“அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”
“அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.”—அப்போஸ்தலர் 17:27.
1, 2. (அ) நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை அண்ணாந்து பார்க்கையில், படைப்பாளரைக் குறித்து நாம் என்ன கேள்வியைக் கேட்கலாம்? (ஆ) யெகோவாவின் பார்வையில் மனிதர்கள் அற்பமானவர்கள் அல்ல என்பதாக பைபிள் நமக்கு எவ்வாறு உறுதியளிக்கிறது?
தெளிவான இரவுப்பொழுதில் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை அண்ணாந்து பார்த்து எப்போதாவது நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்கியதுண்டா? திரளான நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் வான்வெளியின் விஸ்தாரமும் மாத்திரமே நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத்தில் பூமி வெறும் ஒரு புள்ளியே. ஆகவே “பூமியனைத்தின்மேலும் உன்னதமான”வராகிய படைப்பாளர் மனிதர்கள்மீது அக்கறைகொள்ள முடியாதபடி மிகவும் உயரமான இடத்தில் இருப்பவர் அல்லது அவர்கள் அறிந்துகொள்ள முடியாதபடி மிக தொலைவில் இருப்பவர் அல்லது ஆராய்ந்து அறிய முடியாதவர் என்பதை இது அர்த்தப்படுத்துமா?—சங்கீதம் 83:17.
2 யெகோவாவின் பார்வையில் மனிதர்கள் அற்பமானவர்கள் அல்லர் என்பதாக பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. உண்மையைச் சொன்னால், “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” என்று சொல்லி அவரைத் தேடும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 17:27; 1 நாளாகமம் 28:9) ஆம், கடவுளிடம் நெருங்கி வருவதற்கு நாம் நடவடிக்கைகளை எடுக்கும்போது அவர் நம்முடைய முயற்சிகளுக்கு பலனளிப்பார். என்ன விதத்தில்? 2003-க்கான நம்முடைய வருடாந்தர வசனத்தின் வார்த்தைகள் இதயத்திற்கு இதமாக இருக்கும் இந்தப் பதிலை தருகிறது: “அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக்கோபு 4:8, NW) யெகோவா அவரிடம் நெருக்கமாக இருப்பவர்களுக்கு பொழிந்தருளும் மகத்தான ஆசீர்வாதங்கள் சிலவற்றை சிந்திக்கலாம்.
யெகோவாவிடமிருந்து ஒரு தனிப்பட்ட பரிசு
3. யெகோவா தம்மிடம் நெருங்கி வருகிறவர்களுக்கு என்ன பரிசை கொடுக்கிறார்?
3 முதலாவதாக, யெகோவா தம் மக்களுக்காக அருமையான ஒரு பரிசை வைத்திருக்கிறார். இந்தப் பரிசை, இவ்வுலகத்தின் எந்த அதிகாரமும், செல்வமும், கல்வியும் கொடுக்க முடியாது. அது ஒரு தனிப்பட்ட பரிசு. யெகோவா தமக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரமே இதைத் தருகிறார். அது என்ன? கடவுளுடைய வார்த்தை பதிலளிக்கிறது: “புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்.” (நீதிமொழிகள் 2:3-6) அபூரண மனிதர்களால் “தேவனை அறியும் அறிவைக்” கண்டடைய முடிவதை எண்ணிப்பாருங்கள்! அந்தப் பரிசு—கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் அறிவு—மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ‘புதையல்களுக்கு’ ஒப்பிட்டு பேசப்படுகிறது. ஏன்?
4, 5. ‘தேவனை அறியும் அறிவு’ ஏன் ‘மறைத்துவைக்கப்பட்டிருக்கும் புதையல்’களுக்கு ஒப்பிடப்படலாம்? விளக்கவும்.
