உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 11/8 பக். 18-22
  • பகுதி 10 கடைசியில் பூரண அரசாங்கம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பகுதி 10 கடைசியில் பூரண அரசாங்கம்!
  • விழித்தெழு!—1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நல்ல அரசாங்கத்தைத் தேடுவது
  • எப்பேர்ப்பட்ட தேவாட்சி?
  • போலியான தேவாட்சிகள்
  • பரிபூரண அரசாங்கம் சமீபித்திருக்கிறது
  • தேவாட்சியோடு நெருங்கியிருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • யெகோவா ஆளுகிறார்—தேவாட்சியின் மூலமாக
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • ஒரு தேவாட்சியில் மேய்ப்பர்களும் செம்மறியாடுகளும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • கடவுளுடைய அரசாங்கம் அதன் ஆட்சியைத் தொடங்குகிறது
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 11/8 பக். 18-22

மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது

பகுதி 10 கடைசியில் பூரண அரசாங்கம்!

தேவாட்சி: கிரேக்க வார்த்தைகளாகிய “தியாஸ்” (கடவுள்) மற்றும் கிரேடாஸ் (ஓர் ஆட்சி) என்பவற்றிலிருந்து வந்தது; ஆகவே, கடவுளுடைய வழிநடத்துதலையோ அவருடைய நிர்வாகத்தையோ சிலசமயங்களில் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளையோ கொண்டு ஆளப்படும் ஓர் அரசாங்கம்.

நீங்கள் அசல் முத்து மாலையையோ வைர மோதிரத்தையோ வாங்கும் நிலையில் இருப்பீர்களென்றால் அசல் பொருளைப் போன்று காணப்படும் போலிப் பொருளை வாங்க முடிவுசெய்வீர்களா? நீங்கள் வாங்கியதே கிடைப்பதில் சிறந்தது என்று நம்பும்படி வஞ்சிக்கப்பட்டாலொழிய அப்படிச் செய்யமாட்டீர்கள்.

அரசாங்கத்தைப் பொருத்தமட்டில், கோடிக்கணக்கான மக்கள் தாங்கள் சிறந்ததையே அனுபவிக்கிறார்கள் என்று நம்பும்படி ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். உண்மையில் பார்த்தால், அவர்கள் மிகவும் போலியானவைகளையே அனுபவிக்கின்றனர். அவர்கள் ஏமாற்றமடைந்தவர்களாயும் மனநிறைவற்றவர்களாயும் மனமுறிவுற்றவர்களாயும் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.

நல்ல அரசாங்கத்தைத் தேடுவது

லண்டனிலுள்ள புனித பவுலின் தலைமை கிறிஸ்தவக் கோவிலில், ஒருகாலத்தில் ஆங்கில சர்ச் குருவாயிருந்த வில்லியம் ரால்ஃப் இன்கே, 1922-ல் இப்படி எழுதினார்: “மனிதனுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களிலேயே மிகப் பெரிய ஆசீர்வாதம் நல்ல அரசாங்கமாகும். இதை எந்த ஒரு தேசமும் ஒருக்காலும் அனுபவித்தது கிடையாது.” ஏன்?

ஜான் F. கென்னடி, ஐக்கிய மாகாணங்களின் 35-வது ஜனாதிபதியினுடைய வார்த்தைகளில் பகுதியான விளக்கம் காணப்படுகிறது. “எந்த அரசாங்கமும் அதில் அடங்கிய மனுஷரைவிட சிறந்ததில்லை,” என்று அவர் சொன்னார். அதிக வரம்பெற்ற அரசியல்வாதியும் அபூரணராயிருப்பதால், மனிதர்கள் ஸ்தாபிக்கும் ஒவ்வொரு அரசாங்கமும் தோல்வியையே அடையும்.

