மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது
பகுதி 5 குறைவில்லாத அதிகாரம் ஆசீர்வாதமா அல்லது சாபமா?
அதிகம் கட்டுப்படுத்துவதும் தனிப்பட்டவரின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தக்கூடியதுமாகிய ஆட்சியாதிக்க அரசாங்கங்கள், “ஒடுக்குகிற,” “கொடுங்கோலான” மற்றும் “எதேச்சாதிகாரமுள்ள” போன்ற பெயருரிச்சொற்களை உடனே மனதிற்குக் கொண்டு வருகின்றன. அரசாங்கத்தின் ஒவ்வொரு கிளைகளையும் கட்டுப்படுத்தி அவர்களுடைய எல்லா பிரஜைகளின் மீதும் கடுமையான கவனம் செலுத்தி, மற்றும் தேச அக்கறைகளை முன்னேற்றுவிக்காத செய்கைகள் எவ்வளவு தீங்கற்றதாயிருந்தாலும், அவற்றை தடை செய்யும் இந்த ஆட்சிமுறைகள், மிகவும் தேசியப்பூர்வமானவைகள். கவலைக்கிடமாகவே, அறிக்கைச் செய்யப்படுவதற்கான ஆட்சியாதிக்க அரசாங்கங்கள் மனித வரலாற்றில் குறைவுபடுகிறதில்லை.
தரம் சம்பந்தப்பட்ட காரியம்
உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா கூறுகிறது: “ருஷிய அரசாங்கம் முற்கால ருஷிய ஆட்சியாளர்களின் கீழ் ஒரு முழுமையான ஏகாதிபத்தியமாவதற்கு அண்மையிலிருந்தது.” ஆனால் எல்லா ஆட்சியாதிக்க ஆட்சியும் முழுமையானதல்ல; இது பெரும்பாலும் ஒரு தரம் சம்பந்தப்பட்ட காரியமே. மற்றும் எல்லா ஆட்சியாதிக்க அரசாங்கங்களும் ஏகாதிபத்தியங்களல்ல, அதாவது, தனிப்பட்ட ஓர் ஆட்சியாளன், ஒரு சர்வாதிகாரி, அல்லது ஒரு முற்கால ருஷிய ஆட்சியாளன் போன்றவர்களால் தலைமை வகிக்கப்படும் அரசாங்கங்கள் அல்ல. சில அரசாங்கங்கள் ஒரு தொகுதியினர் மூலமாக, ஒருவேளை ஓர் இராணுவ செயலாட்சிக் குழுவின் மூலமோ, அல்லது சிலவராட்சி அல்லது செல்வராட்சி மூலமோ கட்டுப்படுத்தப்படலாம்.
குடியாட்சிகளும்கூட ஆட்சியாதிக்கங்களாக இருக்கலாம். இவைகள் அரசியல் கட்சிகளைக் கொண்டிருந்து, தேர்தல்களை நடத்தி, நீதிமன்றங்களை நிர்வகித்து, மற்றும் பாராளுமன்றம் அல்லது சட்டசபையைப் பற்றி பெருமைபாராட்டியிருக்கின்றன என்பது உண்மையே. எனினும் அரசாங்கம் எந்தளவிற்கு இந்த வெவ்வேறு ஸ்தாபனங்களைக் கட்டுப்படுத்தி, அதன் கட்டளைகளை செய்ய கட்டாயப்படுத்துகிறதோ, அந்தளவிற்கு, அதன் அமைப்பு என்னவாக இருந்தாலும், அது ஆட்சியாதிக்கமாகும். அது வேண்டுமென்றே தெரிந்து அவ்வாறு திட்டமைக்கப்பட்டது என்பதனாலல்ல. யுத்தகாலத்தின் போதா நாட்டில் இருந்த குழப்பமான காலங்களிலோ அரசாங்கத்திற்கு அவசரநிலை அதிகாரங்கள் அளிப்பதற்கு சூழ்நிலையானது வற்புறுத்தியிருக்கக்கூடும். ஒருவேளை அவசரநிலை அடங்கிவிட்டிருக்கக்கூடும்; இருப்பினும் அவசரநிலை அதிகாரங்கள் குறையவில்லை.