4 ஒரு காரியமானது தேவனை அறியும் அறிவு பெரும் மதிப்புள்ளது. அதில் கிடைக்கும் அருமையான பலன்களில் ஒன்று நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு. (யோவான் 17:3) ஆனால் அந்த அறிவு இப்போதே நம் வாழ்க்கையைச் சிறப்புறச் செய்கிறது. உதாரணமாக, கடவுளுடைய வார்த்தையை கவனமாக படித்ததன் விளைவாக பின்வரும் இந்த முக்கியமான கேள்விகளுக்கு விடைகளை அறிந்துகொண்டிருக்கிறோம்: கடவுளுடைய பெயர் என்ன? (சங்கீதம் 83:17) மரித்தோரின் உண்மையான நிலை என்ன? (பிரசங்கி 9:5, 10) பூமி மற்றும் மனிதவர்க்கத்திற்கான கடவுளுடைய நோக்கம் என்ன? (ஏசாயா 45:18) அதோடு, பைபிளின் ஞானமுள்ள ஆலோசனையை பின்பற்றுவதே வாழ்வதற்கான மிகச் சிறந்த வழி என்பதையும் நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். (ஏசாயா 30:20, 21; 48:17, 18) ஆகவே, வாழ்க்கையின் கவலைகளைச் சமாளித்து, உண்மையான மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் நல்ல வழிநடத்துதலை நாம் பெற்றிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளுடைய வார்த்தையை படித்திருப்பதால், யெகோவாவின் மகத்துவமுள்ள குணங்களை தெரிந்துகொண்டு அவரிடமாக நெருங்கி வந்திருக்கிறோம். ‘தேவனை அறியும் அறிவின்’ அடிப்படையில் யெகோவாவிடம் கொண்டுள்ள நெருங்கிய உறவைவிட வேறு எது அதிக மதிப்புள்ளதாக இருக்க முடியும்?
5 தேவனை அறியும் அறிவு மறைத்துவைக்கப்பட்டிருக்கும் ‘புதையல்’களுக்கு ஒப்பாயிருப்பதற்கு மற்றொரு காரணமுண்டு. மற்ற புதையல்களைப் போலவே இதுவும் இந்த உலகில் ஓரளவுக்கு அரிதானதே. உலகிலுள்ள சுமார் 600 கோடி மக்களில் ஏறத்தாழ 60 லட்சம் யெகோவாவின் வணக்கத்தார் அல்லது 1,000-ல் ஒருவர் மாத்திரமே “தேவனை அறியும் அறிவை” கண்டுபிடித்திருக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை அறிந்திருப்பது எத்தனை அரிதான பாக்கியம் என்பதை விளக்குவதற்கு ஒரேவொரு பைபிள் கேள்வியை மாத்திரமே எடுத்துக்கொள்ளுங்கள்: மரணத்தின் போது மனிதர்களுக்கு என்ன நடக்கிறது? ஆத்துமா சாகிறது. மரித்தவர்கள் உணர்வற்றவர்களாக இருக்கின்றனர் என்பதை நாம் வேதாகமத்திலிருந்து தெரிந்துகொண்டிருக்கிறோம். (எசேக்கியேல் 18:4) ஆனால், ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று, மரணத்துக்குப்பின் தொடர்ந்து வாழ்கிறது என்ற நம்பிக்கையை பெரும்பாலான உலக மதங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த மதங்களின் ஓர் அடிப்படை நம்பிக்கையாக அது இருக்கிறது. இந்து மதம், இஸ்லாம், சீக்கிய மதம், தாவோ மதம், புத்த மதம், யூத மதம், ஜைன மதம், ஷிண்டோ என எல்லா மதங்களிலும் இந்த நம்பிக்கை காணப்படுகிறது. சற்று எண்ணிப்பாருங்கள்—இந்த ஒரு பொய் கோட்பாடு கோடிக்கணக்கான மக்களை வஞ்சித்திருக்கிறது!
6, 7. (அ) “தேவனை அறியும் அறிவை” யார் மாத்திரமே கண்டுபிடிக்க முடியும்? (ஆ) “ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும்” பிடிபடாமலிருக்கும் ஆவிக்குரிய சத்தியங்களின் உட்பார்வையை யெகோவா நமக்கு அளித்து நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை என்ன உதாரணம் காட்டுகிறது?
