பைபிள் இலக்கியங்களை அளிக்க விழிப்புணர்வோடிருங்கள்
1 யெகோவா தமது அமைப்பின் மூலமாக ஒழுங்காக கொடுத்துவரும் பைபிள் இலக்கியங்களுக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும்! இந்த ஆவிக்குரிய உணவை நாம் மிக உயர்வாக மதிக்கிறோம். ஒரு புதிய பிரசுரத்தைப் பெறும்போது ஆவலுடன் அதன் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கிறோம். பின்பு, அதைக் கவனமாக வாசிக்கையில் நாம் புரிந்துகொள்ளுதலை அடைகிறோம். யெகோவாவுக்கும் அவருடைய நோக்கத்துக்குமான நம்முடைய போற்றுதல் வளருகிறது.
2 நாம் பெறக்கூடிய தனிப்பட்ட நன்மைகள் நாம் கற்றுக்கொண்ட நல்ல காரியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நம்மைத் தூண்டுகிறது. (மத். 24:14) கூடுமானவரை அநேக ஆட்களிடம் சங்கத்தின் பிரசுரங்களை அளிக்க நாம் ஆர்வமுள்ளவர்களாயிருக்கிறோம். போதனைகள் நிரம்பிய இந்தப் பைபிள் பிரசுரங்களில் அடங்கியிருக்கும் சத்தியங்களை அவர்களும்கூட கற்றுக்கொள்வதற்கு இது உதவி செய்கிறது. இந்த மாத பிரசுர அளிப்பை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவதற்கு நாம் நன்கு தயாரித்தவர்களாகவும் முதற்படி எடுக்க விழிப்புணர்வுள்ளவர்களாகவும் இருப்போமானால் மற்ற உண்மை மனமுள்ள ஆட்கள் யெகோவாவிடம் திரும்புவதற்கும் அவருடைய சேவையில் நம்முடன் சேர்ந்துகொள்வதற்கும் நாம் ஒருவேளை உதவக்கூடும்.
வீட்டுக்கு வீடு
3 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தின்போது நாம் பலதரப்பட்ட 192 பக்க இரண்டு ஆங்கில புத்தகங்களை ரூ10 என்ற நன்கொடைக்கு அளிப்போம். மேலும் இந்திய மொழிகளில் ஒரு புத்தகத்தை ரூ5-க்கு அளிப்போம். பல்வேறு மொழிகளில் அளிக்கப்படக்கூடிய இந்தப் புத்தகங்களின் பட்டியல் பிப்ரவரி 1988 நம் ராஜ்ய ஊழியம் “அறிவிப்புகள்” பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
4 நாம் ஜனங்களை சந்திக்கையில் அவர்கள் சில சமயங்களில் உண்மையிலேயே வேலையாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளின்போது நியாயங்கள் புத்தகம் பக்கம் 20-ல் இரண்டாவது உதாரணத்தில் சிபாரிசு செய்யப்பட்டிருப்பதற்கேற்ப நாம் இந்தப் புத்தகத்தை அளிக்க விரும்பக்கூடும். அல்லது அந்தப் பக்கத்தில் மூன்றாவது உதாரணத்தில் காணப்படுபவற்றை நம்முடைய சொந்த வார்த்தைகளில் சொல்லலாம். வீட்டுக்காரருடைய சூழ்நிலையை மதித்துணர்ந்தவர்களாய் அவர்களைத் தூண்டக்கூடிய முறையில் பின்வருமாறு சொல்லாம்: “ஆனால் பேசுவதற்கு இப்பொழுது உங்களுக்கு நேரமில்லாததால் இந்த இரண்டு பத்திரிகைகளையும் ரூ4-க்கு நீங்கள் பெற்றுக்கொண்டு அதிக வசதியான சமயத்தில் இதை வாசிக்கும்படியாக நாங்கள் சிபாரிசு செய்கிறோம். கடவுள் வாக்களித்திருக்கும் ஒரு புதிய காரியத்தைப் பற்றி வாசித்தறிய நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்.” இவ்வகையான அணுகுமுறைகள் வீட்டுக்காரரின் சூழ்நிலைமைகளுக்குக் கரிசனை காட்டுவதாக இருக்கும். அதே சமயத்தில் பிரசுரமும் அளிக்கப்படுகிறது.
