“அறிவிப்பதைக் கேட்பதால்தான் விசுவாசம் உண்டாகிறது”
1 ‘நித்திய ஜீவனைப் பெறுவதற்கேற்ற சரியான மனச்சாய்வுள்ள’ ஒருவரை நாம் கண்டுபிடிக்கும்போது, அந்த நபர் கேள்விப்பட்டிருப்பவற்றில் அவருடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவது அவசியமாக இருக்கிறது. (அப். 13:48, NW; உரோ. 10:17, கத்.பை.) அதைச் செய்வதற்கு, மீண்டுமாக உரையாடுவதற்காகச் செல்வதன்மூலம், பத்திரிகை மற்றும் சந்தா அளிப்புகளைத் தொடர வேண்டும். முதல் சந்திப்பில், பத்திரிகைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், மறுசந்திப்பின்போது, ஒரு சந்தா அளிக்கப்படலாம். என்றபோதிலும், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்திலிருந்து ஒரு படிப்பைத் தொடங்கும் இலக்கை மனதில் வைத்திருங்கள். உதவக்கூடிய சில ஆலோசனைகள் இங்கே:
2 “நித்திய ராஜாவை துதியுங்கள்!” என்ற கட்டுரையைப் பற்றி பேசியிருந்தவரிடம் மறுசந்திப்பு செய்யும்போது, நீங்கள் இவ்விதமாக ஆரம்பிக்கலாம்:
◼ “நாம் போனமுறை பேசியபோது, சர்வவல்லமையுள்ள கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கான பல அத்தாட்சிகளில் சிலவற்றைப் பார்த்தோம். என்றபோதிலும், அவர் இருக்கிறார் என்பதை அறிந்திருப்பது மாத்திரமே போதுமானதல்ல. நாம் அவருடைய பெயரைத் தெரிந்திருக்க வேண்டும். என்ன பெயரால் நீங்கள் கடவுளை அழைக்கிறீர்கள்? [பதிலுக்கு அனுமதியுங்கள்.] அநேகர் அவரை வெறுமனே ‘ஆண்டவர்’ அல்லது ‘கர்த்தர்’ என்கிறார்கள்; அவை தனிப்பட்ட ஒருவரை சுட்டிக்காட்டாத பதவிப்பெயர்களே. மற்றவர்கள் பல்வகையான பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். பைபிளில் அவர்தாமே தமக்கு என்ன பெயரைக் கொடுத்திருக்கிறார் என்று கவனியுங்கள். [சங்கீதம் 83:17-ஐ வாசியுங்கள்.] இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறபடி, யெகோவா தேவனைப் பற்றி பைபிள் நமக்கு இன்னுமதிகத்தைச் சொல்லுகிறது.” அறிவு புத்தகத்தில் 29-ம் பக்கத்திலுள்ள படத்தைக் காண்பித்து, அதன் படக்குறிப்பை வாசியுங்கள். அதிகாரம் 3-லுள்ள முதல் மூன்று பாராக்களை கலந்தாலோசித்ததும், நீங்கள் ஒரு படிப்பைத் தொடங்கி இருப்பீர்கள்!
3 “உலகப்பிரகாரமான மதம் ஏன் முடிவடையும்” என்ற கட்டுரையைப் பற்றி நீங்கள் பேசியிருப்பவர்களிடம், இவ்விதமாகச் சொல்வதன்மூலம் காண்பிக்கப்பட்ட அக்கறையைத் தொடரக்கூடும்:
◼ “அந்தக் கட்டுரையை வாசித்த பிறகு, எல்லா மதங்களையும் ஒரே விதமாகக் கருத முடியாது என்ற உண்மை உங்கள் மனதில் பதிந்திருக்கக்கூடும். உண்மை மதமும் பொய் மதங்களும் இருக்கின்றன. இது இந்த நியாயமான கேள்வியை எழுப்புகிறது, யாருடைய வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்கிறார்? இயேசுவால் அதற்கான பதில் கொடுக்கப்பட்டது; அது இந்தப் புத்தகத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது.” அறிவு புத்தகத்தில் அதிகாரம் 5-க்குத் திருப்பி, யோவான் 4:23, 24 உட்பட, பாரா 4-ஐ வாசியுங்கள். பின்னர் இப்படி கேளுங்கள், “இலவசமான வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை ஏற்றுக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா?” உடன்பாடான பதில் கிடைத்தால், அதிகாரம் 1-க்குத் திருப்பி, படிப்பைத் தொடங்குங்கள்.