6 “தேவனை அறியும் அறிவை” நிறையபேர் கண்டுபிடிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? ஏனென்றால் கடவுளுடைய உதவி இல்லாமல் அவருடைய வார்த்தையின் அர்த்தத்தை ஒருவர் முழுமையாக கிரகித்துக்கொள்ள முடியாது. இந்த அறிவு ஒரு பரிசு என்பதை மறந்துவிட வேண்டாம். உண்மையோடும் மனத்தாழ்மையோடும் அவருடைய வார்த்தையை ஆராய மனமுள்ளவர்களுக்கு மாத்திரமே யெகோவா அதை கொடுக்கிறார். இப்படிப்பட்டவர்கள் ஒருவேளை “மாம்சத்தின்படி ஞானி”களாக இல்லாமல் இருக்கலாம். (1 கொரிந்தியர் 1:26) இவர்களில் பலர் உலகின் தராதரங்களின்படி “படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும்”கூட கருதப்படலாம். (அப்போஸ்தலர் 4:13) ஆனால் அது முக்கியமல்ல. யெகோவா நம்முடைய இருதயங்களில் காண்கிற குணங்களுக்காக “தேவனை அறியும் அறிவைக்” கொடுத்து நமக்கு பலனளிக்கிறார்.
7 ஓர் உதாரணத்தை கவனியுங்கள். கிறிஸ்தவமண்டலத்திலுள்ள அநேக கல்விமான்கள் பைபிளின் பேரில் விளக்கவுரைகளை எழுதியுள்ளனர். இந்த நோக்கீட்டு புத்தகங்கள் வரலாற்றுப் பின்னணியையும் எபிரெய கிரேக்க வார்த்தைகளின் அர்த்தத்தையும் ஒருவேளை விளக்கலாம். இந்தக் கல்விமான்கள் எவ்வளவு படித்திருந்தாலும், உண்மையில் “தேவனை அறியும் அறிவை” கண்டுபிடித்திருக்கிறார்களா? சரி, பைபிளின் முக்கிய பொருளை—பரலோக ராஜ்யத்தின் மூலமாக யெகோவாவின் பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படும் என்பதை—தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்களா? யெகோவா தேவன் திரித்துவத்தின் பாகமல்ல என்பது அவர்களுக்குத் தெரியுமா? இதுபோன்ற காரியங்களை நாம் திருத்தமாக அறிந்திருக்கிறோம். ஏன்? அநேக “ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும்” பிடிபடாமலிருக்கும் ஆவிக்குரிய சத்தியங்களின் உட்பார்வையை நமக்கு அளித்து யெகோவா நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். (மத்தேயு 11:25) அவருக்கு நெருக்கமாக இருப்பவர்களை யெகோவா எவ்வளவாய் ஆசீர்வதிக்கிறார்!
‘யெகோவா தம்மில் அன்புகூருகிறவர்களை காப்பாற்றுகிறார்’
8, 9. (அ) யெகோவாவிடம் நெருக்கமாக இருப்பவர்களுக்கு கிடைக்கும் மற்றொரு ஆசீர்வாதத்தை தாவீது எவ்வாறு விவரித்தார்? (ஆ) உண்மை கிறிஸ்தவர்களுக்கு ஏன் கடவுளின் பாதுகாப்பு தேவை?
8 யெகோவாவிடம் நெருக்கமாக இருப்பவர்கள் மற்றொரு ஆசீர்வாதத்தையும் அனுபவிக்கிறார்கள்; அது அவர் தரும் பாதுகாப்பு. அநேக கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் அனுபவித்த சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு எழுதினார்: “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்”றுகிறார். (சங்கீதம் 145:18-20) ஆம், யெகோவா தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு அருகில் இருப்பதால், உதவிக்காக அவர்கள் கூப்பிடும்போது உடனடியாக அவரால் செயல்பட முடியும்.
