப்பதற்கு நான்கே மாதங்களுக்கு முன்பு, அதாவது 1517, ஜூலை 10-ம் தேதி பைபிளின் ஆறு தொகுதிகளைத் தொகுக்கும் வேலை முடிவுற்றது. முழு பைபிளாக சுமார் 600 பிரதிகள் அச்சிடப்பட்டன; ஸ்பானிய ஒடுக்குமுறை விசாரணை உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில் அவை அச்சிடப்பட்டது ஆச்சரியமானது.a
இந்தப் படைப்பின் உருவமைப்பு
பன்மொழி பைபிளில் பக்கத்துக்குப் பக்கம் தகவல்கள் நிறைந்திருந்தன. முதல் நான்கு தொகுதிகள் எபிரெய வேதாகமம் ஆகும்; அதில் ஒவ்வொரு பக்கத்திலும் வல்கேட் மொழிபெயர்ப்பு மத்தியில் காணப்பட்டது; எபிரெயு வசனங்கள் இடது பத்தியில் காணப்பட்டன; வரிக்கு வரி லத்தீன் மொழிபெயர்ப்புடன் கிரேக்க வசனங்கள் வலது பத்தியில் காணப்பட்டன. பக்க ஓரங்களில் அநேக எபிரெய வார்த்தைகளின் வேர்ச் சொற்கள் இடம்பெற்றன. ஐந்தாகமங்களின் ஒவ்வொரு பக்கத்தின் கீழும் லத்தீன் மொழிபெயர்ப்புடன் டார்கம் ஆஃப் ஆங்கலாஸ்-ஐ (பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களின் அரமேயிக் பொழிப்புரையை) பதிப்பாளர்கள் சேர்த்திருந்தார்கள்.
பன்மொழி பைபிளின் ஐந்தாம் தொகுதி கிரேக்க வேதாகமம் ஆகும். இது இரண்டு பத்திகளாக இடம்பெற்றிருந்தது. ஒரு பத்தியில் கிரேக்க வசனங்களும் மறு பத்தியில் வல்கேட்டிலிருந்து எடுக்கப்பட்ட அதற்கு இணையான லத்தீன் மொழிபெயர்ப்பும் காணப்பட்டன. இந்த இரண்டு மொழிகளின் பதிவுகளிலும் இணை வார்த்தைகளை சுட்டிக்காட்ட அவற்றிற்கு அருகே சிறிய எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன; இவை ஒவ்வொரு பத்தியிலும் உள்ள இணை வார்த்தைகளை வாசகர் அடையாளம் கண்டுகொள்ள உதவின. அச்சிடப்பட்டதிலேயே, முழு கிரேக்க வேதாகமத்தின் அல்லது ‘புதிய ஏற்பாட்டின்’ முதல் தொகுப்பாக பன்மொழி பைபிளின் இந்த கிரேக்க மொழிபெயர்ப்பு இருந்தது; அதன் பின் சீக்கிரத்திலேயே இராஸ்மஸ் தயாரித்த பதிப்பு பிரசுரிக்கப்பட்டது.
இந்த ஐந்தாம் தொகுதியை அச்சுத் திருத்துகையில் கல்விமான்கள் அதிக கவனம் செலுத்தியதால் 50 அச்சுப்பிழைகள் மட்டுமே அதில் காணப்பட்டன. கல்விமான்கள் அந்தளவுக்கு சிரத்தை எடுத்து கவனமாக பணியாற்றியதால் இராஸ்மஸின் பிரபலமான கிரேக்க மொழிபெயர்ப்பைவிட மேம்பட்ட படைப்பாக இதை இன்றைய விமர்சகர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். இந்த கிரேக்க எழுத்து வடிவங்களின் நேர்த்தியான தோற்றம் சதுர வடிவ எழுத்துக்களில் இருந்த பண்டைய கையெழுத்துப் பிரதிகளின் தூய அழகுக்கு ஈடாக இருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் கிரேக்க அச்சடிப்பு என்ற தன் ஆங்கில புத்தகத்தில் ஆர். பிராக்டர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கிரேக்க எழுத்து வடிவை முதன்முதல் உருவாக்கிய பெருமை ஸ்பெயினையே சேரும்; இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே அருமையான கிரேக்க எழுத்து வடிவமாக அது இருக்கிறதென்பதில் சந்தேகமேயில்லை.”
