எளிமையாக்கப்பட்ட பிரசுர அளிப்பு ஏற்பாடு
1 பிரசுரங்களை விலையின்றி அளிக்கும் எளிமையாக்கப்பட்ட இந்த ஏற்பாட்டை நாம் கடந்த ஓர் ஆண்டு காலமாக கடைப்பிடித்து வந்திருக்கிறோம். இந்த ஏற்பாடு வெற்றி கண்டுள்ளதா? இந்த ஏற்பாட்டில், பிரசுர விநியோகிப்பு பெருமளவில் அதிகரித்திருப்பதை ஊழிய அறிக்கைகள் காட்டுகின்றன. ஆம், “வா . . . ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்” என்ற அழைப்பு லட்சக்கணக்கானோருக்கு இதன் வாயிலாக விடுக்கப்படுகிறது.—வெளி. 22:17.
2 ஆனாலும், நம் பிரசுரங்களை வாங்கிக்கொள்கிற எல்லாருக்கும் மனம்போன போக்கில் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை, அது நம் விருப்பமும் இல்லை. நம்முடைய சொந்த பொருட்களை நாம் எவ்வாறு ஞானமாக பயன்படுத்துவோமோ அதேபோல சபைமூலம் சங்கத்திடமிருந்து விலையின்றி கிடைக்கும் பிரசுரங்களை ஒவ்வொரு பிரஸ்தாபியும் ஞானமாக பயன்படுத்த வேண்டும். அது ஒவ்வொருவருடைய பொறுப்பு. பிரசுரங்கள் விலையின்றி பிரஸ்தாபிகளுக்கு கிடைப்பதால் அவற்றை தயாரிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் செலவே ஆவதில்லை என்று அர்த்தமில்லை. யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய திருத்தமான அறிவை பெற்றுக்கொள்ள நல்மனமுள்ள ஆட்களுக்கு உதவும் இந்த பிரசுரங்கள் மதிப்புமிக்கவை என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும்.—யோவா. 17:3.
3 சங்கத்தால் எப்படி எல்லாருக்கும் பிரசுரங்களை விலையின்றி கொடுக்க முடிகிறது? பிரசுரங்களை தயாரித்து விநியோகிப்பதற்கு ஆகும் தவிர்க்க முடியாத செலவுகள் நன்கொடைகளாலேயே ஈடுகட்டப்படுகின்றன. யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியர்களே இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மிக அவசரமாக செய்யப்பட வேண்டிய ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை ஆதரிக்க யெகோவாவின் சாட்சிகள் பொது மக்களை சார்ந்திருப்பதில்லை. நாம் ஒருபோதும்—அப்போதும் சரி இப்போதும் சரி—பொது மக்களிடம் உதவிகேட்டு பணம் திரட்டுவது கிடையாது. ஆனாலும், ஆர்வமும் நன்றியுணர்ச்சியும் மிக்க நபர்கள் அளிக்கும் சிறியளவிலான நன்கொடைகளை மிகவும் போற்றுகிறோம்.
நன்கொடைகள் சாதிப்பவை
4 பைபிள் கல்வி புகட்டும் உலகளாவிய வேலை எவ்வாறு மனமுவந்த நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும், நம்முடைய நாளில் ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்கு ஆகும் ஏராளமான செலவுகளை ஈடுகட்டவே பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் பிரசுரங்களை தயாரிப்பது மாத்திரமே சங்கம் செய்யும் சேவை அல்ல. இயேசு தம் சீஷர்களுக்கு அளித்த நியமிப்பை நிறைவேற்றுவதற்கு, கிளை அலுவலகங்கள், பெத்தேல் வீடுகள், ஊழியப் பயிற்சி பள்ளிகள், விசேஷ பயனியர்கள், பிரயாணக் கண்காணிகள் போன்ற மற்ற அநேக சேவைகளையும் கவனித்துக்கொள்கிறது.—மத். 24:14; 28:19, 20.
5 யெகோவாவின் அமைப்பில் குறிப்பிடத்தக்க விதத்தில் ஏற்படும் வளர்ச்சி, அநேகரை மலைக்கச் செய்திருக்கிறது; இதனால், தாங்கள் எந்த வகையில் உதவிசெய்ய முடியும் என்று அவர்கள் கேட்கின்றனர். ஆனால், அநேகரால் புதிய கிளை அலுவலகங்கள், ராஜ்ய மன்றங்கள் போன்றவற்றின் கட்டுமானப் பணிகளில் கலந்துகொள்ளவோ தொலைதூர நாடுகளுக்குச் சென்று சுவிசேஷ வேலை செய்யவோ முடிவதில்லை. இருந்தாலும், மகிழ்ச்சியளிக்கும் இந்த முன்னேற்றங்களுக்காக தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கிறது. அதனால், உலகளாவிய வேலைக்கு தங்களால் முடிந்ததை நன்கொடையாக அளிப்பதற்காக தொடர்ந்து சேமித்துவைக்கும் வழக்கத்தை அநேக பிரஸ்தாபிகளும் அவர்களது குடும்பத்தாரும் கடைபிடிக்கின்றனர். (1 கொரிந்தியர் 16:1, 2-ஐ ஒப்பிடுக.) இந்த விதத்தில், பிரசுர விநியோகிப்பு உட்பட சங்கத்தின் எல்லா வேலைகளும் ஆதரிக்கப்படுகின்றன. உலகளாவிய பிரசங்கிப்பு வேலைக்கு அளிக்கப்படும் மனமுவந்த நன்கொடைகள், பிரசுரங்களை தயாரிக்க ஆகும் செலவை ஈடுகட்டுவதற்கு மட்டுமே என யாரும் நினைக்கக்கூடாது.