9 நமக்கு ஏன் கடவுளின் பாதுகாப்பு தேவை? ‘கையாளுவதற்கு கடினமாக இருக்கும் இந்த காலத்தின்’ பாதிப்புகளை நேரில் அனுபவிப்பதோடு, உண்மை கிறிஸ்தவர்கள் யெகோவாவின் பிரதான எதிரி பிசாசாகிய சாத்தானின் விசேஷமான குறியாக இருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:1, NW) அந்த தந்திரமுள்ள சத்துரு நம்மை ‘விழுங்கிவிட’ தீர்மானமாயிருக்கிறான். (1 பேதுரு 5:8) சாத்தான் துன்புறுத்துகிறான், பிரச்சினைகளை உருவாக்குகிறான், சோதிக்கிறான். அவன் சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்கு ஏற்ற மனப்பாங்குகள் நம்முடைய மனதிலும் இருதயத்திலும் இருக்கின்றனவா என்று வகை தேடுகிறான். அவனது ஒரே குறிக்கோள் இதுவே: நம் விசுவாசத்தை பலவீனப்படுத்தி ஆன்மீக ரீதியில் நம்மை அழித்துவிடுவது. (வெளிப்படுத்துதல் 12:12, 17) எதிர்த்துப் போராடுவதற்கு பலமுள்ள ஓர் எதிரி நமக்கு இருப்பதால் ‘[யெகோவா] தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறார்’ என்பதை அறிவது நமக்கு அதிக நம்பிக்கையூட்டுகிறது அல்லவா?
10. (அ) யெகோவா தம் மக்களை எவ்வாறு காப்பாற்றுகிறார்? (ஆ) என்ன விதமான பாதுகாப்பு மிக முக்கியம், ஏன்?
10 ஆனால், யெகோவா தம் மக்களை எவ்வாறு காப்பாற்றுகிறார்? அவர் காப்பாற்றுகிறார் என்ற வாக்குறுதி, இவ்வுலகில் நமக்கு பிரச்சினைகளே இருக்காது என்று உத்தரவாதமளிப்பதில்லை; அல்லது நமக்காக அவர் அற்புதங்களைச் செய்ய கடமைப்பட்டிருக்கிறார் என்றும் அர்த்தமாகாது. ஆனால், ஒரு தொகுதியாக தம் மக்களுக்கு சரீரப்பிரகாரமான பாதுகாப்பை அளிக்கிறார் என்பது உண்மை. சாத்தான் பூமியிலிருந்து உண்மை வணக்கத்தாரை துடைத்தழிப்பதற்கு அவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாரே! (2 பேதுரு 2:9) எல்லாவற்றுக்கும் மேலாக யெகோவா நமக்கு ஆவிக்குரிய விதத்தில் பாதுகாப்பை தருகிறார். சோதனைகளை சகித்திருப்பதற்கும் அவரோடு நம் உறவை பாதுகாத்துக்கொள்வதற்கும் தேவையானதை அளித்து அவர் நம்மை தயார்படுத்தி வைக்கிறார். கடைசியில் ஆவிக்குரிய பாதுகாப்புதானே நமக்கு அதிக முக்கியம். ஏன்? யெகோவாவோடு நாம் உறவு வைத்திருக்கும் வரை எதுவும், மரணம்கூட நமக்கு நிரந்தரமான தீங்கை செய்துவிட முடியாது.—மத்தேயு 10:28.
11. யெகோவா தம்முடைய மக்களின் ஆன்மீக பாதுகாப்புக்காக என்ன ஏற்பாடுகளை செய்திருக்கிறார்?
11 யெகோவா தம்மிடம் நெருக்கமாக இருப்பவர்களின் ஆன்மீக பாதுகாப்பிற்காக ஏராளமான ஏற்பாடுகளை செய்துவைத்திருக்கிறார். பல்வேறு சோதனைகளை நாம் வெற்றிகரமாக சமாளிப்பதற்கு தேவையான ஞானத்தை தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் வைத்திருக்கிறார். (யாக்கோபு 1:2-5) வேதாகமத்தில் காணப்படும் நடைமுறையான புத்திமதிதானே நம்மைக் காப்பாற்றுகிறது. அதோடு, யெகோவா “தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக்” கொடுக்கிறார். (லூக்கா 11:13) அந்த ஆவியே சர்வலோகத்திலும் அதிக வல்லமைவாய்ந்த சக்தியாகும். ஆகவே நாம் சந்திக்கும் எந்த சோதனையையும் வெற்றிகரமாக எதிர்ப்படுவதற்கு அது நிச்சயமாகவே நமக்கு உதவிசெய்யும். கிறிஸ்துவின் மூலமாக யெகோவா “மனிதரில் வரங்களை” அளிக்கிறார். (எபேசியர் 4:8, NW) ஆவிக்குரிய தகுதிகளையுடைய இந்த மனிதர்கள் உடன் வணக்கத்தாருக்கு உதவி செய்யும்போது யெகோவா காட்டும் அதே ஆழ்ந்த கருணையைக் காட்ட முயற்சி செய்கிறார்கள்.—யாக்கோபு 5:14, 15.