முடியாட்சிகள் வேறுபட்ட தரங்களின் ஆட்சியாதிக்கங்களாகும். ஆனால் முழுமையான முடியாட்சிகள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட முடியாட்சிகளால் மாற்றீடு செய்யப்பட்டன. சட்டமியற்றும் குழுக்களும் ஒருவேளை எழுதப்பட்ட சட்டத்திட்டங்களும் அப்படிப்பட்ட முடியாட்சிகள் பிரயோகிக்கக்கூடிய அதிகாரத்தை மட்டுப்படுத்தி இவைகளின் ஆட்சியாதிக்கத்திற்கான சாத்தியத்தைக் குறைக்கின்றன. இவ்வாறு, இன்றைய வரையறுக்கப்பட்ட முடியாட்சிகளில் அனுபவிக்கப்படும் தனிப்பட்டவரின் சுதந்திரம், முற்கால முழுமையான முடியாட்சிகளில் காணப்பட்டதைவிட அளவிற்கப்பாற்பட்ட நிலைகளை எட்டியிருக்கிறது.
முழுமையான முடியாட்சிகள் வழக்கத்திலிருந்த பொழுதும்கூட, அவர்களுடைய அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவேயிருந்தது. வரலாற்றுப் பேராசிரியராகிய ஓரெஸ்ட் ரேனம் விளக்குவது என்னவென்றால், “பெரும்பான்மையான அரசர்கள், ஒரு ஹிட்லர் அல்லது ஒரு முசோலினி அல்லது ஒரு ஸ்டாலின் இவர்களைப்போல அவர்களின் பிரஜைகளை முழுவதும் கீழ்ப்படுத்தி அதிகாரம் செலுத்தவும் அல்லது இனஞ்சார்ந்த மற்றும் கலாச்சாரஞ்சார்ந்த சிறுபான்மையான பிரிவுகளை முற்றிலும் இல்லாமல் செய்வதற்கான விவேகத்தையும் சரியான அதிகாரத்தையும் உடையவர்களாயில்லை.” தெளிவாகவே, ஓர் அரசனின் உயர்ந்த ஒழுக்கங்களும் நற்குணங்களும்—அல்லது இவையில்லாதிருத்தலும்—தீர்மானிக்கக்கூடியவைகளாயிருந்தன. எப்படியிருந்தாலும், ரேனம் சொல்லுகிறார்: “பண்பாட்டுத் தரத்திலும் பொருளாதாரத்தை மையப்படுத்தும் தரத்திலும் நவீன சர்வாதிபத்திய தேசம் செய்யும் அளவுக்கு எந்த முழுமையான முடியாட்சியாலும் செய்ய முடியவில்லை.”
முழு அதிகாரஞ்செலுத்த பிரயாசப்படுதல்
1920-களுக்கும் 1930-களுக்குமிடையில், இத்தாலியிலும் சோவியத் யூனியனிலும் ஜெர்மனியிலும் அதனை சரியாக விவரிப்பதற்கு ஒரு புதிய பதம் கண்டுபிடிப்பதை வற்புறுத்திய ஒரு புது வகை ஆட்சியாதிக்க அரசாங்கம் உலகக் காட்சியில் திடீரென தோன்றியது. இந்தத் தேசங்களில் தொடர்பு மூலங்கள் தேசக் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தன. காவல்துறையினர் ஜனங்களுக்கு சேவை செய்யும் ஆட்களாயிராமல் ஆளும் அரசியல் கட்சிக்கு அடிமைகளாகிவிட்டனர். பிரச்சாரங்கள், தணிக்கையிடுதல், இராணுவப்பிரிவுகள், காவல்துறையின் கடுமையான ரகசிய மேற்பார்வை, மற்றும் பலாத்காரமும்கூட எதிர்க்கட்சியை தாக்குவதற்கு உபயோகிக்கப்பட்டன. அரசாங்கத்தின் அதிகார அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்களை தங்களுடைய சொந்த கருத்துக்களாக ஏற்று பின்பற்றும்படி பிரஜைகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். மறுத்தவர்கள் ராஜதுரோகிகளைப்போல் கையாளப்பட்டனர். “சர்வாதிபத்திய ஆட்சிமுறை” என்ற பதம் பொருத்தமானதாகவே தோன்றிற்று—தன்னுடைய சொந்த குறிக்கோள்களை பின்தொடர்ந்து, அதனுடைய எல்லா பிரஜைகளையும் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த நாடாகும்.
