காவற்கோபுர ஆலோசனைகளைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம் பக்திவைராக்கியத்தைப் புதுப்பித்தல்
1 நற்செய்தியின் பக்திவைராக்கியமுள்ள பிரசங்கியாக இருந்ததில் இயேசுகிறிஸ்து பரிபூரண முன்மாதிரியாக இருக்கிறார். தம்முடைய தகப்பனின் சித்தத்தைச் செய்வதில் அவருக்கிருந்த மனமார்ந்த ஆவலும் மக்கள் மீது அவருக்கிருந்த கூர்ந்த அக்கறையும் மற்றவர்கள் மீது தனிப்பட்ட அக்கறையைக் காண்பிக்க அவரைத் தூண்டியது. அவருடைய ஊழியம் துடிப்புடையதாக இருந்தது. அவருக்குப் பலன் கிடைத்தது. ஊழியம் அவருக்குப் புத்துயிரூட்டியது. அதைத் தமக்குப் போஷித்த “உணவாக” கருதினார். (யோவான் 4:34) செய்யும்படி தன் பிதா தனக்குக் கட்டளையிட்ட வேலையை நிறைவேற்றுகையில் மற்றவர்கள் மனதில் இரட்சிப்பின் வார்த்தைகளைப் பதியச் செய்தார். இது வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுத்தது.
2 அப்போஸ்தலர்களும் முதல் நூற்றாண்டில் அவரைப் பின் தொடர்ந்த வேறு சிலரும் இந்த ஊழியத்திற்கான அவருடைய பக்தி வைராக்கியத்தைப் பின்பற்றினார்கள். சில சமயங்களில் அவர்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டபோதிலும் அவர்களுடைய பக்திவைராக்கியத்தைத் தணித்துப் போட முடியவில்லை. (அப். 5:28-32; 8:1, 4) இன்றும் அதுவே உண்மையாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்றும் தனிப்பட்ட ஆட்களால் நற்செய்தி உண்மையில் ஒவ்வொரு மூலையிலும் பிரசங்கிக்கப்படுகிறது. யெகோவாவின் சாட்சிகளாக அவர்கள் எப்பொழுதும் “நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாக” இருக்கிறார்கள்.—தீத்து 2:14.
3 நாம் பக்திவைராக்கியத்தில் குறைவுபடுவோமானால் நமது வேலை ஏதோ கடமைக்குச் செய்யப்படும் ஒன்றாக ஆகிவிடுகிறது, மற்றும் நமது தனிப்பட்ட ஈடுபாடு மேலோட்டமான ஒன்றாகவும் ஆகிவிடுகிறது. இதன் விளைவாக நமது சேவையில் நாம் இனிமேலும் மகிழ்ச்சியைக் காணமாட்டோம். இப்படிப்பட்டதோர் நிலையில் நாம் நம்மை காண்போமானால் நாம் நமது பற்றார்வத்தை புதுப்பித்துக் கொள்ளுவதற்கும் வெளி ஊழியத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்ப்படுவதற்குமான வழிமுறைகளுக்காக நோக்கியிருக்க வேண்டும். ஜூலை 15, 1988 ஆங்கில காவற்கோபுரத்தில் “உங்கள் போதனைக்குத் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்,” என்ற தலைப்புள்ள கட்டுரை ராஜ்ய ஊழியத்தில் நமது பற்றார்வத்தை பலப்படுத்துவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு உதவக்கூடிய நடைமுறையான ஆலோசனைகளைச் சிறப்பித்துக் காண்பித்தது.