12, 13. (அ) ஏற்ற வேளையில் ஆன்மீக உணவை யெகோவா எந்தெந்த வழிகளில் தருகிறார்? (ஆ) நம்முடைய ஆன்மீக நலனுக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?
12 யெகோவா நம்மைப் பாதுகாப்பதற்கு வேறொன்றையும் அளிக்கிறார்; அதுதான் ஏற்ற வேளையில் அவர் தரும் ஆன்மீக உணவு. (மத்தேயு 24:45) காவற்கோபுரம், விழித்தெழு! உள்ளிட்ட பிரசுரங்கள் மூலமாகவும் கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவற்றின் மூலமாகவும் நமக்கு தேவையான சமயத்தில் நமக்குத் தேவையானதை அளித்து வருகிறார். கிறிஸ்தவ கூட்டத்தில், ஒரு அசெம்பிளியில், அல்லது ஒரு மாநாட்டில் கேட்ட ஏதோ ஒரு விஷயம் உங்கள் இருதயத்தை நெகிழ வைத்து உங்களை பலப்படுத்தியது அல்லது தேற்றினது உங்களுக்கு நினைவிருக்கிறதா? மேலே குறிப்பிடப்பட்ட பத்திரிகைகளில் ஒன்றில் ஒரு கட்டுரையை வாசித்து அது உங்களுக்காகவே எழுதப்பட்டிருப்பதாக நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா?
13 சாத்தானின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்று சோர்வாகும், அதன் பாதிப்பிலிருந்து நாம் தப்ப முடியாது. சோர்வு நம்மை விடாமல் ஆட்டிப்படைக்கையில் நாம் பலமிழந்து விடுவோம் என்றும், எளிதில் தாக்கப்படும் நிலைக்குள்ளாவோம் என்றும் அவனுக்கு நன்றாக தெரியும். (நீதிமொழிகள் 24:10) சாத்தான் நம் சோர்வான உணர்ச்சிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயலுவதால் நமக்கு உதவி தேவை. சோர்வை சமாளிக்க உதவும் கட்டுரைகள் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியாகின்றன. இது போன்ற ஒரு கட்டுரையை வாசித்த ஒரு கிறிஸ்தவ சகோதரி இவ்வாறு எழுதினார்: “கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அந்தக் கட்டுரையை நான் படிக்கிறேன். இன்னும் என் கண் கலங்குகிறது. நான் சோர்வாக உணரும்போதெல்லாம் எடுத்துப் படிப்பதற்காக அதை என் படுக்கையின் பக்கத்திலேயே வைத்திருக்கிறேன். இதுபோன்ற கட்டுரைகளின் மூலமாக, யெகோவாவின் பாதுகாப்பான கரங்கள் என்னை அணைத்துக்கொள்வது போல உணருகிறேன்.”a காலத்துக்கேற்ற ஆன்மீக உணவை யெகோவா நமக்குத் தருவதற்காக நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இல்லையா? நம்முடைய ஆன்மீக நலனுக்காக அவர் செய்திருக்கும் ஏற்பாடுகள், அவர் நமக்கு நெருக்கமாக இருப்பதற்கும் அவருடைய பாதுகாப்பான கவனிப்பில் நம்மை வைத்துக்கொண்டிருப்பதற்கும் அத்தாட்சியாக உள்ளன என்பதை நினைவில் வைத்திருங்கள்.
‘ஜெபத்தைக் கேட்கிறவரிடம்’ செல்ல வழி
14, 15. (அ) தம்மிடம் நெருங்கியிருப்பவர்களுக்கு யெகோவா என்ன தனிப்பட்ட ஆசீர்வாதத்தை அருளுகிறார்? (ஆ) யெகோவாவை ஜெபத்தில் தடையின்றி தாராளமாக அணுக முடிவது, ஏன் குறிப்பிடத்தக்க ஒரு பாக்கியமாக இருக்கிறது?