பன்மொழி பைபிளின் ஆறாவது தொகுதியில் பைபிள் படிப்புக்குக் கைகொடுக்கும் பல்வேறு உபகரணங்கள் இருந்தன. எபிரெயு, அரமேயிக் அகராதி; கிரேக்க, எபிரெய, அரமேயிக் பெயர்களின் மொழிபெயர்ப்பு; எபிரெய இலக்கணத்திற்கு விளக்கம்; அகராதிக்கான லத்தீன் இன்டெக்ஸ் ஆகியவையெல்லாம் இடம்பெற்றிருந்தன. “அச்சுக் கலைக்கும் வேதாகம அறிவியலுக்கும் நினைவுச் சின்னம்” என கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிள் எல்லாராலும் பிரமாதமாக பேசப்படுவதில் ஆச்சரியமேதுமில்லை.
“வேதாகமத்தைப் படிப்பதில் மக்களின் ஆர்வத்தை மீண்டும் தட்டி எழுப்ப வேண்டுமென்ற” எண்ணத்திலேயே இப்புத்தகத்தை திஸ்னிரோஸ் உருவாக்கினார்; எனினும் இந்த பைபிள் எல்லாருடைய கைகளிலும் கிடைக்க வேண்டுமென்பது அவருடைய ஆசையாக இருக்கவில்லை. “கடவுளுடைய வார்த்தை சாதாரண மக்கள் புரிந்துகொள்ளாதபடி புதிர்களின் போர்வையில் புதைந்திருக்க வேண்டும்” என அவர் நினைத்தார். கடவுள், “தம் குமாரன் சிலுவையில் அறையப்பட்டபோது அவருடைய தலைக்கு மேலேயிருந்த பலகையில் எழுதும்படி அனுமதித்த அந்த மூன்று பூர்வ மொழிகளில் மட்டுமே வேதாகமம் இருக்க வேண்டும்” என்றும் அவர் நினைத்தார்.b இதன் காரணமாகவே, கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிளில் ஸ்பானிய மொழிபெயர்ப்பு எதுவும் சேர்க்கப்படவில்லை.
வல்கேட் Vs மூல மொழிகள்
பன்மொழி பைபிளின் அம்சங்களே அதை உருவாக்க பாடுபட்ட கல்விமான்களின் மத்தியில் சில கருத்துவேறுபாடுகளை எழுப்பின. ஆன்டோன்யோ டே நேப்ரீஹc என்ற பிரபல ஸ்பானிய கல்விமானிடம் பன்மொழி பைபிளில் பிரசுரிக்கப்படும் வல்கேட் மொழிபெயர்ப்பை திருத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஜெரோமின் வல்கேட்டை மட்டுமே அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக கத்தோலிக்க சர்ச் கருதியபோதிலும் எபிரெயு, அரமேயிக், கிரேக்க மூல பதிவுகளுடன் வல்கேட்டை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம் என நேப்ரீஹா கருதினார். அப்போதிருந்த வல்கேட் பிரதிகளில் பளிச்செனத் தெரியும் பிழைகளைத் திருத்த அவர் விரும்பினார்.
வல்கேட்டுக்கும் மூல மொழிகளுக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகளை சரிசெய்வதற்கு திஸ்னிரோஸை நேப்ரீஹா ஊக்குவித்தார்: “எரியாதிருக்கும் நம் மதத்தின் இரண்டு தீபங்களான எபிரெய, கிரேக்க மொழிகளை மீண்டும் ஏற்றி வையுங்கள். இப்பணிக்காக தங்களை அர்ப்பணிப்பவர்களுக்கு தக்க சன்மானம் கொடுங்கள்.” பின்வரும் ஆலோசனையையும் அவர் கொடுத்தார்: “புதிய ஏற்பாட்டின் லத்தீன் கையெழுத்துப் பிரதிகளில் வித்தியாசங்களைக் காணும்போதெல்லாம் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளுடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பல்வேறு லத்தீன் கையெழுத்துப் பிரதிகளுக்கும் அல்லது பழைய ஏற்பாட்டின் லத்தீன், கிரேக்க கையெழுத்துப் பிரதிகளுக்கும் இடையே வேறுபாட்டை காணும்போதெல்லாம் திருத்தமாக இருப்பதற்கு நம்பகமான எபிரெய மூலவாக்கியத்தை நாம் ஆராய வேண்டும்.”