அரசியல் கல்விக்கான செய்தி (Informationen zur politischen Bildung) என்ற ஜெர்மானியப் பத்திரிகை இப்படியாக விளக்கிச் சொல்கிறது: “ஆட்சியாதிக்கத்திற்கெதிரிடையாக, முழுக் கட்டுப்பாட்டிற்காக பிரயாசப்படும் தேசம், அதிகாரமுடைய ஆட்சிப் பதவிகளைக் கைப்பற்றிக் கொள்வதில் மாத்திரம் திருப்தியடைவதில்லை. அது பிரஜைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு சம்பந்தப்பட்ட சுதந்திரத்தை அனுமதிப்பதற்கு மனமில்லாமல் ராஜபக்தி மற்றும் கொள்கைகளுக்கான ஊக்கமான ஆதரவை அவர்களிடமிருந்து எப்போதும் வற்புறுத்துகிறது. இந்த வரையறையற்ற கோரிக்கைகள் ஒரு சர்வாதிபத்திய தேசத்தை, குடும்பம், மதம் மற்றும் ஓய்வுநேரம் போன்ற விஷயங்களில் சாதாரணமாக நாட்டுக் குறுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்ட காரியங்களில் செல்வாக்கு செலுத்தும்படி அவசியப்படுத்துகின்றன. இந்தக் கோரிக்கைகளை எதிர்ப்படுவதற்கு சர்வாதிபத்திய தேசம் ஒவ்வொரு தனிநபரையும் எல்லா நேரங்களிலும் மேற்பார்வைச் செய்யத் திறமையுள்ள ஓர் அமைப்பாகிய வலையை விரிக்க வேண்டும்.”
நாடு மற்றும் அதன் அக்கறைகளின் நோக்குநிலையிலிருந்து பார்க்கும்போது, சர்வாதிபத்திய அரசாங்கம் உண்மையிலேயே மிகவும் திறம்பட்டது. ஆனால் தொடர்ந்து செயலாற்ற முடியாது, என்று சொல்கிறார் பத்திரிகையாளர் சார்லஸ் கிராதம்மர். கட்டுப்படுத்துவதற்கே மிகவும் அதிகம் இருக்கிறது. “குறுகிய காலத்திற்காக நீங்கள் ஜனங்களை சிறைப்படுத்தி, சுட்டுத்தள்ளவும்கூட முடியும் ஆனால் சீக்கிரத்தில் வெடிகுண்டுகளும் சிறைச்சாலைகளும் சக்தியும் இல்லாமற்போகும், தண்டனைக்குப் பலியானவர்களுங்கூட இருக்கமாட்டார்கள். . . . நிரந்தர புரட்சி மாத்திரமே சர்வாதிபத்தியக் கொள்கைகளை எதிர்ப்பட முடியும், நிரந்தரப் புரட்சி சாத்தியமற்றது. கொடுங்கோன்மைக்கும்கூட அதன் ஓய்வு தேவைப்படுகிறது,” என்று அவர் சொல்கிறார்.
‘மாபெரும் சமுதாயம்’தான் காரணமா?