14 மனிதர்கள் செல்வாக்கையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ளும்போது தங்களுக்குக் கீழ் இருப்பவர்கள் தங்களை நெருங்க முடியாதபடி வைத்துக்கொள்வதை நீங்கள் கவனித்ததுண்டா? ஆனால் யெகோவா தேவனைப் பற்றி என்ன? அற்பமான மனிதர்கள் அவரிடம் பேசுவதைக் கேட்பதில் அக்கறையில்லாதவராக அவர்களைவிட்டு மிகவும் விலகி இருக்கிறாரா? அவர் முற்றிலும் வேறுபட்டவர்! ஜெபத்தை யெகோவா பரிசாக கொடுத்திருப்பது, அவரிடம் நெருங்கியிருப்பவர்களுக்கு அவர் தரும் மற்றொரு ஆசீர்வாதமாகும். ‘ஜெபத்தைக் கேட்கிறவரை’ தாராளமாக அணுக முடிவது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒரு பரிசாகும். (சங்கீதம் 65:2) ஏன்?
15 இதை இவ்வாறு விளக்கலாம்: ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை அலுவலருக்கு பல பொறுப்புகள் இருக்கின்றன. எந்த விஷயங்களைத் தனிப்பட்ட விதமாக கையாளுவது என்பதையும் எவற்றை மற்றவர்களிடம் ஒப்படைப்பது என்பதையும் அவர் தீர்மானிக்கிறார். அதேவிதமாகவே, சர்வலோகத்தின் பேரரசரும், எவற்றை தாமே செய்வது என்பதையும் எவற்றை மற்றவர்களிடம் ஒப்படைப்பது என்பதையும் தீர்மானிக்கிறார். யெகோவா தம்முடைய மகன் இயேசுவிடம் எதையெல்லாம் ஒப்படைத்திருக்கிறார் என்பதை எண்ணிப்பாருங்கள். மகனுக்கு “நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தை” கொடுத்திருக்கிறார். (யோவான் 5:27) தேவதூதர்கள் “அவருக்குக் கீழ்ப்பட்டிருக்”கிறார்கள். (1 பேதுரு 3:22) பூமியின்மீதுள்ள தம்முடைய சீஷர்களை இயேசு வழிநடத்துவதற்கு உதவியாக யெகோவாவின் வல்லமை வாய்ந்த பரிசுத்த ஆவி அவருக்கு எப்போதும் கிடைக்கும்படி செய்திருக்கிறார். (யோவான் 15:26; 16:7) ஆகவேதான், “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று இயேசுவால் சொல்ல முடிந்தது. (மத்தேயு 28:18) ஆனால் நம்முடைய ஜெபங்களை பொருத்தமட்டில், யெகோவா அதில் தம்மை நேரடியாக உட்படுத்திக்கொள்கிறார். அதன் காரணமாகவே, இயேசுவின் நாமத்தில் நம்முடைய ஜெபங்களை யெகோவாவிடம் மாத்திரமே ஏறெடுக்கும்படி பைபிள் நமக்கு கட்டளையிடுகிறது.—சங்கீதம் 69:13; யோவான் 14:6, 13.
16. நம்முடைய ஜெபங்களை யெகோவா உண்மையில் செவிகொடுத்து கேட்கிறார் என்று நாம் ஏன் நம்பிக்கையாயிருக்கலாம்?
16 யெகோவா உண்மையில் நம்முடைய ஜெபங்களை செவிகொடுத்துக் கேட்கிறாரா? அவர் சிரத்தை அற்றவராக அல்லது அக்கறையில்லாதவராக இருந்தால், ‘ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்கும்படியும்’ பாரங்களையும் கவலைகளையும் தம்மீது வைத்துவிடும்படியும் ஒருபோதும் நம்மை ஊக்கப்படுத்தியிருக்க மாட்டார். (ரோமர் 12:12; சங்கீதம் 55:22; 1 பேதுரு 5:7) யெகோவா ஜெபத்துக்கு செவிகொடுக்கிறார் என்பதை பைபிள் காலங்களில் வாழ்ந்த உண்மையுள்ள ஊழியர்கள் முழுமையாக நம்பினார்கள். (1 யோவான் 5:14) இதன் காரணமாகவே சங்கீதக்காரன் தாவீது இவ்வாறு கூறினார்: “அவர் [யெகோவா] என் சத்தத்தைக் கேட்பார்.” (சங்கீதம் 55:17) யெகோவா நம் அருகில் இருக்கிறார், நம் சிந்தனை, கவலை எதுவானாலும் அதைக் கேட்பதற்கு தயாராக இருக்கிறார் என்று நாமும் தாராளமாய் நம்பலாம்.