இந்த அறிவுரைக்கு திஸ்னிரோஸ் எப்படி பிரதிபலித்தார்? பன்மொழி பைபிளின் முன்னுரையில் தன் கருத்தை திஸ்னிரோஸ் தெளிவுபடுத்தியிருந்தார். “ரோமன் அல்லது லத்தீன் சர்ச்சை இயேசு பிரதிநிதித்துவம் செய்கிறார்; அவருக்கு இருபுறமும் இரண்டு கள்வர்கள் தொங்கவிடப்பட்டதைப் போல ஆசீர்வதிக்கப்பட்ட ஜெரோமின் லத்தீன் மொழிபெயர்ப்புக்கு ஒரு புறத்தில் ஜெபாலயத்துக்கு உரியதையும் [எபிரெய வசனங்களையும்] மறுபுறத்தில் கிழக்கத்திய சர்ச்சுக்கு உரியதையும் [கிரேக்க வசனங்களையும்] வைத்திருக்கிறோம்.” இவ்வாறு, மூல மொழி பதிவுகளுக்கு இசைய லத்தீன் வல்கேட்டை நேப்ரீஹா திருத்துவதற்கு திஸ்னிரோஸ் அனுமதிக்கவில்லை. இறுதியில், குறைகளுள்ள மொழிபெயர்ப்பில் தன் பெயர் இடம்பெறுவதைவிட இப்பணியிலிருந்து விலகிவிடுவதே மேல் என நேப்ரீஹா தீர்மானித்தார்.
காமா யோஹானேயும்
ஆல்காலா தே ஏனாரேஸ் பல்கலைக்கழகத்தின் பன்மொழி பைபிள், அதன் மூல மொழிகளில் திருத்தமான மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்கான முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கப்பட்ட பெரியதோர் அடியாக இருந்தது உண்மைதான்; என்றாலும் சிலசமயங்களில் பாரம்பரியம் அறிவை மறைத்துப் போட்டது. வல்கேட் மொழிபெயர்ப்பு அதி உயர்வாக மதிக்கப்பட்டதால் லத்தீன் மொழிபெயர்ப்பு திருத்தப்படவில்லை; அதற்கு பதிலாக, ‘புதிய ஏற்பாட்டின்’ கிரேக்க பதிவு இதற்கு இணையாக இருக்கும்படி அதைத் திருத்த கடமைப்பட்டிருப்பதாக அநேக முறை பதிப்பாளர்கள் கருதினார்கள். இதற்கு ஓர் உதாரணம், போலியானது என பலரும் அறிந்த காமா யோஹானாயும் என்ற வாசகமாகும்.d இந்த வாசகம் ஆரம்ப கால கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் எதிலும் காணப்படுவதில்லை; யோவான் தன் நிருபத்தை எழுதி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே இது புகுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. இது லத்தீன் வல்கேட்டின் பழமையான கையெழுத்துப் பிரதிகளிலும் காணப்படுவதில்லை. எனவே இராஸ்மஸ் தன் கிரேக்க ‘புதிய ஏற்பாட்டு’ பைபிளில் அதை சேர்க்கவில்லை.
பல நூற்றாண்டுகளாக வழிவழியாக பயன்படுத்தப்பட்டு வந்த வல்கேட் மொழிபெயர்ப்பில் இருந்த ஒரு வசனத்தை நீக்குவதற்கு பன்மொழி பைபிள் பதிப்பாளர்களுக்கு விருப்பமில்லாதிருந்தது. எனவே, போலியான அந்த வாசகம் லத்தீனில் தொடர்ந்து இருப்பதற்கு அவர்கள் அனுமதித்தார்கள்; அந்த வாசகத்தை மொழிபெயர்த்து கிரேக்க பதிவில் சேர்ப்பதன் மூலம் இரண்டு பத்திகளும் ஒன்றுக்கொன்று இசைவாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.