6 சாட்சி கொடுப்பதற்காக வீட்டுக்காரரையோ மற்றவர்களையோ சந்திக்கும்போது, அவர்களுடன் பைபிள் விஷயத்தை கலந்துபேச நாம் தயாராயிருக்க வேண்டும். ஆர்வமூட்டும் பற்பல வித்தியாசமான அறிமுகங்களும், அவற்றிற்கு பொருத்தமான அநேக பைபிள் விஷயங்களும் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நம் ராஜ்ய ஊழியத்திலும் வித்தியாசப்பட்ட அறிமுகங்கள் கொடுக்கப்படுகின்றன, அவற்றையும் பயன்படுத்தலாம். ராஜ்ய செய்திக்கு அந்த நபர் எவ்வாறு பிரதிபலிக்கிறார் என்பதை பொறுத்து, பிரசுரத்தை அளிக்கலாமா வேண்டாமா என பிரஸ்தாபி தீர்மானிக்க வேண்டும். புத்தகத்தையோ மற்ற பிரசுரத்தையோ கொடுக்கும் அளவிற்கு ஆர்வம் காட்டப்படவில்லை என்றால், உங்கள் சம்பாஷணையை சாதுரியமாக முடித்துக்கொண்டு அடுத்த நபரை சந்திக்கலாம். அல்லது அவரிடம் ஒரு கைப்பிரதியையோ துண்டுப்பிரதியையோ கொடுக்கலாம்; அப்போதும் அவர் அதை வாசிப்பாரா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். ஆர்வம் காட்டப்பட்டால் மீண்டும் சென்று சந்திப்பதற்காக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல, ஒருவர் பிஸியாக இருந்ததால் அல்லது ஏற்ற சமயமாக இல்லாததால், பொறுமையாக பேசமுடியாத சந்தர்ப்பங்களிலும் இதே போன்று செய்யலாம்.
7 பைபிள் கல்வி புகட்டும் இந்த வேலை வியாபாரத்திற்காக செய்யப்படும் ஒன்றல்ல என்பதை எல்லாரும் புரிந்துகொள்ள எளிமையாக்கப்பட்ட பிரசுர அளிப்பு ஏற்பாடு உதவுகிறது. அத்துடன் ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிப்பதும் இயேசு கிறிஸ்துவிற்கு சீஷர்களை உண்டாக்குவதுமே நம் முக்கிய நோக்கம் என்பதை எல்லாருக்கும் தெரிவிக்க இது உதவுகிறது. ‘அறப்பணிக்கென நிதி திரட்டும்’ மற்ற அமைப்புகளுக்கு நேர்மாறாக, பிரசுரங்களை எல்லோருக்கும் விலையின்றி கொடுப்பதில் நாம் அதிக மகிழ்ச்சி அடைகிறோம். நம் நற்செய்தியில் உண்மையான ஆர்வம் காட்டாத நபர்களிடமிருந்து உலகளாவிய வேலைக்கு நன்கொடைகளை நாம் ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை. (காவற்கோபுரம், நவம்பர் 1, 2000, பக்கங்கள் 28-31-ஐ பார்க்கவும்.) நம் அமைப்பிலுள்ள எல்லாருமே மனமுவந்து சேவை செய்பவர்கள், யாருக்குமே சம்பளமோ கமிஷனோ கொடுக்கப்படுவதில்லை. அதனால் நன்கொடைகள் முழுவதுமே பைபிள் கல்வி புகட்டும் உலகளாவிய வேலையை ஆதரிக்க பயன்படுத்தப்படுகின்றன. நம் வேலையில் ஆர்வம் காட்டுவோரிடம் அல்லது யார் அதைப் பற்றி கேட்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே உலகளாவிய வேலையை ஆதரிக்கும் நன்கொடைகள் பற்றி பேசுகிறோம்.
8 நம் சங்கத்தின் மதிப்புமிக்க பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்தி ஊழியத்தில் வைராக்கியத்துடன் முன்னேற வேண்டும். அப்போது யெகோவா நம் அமைப்பை பெருமளவில் தொடர்ந்து ஆசீர்வதிப்பார். நாம் ஊழியத்தில் அளிக்கும் நல்ல பைபிள் விளக்கங்களை நல்மனமுள்ள ஆட்கள் அநேகர் பாராட்டுகின்றனர். அதனால் மனமுவந்து சந்தோஷத்தோடு நன்கொடைகளை அளிப்பதன் மூலம் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.