யெகோவா தம் ஊழியர்களுக்கு பலனளிக்கிறார்
17, 18. (அ) புத்திக்கூர்மையுள்ள தம் சிருஷ்டிகளின் உண்மையுள்ள சேவையைக் குறித்து யெகோவா எவ்வாறு உணருகிறார்? (ஆ) நம்முடைய இரக்கமுள்ள செயல்களை யெகோவா கவனியாமல் விடுவதில்லை என்பதை நீதிமொழிகள் 19:17 எவ்வாறு காட்டுகிறது என்பதை விளக்குங்கள்.
17 சர்வலோக பேரரசராகிய யெகோவாவின் ஸ்தானம், அற்பமான மனிதர்கள் செய்யும் அல்லது செய்ய மறுக்கும் காரியங்களால் பாதிக்கப்படுவதில்லை. ஆனாலும்கூட யெகோவா போற்றுதல் மனப்பான்மையுள்ள ஒரு கடவுள். அவர் தம்முடைய புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளின் உண்மையுள்ள சேவையை மதிக்கிறார், சொல்லப்போனால் அதில் மிகவும் பிரியமாயிருக்கிறார். (சங்கீதம் 147:11) அப்படியானால், இது யெகோவாவிடம் நெருங்கி இருப்பவர்களுக்கு கிடைக்கும் மற்றொரு ஆசீர்வாதம்: அதாவது தம் ஊழியர்களுக்குப் பலனளிக்கிறார் என்பதே அந்த ஆசீர்வாதம்.—எபிரெயர் 11:6.
18 யெகோவா தம்முடைய வணக்கத்தார் செய்யும் காரியங்களை மதிக்கிறார் என்று பைபிள் தெளிவாக காட்டுகிறது. உதாரணமாக, நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.” (நீதிமொழிகள் 19:17) யெகோவா ஏழைகளின்மீது வைத்திருக்கும் இரக்கமுள்ள சிந்தையை மோசேயின் நியாயப்பிரமாணம் படம்பிடித்துக் காட்டுகிறது. (லேவியராகமம் 14:21; 19:15) ஏழ்மையிலிருப்பவர்களோடு தொடர்பு கொள்ளும்போது யெகோவா காட்டும் அதே இரக்கத்தை நாமும் காட்டும்போது அவர் எவ்வாறு உணருகிறார்? பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காமல் ஏழ்மையிலுள்ளவர்களுக்கு நாம் கொடுக்கும்போது யெகோவா தமக்குக் கொடுக்கப்பட்ட கடனாக இதை கருதுகிறார். தம் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்து இந்தக் கடனை அடைத்துவிடுவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (நீதிமொழிகள் 10:22; மத்தேயு 6:3, 4; லூக்கா 14:12-14) ஆம், தேவையிலிருக்கும் உடன் வணக்கத்தாருக்கு கருணை காட்டினால், அது யெகோவாவின் இருதயத்தை தொடுகிறது. நம்முடைய இரக்கமுள்ள செயல்களை நம் பரம தந்தை கவனியாமல் இருப்பதில்லை என்பதை அறிந்துகொள்ளும்போது நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!—மத்தேயு 5:7.
19. (அ) பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் நாம் செய்கிறவற்றை யெகோவா போற்றுகிறார் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்? (ஆ) அவருடைய ராஜ்யத்தை ஆதரித்து செய்யப்படும் செயல்களுக்கு யெகோவா எவ்வாறு பலனளிக்கிறார்?
