‘மிகச் சிறந்தோரால் ஆளப்படும் அரசாங்கமே’ உண்மையில் மிகச் சிறந்ததாக இருக்கிறதா?
பகுதி 3 மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது
மிகச் சிறந்த ஆட்களால் இணைத்து உருவாக்கப்பட்டதாக இருந்தால் மிகச் சிறந்த அரசாங்கம் அமையும் என்பது நியாயமாகத் தோன்றுகிறது. மிகச் சிறந்த ஆட்கள் என்பவர்கள்—மேம்பட்ட கல்வி கற்றவர்கள், அதிக பண்பேற்றவர்கள், அதிக தகுதிவாய்ந்தவர்கள்—ஆகவே மற்றவர்களை முன்நின்று வழிநடத்திச் செல்ல திறமையுள்ளவர்கள் என்பதாக விவாதம் செல்கிறது. இப்படிப்பட்ட ஓர் உயர்ந்தோர் குழாமின் தலைமையிலான ஓர் உயர்குடியாட்சி, பல்வேறு வகைகளில் ஒன்றாக இருக்கக்கூடும்; உதாரணமாக, செல்வந்தர்களின் ஆளுகையான செல்வராட்சி, மத குருமாரின் ஆளுகையான தேவாட்சி; அல்லது அதிகாரிகளின் ஆளுகையான பணித்துறை ஆட்சி.
அநேக நாகரீக முதிர்ச்சியற்ற சமுதாயங்கள், கோத்திர மூப்பர் அல்லது தலைவரின் கீழான ஆட்சியில், உயர்குடியாட்சியாக இருந்தன. எப்போதாவது ஒரு சமயத்தில் ரோம், இங்கிலாந்து மற்றும் ஜப்பான், அனைத்துமே உயர்குடியாட்சிகளைக் கொண்டிருந்தன. பூர்வ கிரீஸில், “உயர்குடியாட்சி” என்ற வார்த்தை சிறிய ஒரு தொகுதியால் ஆளப்பட்ட தனியுரிமையுடைய நகர-அரசுகளை அல்லது poleis-ஐ குறிப்பிட பயன்படுத்தப்பட்டன. அநேகமாக பிரபலமான குடும்பங்கள் ஆட்சியை பகிர்ந்துகொண்டன. என்றபோதிலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் தனி குடும்பங்கள் சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொடுங்கோல் வகையான ஆட்சியை அமைத்தன.
மற்ற கிரேக்க தனி உரிமையுடைய நகர அரசுகளைப் போல, ஏதென்ஸ் ஆரம்பத்தில் உயர்குடியாட்சியாக இருந்தது. பின்னால் கலாச்சார மாற்றங்கள் வகுப்பு வேறுபாடுகளைப் பலவீனப்படுத்தி அதன் ஐக்கியத்தைக் குலைத்த போது, நகரம் குடியரசை ஏற்றுக்கொண்டது. மறுபட்சத்தில், பொது கருத்துபடி, பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்பார்ட்டா ஓர் இராணுவ சிலவராட்சியால் ஆளப்பட்டு வந்தது. இந்த நகரம் விரைவில் அதிக பழமையான ஏதென்ஸோடு போட்டியிட்டு தங்கள் காலத்திலிருந்த கிரேக்க உலகில் ஆதிக்கத்துக்காக போரிட்டுக் கொண்டன. இவ்விதமாக ஏதென்ஸில் இருந்தது போல பலவராட்சி, ஸ்பார்டாவில் இருந்தது போல சிலவராட்சியோடு மோதிக் கொண்டது. நிச்சயமாகவே, அரசாங்கத்தைப் பற்றிய கருத்து வேறுபாட்டைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்திய அவர்களுடைய போட்டி அதிக சிக்கலானதாக இருந்தது.
உயர்ந்த ஓர் இலட்சியம் நெறிதவறுகிறது
அரசியல் கருத்துவேறுபாடுகளே அடிக்கடி கிரேக்க தத்துவ ஞானிகளின் மத்தியில் தத்துவார்த்தமான விவாதங்களின் பொருளாக இருந்தன. ப்ளேட்டோவின் முன்னாள் மாணாக்கரான அரிஸ்டாட்டில் உயர்குடியாட்சியையும் சிலவராட்சியையும் வேறுபடுத்திக் காட்டினார். விசேஷமான திறமைகளையும் உயர்ந்த ஒழுக்கங்களையுமுடைய ஆட்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக தங்களையே பொது சேவைக்கு அர்ப்பணிக்க உதவிய உயர்ந்த இலட்சியமான சுத்தமான உயர்குடியாட்சியை, சிறந்த வகையான ஓர் அரசாங்கமாக அவர் வகைப்படுத்தினார். ஆனால் ஒடுக்குகின்ற மற்றும் தன்னலமான உயர்குடி குழாம் தலைமைத்தாங்கி நடத்தப்படுகையில், சுத்தமான உயர் குடியாட்சி அநீதியான சிலவராட்சியாக தரம் குறைந்துவிடுகிறது. இதை நெறிதவறிய அரசாங்கமாக அவர் கருதினார்.