புதிய பைபிள் மொழிபெயர்ப்புகளுக்கு அடிப்படை
முழு கிரேக்க வேதாகமமும் செப்டுவஜின்ட்டும் சேர்ந்து ஒரே புத்தகமாக முதன்முதல் அச்சிடப்பட்டது மட்டுமே இந்த கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிளின் சிறப்பு அல்ல. இராஸ்மஸின் கிரேக்க “புதிய ஏற்பாடு,” கிரேக்க வேதாகமத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பாக (பிற மொழிகளில் பல மொழிபெயர்ப்புகளுக்கு அடிப்படையாக) ஆனதைப் போலவே இந்த பன்மொழி பைபிளின் எபிரெய பதிவும் எபிரெய-அரமேயிக் வேதாகமத்திற்கு அடிப்படையாக ஆனது.e வில்லியம் டின்டேல் என்பவர் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு இந்தப் பன்மொழி பைபிளின் எபிரெய பதிவை அடிப்படையாக பயன்படுத்தினார்.
இவ்வாறு, கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிளை தயாரித்த குழுவின் புலமைமிக்க படைப்பு, வேதாகம புலமையின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியது. ஐரோப்பா எங்கும் பைபிள் மீது ஆர்வம் அதிகரித்த காரணத்தால், சாதாரண மக்களின் மொழியில் இது மொழிபெயர்க்கப்படுவதற்கு உற்சாகம் அளிக்கப்பட்ட காலப்பகுதியில் இந்த பைபிள் வெளிவந்தது. கிரேக்க, எபிரெய வசனங்களை புடமிட்டு, அவற்றைக் காப்பதில் பங்களித்த சங்கிலித் தொடரில் மேலும் ஓர் இணைப்பாக பன்மொழி பைபிள் நிரூபித்தது. இந்த முயற்சிகள் அனைத்தும், ‘யெகோவாவின் புடமிடப்பட்ட வசனம்’ அதாவது ‘தேவனுடைய வசனம் என்றென்றைக்கும் நிற்கும்’ என்ற கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக இருக்கிறது.—சங்கீதம் 18:30; ஏசாயா 40:8; 1 பேதுரு 1:25.
[அடிக்குறிப்புகள்]
a 600 காகித பிரதிகளும் 6 தோல் பிரதிகளும் தயாரிக்கப்பட்டன. 1984-ல் அந்தப் பூர்வ பிரதிக்கு ஒத்த தோற்றத்தைத் தரும் சில பைபிள்கள் அச்சிடப்பட்டன.
b எபிரெயு, கிரேக்கு, லத்தீன்.—யோவான் 19:20.
c ஸ்பானிய மனிதப் பண்பாய்வாளர்களின் (முற்போக்குவாத கல்விமான்களின்) முன்னோடியாக நேப்ரீஹா கருதப்படுகிறார். 1492-ல் அவர் கிராமாடிகா காஸ்டெல்யானா (காஸ்டிலியன் மொழியின் இலக்கணம்) என்பதன் முதல் பிரதியை வெளியிட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தன் வாழ்நாள் காலத்தை பரிசுத்த வேதாகமத்தைப் படிப்பதற்கு அர்ப்பணிக்க அவர் தீர்மானித்தார்.
d புகுத்தப்பட்ட போலியான வாசகம் சில மொழிபெயர்ப்புகளில் 1 யோவான் 5:7-ல் காணப்படுகிறது; அது, “பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்று வாசிக்கிறது.
e இராஸ்மஸின் படைப்பைப் பற்றிய விளக்கத்திற்கு ஆங்கில காவற்கோபுரம், 1982, செப்டம்பர் 15, பக்கங்கள் 8-11-ஐக் காண்க.
[பக்கம் 29-ன் படம்]
கார்டினல் ஹிமேநேத் தே திஸ்னிரோஸ்
[படத்திற்கான நன்றி]
Biblioteca Histórica. Universidad Complutense de Madrid
[பக்கம் 30-ன் படம்]
ஆன்டோன்யோ டே நேப்ரீஹா
[படத்திற்கான நன்றி]
Biblioteca Histórica. Universidad Complutense de Madrid
[பக்கம் 28-ன் படத்திற்கான நன்றி]
Biblioteca Histórica. Universidad Complutense de Madrid