19 யெகோவா அவருடைய ராஜ்யத்தின் சம்பந்தமாக நாம் செய்கிறவற்றை விசேஷமாக போற்றுகிறார். நாம் யெகோவாவிடம் நெருங்கிவரும் போது, ராஜ்ய பிரசங்கிப்பு மற்றும் சீஷராக்கும் வேலையில் முடிந்தளவு முழுமையாக பங்குகொள்வதற்கு நம்முடைய நேரம், சக்தி, பணம் ஆகியவற்றை பயன்படுத்த நாம் விரும்புவது இயல்பானதே. (மத்தேயு 28:19, 20) சில சமயங்களில் நாம் மிகவும் குறைவானதையே செய்கிறோம் என்று நினைக்கலாம். நம்முடைய முயற்சிகளில் யெகோவா பிரியமாயிருப்பாரோ என்றுகூட நம்முடைய அபூரண இருதயம் சந்தேகிக்கலாம். (1 யோவான் 3:19, 20) ஆனால் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அன்பால் தூண்டப்பட்ட இருதயத்திலிருந்து வரும் ஒவ்வொரு பரிசையும் யெகோவா மிகவும் உயர்வாக மதிக்கிறார். (மாற்கு 12:41-44) பைபிள் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: ‘உங்கள் கிரியையையும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.’ (எபிரெயர் 6:10) ஆம், அவருடைய ராஜ்யத்தை ஆதரித்து நாம் செய்யும் மிகச்சிறிய ஒரு சேவையையும்கூட யெகோவா நினைவில் வைத்து அதற்கு பலனளிக்கிறார். இப்போது செழுமையான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதோடு வரப்போகிற புதிய உலகில் நமக்குக் கிடைக்கும் சந்தோஷங்களையும் எதிர்நோக்கியிருக்கலாம். அப்போது, யெகோவா தம்முடைய கரங்களை தாராளமாக திறந்து அவருக்கு நெருக்கமாக இருக்கும் அனைவரின் நியாயமான வாஞ்சைகளையும் திருப்தியாக்குவார்!—சங்கீதம் 145:16; 2 பேதுரு 3:13.
20. 2003-ஆம் ஆண்டு முழுவதுமாக நம்முடைய வருடாந்தர வசனத்தின் வார்த்தைகளை எவ்வாறு மனதில் வைத்திருக்கலாம், அதனால் கிடைக்கும் பலன் என்ன?
20 2003-ஆம் ஆண்டு முழுவதுமாக, நம் பரலோக தந்தையிடம் நெருங்கி வருவதற்குத் தொடர்ந்து முயன்று வருகிறோமா என நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம். அப்படி செய்தால், அவர் வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். ஏனென்றால் ‘கடவுள் பொய்யுரையாதவர்.’ (தீத்து 1:3) அவரிடத்தில் நீங்கள் நெருங்கி வந்தால் அவர் உங்களிடத்தில் நெருங்கி வருவார். (யாக்கோபு 4:8, NW) அதனால் கிடைக்கும் பலன்? இப்போதே அபரிமிதமான ஆசீர்வாதங்கள், நித்திய காலமாய் யெகோவாவிடம் நெருங்கியிருக்கும் எதிர்பார்ப்பு!
[அடிக்குறிப்பு]
a காவற்கோபுரம், மே 1, 2000 இதழில் 28-31-ம் பக்கங்களில் வெளிவந்த “யெகோவா நம் இருதயங்களிலும் பெரியவர்” என்ற கட்டுரையை வாசித்தப்பின் எழுதியது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• யெகோவா தம்மிடம் நெருங்கி வருகிறவர்களுக்கு என்ன பரிசை அளிக்கிறார்?
• யெகோவா தம்முடைய மக்களின் ஆன்மீக பாதுகாப்புக்காக என்ன ஏற்பாடுகளைச் செய்கிறார்?
• யெகோவாவிடம் தடையில்லாமல் தாராளமாக அணுக முடிவது ஏன் குறிப்பிடத்தக்க ஒரு பாக்கியமாக உள்ளது?
• புத்திக்கூர்மையுள்ள தம்முடைய சிருஷ்டிகளின் உண்மையுள்ள சேவையை யெகோவா போற்றுகிறார் என்பதை பைபிள் எவ்வாறு காட்டுகிறது?
[பக்கம் 15-ன் படம்]
ஆவிக்குரிய சத்தியங்களை புரிய வைத்து யெகோவா நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
யெகோவா ஆன்மீக பாதுகாப்பை அளிக்கிறார்
[பக்கம் 18-ன் படம்]
யெகோவா அருகில் இருக்கிறார், நம்முடைய ஜெபத்தைக் கேட்க தயாராக இருக்கிறார்