ஆட்சியாதிக்கம், குறிப்பாக சர்வாதிபத்தியம் என்ற அதனுடைய மிதமிஞ்சிய மற்றும் வெற்றியுடன்கூடிய வடிவத்தில் ஏன் இருபதாம் நூற்றாண்டை அந்தளவுக்கு ஊடுருவிப் பரவியிருக்கின்றது என்பதை விவரிக்க பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா கூறுகிற பிரகாரம், “1900-களின் முதல் மூன்றிலிரண்டு பாகங்கள் பெரிய மாற்றத்தின் ஒரு காலப்பகுதியாயிருந்தது—அநேகமாக வரலாற்றிலேயே மிக வேகமான மற்றும் பரவலான மாற்றமாகும்.” சந்தேகமின்றி இது ஆட்சியாதிக்கத்தின் போக்குமுறையின் சார்பாக செய்வதற்கு அதிகத்தைக் கொண்டிருந்திருக்கிறது.
ஜனத்தொகை வெடிப்பு, நகரமயமாக்குதல், மற்றும் தொழில்துறை முன்னேற்றங்கள் போன்றவை மாபெரும் சமுதாயம் என்றழைக்கப்படுவதை உருவாக்குவதற்கு உதவியிருக்கிற நவீன தனிச்சிறப்புக்குரியவைகளாகும். இந்தப் பதம், பெரிய, மையப்படுத்தப்பட்ட, அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்த, ஒருவரையும் சுட்டிக்குறிக்காத ஸ்தாபனங்களை விவரிக்கிற ஒரு தொழில்துறை சமுதாயத்தைக் குறித்துக் காட்டுகிறது. இந்தச் சமுதாயத்தில், மனித உறவுகள் ஆழமற்று, குறுகிய காலத்திற்கே நிலைத்திருக்கிறது. மக்கள் கூட்டத்தின் மத்தியில், தனித்த நபர்கள் தாங்கள் தொடர்ந்து நிலைத்திருக்கும் ஏதுக்களையும் மற்றும் சமூக உணர்வையும் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயமாகும்.
மாபெரும் சமுதாயம் எந்தளவுக்கு சர்வாதிபத்தியத்தின் வளர்ச்சியை ஆதரித்தது என்பது தர்க்கத்திற்குரியது. ஜெர்மனியைச் சேர்ந்த மறைந்துபோன அரசியல் விஞ்ஞானி ஹேனா ஏரண்ட் கூறுகிறபடி, அதனுடைய செல்வாக்கு மிக அதிகமாக இருந்தது. சர்வாதிபத்தியத்தின் தொடக்கங்கள் என்று அவர் எழுதிய புத்தகம், சர்வாதிபத்தியம் சிறு தொகுதிகளின் மேலல்ல, ஆனால் “தங்களுடைய வெறும் எண்ணிக்கைகள் அல்லது அலட்சியம் அல்லது இவை இரண்டும் கூடிய ஓர் இணைப்பின் காரணமாக பொது அக்கறையை ஆதாரமாகக்கொண்ட எந்த ஓர் அமைப்பும், அரசியல் கட்சிகள் அல்லது நகராட்சி அரசாங்கங்கள் அல்லது உத்தியோகஸ்தர்களின் அமைப்புகள் அல்லது தொழிலாளர் சங்கங்கள் போன்றவைகளாக ஒன்று கூட்டிச்சேர்க்கப்பட முடியாத” மாபெரும் மக்கள் கூட்டங்களின் மேல் கட்டப்பட்டது என்று குறிப்பிடுகிறது.
பேரரசாட்சிமுறை, யூதர்களுக்கெதிரான இயக்கம், மற்றும் ஒன்றிணைக்க முடியாத பாரம்பரிய தேச-நாட்டின் பிரிவினை போன்றவை சர்வாதிபத்தியத்தின் தோற்றத்திற்கு உதவிய வேறு காரணங்களாகும் என்று ஏரண்ட் குறிப்பிடுகிறார்.
பேரரசாட்சிமுறையா?