‘மிகச் சிறந்தோரின்’ ஆட்சியை வெளிப்படையாக பரிந்துரை செய்கையில், உயர்குடியாட்சியை மக்களாட்சியோடு ஒருங்கே இணைப்பது விரும்பப்படும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை அரிஸ்டாட்டில் ஒப்புக்கொண்டார். இந்தக் கருத்து இன்னும் ஒரு சில அரசியல் சிந்தனையாளர்களுக்கு பிடித்தமானதாக உள்ளது. உண்மையில், பூர்வ ரோமர்கள் இந்த இருவகையான அரசாங்கங்களையும் ஒருங்கிணைத்து ஓரளவு வெற்றிக் கண்டிருக்கிறார்கள். “[ரோமில்] அரசியல் அனைவரின் விவகாரமாகவும் இருந்தது,” என்று காலின்ஸின் உலக சரித்திரத்தின் நிலப்படம் சொல்கிறது. என்றபோதிலும், அதே சமயத்தில், “செல்வப் பெருக்குள்ள குடிமக்களும் உயர் குடியில் பிறக்க அதிர்ஷ்டசாலிகளாக இருந்தவர்களும் சிலவராட்சியை அமைத்துக்கொண்டு குற்றவியல் நீதிபதி, இராணுவ படைத்தலைவர் மற்றும் பூசாரிகளின் பதவிகளை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டனர்.
வரலாற்றின் இடைநிலைக் காலத்தின் பிற்பட்ட காலத்திலும் நவீன காலங்களின் ஆரம்பத்திலும், ஐரோப்பிய நகர மையங்கள், தங்கள் அரசாங்கத்தில் மக்களாட்சியையும் உயர்குடியாட்சியையும் ஒருங்கிணைத்தனர். கூலியரின் என்ஸைக்ளோபீடியா இவ்விதமாக சொல்கிறது: “கடைசியாக நெப்போலியன் கவிழ்த்துவிட்ட மிகவும் பழம்பாணியான வெனிஸ் நகர குடியரசு இப்படிப்பட்ட சிலவராட்சிக்கு நேர்த்தியான ஓர் உதாரணத்தைத் தருகிறது; ஆனால் பரிசுத்த ரோம பேரரசின் சுயாட்சி நகரங்களும், செர்மன் வாணிக நகரங்களும், இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பாவின் தனியுரிமையுள்ள பட்டணங்களும், ஒப்பிடுகையில் சிறிய ஆனால் பெருமையுள்ள மற்றும் உயர்ந்த கலாச்சாரமுள்ள [உயர்குடி] வகுப்பினரின் இறுக்கமான சிலவராட்சி கட்டுப்பாட்டுக்குள் வரும் அதே பொதுவான மனச்சாய்வையே வெளிப்படுத்துகின்றன.”
எல்லா அரசாங்கங்களுமே மிகச் சிறந்த தகுதியுள்ள ஆட்களையே பொறுப்பில் கொண்டிருக்க முற்படுவதன் காரணமாக அவை அனைத்துமே இயல்பில் உயர்குடியாட்சியாக இருக்கின்றன என்பதாக ஓரளவு நியாயப்படுத்தப்படுகிறது. ஆளும் வர்க்கத்தினரைப் பற்றிய கருத்து இந்த எண்ணத்தை பலப்படுத்த உதவியிருக்கிறது. ஆகவே குறிப்புதவி நூல் ஒன்று இந்த முடிவுக்கு வருகிறது: “ப்ளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் இலட்சியமானது என்று கருதி விவாதம் செய்ததை விளக்க, ஆளும் வர்க்கம் மற்றும் உயர்ந்தோர் குழாம் என்ற பதங்கள் ஒரே பொருளுடையனவாக ஆகி வருகிறது.”