நாம் எதிர்ப்படக்கூடிய சவால்கள்
4 உலகத்தின் அநேக பாகங்களில், புதிய அல்லது வெகு அரிதாக ஊழியம் செய்யப்படும் பிராந்தியம் மிகவும் சொற்பமாக இருக்கிறது. தலைநகர்ப் பிராந்தியங்களில் உள்ள சபைகள், மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வாரத்துக்கு ஒருமுறையோகூட தங்கள் பிராந்தியத்தில் ஊழியம் செய்வது அசாதாரண காரியமல்ல. அநேக வீட்டுக்காரர் நம்மை யார் என்று தெரிந்து வைத்திருப்பதால் பெரும்பாலும் நாம் பிரசங்கத்தை அளிக்கும் முன்பே அவர்கள் நமது சம்பாஷணையை நிறுத்த முயற்சி செய்யலாம். இது நமக்கு ஒரு சவாலாக இருக்கக்கூடும். ‘போனவாரம் ஒரு சாட்சி வந்திருந்தார்,’ என்று அவர்கள் சொல்லக்கூடும். நமது அயலகத்தாரில் அநேகர் வீட்டில் இல்லாமலிருக்கக்கூடும் அல்லது நம்முடைய பிராந்தியத்தில் உள்ள ஆட்கள் அக்கறை காட்டாதவர்களாக இருக்கக்கூடும் இந்தக் காரியங்களனைத்தும் சோர்வூட்டக்கூடும். ஆனால் நீங்கள் மேற் சொல்லப்பட்ட காவற்கோபுர கட்டுரையில் பாராக்கள் 4-7-ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனையைப் பொருத்திப் பிரயோகிக்கிறீர்களா?
5 இலட்சக்கணக்கான ஆட்கள் ஏற்கெனவே “வேறே ஆடுகளாகிய” “திரள் கூட்டத்”துக்குள் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இன்னும் பல இலட்சக்கணக்கானோர் தொடர்ந்து ராஜ்ய நற்செய்திக்குப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்கள். (வெளி. 7:9; யோ. 10:16) என்றபோதிலும் கடந்தகாலங்களில் வெற்றிகரமாய் திகழ்ந்த நமது அறிமுக வார்த்தைகள் இனிமேலும் நம்முடைய பிராந்தியத்தில் அக்கறையைத் தூண்டாதவையாக இருக்கக்கூடும். ஆகவே நமது அறிமுக வார்த்தைகள் வகை, தரம், மற்றும் திறம்பட்ட தன்மை ஆகியவற்றைக் குறித்து நாம் எப்பொழுதும் விழிப்புள்ளவர்களாக இருக்கவேண்டும், தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்வதற்கு ஆயத்தமானவர்களாக இருக்கவேண்டும்.
6 இந்தப் பொருளின் பேரில் பேசுவதாய் நம்முடைய ஊழியத்தை முன்னேற்றுவிப்பது எப்படி என்பதன் பேரில் காவற்கோபுரம் பத்திரிகை சில அக்கறைக்குரிய குறிப்புகளை சிபாரிசு செய்தது. அக்கறையின்மையை எதிர்ப்படுகையிலும் அடிக்கடி ஊழியம் செய்யப்படும் பிராந்தியங்களிலிருக்கும் மக்களைச் சந்திக்கையிலும் குறைகூறும் வீட்டுக்காரரை சந்திக்கையிலும் முழுமையான சாட்சி கொடுப்பதற்கான வழிமுறைகளை அது சிபாரிசு செய்தது. இந்த ஆலோசனைகளை நாம் பொருத்துகிறோமா? பிராந்தியங்களின் தேவைக்கு ஏற்றார்போல் நமது அறிமுகங்களை மாற்றியமைத்துக் கொள்ளுகிறோமா? இதைச் செய்வதற்காக நமக்குக் கிடைக்கக்கூடிய உபகரணங்களை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுகிறோமா? கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுவதானது ஊழியத்தில் அதிக தனிப்பட்ட விதமாய் முழு ஈடுபாடு கொள்வதற்கு உதவி செய்யும் என்ன காரியங்கள் குறித்துக் காட்டப்பட்டிருக்கிறதோ அதை மனதார ஏற்று ஒத்திணங்கிச் செல்வதன் மூலம் நாம் மனத் தூண்டுதலைப் பெறுகிறோம். ஊழியத்தில் முற்றிலுமாக ஆழ்ந்துவிடுவோம். இவ்வாறாக நமது பக்தி வைராக்கியம் புதுப்பிக்கப்பட்டு தீவிரமடைகிறது.
7 இன்றைய உலக நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் மிகுந்த உபத்திரவம் வெகுவாக நெருங்கிவருவது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இது நமது செய்தியின் முக்கியத்துவத்தையம், “உலகத்துக்கு விளக்குகளாக” பிரகாசிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. (மத். 5:14, 16) பெற்றுக்கொண்ட ஆலோசனைகளைப் பொருத்துவதில் நாம் ஊக்கமான முயற்சி எடுப்போமாக. இவ்வாறாக ஊழியத்தில் நமது பக்திவைராக்கியத்தைத் தீவிரமாக்குவோமாக.