பதினேழாவது நூற்றாண்டின் ஆங்கில நாடகாசிரியர் ஃபிலிப் மேஸ்ஸிஞ்சர் சரியாகவே இப்படி எழுதினார்: “மற்றவர்களை ஆளும் ஒருவர், முதலில் தனக்கே அதிகாரியாக இருக்கவேண்டும்.” ஆனால் எந்த அபூரண மனிதன் தனக்கே அதிகாரியாக இருக்கிறான்? எந்த ஓர் அரசியல்வாதியும் நடக்கிற சம்பவங்களையும் இருக்கிற சூழ்நிலைமைகளையும் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய தேவையான அறிவையும் ஞானத்தையும் உடையவனாய் தன்னுடைய சொந்த சந்தோஷத்தையும் நலனையும் நிச்சயித்துக்கொள்ளாதிருக்கும்போது, லட்சக்கணக்கான சக மனிதர்களுடைய சந்தோஷத்தையும் நலனையும் நிச்சயிப்பது கூடாத காரியம். மேலும் எப்போதும் சரியான தீர்மானங்களை அவனால் செய்யமுடிந்தாலுங்கூட அவற்றை நிறைவேற்றுவதற்கு அவனிடத்தில் சக்தி இருக்காது.

அமெரிக்கக் கட்டுரையாசிரியர், புரூக்ஸ் அட்கின்ஸன், 1951-ல் இந்தப் பிரச்னையை அறிந்து இப்படி முடிவுசெய்தார்: “நம்மை ஆள மனிதரிலும் மேம்பட்ட சக்தி படைத்தவர்கள் தேவை—இந்த வேலை மிகப் பெரியது, ஞானமான தீர்ப்பு செய்வதன் தேவையும் மிக அவசரமாயிருக்கிறது. ஆனால், பரிதாபமான காரியம் என்னவென்றால்,” அவர் சொன்னார், “மனிதரிலும் மேம்பட்ட சக்தி படைத்த மனிதர் ஒருவருமில்லை.” இன்று, நான்கு பத்தாண்டுகள் கடந்தும் யாருமேயில்லை.

உண்மையில், மனிதர் தங்களையே ஆண்டுகொள்ள வேண்டும் என்று ஒருக்காலும் கடவுள் எண்ணவில்லை. பரிபூரணமான அரசாங்கத்தை அனுபவிக்க, வெறும் மனிதரிலும் மிஞ்சிய சக்தி படைத்தவர்களின் அரசாங்கத்தைவிட மனிதருக்கு அதிகம் தேவைப்படுகிறது. அவர்களுக்குத் தேவை தேவாட்சி, கடவுளுடைய அரசாங்கம்.

எப்பேர்ப்பட்ட தேவாட்சி?

தேவாட்சி என்பது கடவுள் முதல் மனித தம்பதியினரை ஏதேனில் வைத்தபோது இருந்த ஒருவகையான அரசாங்கமாகும். கடவுள் உரிமையுள்ள பேரரசராக, ஆரம்பத்திலிருந்து காரியங்களை அவர் நிர்வகித்து, ஆட்சிசெலுத்தி வந்தார்.

யூத சரித்திராசிரியன், ஃப்ளேவியஸ் ஜொசிஃபஸ் சுமார் 19 நூற்றாண்டுகளுக்கு முன்பாக “தேவாட்சி” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அந்தக் கிரேக்க வார்த்தையை முதலில் பயன்படுத்தியபோது, பூர்வ இஸ்ரவேல் தேசத்தைக் குறிப்பிட பயன்படுத்தினான். இது சரியாக அடையாளப்படுத்தியதாயிருந்தது. ஏனெனில், அந்தக் காலத்தில் இஸ்ரவேல் கடவுளுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசமாக இருந்தது. பூமிக்குரிய பிரதிநிதிகளின் மூலம் அவர் ஆட்சிசெய்து வந்தபோதிலுங்கூட அதை அவரே உண்மையில் ஆண்டுவந்தார்.—உபாகமம் 7:6; 1 நாளாகமம் 29:23.

“தேவாட்சி” என்ற இந்தப் பதம் மற்ற மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது முதலில் ஜொசிஃபஸ் உத்தேசித்திருந்த பொருளோடு பெரும்பாலும் மட்டுப்பட்டிருந்தது. ஆனால் பிறகு அது கூடுதலான கருத்துக்களை ஏற்றது. மதத்தின் என்ஸைக்ளோபீடியா பிரகாரம், அது “பார்வோனிய எகிப்து, பூர்வ இஸ்ரவேல், மத்திப கிறிஸ்தவமண்டலம், கால்வினின் இறைமையியல் கொள்கை, இஸ்லாமியம் மற்றும் திபெத்துவின் புத்தமதம் போன்ற பலவற்றோடு இணைத்துப் பேசப்பட்டு,” வருகிறது.