அந்த நூற்றாண்டு முடிவதற்கு சற்றுமுன் புதிய நாடுகளில் சென்று குடியேறுவது அதிகரித்தது. பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜான் அட்கின்ஸன் ஹாப்ஸன், 1884-லிருந்து 1914 வரையாக உள்ள காலப்பகுதியை புதிய பேரரசாட்சி என இன்றழைக்கப்படுகிற காலப்பகுதியாக சொல்கிறார். இது தங்களின் பேரரசை விஸ்தரிப்பதற்காக முடியாட்சி அல்லது குடியாட்சி அரசாங்கங்களால் ஆட்சியாதிக்க முறையில் அதிகாரம் உபயோகிப்பதே ஆகும். நேரடியாகக் கைப்பற்றுவதாலோ அல்லது அவர்களுடைய அரசியல், பொருளாதார விவகாரங்களின் மேல் மறைமுகமான ஆதிக்கம் செலுத்துவதாலோ மற்ற தேசங்களின் மீது ஆட்சியை அடையப் பெற்றது. பேரரசாட்சி முக்கியமாக ஒரு பொருளாதாரக் காரியமே என்பதாக ஹாப்ஸன் குறிப்பிடுகிறார். உண்மையிலேயே, இந்தப் புதிய வகை குடியேற்றக் கோட்பாடு எப்போதும் பொருளாதார விஸ்தரிப்பையும், ஒரு நாட்டினுடைய பொருட்களுக்கு புதிய வியாபாரத்தை ஏற்படுத்துவதையும்விட அரசியல் அதிகாரச் சார்பாகச் செய்வதற்கு மிகக்குறைவையே கொண்டிருந்தது.
ஆப்பிரிக்காவிற்கு இறாஞ்சுகை என்றறியப்பட்டதைவிட வேறெங்கும் இது மிக வெளிப்படையாக இல்லாதிருந்தது. ஏற்கெனவே 1880-களின் தொடக்கத்தில், பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் ஏராளமான ஆப்பிரிக்கக் குடியேற்றங்களைக் கொண்டிருந்தன. ஆனால் பெல்ஜியமும் ஜெர்மனியும் பொறமைக் கண்ணோட்டம் கொண்டபோது, வேகம் அதிகரித்தது. எத்தியோப்பியாவையும் லைபீரியாவையும் தவிர, ஆப்பிரிக்கா முழுவதும் விரைவில் ஐரோப்பிய ஆட்சியின் கீழ் வந்தது. குடியேறிவந்த வெள்ளைக் “கிறிஸ்தவர்” தேசத்தை தங்களுக்கு சொந்தமான தேசமாக ஆக்கியபோது கருப்பு ஆப்பிரிக்கர்கள் வெறுமென பார்த்துக் கொண்டிருக்கும்படியே கட்டாயப்படுத்தப்பட்டனர்.
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களும் ஒரு பேரரசாட்சியாயிற்று. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அது அலாஸ்கா, ஹவாய், பிலிப்பைன் தீவுகள், குவாம், மற்றும் சமோவா மேலும் வேறு பசிஃபிக் தீவுகளையும், பியூர்டோ ரிகோ மற்றும் வேறு கரீபிய தீவுகளையும் அது தன்னுடையதாக்கியது. “கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்கள், நவீன பேரரசாட்சியை உருவாக்குவதில் சர்வதேச சட்டவல்லுநர்களின் செயல்களைப்போலவே செல்வாக்குச் செலுத்தக்கூடியதாக இருந்தன,” என்று எழுதிய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியராகவுள்ள ஹென்றி F. கிராஃப் என்பவரால் கொடுக்கப்பட்ட குறிப்பு அதிக ஆர்வத்தை உண்டாக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இந்தக் கிறிஸ்தவமண்டலத்தின் மிஷனரிகள் உண்மையான கிறிஸ்தவர்களாயிருந்திருந்தால், “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கிணங்க, அவர்கள் ஆப்பிரிக்காவிற்கு இறாஞ்சுகையிலும் மற்றும் வேறு குடியேற்ற அரசுகளிலும் அரசியல் நடுநிலைமை வகித்திருக்கக்கூடும்.—யோவான் 17:16; யாக்கோபு 4:4.