‘மிகச் சிறந்ததைத்’ தேடி
கிரேக்க தத்துவஞானிகள் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, (நிலக்கிழார் மற்றும் நிலமானிய உரிமைப்பெற்றவர் அடிப்படையில் அமைந்த) பண்ணை நிலவுரிமை முறை, செள என்ற அரச குடும்பத்தின் கீழ் பூர்வ சீனாவுக்கு ஓரளவு ஸ்திரத்தன்மையையும் சமாதானத்தையும் கொண்டுவந்தது. ஆனால் பொ.ச.மு. 722-க்குப் பிறகு, சூன் சியு காலம் என்றழைக்கப்பட்ட காலத்தில் பண்ணை நிலவுரிமை முறை படிப்படியாக பலவீனமடைந்தது. இந்தக் காலத்தின் கடைசி பகுதியில், புதிய உயர்ந்தோர் குழாம் ஒன்று தோன்றியது. இது, பண்ணை நிலவுரிமை பெற்றிருந்த குடும்பங்களில் சேவித்த முன்னாள் “உயர்குடியினரும்” பண்டைய உயர் குடிமக்களின் சந்ததியாராலும் ஆனதாக இருந்தது. இந்தப் புதிய உயர்ந்தோர் குழாமின் உறுப்பினர்கள் முக்கிய அரசாங்க பதவிகளை எடுத்துக்கொண்டனர். தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா காண்பிக்கிறபடி, புகழ்பெற்ற சீன சாதுவான கன்பூசியர் “உயர்குடி மரபுக்குப் பதிலாக திறமையும் ஒழுக்கச் சிறப்புமே ஒரு மனிதனை தலைமைப் பதவிக்கு பொருத்தமானவனாக்குகிறது,” என்று வலியுறுத்தினார்.
ஆனால் ஐரோப்பாவில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னர், உயர்ந்தோர் குழாமை ஆளுகைச் செய்ய, மிகச் சிறந்த தகுதியுள்ளோரை தெரிந்து கொள்ளும் செயல் முறையில், “திறமையும் ஒழுக்கச் சிறப்பும்” கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. “இங்கிலாந்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் உயர்குடியிலிருந்த உயர்ந்தோர் குழாம் முக்கியமாக பிறப்பு வழி உரிமையையும் செல்வத்தையுமே அடிப்படையாகக் கொண்டதாயிருந்தது. வெனீஸிலும் இதேக் காரியம் உண்மையாக இருந்தது,” என்று ஹார்வார்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கார்ல் J. ஃபிரட்ரிக் குறிப்பிடுகிறார். அவர் மேலுமாகச் சொல்கிறார்: “பதினெட்டாவது நூற்றாண்டு ப்ரஷ்ஷியா போன்ற சில தேசங்களில், உயர்ந்தோர் குழாம் பிறப்பு வழி உரிமையையும் இராணுவ வீரத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தது.”
‘மேம்பட்ட ஆட்களின்’ நல்ல பண்புகள் அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கடத்தப்பட்டன என்ற நம்பிக்கையே, கடந்தக் காலங்களில் முடிமன்னர்களின் திருமண பழக்கங்களுக்கு காரணமாயிருந்தது. வரலாற்றின் இடைநிலைக் காலத்தில், பிறப்பின்படி உயர்வு மேலோங்கியிருந்தது. பொது மக்களில் ஒருவரை மணம் செய்வது உயர்குலத்தின் தரத்தைக் குறைப்பதற்கு சமமாகவும், தெய்வீகச் சட்டத்தை அவமதிப்பதற்கு சமமானதாயிருந்தது. முடி மன்னர்கள் உயர்குடி மரபைச் சேர்ந்தவரை மட்டுமே மணம் செய்யக் கடமைப்பட்டிருந்தார்கள். பிறப்பின்படி உயர்வு என்ற இந்தக் கருத்து அதிக அறிவுப்பூர்வமான விளக்கத்துக்கு இடங்கொடுத்தது—மேம்பட்ட வாய்ப்புகள், கல்வி, திறமைகள் அல்லது சாதனைகளின் அடிப்படையில் உயர்வு.