சரித்திராசிரியன், W. L. வாரன் சொல்வது என்னவெனில், “ஆங்கிலேயருடைய முடியாட்சியில் ஒரு தேவாட்சி ராஜரீகக் கூறு அமைந்திருந்தது—தெய்வீக திட்டத்தில் அரசரே தலையாய கருவியாகவும், அரசரே கடவுளுடைய பிரதிநிதியாகவும் தீர்ப்பு வழங்குபவராகவும்” இருந்தார். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலுள்ள டியூவே வாலஸ், ஜூனியர், என்பவர் நவீன காலங்களில் அந்த வார்த்தை “‘குருமார் ஆதிக்கம்கொண்ட’ சமுதாயங்களிடம் ‘ஒளியூட்டப்பெற்ற’ இகழ்ச்சிச்” கூற்றாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று விளக்குகிறார்.

இப்போது இந்த வார்த்தையில் உட்பட்டிருக்கும் விரிவான பொருள் அநேக வகையான தேவாட்சிகள் இருப்பதை அனுமதிக்கிறது. நமக்கு எந்த வகை தேவை?

போலியான தேவாட்சிகள்

பதிவாகியுள்ள சரித்திரத்தில் இருந்த முதல் மனித அரசாங்கம் நிம்ரோதினால் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பாக கண்டுபிடிக்கப்பட்டது. நோவாவின் கொள்ளுப்பேரன் தன்னைத்தானே ஓர் அரசனாக ஆக்கிக்கொண்டு பைபிளில் விவரிக்கப்பட்டிருப்பதுபோல, “கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்கார”னானான். (ஆதியாகமம் 10:8, 9) யெகோவாவுக்கு விரோதமாக தன்னை ஓர் ஆட்சியாளனாக செய்துகொள்வதன்மூலம் நிம்ரோது ஓர் அரசியல் தெய்வமாக தன்னை ஆக்கிக்கொண்டான். இப்படிச் செய்வதற்கு, கடவுளுடைய பிரதான எதிரியும் பொய்க் கடவுளுமான பிசாசாகிய சாத்தானுடைய ஆதரவு அவனுக்கு இருந்தது. (2 கொரிந்தியர் 4:4) ஆகவே நிம்ரோதின் ஆட்சி மெய்யான தேவாட்சிக்கு ஒரு போலி ஆட்சியாக இருந்தது.

நிம்ரோதுடைய பேரரசில் இருந்த குடிமக்கள் பூமி முழுவதும் சிதறிய பிறகு தங்கள் ஆட்சிகள் தேவாட்சியாக இருப்பதாக, அதாவது, ஆட்சியதிகாரத்தைத் தாங்கள் வணங்கும் தெய்வத்தினிடமிருந்தோ தெய்வங்களிடமிருந்தோ பெறுவதாக மக்கள் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருந்தனர். (ஆதியாகமம் 11:1-9) இப்படியாக “தேவாட்சி” என்பது “மதத்துக்கும் அரசுக்கும் இடையே எந்த வித்தியாசமுமில்லாத பூர்வ கிழக்கத்திய நாகரிகத்தின் முந்தைய நிலையை விவரிப்பதற்குப்” பயன்படுத்தப்பட்டது என்று மதத்தின் என்ஸைக்ளோபீடியா சொல்லுகிறது.

பார்வோன்களுக்கு கீழிருந்த எகிப்து போன்ற சில நாகரிகங்களில் அரசர் மகா தேவதையின் வாழ்க்கைத்துணையாகவோ ஒரு தெய்வத்தின் புத்திரனாகவோ இருப்பதாக நம்பப்பட்டார். மற்ற நாகரிகங்கள், அரசர் கொண்டிருப்பதாக ஊகிக்கும் தெய்வீக குணங்களை அல்லது வம்சாவழியைக் குறித்தோ எதையும் சொல்லாமல், அதற்கு மாறாக அவர் தெய்வீக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற கருத்தை அழுத்திக் கூறியது. அலெக்ஸாந்தர் காலத்திலும் அதற்கு பிற்பாடும் கிரீஸில் அரசர் தெய்வமாக கருதப்பட்டார், “ஏனென்றால், கடவுள் உலகில் ஒற்றுமையை கொண்டுவருவதுபோல அவர் தன்னுடைய ராஜ்யத்தில் ஒற்றுமையை கொண்டுவந்தார்” என்று அரசியல் கொள்கையின் சரித்திரம் என்ற புத்தகம் விளக்கிக் காட்டுகிறது. இந்தச் சரித்திரப் புத்தகம் தொடர்ந்து சொல்லுகிறது: “அவர் சாதாரண ஆளுக்குப் பங்கில்லாத ஒரு தெய்வீகத்தைப் பெற்றிருந்தார், இது பரம அருள் இல்லாமல் உயர் பதவியைப் பலவந்தமாய் பற்றிய அவரை அழிவுக்குக் கொண்டு வந்தது.”