பேரரசாட்சியின் சகாப்தம் 1914-ல் முடிவடைந்ததாக நம்பப்பட்டது. இருப்பினும் அதன் ஆட்சியாதிக்க ஆவியை பொருத்தளவில் இது உண்மையல்ல. 1890-களில், இன்று தென்னாப்பிரிக்காவின் பாகமாயிருப்பதன் பிரதம மந்திரியாயிருந்த செசில் ரோட்ஸ் இந்த ஆவியை தெளிவாகவே சுருக்கிக் கூறுபவராக, “விஸ்தரிப்புதான் எல்லாமே” என்றார். பிரிட்டிஷ் பேரரசை விஸ்தரிப்பதில் ஓர் அசைவிக்கும் சக்தியாயிருந்த அவர், “என்னால் முடியுமானால் கோள்களையும் கூட்டிச்சேர்த்துக் கொள்வேன்,” என்று ஒருமுறை பெருமைபாராட்டினார். இந்தச் சுயநல ஆவி மற்ற தேசங்களுடைய அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை முடிந்தளவு தங்களுடைய சொந்த நன்மைக்காக கட்டுப்படுத்தும்படி தேசங்களை இப்போதும் உந்துவிக்கிறது. உதாரணமாக படைபலத்தினால் உலகத்தை ஜெயிக்கத் தவறிய ஜப்பான், இப்போது பொருளாதாரத்தினால் அதை வெல்ல முயற்சி செய்வதாக சிலசமயங்களில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆட்சியாதிக்க அரசாங்கத்தைக் கவிழ்ப்பது தான் பரிகாரமா?
நியமங்களுக்குட்படாத, பேராசையுள்ள மனிதர்களால் செலுத்தப்படும் குறைவில்லாத அதிகாரம் ஆசீர்வாதமல்ல, சாபமே. பூர்வ ராஜாவாகிய சாலொமோனின் இந்த வார்த்தைகள் பொருத்தமானதாகவேயுள்ளன: “இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.”—பிரசங்கி 4:1.
ஆட்சியாதிக்கத்தின் கீழ் “ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீர்” உண்மையிலேயே அதிகமாயிருந்து வந்திருக்கிறது. இருப்பினும், 1987-ல் எழுதிய பெரிஸ்ட்ரோய்க்கா என்ற புத்தகத்தில் மிகைல் கார்பச்சேவ் எச்சரித்தார்: “ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரமே கீழ்ப்படுத்த, கட்டாயப்படுத்த, இலஞ்சம் வாங்க, உடைக்க அல்லது தகர்க்க முடியும்.” அதற்கிணங்க, அதிகாரம் “ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில்” இருந்தபோதிலும், ஆட்சியாதிக்க அரசாங்கத்தின் சங்கிலிகளைத் தூக்கியெறிய பிரஜைகள் அடிக்கடி எழுச்சியுற்றிருக்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் ருமேனியாவில் நடந்த நிகோலே சியசேஸ்கு மற்றும் அவருடைய பாதுகாப்புப் படைகளாகிய தி செக்யூரிடேட்-இன், இரத்தந்தோய்ந்த கவிழ்ப்பு, பொருத்தமான ஒரு சம்பவமாகும்.
ஆட்சியாதிக்கத்தைக் கவிழ்ப்பது உண்மையிலேயே விடுதலையைக் கொண்டுவரும். ஆனால் ஒரு பர்மிய பழமொழி சொல்வதுபோல, “புதிய ஆட்சியாளனாலேயே பழைய ஆட்சியாளனின் மதிப்பை உணர்ந்து கொள்வீர்கள்” என்பது உண்மையே. மோசமாயிருந்தது, முன்னிலும் மோசமானதால் மாற்றீடு செய்யப்படாது என்பதற்கு யார் உறுதியளிக்க முடியும்?