சிறப்புரிமைக்கேற்ற பொறுப்புணர்வு என்று அறியப்படும் ஒரு நியமம் உயர்குடியாட்சியின் வெற்றியை நிச்சயப்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டது. “உயர்குடிப்பிறப்பு சட்டப்படி கட்டுப்படுத்துகிறது,” என்ற நேர்பொருள் கொண்ட இது “உயர் பதவி அல்லது பிறப்போடு சம்பந்தப்பட்ட கனமுள்ள, தாராள குணம் படைத்த, பொறுப்புள்ள நடத்தையின் கடமையை” குறித்துக்காட்டியது. அவர்களுடைய “உயர்வின்” காரணமாக உயர்குடியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களுடைய தேவைகளைப் பொறுப்புடன் சேவிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்த நியமம் போர்வீரர்கள் மற்றவர்களுடைய அக்கறையை தங்களுடையதற்கு மேலாக வைக்க கடமைப்பட்டிருந்த பண்டைய ஸ்பார்டாவிலிருந்தது போன்ற உயர்குடியாட்சிகளிலும், ஜப்பானிய பெருமக்களின் படைத்துறையினரான சமூராய் வகுப்பினர் மத்தியிலும் காணப்பட்டது.
உயர்குடியாட்சிகள் குறைவுபடுவதாய் காணப்பட்டது
உயர்குடியாட்சியின் அபூரணம் எளிதில் விளக்கப்படுகிறது. பண்டைய ரோமில், உயர்குடி வகுப்பினர் என்றறியப்பட்டிருந்த உயர்குடி மக்கள் மாத்திரமே ரோம சட்டமன்றத்தில் உறுப்பினராக இருக்க தகுதிபெற்றவர்களாக இருந்தனர். இழிபிறப்புடையோர் என்றறியப்பட்டிருந்த பொதுமக்களுக்கு தகுதி இருக்கவில்லை. கன்ஃபூசியஸ் ஆட்சியாளர்களிடம் வற்புறுத்திய “திறமையும் ஒழுக்கச் சிறப்பும்” இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகமதிகமாக ஊழல் மிகுந்தவர்களாகவும் ஒடுக்குகிறவர்களாகவும் ஆயினர். இதன் விளைவு உள்நாட்டுப் போராக இருந்தது.
அவ்வப்போது சீர்திருத்த காலங்கள் இருந்தபோதிலும், சட்டமன்ற சிலவராட்சி தொடர்ந்திருந்தது. பொ.ச.மு. 44-ல் ஜூலியஸ் சீசர் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு அவர் சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபித்த வரையிலுமாவது இது தொடர்ந்திருந்தது. அவருடைய மரணத்துக்குப் பின்பு உயர்குடியாட்சி மீண்டும் நடைமுறைக்கு வந்தது, ஆனால் பொ.ச.மு. 29-ற்குள், மறுபடியும் ஒரு முறை மாற்றப்பட்டது. கூலியரின் என்ஸைக்ளோபீடியா விளக்குகிறது: “ரோமின் அதிகாரமும் செல்வமும் நிலப்பரப்பும் அதிகரித்த போது உயர்குடியாட்சி ஊழல் மிகுந்த சிலவராட்சியாக மாறியது, அதன் குடிமை நல உணர்வு ஆவியின் இழப்பு, பொதுமக்களின் மதிப்பு இழப்பில் பிரதிபலிக்கப்பட்டது. அதன் வீழ்ச்சி முழு முடியாட்சியைக் கொண்டு வந்தது.
அடுத்த 1,200 ஆண்டுகள் போல், உயர்குடியாட்சி அரசாங்கங்கள், பெயரில் முடியாட்சியாக இருந்தபோதிலும், ஐரோப்பிய மாதிரியில் இருந்தன. காலப்போக்கில் அநேக அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்கள் படிப்படியாக அமைப்பை சிறிது மாற்றி அமைத்தன. ஆனால் முழு காலப்பகுதியிலும், ஐரோப்பிய உயர்குடியாட்சி சக்திவாய்ந்ததாக இருந்து அதன் நிலஉரிமைகளையும் இராணுவ அலுவலகங்கள் மீது ஆதிக்கப்பிடியையும் காத்துக்கொள்ளக்கூடியவையாக, அதே சமயத்தில் எக்காலத்தையும்விட அதிக சுரண்டுவதாக, ஊதாரித்தனமாக, இறுமாப்பாக, ஆரவாரிக்கும் தன்மையுள்ளதாக மாறிவந்திருக்கிறது.