அரசரே தெய்வம் என்ற இந்தக் கொள்கை கிறிஸ்தவ சகாப்தம் என்றழைக்கப்பட்ட சகாப்தத்திற்குள் கடத்தப்பட்டது. டியூட்டானிக் இனத்தவர் கத்தோலிக்க மதத்துக்கு மாறிய பிறகு அரசரின் கெளரவம் அதிகரித்தது. சர்ச் முடிசூட்டுவது, கடவுளே ஆளுவதற்கு அரசரை தேர்ந்தெடுத்தார் என்று பொருள்படுத்தியது. இந்தப் பின்னணியிலிருந்துதான், அரசரின் தெய்வீக உரிமை என்றறியப்பட்ட கொள்கை மெதுமெதுவாக உருவெடுத்தது.

“கிறிஸ்தவ” சகாப்தத்துக்கு முன்பாகவுங்கூட, ரோமாபுரியின் இராயர்கள் தேவத்துவத்தை உரிமைபாராட்டுவதன்மூலம் தங்கள் அரசாங்கத்திற்கு ஒரு தேவாட்சித் திருப்பத்தைக் கொடுத்தார்கள். ரோமரின் பார்வையில், மனித ஆட்சி தேவாட்சிக்குச் சமமாக இருந்தது, நிம்ரோதின் பாணியைப் பின்பற்றிய அவர்களுடைய அரசாங்கத்தை ஒரு போலியான தேவாட்சியாக மாற்றியது. ஆகவே பொ.ச. முதல் நூற்றாண்டில் இருந்த யூத மதகுருமார், “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை,” என்று சொல்லி இயேசுவை எதிர்கால அரசராக இருப்பதற்கு மறுத்தபோது அவர்கள் இயேசு பிரசங்கித்த அந்த மெய்யான ஆட்சிக்குப் பதிலாக போலி தேவாட்சிக்கான விருப்பத்தை எடுத்துக்கூறினார்கள்.—யோவான் 19:15.

வியப்புக்குரியதாயிராமல், மற்ற எல்லா வகையான ஆட்சியையும்விட யெகோவாவால் ஆளப்படும் தேவராஜ்ய ஆட்சி மிகவும் மேம்பட்டு இருப்பதன் காரணமாக, சாத்தான், மனிதனால் உண்டுபண்ணப்பட்ட போலியான ஆட்சிகளில், அதன் அம்சங்கள் சிலவற்றைப் புகுத்த முயற்சி செய்திருக்கிறான்—ஆனால் தோல்வியையே அடைந்திருக்கிறான். இந்தச் சுய-பாணி தேவாட்சிகளெல்லாமே அதன் குறிக்கோள்களிலிருந்து மிகவும் குறைவுபட்டிருக்கின்றன. உண்மையில், அவற்றில் எதுவுமே கடவுளுடைய ஆட்சியாகவோ, அவருடைய பிரதிநிதிகளின் ஆட்சியாகவோ இருந்ததில்லை. அவை மெய்ம்மையின் போலியாகவே இருந்திருக்கின்றன. ஒரு போலி கடவுளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அபூரண மனித அரசாட்சியின் வெளிக்காட்டுகளாகவே இருந்திருக்கின்றன.