4 ஏப்ரல் 22, “விழித்தெழு!” பத்திரிகையில் அக்கறை காட்டப்பட்டால், நீங்கள் திரும்பிச் செல்லும்போது, “அறிவு” புத்தகத்திலிருந்து படிப்பைத் தொடங்குவதற்காக இந்த அணுகுமுறையை மேற்கொள்ளக்கூடும்:
◼ “போரில்லாத ஒரு உலகத்தை முடிவில் காண்பதற்கான எதிர்நோக்குகளைப் பற்றி நாம் பேசியது உங்களுக்கு நினைவிருக்கும். அது நிஜத்தில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பது கடினமாக இருக்கிறது. அதைப் பற்றி ஒரு கலைஞரின் கற்பனை இங்கே இருக்கிறது. [அறிவு புத்தகத்தில், பக்கங்கள் 188-9-லுள்ள படத்தைக் காண்பியுங்கள்.] இந்த சூழலை அனுபவிக்க முடிவது இன்பகரமானதாக இருக்கும் அல்லவா? [பக்கங்கள் 4-5-க்குத் திருப்பி, படத்தைக் காண்பித்து, பெட்டியை வாசியுங்கள்.] இந்தப் புத்தகத்தின் தலைப்பு, யோவான் 17:3-லுள்ள இயேசுவின் வார்த்தைகளை ஒத்திருக்கிறது. [வாசியுங்கள்.] நீங்கள் அனுமதித்தால், உயிர்காக்கும் அந்த அறிவைப் பெறுவதற்காக இந்தப் புத்தகத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று நான் காண்பிக்க விரும்புகிறேன்.” வீட்டுக்காரருக்கு விருப்பம் இருந்தால், முதல் அதிகாரத்தில் படிப்பைத் தொடங்குங்கள்.
5 நீங்கள் முதல்முறை சந்தித்தபோது அலுவலாக இருந்தவரிடம் மீண்டும் செல்லும்போது இதைச் சொல்லக்கூடும்:
◼ “சமீபத்தில் நான் உங்களைச் சந்தித்து, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை விட்டுச் சென்றேன். இந்தப் பத்திரிகைகள் உயிரளிக்கும் அறிவைக் கொடுக்கின்றன; ஆகையால் நீங்கள் அவற்றைத் தொடர்ச்சியாக பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.” பின்னர் சந்தா அளியுங்கள். அல்லது, “ஒவ்வொருவரும் பைபிளைப் புரிந்துகொள்வது அவசியம் என்று நான் நினைப்பதால், அதைச் செய்யும்படி உங்களுக்கு உதவக்கூடிய ஒன்றைக் காட்டுவதற்காக நான் மீண்டும் வந்தேன்.” அறிவு புத்தகத்தைக் காண்பித்து, பக்கம் 3-லுள்ள பொருளடக்கத்தை சுட்டிக் காட்டுங்கள். எந்த அதிகாரம் மிகவும் அக்கறைக்குரியதாக தோன்றுகிறது என்று கேட்டு, அதற்குத் திருப்பி, படிப்பைத் தொடங்குங்கள்.
6 நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற ‘விசுவாசத்தின் கதவை மற்றவர்களுக்காக நம்மால் திறக்க’ முடிந்தால், நம்முடைய சந்தோஷம் பெரிதாக இருக்கும்.—அப். 14:27; யோவா. 17:3.