ஒரே ஓர் உதாரணத்தை எடுத்துக்கொண்டோமேயானால், 1970-களில் நிகாராகுவாவில் 43-வருட-நீண்ட இலத்தீன்-அமெரிக்க அரசபரம்பரையின் ஆட்சியாதிக்கம் கவிழ்க்கப்பட்டது. மக்கள், காரியங்கள் முன்னேறுமென்று முழு நம்பிக்கையுடனிருந்தனர், ஆனால் அப்படி ஆனதா? பத்தாண்டுகளுக்குப் பின் இருந்த நிலைமையைப் பற்றி, சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்த துன்பம் நிறைந்த வாழ்க்கை, “ஏதாவது வளர்ந்திருக்கிறதென்றால், முன்னிலும் மோசமானதாக,” வளர்ந்திருக்கிறது என்பதாக ஒரு செய்திப் பத்திரிகைக் கூறியது. மிகவும் உயர்ந்துகொண்டேயிருக்கும் பணவீக்கத்தைப் பற்றி பேசும்போது, அப்பத்திரிகை தேசிய நாணயத்தை “உண்மையிலேயே பிரயோஜனமற்றது” என்பதாக அழைத்தது; “பொதுமக்களின் போக்குவரத்து அபூர்வமாய் இருக்கிறது,” என்று கூறியது; தேசத்தில் “கெட்டபெயர் உண்டாக்குமளவுக்கு உடல்நிலை ஆரோக்கியக் கவனப்பற்றாக்குறை,” உள்ளது என்று புலம்பினது; “ஊட்டக்குறைவு வளர்ந்துவரும் ஒரு கொலயாளி,” என்றும் குறிப்பிட்டது. பின்பு தேர்தல்கள் அனுமதிக்கப்பட்டபோது, ஆளும் அதிகாரங்கள் அதிகாரத்திலிருந்து தள்ளப்பட்டனர்.
மனித ஆட்சி அதனுடைய எல்லா முறையிலும் தகுதியற்றதாக காணப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக இல்லையா? இருப்பினும் மக்கள் ஒரு சிறந்த அரசாங்கத்திற்காக தொடர்ந்து தேடுகின்றனர். இது அனைத்து தேசங்களையும் “தேற்றுவாரின்றி” நம்பிக்கையில்லா ஆழங்களில் அமிழ்த்தி, வழிநடத்திச் செல்லக்கூடிய ஏமாற்றத்தின் முதன்மையான இரண்டு பெரிய உதாரணங்கள் அடுத்த வெளியீட்டில் கலந்தாலோசிக்கப்படும். (g90 10/8)
[பக்கம் 14-ன் படம்]
ஏகாதிபத்தியம்: ஓர் ஆள் குறைவில்லாத அதிகாரத்தை செலுத்தும் அரசாங்கம்; ஆட்சியாதிக்கம்: ஆளப்படுகிறவர்களின் சம்மதமின்றி ஆளும் அதிகாரத்தை உபயோகப்படுத்துவது, சர்வாதிபத்தியத்தைக் காட்டிலும் கடுமையில் சற்று குறைவானது; சர்வாதிகாரம்: சட்டத்தினால் மட்டுப்படுத்தப்படாத அல்லது எந்த அதிகாரக் குழுவினாலும் தடைசெய்யப்படாத முழு அதிகாரத்தையுமுடைய ஆட்சியாளனைக் கொண்டுள்ள அரசாங்கம்; சர்வாதிபத்தியம்: பிரஜைகளை பெருமளவு முழுமையாக தேச அதிகாரத்திற்குக் கீழ்ப்படுத்தி வைத்திருக்கும், ஓர் ஏகாதிபத்தியக் குழுவிலான மையக் கட்டுப்பாடு.
ஓரளவு ஒரு முழுமையான ஏகாதிபத்தியத்திற்கு ஓர் உதாரணம் முற்கால ருஷிய ஆட்சியாளர்களின் கீழிருந்த ருஷியா ஆகும்