பொருத்தமாக, இந்தக் கடவுளை “உலகத்தின் அதிபதி” என்றும் “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்றும் பைபிள் அழைக்கிறது. (யோவான் 12:31; 14:30; 2 கொரிந்தியர் 4:4) எனவேதான் அவனால் “உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்” இயேசுவுக்கு அளிக்க முடிந்தது. இது இயேசு வேண்டாமென்று உறுதியோடு முற்றிலுமாக மறுத்த ஒரு சோதனையாகும். (மத்தேயு 4:8-10) ஒரே மெய்யான கடவுளாகிய யெகோவாவின் ஆட்சியே உண்மையான தேவாட்சி என்பதை அறிந்தவராய், இயேசு, மெய்யான ஆட்சியில் காணப்படுகிற தெய்வீக குணங்களைச் சரிசமநிலையான வகையில் வெளிக்காட்ட, இயலாதிருக்கும் மனிதனால் உண்டுபண்ணப்பட்ட பதில்-ஆட்சிகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர் வஞ்சிக்கப்படவில்லை.

பரிபூரண அரசாங்கம் சமீபித்திருக்கிறது

சில வருடங்களுக்கு முன்பு, எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹயூக் புரோகன் என்பவர் இவ்வாறு முடிவுசெய்தார்: “அரசியல் விலங்காகிய மனிதன் தன்னையும் தன் நாகரிகங்களையும் காப்பாற்றிக்கொள்வதாயிருந்தால், தன் காலத்தோடுவரும் எப்பொழுதும்-புதிய தேவைகளை பூர்த்திசெய்ய புதிய வகையான அரசாங்கங்களை தேடாமலிருப்பதிலிருந்து இனிமேலும் அவனால் ஓய்ந்திருக்க முடியாது.” நிம்ரோது காலம் முதற்கொண்டு காலத்தின் தேவைகளை பூர்த்திசெய்ய மனிதர் அடிக்கடி புதிய வகையான ஆட்சிகளை உருவாக்கி வருகிறார்கள். ஆனால், மனித அரசாங்கம் பிரயோஜனப்படாது என்பதை நிரூபிக்க எவ்வளவு காலம்தான் தேவைப்படும்?

சந்தோஷகரமாக, 1914-ல் யெகோவாவுடைய மேசியானிய ராஜ்யத்தைப் பரலோகத்தில் ஸ்தாபிப்பதோடு மனித அரசாட்சியைச் சவால்விடுவதற்கு மடமையான சோதனைக்கான காலம் வந்தது!a 1914 முதற்கொண்டு, மனித அரசாங்கங்கள் இன்னும் ஜீவனைப் பற்றியிருந்தாலுங்கூட தங்களுக்குரியதல்லாத காலத்தில் வாழ்ந்துவருகின்றனர். (தானியேல் 7:12) “கடைசிநாட்கள்” என்று பைபிள் அடையாளப்படுத்தும் காலப்பகுதியில் நாம் வாழ்ந்துவருகிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) மனித அரசாட்சிக்கு உடனடியான அழிவை முன்னறிவிக்கும் சுவரிலுள்ள கையெழுத்து அவ்வளவு தெளிவாக இருப்பதால் எவரும் அதை உண்மையில் காணாமலிருக்க முடியாது. அதைக் கவனியாமல் இருக்கலாம், ஆனால் துடைத்தெடுக்க முடியாது.

யெகோவாவின் மேசியானிய ராஜ்யத்தின் மூலமாக வரும் தேவாட்சி தானியேல் 2-ம் அதிகாரத்தில், “[மனித அரசாட்சியை அடையாளப்படுத்திய] அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்ட,” “கைகளால் பெயர்க்கப்படாத,” “பெயர்ந்து உருண்டுவந்த” ஒரு கல்லினால் குறித்துக்காட்டப்படுகிறது. ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யம் விரைவில் கெட்ட மனித அரசாட்சியை அதன் எல்லா அமைப்புகளோடுங்கூட அழித்து நொறுக்கிப்போடும் என்பதை இது பொருட்படுத்துகிறது. எவ்வளவு முழுமையாக? பைபிள் பதிலளிக்கிறது: “அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று.”—தானியேல் 2:34, 35.

