கேள்விப் பெட்டி
◼ “சகோதரர்,” “சகோதரி” என்னும் பதங்களின் சரியான உபயோகம் யாது?
“சகோதரர்,” “சகோதரி” என்னும் பதங்களைச் சொல்லர்த்தமாக உபயோகிக்கையில், ஒரே பெற்றோரை உடைய தனிநபர்களைக் குறிப்பிடுகின்றன. இந்த இயற்கையான உறவுமுறை ஓர் அனலான பற்றுதலை பொதுவாகவே உருவாக்குகிறது மற்றும் இந்தத் தனிநபர்கள் அனுபவிக்கும் நெருக்கமானது சமுதாயம், சுற்றுச்சூழல், உணர்ச்சிப்பூர்வமான பந்தம் ஆகியவற்றால் இன்னும் மெருகேற்றப்படுகிறது.
ஜெபத்தில் யெகோவாவை “எங்கள் பிதாவே” என்று அழைக்குமாறு தம்முடைய சீஷர்களுக்கு இயேசு கற்பித்தார். அந்தப் பதத்தின் உபயோகம், கிறிஸ்தவர்களாய் நாம் அனைவரும் ஒரு நெருங்கிய குடும்ப வட்டத்தின் பாகமாக இருப்பதை அர்த்தப்படுத்துகிறது, அங்கே நாம் வளமான ஆவிக்குரிய உறவுமுறையை அனுபவித்து மகிழ்கிறோம். இயேசு தம்மைப் பின்பற்றியவர்களை “நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்” என்று கூறியபோது, இது மேலுமாக வலியுறுத்தப்பட்டது.—மத். 6:9; 23:8.
கடவுளுடைய குடும்ப வட்டாரத்திற்குள் நமக்கு இருக்கும் நெருங்கிய ஆவிக்குரிய பந்தத்தின் காரணமாக, ஒருவரையொருவர், “சகோதரர்,” “சகோதரி” என்று நாம் அழைக்கிறோம், குறிப்பாக சபை கூட்டங்களில். இந்த ஆவிக்குரிய தருணங்களில், கூட்டத்தை நடத்திக்கொண்டிருப்பவர், ஒரு நபரின் குடும்பப்பெயருடன் “சகோதரர்” அல்லது “சகோதரி” என்ற பதத்தை உபயோகிப்பதன்மூலம் முழுக்காட்டப்பட்ட தனிநபர்களை அடையாளம் காட்டுகிறார்.
முழுக்காட்டப்படாத நபர் ஒருவர் கூட்டங்களில் பங்கேற்க விரும்பினால், அவரைப் பற்றி என்ன? ஒரு நபர் யெகோவாவின் ஜனங்களோடு சில காலமாகக் கூட்டுறவுகொண்டிருந்து, ஒப்புக்கொடுத்தலை நெருங்கிக்கொண்டிருந்து, தன்னை ஒரு யெகோவாவின் சாட்சியாகக் கருதுவாரேயானால், அவருடைய குடும்பப்பெயருக்கு முன் “சகோதரர்” அல்லது “சகோதரி” என அழைப்பதில் மறுப்பு ஏதும் கிடையாது. விசேஷமாக, அந்த நபர் ஒரு முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக இருப்பாரேயாகில் இது உண்மையில் பொருத்தமாக இருக்கும்.
மறுபட்சத்தில், வெகு சமீபமாக நமது கூட்டங்களுக்கு வர ஆரம்பித்திருக்கும் அக்கறையுள்ள நபர்கள், கடவுளுடைய குடும்பத்தினரின் பாகமாய்த் தங்களை அடையாளம் காட்டும் படிகளை இன்னும் எடுக்கவில்லை. இந்த நபர்களை “சகோதரர்” அல்லது “சகோதரி” என அழைக்கப்படலாகாது, ஏனென்றால், கடவுளுடைய குடும்பத்தின் ஆவிக்குரிய உறவு அவர்களைப் பொறுத்தமட்டில் நிலவுவதில்லை. ஆகவே கூட்டங்களின்போது, வழக்கத்திற்கு இசைவாக அவர்களின் பெயருக்குமுன் “திரு” என்பது போன்ற பொருத்தமான அடைமொழியைச் சேர்த்து அழைத்தல் வேண்டும்.
நமது கூட்டங்களில் “சகோதரர்,” “சகோதரி” என்ற பதங்களை உபயோகிப்பது, ஒரு முதற்பெயரால் சுட்டிக்காட்டப்படுவதைக் காட்டிலும் அதிக நெருக்கமான, அருமையான ஒரு பிணைப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது, ஒரே தந்தையாகிய யெகோவா தேவனின் கீழ் ஆவிக்குரிய குடும்பமாக நாம் அனுபவித்து மகிழும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட உறவை நமக்கு நினைவுபடுத்துகிறது. நாம் ஒருவர்பால் ஒருவர் வைத்திருக்கும் ஆழமான அன்பையும் பாசத்தையும்கூட நினைவுபடுத்துகிறது.—எபே. 2:19; 1 பே. 3:8.