பைபிள் படிப்பை யார் ஏற்றுக்கொள்வர்?
1 இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் உண்டாகும் என தீர்க்கதரிசி ஆமோஸ் அறிவித்தார். அது, ‘ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக் குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, [யெகோவாவுடைய] வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம்.’ (ஆமோ. 8:11) ஆவிக்குரிய காரியங்களுக்காக பசி தாகம் உடையோரின் நன்மைக்காக, யெகோவாவின் அமைப்பு உலகம் முழுவதும் பைபிள் பிரசுரங்களை வாரி வழங்கி வருகிறது.
2 இது வரை, அறிவு புத்தகம் 70 கோடி பிரதிகளும் தேவைப்படுத்துகிறார் சிற்றேடு 91 கோடி பிரதிகளும் நாம் அச்சிட்டிருக்கிறோம். இந்த பிரசுரங்களின் எளிய நடையையும் சத்தியத்தை திறம்பட போதிப்பதையும் போற்றுகிறோம். எனினும், சொல்லப்போனால், நம்முடைய பிரசுரங்களைப் பெற்றுக்கொண்ட லட்சக்கணக்கான ஆட்கள் இன்னும் பைபிளை நம்மோடு படிக்கவில்லை. இதுகுறித்து நாம் என்ன செய்யலாம்?
3 பிரசுரத்தை பெற்ற ஒவ்வொருவருமே ஒரு பைபிள் படிப்புதான்! பிரஸ்தாபி ஒருவரின் அனுபவத்தை சற்று சிந்தியுங்கள். ஊழியத்தில் முதன்முறை சந்தித்த ஒரு பெண்ணிடம் அவர் பைபிள் படிப்பு பற்றி சொன்னார். அவர் உடனே பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். “பைபிள் படிப்பு பற்றி என்னிடம் சொன்ன முதல் ஆள் நீங்கள்தான்” என அவர் பிரஸ்தாபியிடம் பின்னர் சொன்னார். உங்கள் பிராந்தியத்தில், நம் பிரசுரங்களை ஏற்கனவே வைத்திருப்போரில் எத்தனை பேர் இதேபோல் சொல்வார்கள்? பிரசுரத்தை பெற்றிருக்கும் ஒவ்வொருவருமே மறுசந்திப்புக்கும் ஒரு வீட்டு பைபிள் படிப்புக்கும் வாய்ப்பை தருகின்றனர்.
4 நம் பிரசுரங்களை ஏற்கனவே வாங்கியிருக்கும் ஆட்களை அடிக்கடி நம் ஊழியத்தில் சந்திக்கிறோம். அப்போது, நம் பிரசுரங்களில் என்ன இருக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை நாம் எப்படி தூண்டலாம்? ஒரு சாட்சி, ஊழியத்தில் சந்தித்த ஒருவரிடம் பைபிளைப் பற்றி ஏதாவது கேள்விகள் உங்களுக்கு இருக்கிறதா என நேரடியாக கேட்டார். அவருக்கு கிடைத்த பதிலோ “இல்லை” என்பதே. ஆனால், அந்த சகோதரி விடுவதாய் இல்லை. “நிச்சயமா, உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருக்கும்” என தொடர்ந்து கேட்டாள். அந்தப் பெண் ஆம் என்றாள். ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. வீட்டுக்காரருக்கு ஆர்வத்தை தூண்டும் ஒரு பொருளைப் பற்றியோ அல்லது ஒரு கேள்வியைக் குறித்தோ பைபிளின் கருத்து என்னவென்று தெரிந்துகொள்ள விருப்பமா என வீட்டுக்காரரை கேளுங்கள். அவரால் ஏதும் சொல்ல முடியவில்லை எனில், ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியோடு நீங்களே தயாராய் இருங்கள். இப்படிப்பட்ட கலந்தாலோசிப்பு, பைபிளின் அடிப்படை சத்தியங்களை கற்றுக்கொள்ள உதவும் ஒரு பைபிள் படிப்புக்கு வழியை திறந்திடும்.
5 நம் ஊழியத்தின் உயிர்நாடி பைபிள் படிப்பே. யார் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்பது நமக்கு தெரியாது. அதனால், நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் பைபிள் படிப்பை பற்றி சொல்ல மட்டும் தயங்காதீர்கள். இதற்காக யெகோவாவிடம் ஜெபியுங்கள், அதற்கிசைய முயற்சி எடுங்கள். நீங்கள் பைபிள் படிப்பு பற்றி தொடர்ந்து சிபாரிசு செய்து வந்தால், யாராவது ஒருவர் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்!—1 யோ. 5:14, 15.