கடவுளை மகிமைப்படுத்தும் நன்னடத்தை
1 நாம் இந்த உலகத்தில் எந்த மூலைமுடுக்கில் வாழ்ந்தாலும்சரி, நம்முடைய நடை, உடை, பாவனை நம்மையும் நாம் வணங்கும் கடவுளையும் பறைசாற்றுகிறது. கடவுளுடைய ஜனங்கள் மாநாடுகளுக்கு அலையென திரண்டு வரும்போது மற்றவர்கள் கவனிக்கிறார்கள். நாம் மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும்போது, யெகோவாவின் பெயர் மகிமையால் பிரகாசிக்கிறது. (1 பே. 2:12) ஆனால், சிலர் சரியாக நடந்துகொள்ளாமல் இருக்கும்போதோ, முன்யோசனையின்றி எதையாவது செய்துவிடும்போதோ, கடவுளுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் கெட்ட பெயர் வந்துவிடுகிறது. (பிர. 9:18ஆ) நம்முடைய நடத்தையை வைத்தே நம்முடைய மதம் எப்படிப்பட்டது, நாம் வணங்கும் கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை உலகத்தார் கணித்து விடுவார்கள். இதை எப்போதும் மனதில் வைத்து, நாம் எதை செய்தாலும் ‘தேவனுடைய மகிமைக்கென்றே’ செய்ய கவனமாய் இருக்க வேண்டும்.—1 கொ. 10:31.
2 ஓட்டல்களில் நம் நடத்தை: யெகோவாவின் சாட்சிகளுடைய ஒழுக்கம், நன்னடத்தை, சுத்தம் இவையாவும் பெரும்பாலும் எல்லா ஹோட்டல் உறுப்பினர்களின் மனதையும் கவர்ந்துள்ளது. சாட்சிகளுடைய குடும்பங்களைப் பற்றி ஓட்டல் மானேஜர் ஒருவர் சொன்னார்: “நான் இதுவரை இப்படிப்பட்ட பிள்ளைகளை பார்த்தது கிடையாது. அவர்கள் ஜம்மென்று, கண்ணியமாக உடை அணிந்திருந்தார்கள்; மரியாதையோடும் தயவோடும் நடந்துகொண்டார்கள், நல்ல நடத்தையுள்ளவர்களாயும் இருந்தார்கள். அவர்கள் எங்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. உங்கள் பிள்ளைகளுக்காக உங்களைத்தான் மெச்ச வேண்டும். சொல்லப்போனால், உங்கள் பிள்ளைகள் இங்கு இருந்தது எங்களுக்கு அதிக சந்தோஷமாகத்தான் இருந்தது.” இப்படிப்பட்ட பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. காரணம், யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் தவழும் அன்பும் மரியாதையும்தான்.
3 அதேசமயம் சிலர் கவனக்குறைவாக நடந்து கொள்கிறார்கள் அல்லது ஓட்டலை நாசம் செய்கிறார்கள் என்று சில ஓட்டல் பணியாளர்கள் கூறுகிறார்கள். இவை பிரச்சினைகளுக்கும், வாக்குவாதங்களுக்கும் வழிவகுக்கின்றன. நீச்சல் குளத்தையும், பொழுதுபோக்கிற்கான மற்ற இடங்களையும் பயன்படுத்தும்போது பிள்ளைகளை பெற்றோர் கவனியாது விட்டுவிடுவதால் அவர்கள் கூச்சல்போட்டு ஒரே அமர்க்களம் பண்ணுவதாக மானேஜர்கள் சிலர் குறைகூறுகிறார்கள்.
4 ஓட்டல்களில் தங்குபவர்கள் அந்த ஓட்டல்களின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சகோதரர்கள் சிலர் அப்படிப்பட்ட விதிமுறைகளை மீறி அதிகமாக கூச்சல் போடுகிறார்கள்; அல்லது தாங்கள் தங்கியிருக்கும் அறைகளில் சமையல் செய்கிறார்கள். சமையல் செய்யக் கூடாது என்று சொன்னபோதிலும், சமையல் செய்து தங்கள் ஓட்டலை நாசம் செய்வதே வழக்கமாய் இருப்பதாக ஓட்டல் மானேஜர்கள் கூறுகின்றனர். ஓட்டல் அறைகள் பாழாவது மட்டுமல்லாமல் சமையல் வாசனை வெகு நாட்களுக்கு உள்ளேயே மண்டிவிடுகிறது. ஆகவே பல நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு அந்த அறைகளை வாடகைக்கு விட முடியாமல் போய்விடுகிறது. சமையல் செய்வதற்கு அனுமதி இல்லை என தெரிந்தால் அவ்வாறு செய்யக்கூடாது.