பொல்லாத மனித அரசாட்சிகள் இனி ஒருபோதும் தடம் இல்லாதபடி அடித்துக்கொண்டுபோகப்படுமென்றால், மனித அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் கடினமான காலங்களில் இருக்கின்றனர் என்பது தெளிவாயிருக்கிறது. இந்த உண்மையை அறிந்தவர்களாய், லட்சக்கணக்கான ஆட்கள், கறைப்படுத்தப்பட்ட மனித அரசாங்கத்தின்மீது வைத்திருக்கிற தங்கள் நம்பிக்கையை, சிறந்த ஏதோவொன்றின்மீது வைப்பதை ஞானமானதாக காண்கிறார்கள். ஆயிரக்கணக்கான வருடங்களாக, மனிதனுடைய மோசமான ஆட்சியாலும் தவறான வழிநடத்துதலாலும் ஏற்பட்ட பிரச்னைகளை சர்வலோகத்தின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனுடைய ஆட்சியே தீர்க்க முடியும். நம் காலத்தின் தேவைகளை மெய்யான தேவாட்சியே பூர்த்திசெய்ய முடியும்.

விழித்தெழு!, “மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டுள்ளது” என்ற பத்து-பாக தொடர் கட்டுரைகள், அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தனிப்பட்ட தீர்மானம் செய்வதன் முக்கியத்துவத்தை உங்கள் மனதில் பதியவைத்திருக்கும் என்று நம்புகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ஞானமான தீர்மானத்தை எடுக்க உங்களுக்கு அது உதவியாயிருக்கும் என்று நம்புகிறது. மனித அரசாட்சி தராசுகளில் நிறுக்கப்பட்டு குறைவுபட்டதாக காணப்பட்டிருக்கிறது. நீங்கள் எதை தெரிந்துகொள்வீர்கள்? ஓர் இழிவான போலியான ஆட்சியையா உண்மையான ஆட்சியையா? அது மனித அரசாட்சியாக இருக்குமா மெய்க் கடவுளாகிய யெகோவாவுடைய அரசாட்சியாக இருக்குமா?—தானியேல் 2:44; மத்தேயு 6:10. (g90 12⁄22)

[அடிக்குறிப்புகள்]

a கடவுளுடைய ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டது, அது முதற்கொண்டு இந்த உலகம் அதன் கடைசி நாட்களிலிருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு உவாட்ச் டவர் சங்கம் 1982-ல் பிரசுரித்த நீங்கள் பூமியில் என்றும் பரதீஸில் வாழலாம் என்ற புத்தகத்தில் அதிகாரங்கள் 16-ஐயும் 18-ஐயும் பாருங்கள்.

[பக்கம் 20-ன் பெட்டி]

யெகோவாவுடைய தேவாட்சி என்ன செய்யும்

◆ பலம்குன்றிய வயதான ஆட்களை இளமையின் பலத்துக்குக் கொண்டுவரும்.—யோபு 33:25.

◆ யுத்தங்களைக் கடந்தகால காரியமாக்கிடும்.—சங்கீதம் 46:9; ஏசாயா 9:7.

◆ ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகச்சிறந்த வீட்டுவசதியை அளிக்கும்.—ஏசாயா 65:21.

◆ நோயுற்றவரையும் முடமானவரையும் குணப்படுத்தும்.—ஏசாயா 33:24; 35:5, 6.

◆ மரித்தோரை உயிர்த்தெழுப்பும்.—ஏசாயா 25:8; அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 20:13.

◆ ஊழல், ஒழுக்கக்கேடு, குற்றச்செயல் ஆகியவற்றை பூமியிலிருந்து நீக்கிப்போடும்.—நீதிமொழிகள் 2:21, 22.

◆ எல்லாருக்கும் ஏராளமான உணவை அளிக்கும்.—சங்கீதம் 72:16; ஏசாயா 25:6.

◆ மனிதருக்கும் மிருகங்களுக்கும் இடையே சமாதான உறவை திரும்ப நிலைநாட்டும்.—ஏசாயா 11:6-9; எசேக்கியேல் 34:25.

◆ அர்த்தமுள்ள, பலன்தரும் வேலையை எல்லாருக்கும் கொடுக்கும்.—ஏசாயா 65:22, 23.

◆ பூமியை பூகோள பரதீஸாக மாற்றும்.—ஏசாயா 35:1, 6, 7; லூக்கா 23:43.

இவை மனிதர் அளிக்கிற வெறுமையான அரசியல் வாக்குகள் அல்ல; இவை கடவுள் கொடுத்த வாக்குகள்.

[பக்கம் 21-ன் படம்]

அவர் “எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன்.”—எபிரெயர் 6:18.

பரிபூரண அரசாங்கத்தின் நித்திய ஆசீர்வாதங்கள் உங்களுடையதாயிருக்கும்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்