உயர்குடியாட்சி 1780-களில் பலத்த அடியை அனுபவித்தது. ஃபிரான்சின் பதினாறாம் லூயி, நிதி நிலை நெருக்கடியில் தன்னைக் கண்டபோது, ஃபிரெஞ்சு உயர்குடியாட்சியின் உறுப்பினர்களிடம் அவர்களுடைய நிதி சலுகைகளில் சிலவற்றை விட்டுகொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அவரை ஆதரிப்பதற்கு பதிலாக, அவர்கள் முடியாட்சியின் அடிப்படையைத் தகர்த்து அவர்கள் இழந்துவிட்டிருந்த அதிகாரங்கள் சிலவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையோடு அவருடைய பிரச்னைகளை தங்களுக்கு அனுகூலப்படுத்திக் கொண்டனர். “உயர்குடியாட்சிக்காக அரசனால் ஆளப்படும் மக்களின் அரசாங்கத்தால் அதிருப்தியடைந்து, அவர்கள் [உயர்குடியாட்சி] உயர்குடியாட்சிக்காக உயர்குடியாட்சியால் ஆளப்படும் மக்களின் அரசாங்கத்தை நாடினார்கள்,” என்று கொலம்பியா பல்கலைக்கழக சரித்திர பேராசிரியர் ஹெர்மன் ஆசுபெல் விளக்குகிறார். இந்த மனநிலை 1789-ல் ஃபிரெஞ்சு புரட்சியை அவசரப்படுத்தியது.
ஃபிரான்சில் நடந்த இந்தச் சம்பவங்கள் அதின் எல்லைகளுக்கப்பாலும் உணரப்பட்ட பெரு விளைவுகளை உண்டாக்கவல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தன. உயர்குடியாட்சி அதன் விசேஷித்த சலுகைகளை இழந்தன, பண்ணை நிலயுரிமை முறை ஒழிக்கப்பட்டது, மனிதன் மற்றும் குடிமகனின் உரிமை விவர உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஓர் அரசமைப்பு சட்டமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலுமாக, மதகுருமாரின் அதிகாரங்கள் தீர்ப்பாணை ஒன்றினாலும் கட்டுப்படுத்தப்பட்டது.
ஒரு சிலரின் அரசாங்கம்—அந்த ஒரு சிலர் மிகச் சிறந்தவர்களாக கருதப்பட்டாலும்கூட—அநேகரால் தராசில் நிறுத்தப்பட்டு குறைவுபடுவதாய் காணப்பட்டிருக்கிறது.
கடைசியாக ‘மிகச் சிறந்ததைக்’ கண்டுபிடித்தல்
‘மிகச்சிறந்தோர்’ எப்போதும் அவர்களுடைய பெயருக்கு ஏற்ப வாழாதிருக்கும் தெளிவான உண்மை, ‘மிகச்சிறந்தோரால் ஆளப்படும் அரசாங்கத்தின்’ முக்கிய பலவீனங்களை, அதாவது, ‘மிகச்சிறந்தோர்’ உண்மையில் யார் என்பதை தீர்மானிப்பதிலிருக்கும் பிரச்னையை சுட்டிக்காண்பிக்கிறது. ஆட்சி செய்ய மிகச் சிறந்த தகுதியுள்ளவராயிருப்பதற்குரிய தேவைகளை நிறைவு செய்ய, வெறுமென செல்வந்தராக, உயர்குடி இரத்தமுள்ளவராக, அல்லது இராணுவ துணிவில் திறமையுள்ளவராக இருப்பதைக் காட்டிலும் அதிகம் அவசியமாயிருக்கிறது.
மிகச் சிறந்த மருத்துவர், சமையல்காரர் அல்லது செம்மான் யார் என்பதை உறுதியாய் அறிவது கடினம் அல்ல. நாம் வெறுமென அவர்களுடைய வேலையை அல்லது அவர்கள் பொருட்களை பார்வையிடுகிறோம். “ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரை நிலைமை அத்தனை எளிதாக இல்லை,” என்று பேராசிரியர் ஃபிரட்ரிக் குறிப்பிடுகிறார். ஓர் அரசாங்கம் என்னவாக இருக்கவேண்டும் மற்றும் அது என்ன செய்ய வேண்டும் என்பதன் சம்பந்தமாக மக்களின் கருத்துவேற்றுமை தானே பிரச்னையாக உள்ளது. மேலுமாக அரசாங்கத்தின் குறிக்கோள்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக ஃபிரட்ரிக் குறிப்பிடுவது போல: “உயர்ந்தோர் குழாம் யார் என்பது உண்மையில் சந்தேகமாகவே இருக்கிறது.”
