பிரசங்கிக்க எது நம்மைத் தூண்டுகிறது?
1. அன்பிற்கும் நம் ஊழியத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
1 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதே இன்று நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை. இந்த ஒரு வேலை மூலமாக நாம் இரண்டு முக்கியமான கட்டளைகளுக்கு, அதாவது யெகோவாமீதும் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டுமென்ற கட்டளைகளுக்கு, கீழ்ப்படிகிறோம். (மாற். 12:29-31) ஊழியத்தில் வைராக்கியமாக ஈடுபட அன்புதான் நம்மைத் தூண்டியெழுப்புகிற சக்தியாக இருக்கிறது.—1 யோ. 5:3.
2. யெகோவாமீது நமக்குள்ள அன்பை நம்முடைய ஊழியம் எப்படி வெளிக்காட்டுகிறது?
2 யெகோவா மீதுள்ள அன்பு: நம்முடைய நெருங்கிய நண்பரான யெகோவாமீது நாம் வைத்திருக்கும் அன்பு, அவர் சார்பாகப் பேச நம்மைத் தூண்டுகிறது. கிட்டத்தட்ட 6,000 வருடங்களாக அவரைப் பற்றி சாத்தான் இல்லாததையும் பொல்லாததையும் பரப்பிவந்திருக்கிறான். (2 கொ. 4:3, 4) இதன் காரணமாக, மனிதர்களைக் கடவுள் எரிநரகத்தில் வதைக்கிறார் என்றும், அவர் புரிந்துகொள்ள முடியாத திரித்துவக் கடவுள் என்றும், மனிதர்கள்மீது அவருக்கு அக்கறையே இல்லை என்றும் ஜனங்கள் நம்புகிறார்கள். ஒருசிலர், கடவுளே இல்லை என்று முடிவுகட்டிவிடுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது நம் பரலோகத் தகப்பனைப் பற்றிய உண்மைகளை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று நாம் எவ்வளவாய் ஏங்குகிறோம்! கடவுளுக்குச் சாட்சிகளாக இருக்க நாம் கடினமாய் உழைக்கும்போது அவரைச் சந்தோஷப்படுத்துவோம், சாத்தானுடைய முயற்சிகளைத் தவிடுபொடியாக்குவோம்.—நீதி. 27:11; எபி. 13:15, 16.
3. சக மனிதர்மீது நமக்குள்ள அன்பை நம்முடைய ஊழியம் எப்படி வெளிக்காட்டுகிறது?
3 சக மனிதர் மீதுள்ள அன்பு: ஒவ்வொரு முறையும் நாம் சாட்சி கொடுக்கும்போது மக்கள்மீது அன்பு இருப்பதைக் காட்டுகிறோம். இந்தக் கடினமான காலங்களில் மக்களுக்கு நற்செய்தி கண்டிப்பாகத் தேவை. யோனாவின் காலத்தில் வாழ்ந்த நினிவே மக்களைப் போலவே இன்று அநேகர் “வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாதவர்களாக” இருக்கிறார்கள். (யோனா 4:11) எப்படிச் சந்தோஷமாக, திருப்தியாக வாழலாம் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள நம்முடைய ஊழியம் உதவுகிறது. (ஏசா. 48:17-19) நற்செய்தி அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. (ரோ. 15:4) மக்கள் அதற்குச் செவிசாய்த்து அதன்படி நடந்தால் “மீட்புப் பெறுவார்கள்.”—ரோ. 10:13, 14.
4. எதை யெகோவா ஒருபோதும் மறக்க மாட்டார்?
4 நல்ல பிள்ளைகள் பெற்றோர்மீது குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமல்ல எந்நேரமும் அன்பு காட்டுவார்கள்; அதுபோல, கடவுள் மீதும் சக மனிதர் மீதும் நமக்கு ஆழமான அன்பு இருப்பதால் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமல்ல, எந்நேரமும் சாட்சி கொடுக்கத் தயாராயிருக்கிறோம். இடைவிடாமல் பிரசங்கிக்கிறோம். (அப். 5:42) நாம் காட்டும் இத்தகைய அன்பை யெகோவா ஒருபோதும் மறக்க மாட்டார்.—எபி. 6:10.