5 கொஞ்சம் கஷ்டப்பட்டு ஓட்டல் நிர்வாகத்தின் எல்லா விதிமுறைகளையும் அனுசரித்துப் போகத்தான் வேண்டும். யெகோவாவின் ஜனங்களைப் பற்றி ஒரு கெட்ட எண்ணத்தை உருவாக்க நாம் விரும்புவதில்லை. நாம் எல்லா சமயத்திலும் நேர்மையைக் காத்துக்கொள்வது அவசியம். ஓட்டல்களிலுள்ள விரிப்புகளையோ அல்லது “ஞாபகார்த்தமாக” வைத்துக்கொள்வதற்கு சில பொருட்களையோ எடுத்துக்கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் நாம் அவற்றை திருடுகிறோம் என அர்த்தம். அறைகளுக்கு முன்பதிவு செய்யும்போதோ அல்லது செக்-இன் செய்து நேரடியாக அறைகளுக்கு தங்கச் செல்லும்போதோ, எத்தனை பேர் தங்கப் போகிறார்கள் என்ற விஷயத்தில் பொய் சொல்லக்கூடாது.
6 மாநாட்டு மன்றங்களில் நம் நடத்தை: மாநாட்டு மன்றங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், இதுவும் ஒரு பெரிய ராஜ்ய மன்றம்தான் என்ற நினைவு இருக்க வேண்டும். சபை கூட்டங்களுக்கு எப்படி உடை உடுத்தி தலைவாரிச் செல்வோமோ அதேவிதமாகவே மாநாட்டிற்கும் வரவேண்டும். மாநாடு நடக்கும்போதோ நிகழ்ச்சி நிரல் முடிந்த பிறகோ அடக்க ஒடுக்கமற்ற அல்லது லேட்டஸ்ட் பாணியிலான உடைகளை உடுத்திவருவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு உடுத்துவது இந்த உலகத்தின் ஆவியை வெளிப்படுத்தும்; இந்த விஷயத்தில் மிதமிஞ்சி நடந்துகொள்ளும் உலகத்தாருக்கும் நமக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும். சகோதரிகள் தங்கள் ‘ஸ்கர்ட்’ அல்லது மற்ற உடைகளை சரியான நீளத்திற்கு அடக்கமாக உடுத்திவருவதில் கவனமாக இருக்க வேண்டும். (1 தீ. 2:9, 10) நாம் மாநாட்டு மன்றங்களில் இருந்தாலும் சரி, ஓட்டல்களில் தங்கினாலும் சரி, அல்லது ரெஸ்டாரன்டுகளுக்கோ கடைவீதிக்கோ சென்றாலும் சரி, எல்லா சமயத்திலும் நாம் கடவுளுடைய ஊழியர்கள் என்பதை மற்றவர்களுக்கு பறைசாற்றுபவர்களாக இருக்க வேண்டும். ஒருபோதும் மற்றவர்களுக்கு இடறலாக இருக்கக் கூடாது.—2 கொ. 6:3.
7 முழுக்காட்டுதலின்போது நம் மனநிலை என்ன? சனிக்கிழமை காலையில் முழுக்காட்டுதல் கொடுக்கப்படும். அந்த சந்தர்ப்பத்தில் நாம் எப்படிப்பட்ட மனநிலையைக் காட்ட வேண்டும் என ஏப்ரல் 1, 1995 காவற்கோபுரம் பக்கம் 30 விவரிக்கிறது. ‘நாம் அனைவரும் முழுக்காட்டுதலை விளையாட்டுத்தனமாக கருதக்கூடாது. கட்டுப்பாடற்ற விதத்தில் மனக்கிளர்ச்சி அடைவதற்கோ, விருந்து கொடுப்பதற்கோ, கேளிக்கைகளுக்கோ அது நேரமல்ல. அதேசமயம் சோகத்துடன் இருப்பதற்கான நேரமும் அல்ல.’ ஆண்களாக இருந்தாலும்சரி, பெண்களாக இருந்தாலும்சரி, முழுக்காட்டப்பட இருப்பவர்கள் தங்கள் உடலை மறைக்கும் வண்ணம் பொருத்தமான உடைகளை அணிய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிறிஸ்தவ முழுக்காட்டுதலை விளையாட்டுத்தனமாக கருதமாட்டோம்.
8 ‘நாம் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்’ என பேதுரு நமக்கு நினைப்பூட்டுகிறார். “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” மாவட்ட மாநாட்டின்போது நம்முடைய வார்த்தைகளும் செயல்களும் நேர்மை இருதயமுள்ள ஜனங்களுக்கு உதவட்டும். அவர்கள் நம்மை கவனித்து, எல்லா கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரான கடவுளை வணங்குவதற்கு வழிவகுக்கட்டும்.—1 கொ. 14:24, 25.