5 நாம் அளிக்கக்கூடிய பிரசுரத்தை ஒரு வீட்டுக்காரர் ஏற்கெனவே தம்மிடம் கொண்டிருந்தாரானால் என்ன செய்யலாம்? நீங்கள் 1 கொரிந்தியர் 3:6-9-ல் காணப்படும் பைபிள் நியமத்தை ஏன் பொருத்தக்கூடாது? விதை ஏற்கெனவே விதைக்கப்பட்டுவிட்டது. அந்த நபருக்கு இன்னும் கூடுதலான சாட்சி கொடுப்பதன் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், அல்லது ஒருவேளை இவ்வாறு சொல்லலாம்: “உங்களிடம் ஏற்கெனவே இந்தப் பிரதி இருக்கிறதென்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இதை வாசித்து மகிழ்ந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் அனுமதித்தால் இந்தப் புத்தகத்திலிருந்து இன்னும் எவ்வாறு கூடுதலாக நன்மையடையலாம் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.” அதன் பின்பு இந்தப் பிரசுரத்தின் உதவியோடு நாம் எவ்வாறு பைபிளை படிக்கிறோம் என்பதை நடித்துக்காட்டுங்கள். ஆகவே வீட்டுக்காரர் ஏற்கெனவே புத்தகத்தை தன்னிடம் கொண்டிருக்கிறார் என்றால் அவருடைய வீட்டில் நம்முடைய நோக்கம் மாறிவிடாது. “சீஷராக்குவதே” நம்முடைய பிரதான இலக்கு என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.—மத். 28:19.
சந்தர்ப்ப சாட்சி
6 சந்தர்ப்ப சாட்சி வேலையில் பிரசுரங்களை அளிக்க நமக்கு இருக்கும் அநேக வாய்ப்புகளுக்கும்கூட நாம் விழிப்புணர்வோடிருக்க வேண்டும். விருந்தினர், உறவினர், உடன்வேலையாட்கள், பள்ளித்தோழர்கள், கடைக்குச் செல்லும்போது நாம் சந்திக்க நேரிடும் ஆட்கள் அல்லது வெளி ஊழியத்தில் ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்குச் செல்லுகையில் இடையில் சந்திக்கும் ஆட்கள் போன்ற எல்லாச் சந்தர்ப்பங்களைக் குறித்தும் சிந்தியுங்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எப்பொழுதெல்லாம் கூடுமோ அப்பொழுதெல்லாம் அளிப்பதற்கு பிரசுரங்களை வைத்திருக்க முன்னதாகவே திட்டமிடுங்கள். எப்பொழுதும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய பிரசுரங்களை நம்முடம் எடுத்துச்செல்வது கடினமான காரியமல்ல. சந்தர்ப்ப சாட்சி மூலம் பெருமளவான நன்மைகள் சாதிக்கப்படலாம்.—1 பேதுரு 3:15.
7 நம்மை பலமுள்ளவர்களாக வைக்கவும் நற்செய்தியை பரப்புவதில் நமக்கு உதவி செய்யவும் யெகோவாவின் அமைப்பு இலக்கியங்களை நமக்குத் தாராளமாக அளித்திருக்கிறது. பைபிள் இலக்கியங்களை அளிப்பதற்கான வாய்ப்புகளுக்கு விழிப்புணர்வோடிருப்பதானது யெகோவாவின் நாமத்தை மகிமைப்படுத்த நமக்கு உதவிசெய்யும்.—சங். 34:3.