‘மிகச் சிறந்தோரின் அரசாங்கம்’ உண்மையில் மிகச் சிறந்ததாக இருப்பதற்கு, உயர்ந்தோர் குழாம், மீமானிட அறிவையும் நியாயந்தீர்ப்பதில் தவறாதவராயுமுள்ள ஒருவரால் தெரிந்துகொள்ளப்பட வேண்டும். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் முறிக்க முடியாத ஒழுக்க உத்தமத்தையுடையவர்களும், தங்களுடைய அரசாங்கத்தின் மாற்ற முடியாத குறிக்கோள்களுக்கு முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுமான ஆட்களாக இருக்க வேண்டும். தங்களுடைய சொந்த நலத்துக்கு முன்பாக மற்றவர்களுடைய நலத்தை வைக்க அவர்கள் மனமுள்ளவர்களாய் இருத்தல் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாய் இருக்க வேண்டும்.
யெகோவா தேவன் இப்படிப்பட்ட ஒரு வகுப்பாரை—அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அவரை உண்மையுடன் பின்பற்றுகிற சிலரையும்—தெரிந்துகொண்டு பூமியின் மீது ஓராயிரம் ஆண்டுகளுக்கு ஆளுகைச் செய்ய அவர்களை நியமித்திருக்கிறார் என்று பைபிள் காண்பிக்கிறது. (லூக்கா 9:35; 2 தெசலோனிக்கேயர் 2:13, 14; வெளிப்படுத்துதல் 20:6) தவறு செய்கிற மனிதர்களைப் போலில்லாமல், தவறு செய்யாத சாவாமையுள்ள ஆவி சிருஷ்டிப்புகளாக கிறிஸ்துவும் அவருடைய உடன் அரசர்களும் நிலையான சமாதானம், பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியின் ஆசீர்வாதங்களை பூமியின் மேல் பொழிந்து, மனிதகுலத்தை பரிபூரணத்துக்குக் கொண்டுவருவார்கள். எந்த ஒரு மனித அரசாங்கமும்—‘மிகச் சிறந்தோரின் அரசாங்கமும்’கூட—இதைப் போன்ற ஒன்றை அளிக்கமுடியுமா? (g90 9/8)
உயர்குடியாட்சி: ஆட்சி செய்ய மிகச் சிறந்த தகுதிபெற்றவர்களாக கருதப்படும் உயர்குடி பிறப்பு மக்கள், சிறப்புரிமை பெற்ற சிறுபான்மையர் அல்லது உயர்ந்தோர் குழாமினால் ஆளப்படும் அரசாங்கம்; சிலவராட்சி: சில பேரால் ஆளப்படும் அரசாங்கம், அநேகமாக இழிவான மற்றும் சுயநல நோக்கங்களுக்காக ஆட்களாலோ அல்லது குடும்பங்களாலோ செய்யப்படும் ஆட்சி.
[பக்கம் 26-ன் பெட்டி]
நவீன-நாளைய சிலவராட்சி
“சிலவராட்சி மனச்சாய்வுகள் . . . எல்லா முற்போக்கு அரசியல் அமைப்புகளின் மிகப் பெரிய அதிகார அமைப்பு முறைகளிலும் கண்டுணரப்பட்டிருக்கின்றன. நவீன சமுதாயம் மற்றும் அதன் அரசாங்கத்தின் வளர்ந்துவரும் சிக்கலானத் தன்மை, அதிகமான அதிகாரங்களை நிர்வாகிகள் மற்றும் நிபுணர் குழுக்களின் கைகளில் திணிக்கிறது. அரசமைப்பு சட்ட ஆட்சி முறையிலும்கூட, இந்த அதிகார மனப்பான்மையுள்ள தீர்மானம் எடுப்பவர்கள் எவ்விதமாக பதில் சொல்லும் பொறுப்புடையவர்களாக ஆக்கப்படலாம் மற்றும் கொள்கை உருவாக்கத்தின் திறம்பாட்டையும் பகுத்தாய்வு செய்யும் பண்பையும் இடருக்குட்படுத்தாமல் அதே சமயத்தில் அவர்களுடைய அதிகாரங்களைத் திறம்பட்ட வகையில் கட்டுப்படுத்தலாம் என்ற கேள்விக்கு முழுமையாக திருப்திகரமான பதில் கண்டுபிடிக்கப்படவில்லை.”—தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா.
[பக்கம் 25-ன் படம்]
உயர்குடியாட்சியும் குடியரசும் சேர்ந்து மிகச் சிறந்த வகையான அரசாங்கத்தை உண்டுபண்ணும் என்று அரிஸ்டாட்டில் நம்பினார்